உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/கெஞ்சுவதில்லை பிறர்பால்

விக்கிமூலம் இலிருந்து

‘கெஞ்சுவதில்லை பிறர்பால்’


(‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் விடையளிக்கிறார்’ - எனும் தலைப்பின் கீழ் தென்மொழியில் வெளிவந்த வினா-விடைப் பகுதியில் வெளியிடப்பெற்ற தமிழக விடுதலைத் தொடர்பான வினா)

“மிசாக்காலத்தில் தாங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இடையிலேயே வெளியே வந்ததாகவும் அப்படிப்பட்ட நீங்கள் தமிழ் நாடு கேட்பதற்கு என்ன வக்கு இருக்கிறது. என்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை எரிப்பதாக ஈரோட்டில் தீர்மானம் போட்டு விட்டுப் பின்னர் சட்டத்திற்கு அஞ்சிக் கைவிட்டு விட்டீர்கள் என்றும், அண்மையில் திருச்சியில் கூடிய தி.க. வின் செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பெற்றதாகக் கேள்விப்பட்டோம். அதற்குத் தங்களின் விளக்கம் என்ன?

- குழந்தை ஈகவரசன், திருச்சி

பார்ப்பன இனம் முன்னேறிப் போவதற்கும், தமிழினம் தாழ்ச்சியுற்றுப் போவதற்கும் நாம் ஒருவர்க்கொருவர் தாழ்வாகக் குறை கூறிக் கொள்ளும் இத்தகைய குற்றச்சாட்டு உணர்வுதான் தலையாய காரணம். அவர்கள் தங்கள் இனத்தவர்களைக் கட்டிக் காத்துக் கொள்கிறார்கள். நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டு பின்னிறங்குகிறோம். நமக்கிதில் விருப்பமில்லை என்றாலும் அவர்கள் கூறுவதற்கு நாம் விடை சொல்ல வேண்டியுள்ளதே என்ன செய்வது?

முதலாவதாக, நாம் எதற்காகவும் யாரிடத்தும் என்றும் மன்னிப்புக் கேட்டது. இல்லை. “கெஞ்சுவதில்லை” என்னும் கொள்கை முழக்கத்தைத் தென்மொழி என்றுமே கைவிட்டதில்லை. மிசாக் கால ஓராண்டுச் சிறையை முழுவதும் நான் ஏற்றுக் கொண்டே வெளிவந்தேன். இடையில் விடுமுறை(parole) எடுத்துக் கொண்டு வெளிவந்து, வீட்டு நிலையையும் அச்சக, இதழ்கள் நிலைகளையும் சரிப்படுத்திவிட்டுப் போக எண்ணி, அரசுக்கு விடுமுறைக்கு வேண்டுகோள் எழுதியிருந்தேன். ஏனெனில், அக்கால் மிசாவில் இருந்தவர்களுக்கு அவரவர் கட்சிச் சார்பில் மாதத்திற்கு 300, 400, 500,1000 என்று அவரவர் குடும்பங்களுக்கு உதவித் தொகை கொடுக்கப் பெற்றது. ஆனால் நமக்கோ அக்கால் உதவுவார் (நம் அன்பர்களைத் தவிர) எவரும் இல்லை. எனவே விடுமுறை கேட்க வேண்டியிருந்தது. அதுவும் கிடைக்கவில்லை அதை இப்பொழுது இவ்வாறு திரித்துப் பேசுவது அவர்களுக்கே நல்லதில்லை. ஒருவரை யொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதானால், அந்நிலை எங்கே போய் நிற்குமோ தெரியாது. முடிவாக நாம் என்றும் எப்பொழுதும் எந்தக் கொள்கையையுமே கைநெகிழ்த்ததில்லை.

பொதுவான உண்மை ஒன்று உண்டு; ஒருவர் தாம் மெலிவு அடைகிற போதுதான் பிறரைக் குறைகூற முற்படுகிறார் என்பதே அது. அதன்படி அவர்கள் இவ்வாறு கூறத் தொடங்கியுள்ளார்களோ, என்னவோ?

அடுத்தபடி, நாம் பிரிவினைத் தடைச்சட்டத்தை எரிப்போம் எனத் தீர்மானம் போட்டது உண்மைதான். ஆனால் அதன் பின்னர்தான் அப்படி ஒரு தனிச்சட்டமே (separate Law) இல்லை என்று தெரிய வந்தது. அதன் பின்னர் வேறு நடவடிக்கை எடுப்பதற்காக எண்ணி வருகிறோம்

அதுசரி, செயலில் நாம் கோழைகள் அல்லது மோழைகள் என்று குறைகூறப் புகுந்த இவர்கள் இதுவரை செய்த வீரச் செயல்கள்தான் என்ன? கூட்டம் கூட்டுவதும் மாநாடுகள் போடுவதுமா? அவற்றுக்கான எதிர்விளைவுகளைத்தாம் நடுவணரசின் இந்தித் திணிப்பில் நாம் நேரடியாகப் பார்க்கிறோமே! இனி, இன்னொன்று நமக்கும் நம் முன்னோர் வைத்த வைப்பு என ஒன்றிருந்தால் நாமும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாநாடுகளையும் நடத்தலாம்; மேலும் மேலும் வருவாய்களையும் "அறுவடை" செய்யலாம், அவ்வாறு செய்வதற்கு நம் இயக்க முதலீட்டுக் கென்று ஓர் 'ஐயா' வோ 'அம்மா' வோ இருக்கவில்லையே, நாம் தாமே முதலும் ஈட்டமும். பின் என்ன செய்வது? எதையும் மெதுவாகத்தான் (ஆனால் உறுதியாக) நாம் செய்ய முடியும்.

- தென்மொழி, சுவடி :22, ஓலை 6, 1986


தமிழகம்! தன்னாட்சியா?


(பெருஞ்சித்திரனார் நேருரைகள் ! (தென்மொழி இதழ்-ஒரு மதிப்பீடு - 1972-76 அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் திரு. ஆ. மணவாளன் க.மு. அவர்களின் மெய்.மு (M.phil) பட்ட ஆய்வுக்காக எடுக்கப் பெற்ற குறிப்புகளிலிருந்து.)

தமிழகம் தன்னாட்சி பெற முடியுமென்று தாங்கள் கருதுகிறீர்களா?

இஃதொன்றும் மலையைக் கரைக்கின்ற செய்தியோ, கடலை வற்றடிக்கின்ற செய்தியோ அன்று. அவையும் கூட இற்றை நாள் அறிவியல் வளர்ச்சிக் காலத்தில் முடிகின்ற செய்திகளே?

தமிழகத் தன்னாட்சி என்பது தமிழகம் நடுவணரசு, ஆட்சியதிகாரத் திவிருந்து விடுதலை பெறுவதே இது வெறும் ஆட்சி மாற்றந்தான், ஒருவர் கையிலிருக்கும் ஆட்சி அதிகாரம் இன்னொருவர் கைக்கு மாறுவதும் மாற்றப்படுவதும் முடியாத வியப்பான செயலன்று. முடிகின்ற செயல்தான். அது வெள்ளைக்காரர்களின் கையிலிருந்த ஆட்சி, வடநாட்டார் கைகளுக்கு வரவில்லையா? அது போன்றதே அது தமிழ் நாட்டார் கைக்கு வரவேண்டும் என்பதும். இது முடியாது என்பதற்கு எந்தக் காரணமோ அடிப்படையோ இல்லை. முயற்சி செய்தால் அனைத்தும் ஒரு கால கட்டத்தில் முடிந்தே ஆக வேண்டும். நான் கருதுவது போல், பலரையும் கருதும் படி செய்து விட்டால், அது செயலாவதற்கு நீண்ட காலம் ஆகாது.

- தென்மொழி, சுவடி :23, ஓலை 12, 1988