உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 4/021-032

விக்கிமூலம் இலிருந்து

21. பாபநாசத்துப் பாப விநாசர்

பஞ்சவடியிலே பர்ணசாலையில் இருந்த சீதையைச் சிறை எடுத்துச் சென்று விடுகிறான் இராவணன், சீதையைத் தேடி வரும் ராமலக்ஷமணரும் கிஷ்கிந்தை வந்து சேருகிறார்கள், ராமன் சக்ரீவனுக்குத் துணை நின்று வாலியை வதம் செய்கிறான்; சுக்ரீவனுக்குக் கிஷ்கிந்தை ராஜ்ய பாரத்தையே தருகிறான். அதன் பின் சீதை தேடும் படலம் தீவிரமாக ஆரம்பமாகிறது. வானரசேனை நான்கு திசைகளிலும் சென்று சீதையைத் தேடத் தொடங்குகிறது. அப்படிச் செல்லும் சேனா வீரரில் அனுமன் ஒருவன், அவனைத் தென்திசைக்கு அனுப்புகிறான் ராமன், அப்படி அவனை அனுப்பும்போது ஓர் எச்சரிக்கை செய்கிறான். 'தென்திசை நோக்கிச் செல்லும் நீ எங்கு வேண்டுமானாலும் போ. ஆனால் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் போய்விடாதே, தெற்கே திருநெல்வேலி சீமையில் பொதியமலை இருக்கிறது. அங்கே அகத்தியர் இருந்து ஒரு தமிழ்ச் சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். தப்பித் தவறி அப்பக்கம் போய் அங்கு அச்சங்கத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு விட்டாயோ? போச்சு என் காரியம், தமிழ் என்றால் அத்தனை இனிமையுடைய மொழி. அதிலும் அகத்தியர் நடத்தும் தமிழ்ச் சங்கம் என்றால் கேட்கவா வேண்டும்? நீயும் அத்தமிழுக்கே அடிமையாகி என் காரியத்தை மறந்து விடுவாய் ஆதலால் அந்தப் பொதிய மலைப்பக்கம் மாத்திரம் போகாதே. அகத்தியர் நடத்தும் சங்கத்தில் நுழையாதே. அங்கு பாடப்படும் தமிழ்ப் பாடல்களுக்குச் செவி சாய்க்காதே' என்றான். இப்படி ராமன் அனுமனை எச்சரித்தான் என்பதெல்லாம் என் சொந்தக் கற்பனை அல்ல. கம்பன் சொல்கிற காரியந்தான். கம்பன் பாடுகிறான்:

தென் தமிழ் நாட்டு

அகன்பொதியில் திருமுனிவன்
தமிழ்ச் சங்கம் சேர்கிற்றிரேல்

என்றும் அவண்

உறைவிடமாம், ஆதலால்
அம்மலையை இடத்திட்டு ஏகி

பொன்திணிந்த புனல்பெருகும்

பொருநை எனும் திருந்தியும்
பின்பு ஒழிய

அகன்று வளர்தடஞ்சாரல்

மயேந்திரமா நெடுவரையும்

கடலும் காண்பீர்

என்பது பாட்டு. இப்படிக் கம்பன் ராமன் மூலமாக எந்த இடத்துக்கு அனுமன் போகக் கூடாது என்று எச்சரிக்கிறானோ, அந்த இடத்துக்கே உங்களை அழைத்துச் செல்ல விரைகின்றேன் நான். ஆம்! இன்று நாம் அந்தப் பொதிய மலைக்கே செல்கிறோம். அங்கு அம்மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்துக்கே செல்கிறோம்.

பாபநாசம் என்னும் தலம் செல்லத் திருநெல்வேலி தென்காசி லயனில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஸ்டேஷனில் இறங்கவேணும், அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு மைல் செல்லவேண்டும். முதலில் விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊரைச் சென்று சேர்வோம். அதன் பின்னும் ஒரு மைல் நடந்தால் தாமிரபருணி நதிக் கரை வந்து சேர்வோம். அங்குதான் பாபவிநாசத்தராம் முக்களா லிங்கர் உலகம்மையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவரைத் தரிசிக்குமுன் மலைமேல் ஏறி, பாபநாசம் அணைக்கட்டு, மின்சார நிலையம் எல்லாம் பார்த்து விடலாமே. அங்கெல்லாம் காரில் செல்லலாம். பஸ் வசதிகளும் உண்டு. 'அப்பர்டாம்' 'லோயர் டாம்' என்ற அணைக்கட்டுகளையெல்லாம் பார்த்துத் திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கினால் அங்கு அகத்தியருக்கும் அவர் வழிபட்ட முருகனுக்கும் சிறு கோயில்கள் இருப்பதைக் காண்போம். அக்கோயிலுக்குப் பக்கத்திலேயே நன்றாகக் குளிப்பதற்கு வசதியாக அருவிக்கரை ஒன்று இருக்கிறது. அதற்கு அகத்தியர் அருவி என்றே பெயர்.

அங்கிருந்து நாலு பர்லாங்கு மலைமேல் ஏறிச் சென்றாால் பிரும்மாண்டமான உயரத்திலிருந்து விழும் கல்யாணி தீர்த்தத்தைப் பார்க்கலாம். ஆம்! பார்க்கலாம்; எட்டி நின்றுதான் பார்க்கலாம், நெருங்கிச் செல்ல எல்லாம் முடியாது. அது பல பலிகள் வாங்கிய அருலி, சிறந்த தேசத்தொண்டரும் தமிழ் அறிஞருமான வ. வே. சு. அய்யரையும் அவரது மகளையும் பலி கொண்ட அருவி என்பதை நம்மால் மறக்க முடியுமா என்ன? ஆதலால் வந்த சுவடு தெரியாமல் இறங்கி வந்து அகத்தியர் அருவியில் நீராடிவிட்டு, பாபநாசத்துக் கோயிலுக்கே வந்து விடலாம்.

பாபநாசம் கோயில் வருமுன் ஏன் இந்த அகத்தியர் இங்கு வந்து குடியேறினார் எந்த விவரம் தெரிந்து கொள்ள வேண்டாமா? கதை நமக்குத் தெரிந்ததே தான். இமவான் மகளான உமையை இறைவன் திருமணம் செய்ய இசைகிறான். அத்திருமணத்தைக் கண்டுகளிக்க நாட்டிலுள்ள மக்கள், முனிவர், தேவர் எல்லோருமே சென்று சேருகிறார்கள் இமயமலைச் சாரலுக்கு. இப்படி நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமியது காரணமாக, அந்த வடதிசை தாழ்கிறது. தென்திசை உயருகிறது. நாட்டைச் சமன் செய்யவேண்டிய பொறுப்பு இறைவனைச் சார்கிறது. அவர் வந்திருக்கும் முனிவர்களிடையே இருந்து அகத்தியரை அழைக்கிறார். அவரைத் தென்திசை செல்லச் சொல்கிறார். அவரோ, 'நான் மட்டும் திருமணக்கோலம் காண வேண்டாமா?' என்று ஏங்குகிறார். அதற்கு இறைவன், 'அகத்தியரே! என் சொல்லைத் தட்டாமல் தென்திசை செல்லும். திருமணம் முடிந்ததும் நான் நேரே தென் திசை வந்து என் திருமணக் கோலம் காட்டுகிறேன்' என்கிறார். அதன்படியே கங்கா 'ஜலத்தைத் தம் கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு வருகிறார் அகத்தியர். வழியில் குறுக்கே நின்று தடுக்கும் விந்திய மலையின் கர்வத்தை அடக்குகிறார். விந்தம் அடக்கிய வித்தகர் பின்னர் சோழ நாட்டிலே தம் கமன்டலத்தைக் கவிழ்த்துத் காவிரியைப் பெருக்கெடுக்கச் சொல்கிறார்.

திருக்கல்யாணம் கோலம்-பாபநாசம்

அதன்பின் பொதிய மலை வந்து பொருநை என்னும் தாமிர பருணியையும் உற்பத்திச் செய்து அந்நதிக் கரை யிலேயே தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவித் தமிழ் வளர்க்கிறார். 'என்றுமுள தென் தமிழை இயம்பி இசையுடன் வாழ்கிறார். அதனா லேயே தமிழை ‘அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு' என்று போற்றுகிறார்கள் புலவர்கள்.

இறைவன் வாக்களித்தபடியே அகத்தியர் தங்கியிருந்த பொதிசைக்கே வருகிறார். இறைவன் இறைவியாம் உமையையும் அழைத்துக்கொண்டு, தம் திருமணக் கோலத்தையும் காட்டி அவரை மகிழ்விக்கிறார். இத் திருமணக்கோலம் காட்டிய வரலாற்றைத் தென் தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் கேட்டிருக்கிறோம். என்றாலும் சிறப்பாக இத்தலத்தில்தான் இறைவன் காட்டியிருக்கவேண்டும். இங்குதானே அகத்தியர் தங்கியிருக்கிறார். இத்தனை விவரமும் தெரிந்துகொண்ட பின் கோயிலுக்குள் நுழையலாம். கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல, சிறிய கோயிலும் அல்ல. கோயில் வாயிலில் பொருநை நதி ஓடுகிறது. அங்கு ஒரு சிறு மண்டபம் இருக்கிறது. அங்கு சென்றால் ஆயிரக்கணக்கான மீன்கள் துள்ளி விளையாடுவதைக் காணலாம், பொரியோ, கடலையோ வாங்கிப் போட்டு அம்மீன் விளையாட்டைப் பார்த்தபின் கோயிலுக்குள் நுழையலாம்.

கோயில் வாயிலில் ஒரு கோபுரம், கோயிலுக்கு ஒரு பெரிய மதில், இந்த மதிலுக்குள்ளே ஒரு பிராகாரம். அந்தப் பிராகாரத்தின் மேல் பக்கத்திலே ஒரு களாமரம் மூன்று கவடுகளோடு நிற்கிறது. அந்தக் களாமரத்தடியிலேதான் இறைவன் லிங்கத்திருவுருவில் எழுந்தருளியிருக்கிறார். அதனால் அவர் முக்களாலிங்கர் என்ற பெயரும் பெற்றிருக்கிறார். நந்தி மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்து சென்று, கருவறையில் உள்ள லிங்கத் திருவுருவைக் கண்டு வணங்கலாம் அவரை வணங்கிய பின் வெளியே வந்து பிராகாரத்தைச் சுற்றினால் கன்னி மூலையிலுள்ள உத்சவமூர்த்தியைக் காணலாம். இவர் சோமாஸ்கந்த வடிவினரே. மற்றக் கோயில்களில் காணும் சோமாஸ்கந்த வடிவத்துக்கும் இங்குள்ள வடிவத்துக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமே இல்லை தான்.

அதனை அடுத்த ஒரு சிறு மண்டபத்திலே உயர்ந்த பீடத்தின் மேலே ரிஷபாரூடராய் இறைவனும் இறைவியும் திருமணக் கோலத்தில், அகத்தியருக்கு காட்சி கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள், நல்ல அற்புதமான வடிவம். இச்சிலை வடிவினைப் பார்க்கும் போது, குற்றாலத் தலபுராண ஆசிரியர் நாட்டு ஞாபகத்துக்கு வராமல் போகாது.

மருமலர் விதான வேள்வி
மண்டடம் கடந்து உள்போகித்
திருமண அறையில் மேவி
தேவியும் தாமும் ஆக
அருள் மணக் கோலக் காட்சி
அருளி வீற்றிருந்தார் மன்னோ !
கருதுவார் கருதும் வண்ணம்
காட்சி தந்தருளும் வள்ளல்.

ரிஷபத்தின் காம்பீரியம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும், கீழே தரையில் அகத்தியரும் அவரது மனைவி லோபாமுத்திரையும் கூப்பிய கையராய் நின்று கொண்டிருக்கிறார்கள் சிலை உருவில், குன்டோதரன் வெண் கொற்றக் குடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இந்த அறையிலேயே மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி பூதேவி சகிதம் எழுந்தருளியிருக்கிறார், செப்புச் சிலை வடிவில் பக்கத்திலே. அகத்தியரும் லோபா முத்திரையும் செப்புச் சிலை வடிவிலும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின்னர் கோயிலைச் சுற்றிக்கொண்டு வந்தால் இறைவனுக்கு இடப் பக்கத்தில் உலகம்மை சந்நிதி இருக்கிறது. இவள் வரப்பிரசித்தி உடையவள். முக்களாலிங்கர், மூவர் முதலிகளின் பாடல் பெற்றவர் அல்ல. ஆனால் இந்த உலகம்மையை விக்கிரமசிங்கபுரவாசியான நமச்சிவாய கவிராயர் பல பாடல்களால் பாடிப் பரவியிருக்கிறார். உமையே உலகம்மையாக இருக்கிறாள் என்பதையும் அவளையே இமவான் மனைவியான மேனை பெற்றெடுத்திருக்கிறாள் என்றும் கவிஞர் கூறுகிறார்.

தீட்டுதமிழ் மாமுனிக்குச்
சித்திரை மாதப்பிறப்பில்
காட்டுமணக் கோலம் எந்தக்
காலமும்நான் காண்பேனா?

வேட்டு முலைப்பால் இமய
வெற்பரசி ஒக்கலைவைத்து
ஊட்டும் மகவே
உலகுடைய மாதாவே!

என்பது பாட்டு. ஆம்! ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இத்தலத்தில் சித்திரை விஷூதான் சிறப்பான நாள். அன்றுதான் அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியிருக்கிறார் இறைவன். இந்தப் பாடல் பாடிய நமச்சிவாய கவிராயர் நிரம்பக் கர்வம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். அவர் கர்வம் அடைந்ததற்குக் காரணத்தையும் அவரே சொல்கிறார்.

பாரிலே நமக்கு ஒருவர் நிகரோ?
தென்றல் பருவத்தில் வரு
தாம்பர பருணி ஆற்று
நீரிலே மூழ்கி வினை ஒழித்தோம்,
சைவ நெறியிலே நின்று
நிலைபெற்றோம், சிங்கை
ஊரிலே குடியிருந்தோம்,
எமது கீர்த்தி உலகம் எலாம்
புகழந்து ஏத்த, உலகமாதின்
பேரிலே கவிதை எலாம் சொன்னோம்
பிறப்பில் எழுபிறப்பும் அறப்
பெறுகின்றோமே

ஆம்! நாமும் பாபநாசம் சென்று. தாமிரபருணியிலே நீராடி நமது பாவங்களெல்லாம் நாசமாகிப் போகும்படி செய்து கொள்ளலாம். உலசுமாதின் புகழைப் பாடிப்பாடிப் பரவி முக்தி பெறலாம்.

இக்கோயில் விக்ரம சிங்க பாண்டியன் மகனான கருணாகரப் பாண்டியன் காலத்தில் கட்டட்பட்டிருக்கிறது. அவனது புத்திரனான ராஜ ராஜ பாண்டியன் முதலியவர்களால் விரிவாக்கப் பட்டிருக்கிறது. கி.பி.13 ஆம் நூற்றாண்டிலே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேணும் என்று தெரிகிறது. அதற்குரிய கல்வெட்டுக்கள் பல இந்தக்கோயிலில் இருக்கின்றன.