வேங்கடம் முதல் குமரி வரை 5/010-019
ஒரு பக்தர், நம்மாழ்வாரது திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடிப் பாடித் திளைத்தவர். நம்மாழ்வாரது அவதாரத் தலமான திருக்குருகூரையும், அங்கு ஆழ்வார் தங்கியிருந்த புளிய மரத்தையும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதி நாதரையும் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்.
அந்தக் குருகூர் திருநெல்வேலி மாவட்டத்திலே தண்பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கரையிலே இருக்கும் ஒரு சிறிய ஊர் என்றும், நம்மாழ்வார் அவதரித்த நாளிலிருந்து அந்த திருப்பதிக்கு ஆழ்வார் திருநகரி என்று பெயர் வழங்கி வருகிறது என்பதையும் கேட்டிருக்கிறார். அந்த பக்தருக்கு ஓர் ஆசை, அந்தக் குருகூருக்குச் செல்லவேண்டும், அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆழ்வாரையும், ஆதிநாதரையும் வணங்கவேண்டும் என்று, சம்சார பந்தங்களில் சிக்கிச் சுழலும் பக்தருக்கும் அதற்கு நாளும் பொழுது, வாய்க்க வில்லை. பல வருடங்கள் கழிகின்றன. கடைசியாக ஒரு நாள் வசதி பண்ணிக்கொண்டு ரயில் ஏறி திருநெல்வேலியில் வந்து இறங்குகிறார். அப்போது திருகுருகூருக்கு ரயில் போடப்படவில்லை. பஸ் வண்டிகளும் இன்று ஓடுவது போல் ஓடவில்லை. டாக்சி கார்களே கிடையாத காலம் அது. இதையெல்லாம் ஈடு செய்யத்தான் அவரிடம் நிறைய ஆர்வம் இருக்கிறதே.
அந்த ஆர்வத்தையே துணையாகக் கொண்டு, வழி விசாரித்துக் கொண்டு, திருநெல்வேலியிலிருந்து கிழக்கு தோக்கி நடக்கிறார். கிருஷ்ணாபுரம், ஜயதுங்கன் நல்லூர்,கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் எல்லாவற்றையும் கடக்கிறார், ஓரிடத்தும் தங்காமலேயே. கடைசியாக பதினேழு மைல் நடந்ததும் ஊர் தெரிகிறது. விசாரித்தால் அதுதான் ஆழ்வார் திருநகரி என்கிறார்கள். ஊருக்கு வடபுறம் தாமிரபரணி ஓடுகிறது. படித்துத் தெரிந்து கொண்டதும், முன் சென்றவர்கள் சொன்ன அடையாளங்களும் சரியாகவே இருக்கின்றன. பக்தரது உள்ளத்திலே ஒரே குதூகலம். பக்தர் நல்ல கவிஞரும் கூட, அவரது உள்ளத்தில் எழுந்த உற்சாகம் கவிதையாக பிரவகிக்கிறது. பாடுகிறார் அவர்:
இதுவோ திரு நகரி?
ஈதோ பொருநை?
இதுவோ பரம பதத்து
எல்லை - இதுவோ தான்
வேதம் பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்?
இதுதானா ஆழ்வார் திருநகரி? இதுதானா தண் பொருநை? இதுதானா வைகுந்தநாதன் தங்கும் பரமபதத்து எல்லை? - இதுதானோ வேதத்தின் உட்பொருளையெல்லாம் திருவாய் மொழியாகப் பாடிய - சடகோபன் என்னும் நம்மாழ்வார் பிறந்த பதி. அடடா! இதைக் காணுகின்ற பேறு எளிதில் சித்திக்கக் கூடியதா என்ன, என்று ஒரே ஆனந்த வெறியில் ஆடிப்பாடவே ஆரம்பித்து விடுகிறார். அப்படி ஒரு வெறியை பக்தர் ஒருவருக்கு உண்டாகிய திருப்பதி தான் ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகளால் பாடப்பெற்ற தலங்கள் 274 என்று ஒரு கணக்கு. ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகள் 108 என்றும் அறிவோம். சமயகுரவர்கள் பாடிய தேவாரங்கள் முழுவதும், ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் முழுவதும் நமக்கு கிடைத்து விட்டன என்று உறுதி கூற முடியாது. ஆதலால் பாடல் பெறாத பதிகள் என்று நாம் எண்ணும் பல தலங்கள் பாடல்கள் பெற்றிருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடமுண்டு. என்றாலும் பாடல் பெற்ற பதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு.
அதிலும் நம்மாழ்வார் பாடிய பதிகள் என்றால் கேடகவா வேண்டும். பாண்டிநாட்டு வைணவ திருப்பதிகள் பதினெட்டு என்றால், அதில் ஒன்பது தாமிரபரணி நதிக்கரையிலே குருகூராகவும், அதைச்சுற்றிய திருப்பதிகளாகவும் இருக்கின்றன. அவைகளையே நவதிருப்பதிகள் என்று வைணவ உலகம் போற்றுகிறது.
இத்திருப்பதிகளை தரிசிப்பதில் ஒரு பெரிய புண்ணியம் உண்டு, உள்ளத்துக்கு ஒரு மகிழ்ச்சியும் ஒரு தெம்பும் உண்டு என்று அறிகிறபோது நமக்குமே அத் திருப்பதிகளை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் எழுவது இயற்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைணவ பக்தர்கள் கால்நடையாகக் காலையிலேயே புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம் முதல் திருகோளூர் வரை எட்டுத்திருப்பதிகளுக்கும் சென்று அங்குள்ள பெருமாள்களை எல்லாம் வணங்கி மாலையில் ஆழ்வார் திருநகரி வந்து ஆதிநாதரும் ஆழ்வாரும் பரமபதத்துக்கு எழுத்தருளும் போது தாமும் உடன் சேர்ந்து கொண்டால் இந்த பிறவியிலேயே முத்தி நிச்சயம் என்று நம்பிக்கை யோடு யாத்திரைக்கு வருபவர்களும் உண்டு.
நமக்கெல்லாம் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இதற்கு வசதி பண்ணிக் கொள்ள அவகாசம் கிடைக்கிறதோ என்னவோ? நல்ல தீபாவளி தினத்தன்று - ஆம் எல்லோருக்கும் விடுமுறை கிடைத்திருக்கும் நாளில் - காலையில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை புனைந்து இந்த நவ திருப்பதிகளையும் ஒரு சுற்றுச்சுற்றி தரிசித்து விடலாமே. அதற்கு நமக்கு அவகாசமும் கிடைக்குமே. அதற்கும் அவகாசமில்லாத தமிழ் அன்பர்களை இன்று மானசீகமாகவே இந்த நவதிருப்பதிகளுக்கும் அழைத்துச் சென்று விட முனைகிறேன் நான் இன்று. என்ன, உடன் வருகிறீர்கள் அல்லவா? இல்லை நேராகவே சென்று பார்த்து விடுவோமே என்று துணிகிறவர்களுக்கு ஒன்று சொல்வேன்.
திருநெல்வேலியிலோ இல்லை ஸ்ரீவைகுண்டத்திலோ ஒரு டாக்சி கார் ஏற்பாடு செய்து கொண்டு புறப்படுவது நல்லது. நடந்தே கிளம்புவோம் என்றால் ஒரு எச்சரிக்கை. மொத்தம் பதினாறு, பதினெட்டு மைல் நடக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்த நடராஜா சர்வீசை விட்டு காரிலே சென்றால் சுமார் மூன்று நான்கு மணி நேரத்திற்குள் முடித்துத் திரும்பி விடலாம். இந்த நவதிருப்பதிகளில் ஆறு திருப்பதிகள் தாமிரபருணியின் வடகரையிலும் மூன்று திருப்பதிகள் தென்கரையிலும் இருக்கின்றன என்றாலும், ஆற்றின் வடகரையில் நடந்தாலும் சரி, காரில் சென்றாலும் சரி, நான்கு திருப்பதிகளையே வசதியாகக் காண முடியும்.
தொலைவில்லிமங்கலம் என்னும் கிராமத்தில் ஆற்றின் வடகரையை அடுத்து இருக்கும் இரட்டைத் திருப்பதிகளைக் காண தென் கரையிலிருந்து நடந்தே ஆற்றைக் கடந்து செல்வதுதான் நல்லது. வசதியானதும் கூட இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை விட யாத்திரையையே துவங்கி விடுவது நல்லது.
திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலோ ரயிலிலோ, முதலில் ஸ்ரீவைகுண்டம் போய்ச் சேர்ந்து விடுவோம். ரயிலில் சென்றால் தாமிர பருணியின் தென்கரையில் புதுக்குடி என்ற சிற்றூரில் தான் இறங்குவோம். இனி ஆற்றின் பேரில் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாக நடந்து ஸ்ரீவைகுண்டம் ஊர் போய்ச் சேரலாம். பாலத்தின் மீது போகும் போதே நீண்டுயர்ந்த கோபுரம் தெரியும். அதை நோக்கி நடந்தால் அங்குள்ள கள்ளப்பிரான் கோயில் வாயில் வந்து சேருவோம்.
விறு விறு என்றே உள்ளே நுழைந்து, அர்த்த மண்டபம் சென்றால் அங்கே தங்கத்தால் ஆன மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் நிற்க, கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்பார். அவர் நம் உள்ளம் கவரும் கள்வராக பேரழகுடன் இருப்பார். இவருக்கும் பின்னாலேதான் மூலவராக கருவறையிலே வைகுந்த நாதர் தனித்தே நிற்கிறார். இவர் பலகாலம் மண்ணுள் மறைந்திருந்ததாயும், அந்த இடத்திலே பசுக்கள் எல்லாம் பால் சொரிந்து நிற்க, அதன் பின்னரே வெளி வந்திருக்கிறார். அதனால் அவரை பால் பாண்டியன் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ஐந்து ஆறாம் தேதிகளில் காலையில் இளஞ்சூரியனது கிரணங்கள். கோபுரவாயில் மண்டபங்கள் எல்லாம் கடந்து வந்து வைகுந்த நாதர் மேனியைப் பொன்னிறமாக்குகின்றன. சிவபெருமானுக்கு இச்சூரிய பூசை பல தலங்களில் நடக்கிறது என்றாலும், பரந்தாமனுக்கு இந்த சூரிய பூசனை நடப்பது இந்தத் திருப்பதி ஒன்றிலேதான். இக் கோயிலின் கன்னி மூலையில் வைகுண்ட நாயகி தனிக் கோயிலில் கோவில் கொண்டிருக்கிறாள். அதற்கு எதிர்த்த வட திசையில் சோரநாத நாயகிக்கும் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இக் கோயிலில் காண வேண்டியவை செப்புப் படிமமாக இருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் ஒருவர். வெளி மண்டபத்திலே இரண்டு அழகிய சிற்பங்கள். ராமன் சுக்ரீவனை அணைத்துக் கொண்டு நிற்கும் கோலம் ஒன்று. அதற்கு எதிர்திசையில், லக்ஷ்மணர் அனுமனையும் அங்கதனையும் அணைத்து நிற்கும் கோலம் ஒன்று. இரண்டுமே தமிழ்நாட்டின் சிற்பக்கலை உலகில் பிரசித்தி பெற்றவை.
வைகுண்ட நாதன் சந்நிதியிலேயே நீண்டநேரம் நின்றுவிட்டோம். இனி விறு விறு என்று மூன்று மைல் நடந்தால் நத்தம் என்ற ஊர் வந்து சேருவோம். நத்தம் என்னும் நவதிருப்பதி ஒன்று கிடையாதே என்று எண்ணினால், அந்த ஊர்தான் வரகுணமங்கை என்ற திருப்பதி என்று அறிவோம்.
அங்கு கோயில் கொண்டிருப்பவர் விஜயாசனர். பெயருக்கு ஏற்ப இருந்த திருக்கோலத்திலேயே காட்சி அளிப்பார். அவர் பக்கத்தில் வரகுண வல்லித்தாயாரும் வீற்றிருப்பார். அவர்களையும் வணங்கிவிட்டு மேல் நடந்தால் புளிங்குடி என்ற திருப்பதி வந்து சேருவோம். இங்கே புஜங்க சயனராக பெருமாள் கிடக்கிறார். நல்ல ஆகிருதியான வடிவினர். அர்த்த மண்டபத்தையும் கடந்து கருவறைவாயில் வரை சென்றால்தான் அவரது முழு வடிவையும் காணலாம்.அதற்கெல்லாம் பட்டாச்சாரியார்கள் அனுமதிக்க மாட்டார்கள். கோயில் பிராகாரத்தைச்சுற்றி வரும் போது வடக்கு வாயில் சன்னல் வழியாகக் கண்டால் பாததரிசனம் கிடைக்கும். பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ என்று கொஞ்சம் கற்பனை பண்ணி அந்தக் காசினி வேந்தன் வடிவைக்கண்டு கொள்ளவேண்டியது தான், இதுவரை நாம் கண்ட மூன்று கோயில்களையும் சேர்த்தே நம்மாழ்வார் மங்களா சாஸனம் செய்து வைத்திருக்கிறார்.
புளிங்குடி கிடந்து வரகுலைமங்கை
இருந்து, வைகுந்தத் துள்நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய், எனக்கருளி
தணிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே
என்பது நம்மாழ்வார் பாசுரம்.
புளிங்குடியிலிருந்து ஐந்து மைல் கிழக்கு நோக்கிச் சென்றால் பெருங்குளம் வந்து சேருவோம். பெயருக்கு ஏற்ப ஊரை ஒட்டி வடபுறத்தில் ஒரு பெரிய குளமே இருக்கிறது. இங்குள்ள கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மாயக்கூத்தர். இவரே உத்சவர். மூலவராக இருப்பவர் வேங்கட வாணர். அவர் பிரஹஸ்பதிக்கு பிரத்யக்ஷமானவர். அவர் பக்கலிலேயே பிரஹஸ்பதியும் இருக்கிறார். இந்த மாயக்கூத்தனையும் நம்மாழ்வார் பாடி மகிழ்ந்திருக்கின்றார்.
மாடக் கொடி மதிள்
வண்குட்டால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற்பறவை உயர்த்த வெல் போர்
ஆழி அலவனை ஆதரித்தே.
என்பதே நம்மாழ்வார் பாசுரம். மாயக் கூத்தனையும் குளந்தை வல்லியையும் வணங்கி விட்டு துலை வில்லி மங்கலம் நோக்கி நடக்கலாம். ஆம் நடக்கவே வேணும். வாய்க்கால் கரை, வயல் வரப்பு உடங்காடு எல்லாம் கடந்தே துலை வில்லி மங்கலத்து இரட்டைத் திருப்பதி சேர வேண்டும். இந்தப் பயணம் எளிதானது அல்ல. பாதையும் சரியாய் இராது.
ஆதலால் காரில் ஏறிக்கொண்டு, வந்த வழியே திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்து தாமிர பருணியின் தென்கரையிலே ஆறு மைல் தூரம் போனால் காமெல்லாபாத் என்ற முஸ்லீம் சகோதரர்களின் புதிய கிராமத்தண்டை வந்து சேருவோம். அங்கு ஆற்றின் தென்கரையிலே காரை நிறுத்திவிட்டு, இறங்கிக்கரை ஏறி ஆற்றைக் கடந்தால் துலை வில்லி மங்கலத்தில் உள்ள இரட்டைத் திருப்பதி வந்து சேருவோம். நல்ல உடங்காட்டிற்குள்ளே இரண்டு சிறிய கோயில்கள் ஒன்றை ஒன்று அடுத்து இருக்கும். ஒன்றிலே இருப்பவர் தேவர் பிரான். மற்றொன்றிலே நிற்பவர் அரவிந்த லோசனர். இவர்களையும், கருந்தடங் கண்ணி என்னும் தாயாரையும் தரிசித்து வணங்கி இந்த இரட்டைத்திருப்பதிப் பெருமாள்களைப் பற்றிப் பத்து பாடல்களை நம்மாழ்வார் பாடி மங்களா சாஸனம் செய்திருக்கிறார்.
சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் தேவர் பிரானையே
தந்தை தாயென்றடைந்த சடகோபன்
என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார்.
இனி இரட்டைத் திருப்பதியை விட்டு தாமிரபரணியின் தென்கரை வந்து கார் ஏறி, கிழக்கே ஒன்றரை மைல் சென்று வடக்கே திரும்பினால், தென்திருப்பேறை என்னும் திருப்பதி வந்து சேருவோம். இங்கே கோயில் கொண்டிருப்பவர்தான் மகர நெடுங்குழைக்காதர். எல்லாத் திருப்பதிகளிலும் பெருமாளின் அங்க அழகை வைத்து புதுப்புதுப் பெயர் பூண்டு நிற்கும் பெருமாள் இத்திருப்பதியில் காதில் அணிந்திருக்கும் குழையையே தன் திருப் பெயராகத் தாங்கி நிற்கும் அழகுடையவராக இருக்கிறார். இங்குள்ள மூலவர் நிகரில் முகில்வண்ணன். இப்பெருமாளையும் குழைக்காதவல்லித் தாயாரையும் வணங்கி,
மகா நெடுங்குழைக்காதன் மாயன்
நூற்று வரை அன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான்
என் நெஞ்சம் கவர்ந்தென்னை ஊழியாலே
என்ற நம்மாழ்வார் பாடலையும் பாடிவிட்டு, மேற்கு நோக்கி மூன்று மைல் நடந்தால் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத்தலமான திருக்கோளூர் என்னும் திருப்பதி வந்து சேருவோம்.
மதுரகவியாழ்வார் பெருமாளையே பாடவில்லை. அவர் கண்ட ஞானஒளி, வகுள பூஷண பாஸ்கரன் நம்மாழ்வார்தானே? அவரே அவருக்குத் தெய்வம் - எல்லாம். கோயில் சிறிய கோயில் தான் என்றாலும், அங்குள்ள பெருமாள் வைத்தமாநிதி. இவரும் கிடந்த திருக்கோலம் தான்.
உண்லும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலை.
- -
யெல்லாம் எம்பெருமான்
என்றே கண்கள் நீர் மல்கி
மண்களில் உளவன சீர்
வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் யென்னினமான் புகும்
ஊர் திருக்கோளூரே
என்று நம்மாழ்வாரால் பாடல் பெறும் பேறு பெற்ற ஊர் ஆயிற்றே. இங்குள்ள வைத்த மாநிதியாம் மது சூதனனை வணங்கி விடைபெற்று, நவதிருப்பதிகளில் பிரதான தலமாகிய ஆழ்வார் திருநகரி என்னும் குருகூர் வந்து சேரலாம்.
அங்கு கோயில் கொண்டிருக்கும் ஆதிநாதப் பெருமாள், பொலிந்து நின்ற பெருமாள், சடகோபர் என்னும் நம்மாழ்வார், அவர் இளமையில் இருந்த திருப்புளி எல்லாவற்றையும் தரிசித்து விட்டு ஊர் திரும்பலாம். திரும்பும் போது இதுவோ திருநகரி என்று எக்களிப்போடு பாடிய கவிஞன் போல
சேமம் குருகை யோ?
செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசமோ
நாரணமோ - தாமம்
துளவேர் வகுளமோ
தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு
என்று நவதிருப்பதிகளையும் பாடிய நம்மாழ்வாரிடமே கேட்கலாம். அத்தகைய தெம்பு தான் இதற்குள் நமக்கு வந்திருக்க வேண்டுமே!