உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/இந்தியாவின் அமைதியின்மைக்கு இந்திய அரசே காரணம்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியாவில் அமைதியின்மைக்கு
இந்திய அரசே காரணம்!....


க்களின் உண்மையான எழுச்சிக்குக் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலும், அக்காரன நீக்கத்திற்குரிய வழியைப் பின்பற்றாமலும், எந்த ஓர் அரசாலும் மக்கள் கிளர்ச்சிகளை அடக்கிவிட முடியாது. “அடங்கியிருப்பவர்களே மக்கள்! அடங்காதவர்கள் வன்முறையாளர்கள்’ தீவிரக்காரர்கள், கொடுமைக்காரர்கள்” என்றெல்லாம் குறைத்துப் பேசி, இழித்துப் பேசி மக்கள் கோரிக்கையாளர்களை ஒழித்துவிடலாம் என்று கனவு காண்பது அறியாமை. விடுதலைக்காகப் போராடி மக்களாட்சியை அமைத்தவர்கள், மக்கள் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இப்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு, உரிமைக்காகப் போராடியவர்கள் வேறாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் வேறாகவும் இருப்பதே காரணம். பெற்றவளுக்கே குழந்தையின் மீது பாசமும் பரிவும் ஏற்படும். பெறாதவளுக்கு அவை எங்கிருந்து வரும்? இராசீவ்காந்தி அரசு அதிகார மமதையால் கிளர்ந்து வரும் தேசிய இன எழுச்சிகளை ஒடுக்கத் தொடங்குவதும் அத்தகையதே!

வெறும் அழகுச் சொற்களாலும் கவர்ச்சி அரசியலாலும் மக்களை அமைதிப்படுத்திவிட முடியாது. இந்திய அரசு இப்போது கடைப்பிடித்து வரும் பாசிசக் கொள்கையால் மக்கள் எழுச்சிகள் மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுந்து, நாட்டைச் சீரழிக்குமே அன்றி, அமைதியான ஆட்சியை உருவாக்கிவிட முடியாது. இந்தியாவில் அமைதியின்மைக்கு இந்திய அரசின் அரசியல் அதிகார வெறி அடக்கு முறைகளே முழுக்காரணம்!

வெறும் போர்க்கருவிகளால் மக்களை அச்சுறுத்தி, அடக்கி, ஒடுக்கிப் பணிய வைக்கும் உத்திகள் எல்லாம் இனிமேல் செல்லாது என்பதையே ஆங்காங்கே கிளர்ந்து வரும் பஞ்சாப், மிசோரம், குசராத், மேற்கு வங்காள, கூர்க்கா போராட்ட எழுச்சிகள் காட்டுகின்றன. இவற்றின் உண்மையான உணர்வுகளை விளங்கிக் கொள்ளாமல், படை பட்டாளம் கையில் உள்ளன என்று சரமாரியாகச் சுட்டுத் தள்ளுவதனால் மக்களை அமைதியடையச் செய்துவிட முடியாது.

இந்தியாவில் இன்றைய நிலையில் எந்த மாநிலத்திலுமே மக்கள் அமைதியாக இல்லை. இந்தியத் தலைநகரான தில்லியிலேயே நாளுக்கொரு குண்டுவெடிப்பும், நகரத்துக்கொரு போராட்டமுமாக நடந்து கொண்டிருக்கின்றன. காரணம் மக்கள் வறுமை மட்டுமில்லை, அதிகாரச் செருக்குகள், ஆட்சி வல்லாண்மைகளே அப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு ஊக்கி வருகின்றன.

நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டுப் போர் முட்டங்களை விட, உள்நாட்டுப் போராட்டங்களே அரசை அமைதியிழக்கச் செய்து வருகின்றன. இவற்றையெல்லாம் ஒரே அதிகார அணுகுமுறையைக் கொண்டு அரசு அடக்கப் பார்க்கிறது. எல்லைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுத்தாக்கங்களை முறியடிக்கவும் வாங்கிக் குவித்து வைக்கப் பெற்றிருக்கும் போர்க் கருவிகளெல்லாம் மக்களின் உரிமையெழுச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படுத்தப் பெறுகின்றன. கிளர்ச்சியுறும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் வெள்ளைக்காரர்கள் பயன்படுத்திய அதே உத்திகள் கையாளப் பெறுகின்றன. நீடித்து வரும் இந்த நிலை இந் நாட்டின் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

அரசியலில் எங்குப் பார்த்தாலும் ஊழல்கள், கையூட்டுகள், அதிகாரக் கொள்ளையடிப்புகள், சட்டத்தின் தவறான நடைமுறைகள்!!

பொருளியல் நோக்கில், நாட்டில் பெரும்பகுதி மக்கள் வறுமையின் கொடுமையான பிடியிலிருந்து விடுபடாத அவல நிலை! செத்தும் சாகாத நிலையில் பல கோடி மக்கள்!

தொழிலியல் சீரழிவுகள், ஊதியக் கிளர்ச்சிகள், மொழியியல் வாழ்வியல் போராட்டங்கள்!

எங்கும் எந்த நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டிய கல்வித் துறைகளிலேயே போராட்டங்கள் ஊடுருவி விட்டன. மாணவர்கள் அமைதியாகப் படிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகி விட்டன. பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியேறி, மாணவர்கள் தொழிலாளர்களுடனும், போராட்டக்காரர்களுடனும், அரசியல்காரர்களுடனும் இணைந்து, தங்கள் எதிர்காலங்களைச் சிதைத்துக் கொள்ளுகின்ற முறையில், போர்க்கருவிகளைக் கைகளில் எடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலை நாட்டின் எதிர்காலத்தை எங்கே கொண்டு போய்விடும் என்று கருதிப் பார்க்கவும் இயலாமல் செய்து வருகிறது.

போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், அதிகார முற்றுகைகள், கட்டட உடைப்புகள், போக்குவரத்துச் சிதைவுகள், பொதுச் சொத்துச் சேதங்கள் முதலியவை அங்கிங்கெனாதபடி எங்கும் நடந்து வரும் அன்றாடக் காட்சிகளாகி விட்டன.

போதும் போதாமைக்குக் கொலைகள், கொள்ளையடிப்புகள், கற்பழிப்புகள், கயமைத்தனங்கள் போன்ற குமுகாயச் சீரழிவுகள் வேறு, ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சூளுரைகளாக வானோங்கி வளர்ந்து வருகின்றன.

இவ்வாரவார அழிவுக் கிளர்ச்சிகளுக்கிடையில் தாம் அரசு விழாக்கள், வேடிக்கைகள், விளையாட்டுகள், சமயச் சந்தடிகள், கலை, காமக் கூத்தடிப்புகள் முதலிய பணப் பாழடிப்பு முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசாலேயே வளர்க்கப் பெற்று வருகின்றன.

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், திரைப்பட நடிக நடிகையர்களை விடக் கவர்ச்சியாக நடிக்கவும் பேசவும் முற்பட்டு, வெட்கங்கெட்ட விளம்பரப் பாணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நாடகமாடி வருகின்ற இழிவுகள் நாள்தோறும் மிகுந்து வருகின்றன.

அறிவாளிகளுக்கும், அறிவிலிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அடையாளங்கள் விளங்குவதில்லை; நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் வேற்றுமைகள் புரிவதில்லை; அதிகாரிகளும் அரசியல்காரர்களும் ஒன்றாகவே காட்சியளிக்கின்றனர். இரு தரப்பினரின் சொற்களும் கூட ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன பேசுவது காந்தியம்! நடப்பது பாசிசம்!

இந்நிலையில்தான் அரசு (இந்தியத் தேசியம்,) நாட்டு ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று மாய்மாலக் கூத்துகளையும் வாய்நீள உரைகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்தியத் தேசியம் என்னும் செயற்கை உணர்வில் மக்களைச் சிக்க வைக்க அரும்பாடுபட்டு வருகிறது. இயற்கையான, உண்மையான மொழித் தேசியத்தையோ, இனத் தேசியத்தையோ, அரசு கண்களாலும் காண மறுக்கிறது; காதுகளாலும் கேட்க மறுக்கிறது. மனத்தாலும் மதிக்க மறுக்கிறது. இந்தியா, இந்தியா என்று பொய்த் தேசியம் பேசி, புளுகு ஆட்டம் ஆடி வருகிறது.

அரசு அனைத்து நிலைகளிலும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழும் செயல்படும் மக்களின் உண்மையான எழுச்சிக் காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாமல், அறிந்து கொண்டாலும் செயல்பட முற்படாமல், மக்கள் உணர்வை அவமதிக்கிறது; அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறது; அவர்களின் நாயமான போராட்டங்களை முறியடிக்கிறது; போராடுபவர்களையே அழிக்கப் பார்க்கிறது; அழிக்கிறது!

உண்மையான உணர்வாளர்களையும், சிந்தனையாளர்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும், கொள்கையாளர்களையும், தன்னை எதிர்க்கும் தலைவர்களையும் இல்லாமல் செய்துவிட்டு, அல்லது அடக்கி, ஒடுக்கி, அழித்துவிட்டு, யாரை மக்களென்று கூறி, இவர்கள் ஆட்சி நடத்திப் பார்க்க விரும்புகிறார்கள் என்று விளங்கவில்லை. ஊமை மக்களையும், கருத்துக் குருடர்களையும், மண்ணுளிப் பாம்புகளையும், வெறும் முக்கு விழி வைத்த உடல்களையுமே ஒரு நாட்டுக்குத் தேவையான மக்கள் என்று இவர்கள் கருதுகிறார்களோ?

உள்நாட்டில் செழித்து வளர்ந்துள்ள உணர்வாளர்களையும், கருத்தாளர்களையும் போராட்ட வீரர்களையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டால், வெளிநாட்டுப் போர் வருகிறபோது, இவர்களுக்குத் துணை நிற்க எஞ்சியவர்கள், வெறும் மாந்தப் பாவைகளாகவே இருக்க முடியும். அக்கால், உண்மையான எழுச்சியுள்ள வீரர்களையும் உணர்வாளர்களையும் இவர்கள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறார்களோ?

எனவே, நாட்டுணர்வுகளையும், போராட்ட எழுச்சிகளையும் வெறும் அழிவுக் கருவிகளைக் கொண்டே அடக்கிவிட நினைக்க வேண்டாம். ஆட்சியாளரிடம் உள்ள அக் கருவிகள் மக்கள் கைகளுக்குவர நெடுநாள் ஆகாது! ஒரேயொரு கால எல்லைதான் தேவை! அஃது எந்தக் காலம் என்று யாராலும் வரையறுக்க முடியாது. ஊர் நலனுக்கென்று தேக்கி வைக்கப் பெறுகின்ற அணைநீர்! அவ்வணையின் கரை உடைக்கப்படும்பொழுது, அஃது ஊரையே அழித்துவிடும் என்பதை எப்பொழுதும் ஆளுமைக்காரர்கள் உணர்ந்து கொள்வதை விடப் போராட்டக்காரர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதையேனும் ஆட்சியில் உள்ள இராசீவ்காந்திகளும், இராமச்சந்திரன்களும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்!

புரட்சி வாழ்க! புதுமை பொலிக!

வறட்சி நீங்குக! வல்லாண்மை ஒழிக!

-தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986