வேங்கடம் முதல் குமரி வரை 4/016-032

விக்கிமூலம் இலிருந்து
16. பரங்குன்றம் மேய பரமன்

ஒரு பழைய கதை. ஓர் ஊரிலே ஒரு பூதம் வாழ்கிறது. கற்முகி என்ற பெயரோடு. அப்பூதம் சிவ பூசையில் தவறியவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்து வைக்கிறது. அப்படி ஆயிரம் பேரைச் சேர்த்தபின் அத்தனை பேரையும் அப்படியே கொன்று தின்பது என்ற விரதம் பூண்டிருக்கிறது. 999 பேரை, ஆம், சிவ பூசையில் தவறியவர்களைத்தான், பிடித்துச் சிறை வைத்து விடுகிறது. கடைசியாக ஆயிரம் ஆக்க ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் நக்கீரர் உருவத்தில் வருகிறார். மதுரை சங்கப் புலவர்களுள் சிறந்தவராக இருந்தவர் நக்கீரர். இறைவனோடேயே வாதிட்டவர்; 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று கூறி அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர், அவர் ஒரு குளக்கரையில் ஒருநாள் காலை உட்கார்ந்து சிவபூசை செய்கிறார். அக்குளக்கரையில் ஓர் அரசமரம். அந்த மரம் குளம் இவைகளில் ஒரு விநோதம், அந்த மரத்தின் இலை தரையில் விழுந்தால் பறவையாக உயிர் பெறும் தண்ணீரில் விழுந்தால் மீனாக மாறும், நக்கீரர் பூசை செய்து கொண்டிருந்தபோது ஓர் இலை பாதி தன்ணீரிலும் பாதி தரையிலுமாக விழுந்தது. தரையில் விழுந்தது. பறவையாகவும் தண்ணீரில் விழுந்தது மீனாகவும் மாறுகின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று விடாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் மனம் மலைப்புறுகிறது. செய்து வந்த சிவபூசை தவறுகிறது. பூதந்தான் எப்போது என்று காத்திருக்கிறதே உடனே, அங்கு தோன்றி நக்கீரரைப் பிடித்துக் கொண்டு போய் சிறையில் தள்ளிவிடுகிறது. ஆயிரம் பேர்கள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில், அவர்களையெல்லாம் உண்பதற்குமுன் நீராடிவரச் செல்கிறது. பூதத்தின் வரலாற்றைச் சிறையிலிருந்த மற்றவர்களிடம் கேட்டுத் தெரிகிறார் நக்கீரர். உடனே தம்மையும் மற்றவர்களையும் விடுவிக்க, முருகனைத் துதிக்கிறார். அப்படி அவர் பாடிய பாட்டுத்தான் பத்துப் பாட்டில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படை என்பது வரலாறு. இந்த வரலாற்றை பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் பாடியிருக்கிறார்.

ஏர்கொண்ட பொய்கைதனில்
நிற்குமொரு பேர் அரசின்
இலைகீழ் விழில் பறவையாம்,
இதுநிற்க, நீர்விழில் கயலாம்,
இதுஅன்றி ஓரிலை அங்கு இங்குமாகப்

பார்கொண்ட பாதியும் பறவைதானாக
அப்பாதியும் சேலதாக,
பார் கொண்டிழுக்க அது
நீர்கொண்டிழுக்க இப்படிக் கண்டது
அதிசயம் என்ன

நீர்கொண்ட வாவிதனில்
நிற்குமொரு பேழ்வாய் நெடும் பூதம்
அது கொண்டுபோய்
நீள்வரை எடுத்து அதன்கீழ் வைக்கும்
அதுகண்டு நீதிநூல் மங்காமலே

சீர்கொண்ட நக்கீரனைச்
சிறைவிடுத்தவா செங்கீரை ஆடி அருளே
திரை எறியும் அலைவாய்
உகந்த வடிவேலனே செங்கீரை
ஆடி அருளே !

என்பது பாட்டு. இப்படி நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடுவதற்குக் காரணமாயிருந்த குளமும் மரமும் இருந்த தலம்தான் திருப்பரங்குன்றம், அதனாலே முருகாற்றுப்படையில் சொல்லப்படும் ஆறுபடை வீடுகளில் முதல் படைலீடாகத் திகழ்வதும் திருப்பரங்குன்றம்தான். அந்தத் திருப்பரங் குன்றத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

மதுரைக்குத் தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் திருப்பரங்குன்றம் இருக்கிறது. மதுரையில் இறங்கி பஸ்ஸிலோ, காரிலோ செல்லலாம். இல்லை, திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலே இறங்கி நடந்தாலோ கூப்பிடும் தூரம்தான். எந்த வழியாக வந்தாலும் தூரத்திலேயே தெரிவது குன்று. இக்குன்றின் உயரம் 1056 அடி என்று கணக்கிட்டிருக்கின்றனர், குன்று சிவலிங்க வடிவமாக இருப்பதால் இதனைச் சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருக்கின்றனர். முருகன் எழுந்தருளியுள்ள தலமாதலால் கந்தமலை என்று வழங்கியிருக்கிறது. இதனையே பின்னர் திரித்துச் சிக்கந்தர் மலை என்று முஸ்லீம்கள் அழைத்திருக்கின்றனர். திருப்பழனம், . திருப்பயணம் என்றாகிக் கடைசியில் பிரஸ்தான புரியான கதைப்போலத்தான். எங்கிருந்து வந்தாலும் முதலில் நாம் சென்று சேருவது குன்றின் வட பகுதியில் உள்ள சந்நிதி வாயிலில்தான். அங்குள்ள கோபுர வாயிலுக்கு முன்னால் பெரிய மண்டபம், அதனைத் தாங்கி நிற்பவை சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த நாற்பத்தெட்டு தூண்கள் என்றால், மண்டபம் எவ்வளவு பெரிது என்று கணக்கிட்டச் கொள்ளலாம் அல்லவா?

திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தை ஏனோ சுந்தரபாண்டியன் மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் துவஜ ஸ்தம்பக் கூடம் இருக்கிறது. அங்கிருந்து படிகள் ஏறி மேலே சென்றால் மலையைக் குடைந்து அமைத்த குடைவரைகள் இருக்கும், அதில் முருகன், திருமால் துர்க்கை, விநாயகர், சிவன் முதலியவர்கள் இருப்பார்கள், கோயிலில் உள்ள மண்டபங்களில் அரிய நாத முதலியார், திருமலை நாயக்கர் முதலியோர் இருக்கின்றனர், சிலா வடிவில். இக்கோயிலில் மூலவர் பரங்கிரிநாதர் என்று லிங்கத் திருவில் உள்ள இறைவனே. இவருடைய துணைவியே ஆவுடைநாயகி. என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் முருகனே. அன்று திருச்சீரலை வாயிலில் சூரபதுமனைச் சம்ஹரிக்க, அதற்கு வெற்றிப் பரிசாகத் தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை மணம் முடித்துக் கொடுத்தான் என்பது வரலாறு. அந்தத் தேவசேனை திருமணம் நடந்த இடம் இத்திருப்பரங்குன்றமே. முருகனுக்கு அருகில் தேவசேனையும் நாரதரும் இருக்கின்றனர். அங்குள்ள குடைவரைச் சுவரில் அர்த்த சித்திரமாக அமைந்த சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கைலைக் காட்சி. கைலை மலையிலே பார்வதி ஒயிலாக நிற்கின்ற நிலை சிற்ப வடிவத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இங்குள்ள முருக வேளிடத்துத்தான் நக்கீரர் அடியவர்களை முதலில் ஆற்றுப்படுத்தியிருக்கிறார். மதுரை திருப்பரங்குன்றம் இரண்டையும் இனைத்தே பாடியிருக்கிறார்.

செருப்புகள்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி, வரிப்புனை பந்தோடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திரு வீற்றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடல் குடவயின்

இரும் சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கண் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண்போல் மலர்ந்த காமர் சுணைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கனம் ஒலிக்கும்-
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.

என்று பரங்குன்றத்து முருகனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கரிய சேற்றில் மலர்ந்த தாமரை மலரில் தூங்கி, அதிகாலையில் தேன் நிரம்பிய நெய்தல் மலரை ஊதி, சூரிய உதயமானதும் மலர்கிற பூக்களின் மீது அருஞ்சிறை வண்டுகள் ரீங்காரம் செய்யும் குன்றத்தில் அமர்ந்திருக்கிறான் அவன் என்பது நக்கீரர் தரும் விளக்கம்.

இன்னும் இத்தலத்தில் உள்ள முருகனைத் திருமூர்த்திகளும் வந்து பிரார்த்திருக்கிறார்கள். அதனாலேயே இக்குன்றம் இமயமலையை ஒத்திருக்கிறது. அம்மலையிலுள்ள அருவியும் சரவணப் பொய்கையை ஒத்திருக்கிறது என்பர் சங்கப் புலவருள் ஒருவரான நல்லழுசியார்.

பரங்குன்றம் இமயக்குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னின்ற நிறை இதழ்த் தாமரை
மின்னின்ற விளங்கினர்
ஒருநிலைப் பொய்கையோடொக்கும்
நின் குன்றம்


என்பது அவரது பாட்டு. இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். சுந்தரர் வந்திருக்கிறார். இருவரும் பதிகங்கள் பாடிப் பரங்குன்ற நாதரை வாழ்த்தி வழிபட்டிருக்கிறார்கள்.

பொன்னியல் கொன்றைப்
பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி
ஆகிய ஈசன் தொல் மறை

பன்னிய பாடல்
ஆடலால் மேய பரங்குன்றை
உள்னிய சிந்தை
உடையவர்க்கில்லை உறுநோயே

என்பது சம்பந்தர் தேவாரம், சுந்தரரோ, இத்தலத்துக்கு முடியுடை மூவேந்தரும் வந்து வணங்கி அருள் பெற்றதையும் விளக்கமாக உரைத்துப் பாடுகிறார்.

அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதும்என்
அமரர் பெருமானை, ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்து ஆறும்ஓர், நான்கும் ஓர் ஒன்றிய
படியால் இவை கற்றுலல்ல அடியார்
பரங்குன்ற மேய் பரமன் அடக்கே
குடியாகி, வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் வின் முழுதாள்பலரே.

என்பது அவரது பாடல்.

இக்குன்றத்தில் அன்று ஒரு சித்திரசாலை இருந்திருக்கிறது. அங்கே சூரியன் முதலிய கோள்கள், தாரகைகள், நாள்மீன்கள் எல்லாம். காட்டும் சித்திரம் இருந்திருக்கிறது, ரதி மன்மதன், இந்திரன், அகலிகை கௌதமன் முதலியோரது சித்திரங்களும் இருந்திருக்கின்றன. இன்று அந்தச் சித்திரசாலையை அங்கு காணோம். கோயிலும் குடைவரையும் பிரும்மாண்டமானதாயிருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் துருவித் துருவிப் பார்க்க நல்ல அவகாசம் வேண்டும்.

பரங்குன்றத்துக்கு வந்த நாம், கோயிலுள் செல்வதுடன் மாத்திரம் திருப்தி அடைய முடியாது. மலை ஏறிச் சுற்றியுள்ள காட்சிகளையும் காணவேண்டும். மலைமேல் ஏறிச் சிறிது தூரம் சென்றால் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே ஒரு சமாதி இருக்கிறது. அங்குதான் சிக்கந்தர் பாட்சா என்ற பக்கிரி அடக்கமாகியிருக்கிறார். இவர் பெயரையும் இணைத்தே ஸ்கந்தர் மலையைச் சிக்கந்தர் மலையாக்கியிருக்கிறார்கள் முஸ்லீம் நண்பர்கள்.

சமாதிக்கு முன்னால் உள்ள மண்டபம் நல்ல தமிழ் நாட்டுப் பாணியிலே இருக்கிறது. மண்டபத்தின் மேலேயுள்ள கூர் உருளை ஸ்தூபிகள் மட்டும் இஸ்லாமியர் கட்டிடக் கலையை ஒத்திருக்கின்றன. மலையின் தென்பகுதியில் ஒரு பாறை, அந்தப் பாறையில் இரண்டு திகம்பர சமண உருவங்கள் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கூன் பாண்டியன் சமணனாக இருந்த காலத்தே இந்த வட்டாரத்திலெல்லாம் சமணர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் செதுக்கி வைத்த சிலைகளாகவே இவை இருக்க வேணும், தென்பாகத்தில், ஒரு கோயில் காசி விசுவநாதர் ஆலயம் என்று. அங்கு இருக்கிறது. விசவநாதர், விசாலாக்ஷி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர் முதலியோரது சிலைகள் இருக்கின்றன. பிரம்ம தேவர்கூட பஞ்சலிங்கத்துக்குப் பக்கத்தில் பூசை செய்து கொண்டி ருக்கிறார். மலையடிவாரத்தில் தென் புறத்திலே ஒரு குடை வரை இருக்கிறது. அதை உமையாண்டவர் கோயில் என்கிறார்கள். பாறையின் பின் சுவரில் நடராஜரது தாண்டவம் செதுக்கப்பட்டிருக்கிறது. மிருதங்கம் வாசித்துக்கொண்டு விஷ்ணு நிற்கிறார். வள்ளி தேவசேனை சகிதமாக முருகவேள் இருக்கிறார். சிற்ப வடிவங்களெல்லாம் சிதைந்திருக்கின்றன. இது பல்லவர் குடைவரைபோல் இருந்தாலும், பாண்டிய மன்னர்கள் தாம் இக்குடைவரையை வெட்டியிருக்கவேணும்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட மாறவர்மன், சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் இங்கே இருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் செங்குத்தாக மலையிருக்கிறது. அங்குள்ள குகையில் ஆறு படுக்கைகள் இருக்கின்றன. இதில் ஏறுவது கடினமாக இருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயர் இந்தப்பகுதியைக் கைப்பற்றியபோது குட்டி என்ற ஒரு பக்தன் மலையிலிருந்து குதித்து இக்கோயிலைக் காப்பாற்றினான் என்று வரலாறு. அதற்காக அவன் வாரிசுகளுக்கு நிலதானம் வேறே செய்திருக்கின்றனர். இந்த மலையில் மகமதியரும், இந்துக்களும் சேர்ந்தே தொழுகின்றனர். சமரஸ பாவத்தை ஸ்கந்தர்மலை, சிக்கந்தர்மலை என்ற பெயரோடு வளர்த்து வருவது அறிந்து இன்புறத்தக்கதுதானே.