வேண்டும் விடுதலை/தமிழ்நாடு தனிநாடு ஆகாமல் இந்தி ஒழியாது!
இந்தி ஒழியாது!
கடந்த கிழமை திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு மாநாட்டைச் சென்னை பெரியார் திடலில் நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றி, ஓர் எதிர்ப்பு முயற்சியை அரசுக்குத் தெரிவித்துள்ளது.
திராவிடர் கழகம், நமக்கு எதிரான இயக்கம் அன்று தோழமைக் கழகமே! ஆனாலும், அதன் செயற்பாடுகளும், அணுகுமுறைகளும், நம் தமிழின முன்னேற்றத்தை முறையாக எடுத்துச் செல்வதற்குப் போதுமானவையாக இல்லாமல் இருப்பதுடன், சில நிலைகளில் போலித்தனமானவையாகவும் இருப்பதும், ஏதோ ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திடையில், தம் பொதுநல ஈடுபாட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருப்பதால், தமிழின நலம் கருதியும், காலத்தின் அருமையும், தேவையும் கருதியும் நாம் அதனையும், அதன் செயற்பாடுகளையும் இக்கால் திறனாய்வு முறையில் எடுத்துக் கூறியாக வேண்டியுள்ளதற்குப் பெரிதும் வருந்துகிறோம்.
இந்த வகையில் நாம், இதுவரை நேரிடையாக எந்தக் கருத்தையும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக இவ்வாறு எடுத்துக் கூறிட முன்வந்ததில்லை. ஆனாலும், இக்கால், தவிர்க்கவியலாத சில விளைவுகளை நோக்கி, அதைப்பற்றியும் சில பல கருத்துகளைக் காணவேண்டிய கட்டாயத்துக்குக் கொணரப்பட்டுள்ளோம். எதிரான நோக்கிலன்று; சார்பான நோக்கிலேயே, இக் கருத்துகள் இங்குக் கூறப்பெறுகின்றன என்பதை அன்பர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நம் மதிப்பிற்குரிய, மானமிகு வீரமணி அவர்களின் தமிழின முன்னேற்ற முயற்சிகளையும், செயற்பாடுகளையும், உணர்ச்சியளவிலும், உழைப்பின் அடிப்படையிலும் என்றுமே நாம் பாராட்டவும் போற்றவும் கடமைப்பட்டவர்கள். தேவையான இடத்தில் தொலைவில் நின்றும், இணைந்து – இயங்கியும் நாம் அவ்வாறு பாராட்டியும் – போற்றியும் வந்திருக்கிறோம். ஆனாலும், அவரின் முயற்சிகளிலும், தமிழின முன்னேற்ற அணுகுமுறைகளிலும், அவை தொடர்பான போராட்ட நிலைகளிலும், சில முரண்பாடான போக்குகள் தோன்றிய பின்னர், நாம் ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டுமே இருந்து வருகிறோம். இருப்பினும் அவர் முயற்சிகளுக்கு எதிர்ப்பான நிலைகளை நாம் அன்றும் – இன்றும் எந்த நிலையிலும் கடைப்பிடித்ததில்லை, இனியும் அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடப் போவதுமில்லை. ஆனாலும், கருத்துநிலையில், தமிழின நலம் நோக்கி, அவர் போக்குகளை உண்மையும் – உறுதியாகவும் நடத்திட வேண்டும் என்னும் கவலையுடன் வெளிப்படையாகச் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற காலக் கட்டாயம் வந்துவிட்டது. இந்தவகையில் சில சொற்களை நாம் எச்சரிக்கையுடனும், தோழமையுணர்வுடனுமே கையாள விரும்புகிறோம். இவ்வாறு வெளிப்படையாக எழுதுவதற்காக, நடுநிலையும் அழுத்தமுமான உணர்வுடன், தமிழ் நலமும், தமிழின நாட்டு நலமும் கருதும் மெய்யன்பர்கள் நம்மைப் பொறுத்துக் கொள்வார்களாக,
நம் இந்தி எதிர்ப்பு முயற்சிகள் இன்று – நேற்று ஏற்பட்டதன்று. சரியாகச் சொன்னால், கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் இந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறோம். 1926ஆம் ஆண்டிலேயே, இந்தி எதிர்ப்புக் குரல் தொடங்கிவிட்டது. தந்தை பெரியார் அவர்கள், தாம் தம் 7.3.1926ஆம் நாள் 'குடி அரசு' இதழிலேயே முதன் முதலாக 'தமிழிற்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்' என்று இந்தியை எதிர்த்தும், கண்டித்தும், 'தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் பல கேடுகளில் (ஆபத்துகளில்) இந்தியும் ஒன்று” என்று எச்சரிக்கை செய்தும், விரிவாகவும் - விளக்கமாகவும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அப்பொழுதெல்லாம், இந்தி திணிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், பின்னால் இந்தத் தமிழினத்துக்கு வரவிருந்த மிகப் பெருங்கேட்டை முன்னமேயே உணர்ந்து, முன்னறிவித்த பெருமை அவருடையது. அப்பொழுதெல்லாம் நாமும், இன்று இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பலரும் (அறுபது அகவையைத் தாண்டியவர்களைத் தவிர) பிறந்தே இருக்கமாட்டோம். எனவே, நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே 'இந்தி' எனும் நச்சுச்செடிக்கு, இங்கிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது. அந்த முதல் குரலும், தந்தை பெரியாருடையது என்று எண்ணும்பொழுது நாம் வியப்பும், அதே சமயத்தில் சொல்லவொண்ணாத் துயரமும் கொள்கிறோம்.
இனி, தந்தை பெரியார் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து இந்தியை எதிர்த்துப் பல மாநாடுகளை நடத்தியும், பல நூற்றுக் கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றியும் நில்லாமல், பல போராட்டங்களையும் தம் இறுதிக்காலம் வரை செய்து கொண்டிருந்தார். அந்தப் போராட்டங்களில் பங்குகொண்ட பெருமக்கள், பெரும்புலவர்கள், பெருந்தலைவர்கள், பேரறிஞர்கள் அனைவரும் ‘தமிழக இந்தி எதிர்ப்பு’ வரலாற்றில் நெடுகவும் வருகிறார்கள்; இன்னும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
எனினும், இந்தி எனும், அன்று தோன்றிய நச்சுச் செடி, இன்று படிப்படியாய் பார்ப்பனர்களாலும், வடவர்களாலும், வல்லாட்சியாளர்களாலும் பெரிய நச்சு மரமாக வளர்க்கப்பட்டுப் பரவி, நம் அனைத்து மொழி, இன, நாட்டு, கலை, பண்பாட்டு முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் துளிர்க்கவும், வளரவும் விடாமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் கால்கொண்டு காழ்த்து வருகிறது.
அந்த இந்தி எனும் சண்டி மாட்டை - மதங்கொண்டு வெறிபிடித்துத் தமிழினத்தையே கட்டுக்குலைக்க வந்த வடநாட்டு யானையை இன்னும் நாம் அடக்கமுடியாமல், தந்தைபெரியார் அவர்களால் எண்ணியும், எழுதியும், எதிர்ப்புக் காட்டியும், தீர்மானங்கள் போட்டும், போராட்டம் நடத்தியும், சிறை சென்றும், இம்மியும் அடக்கவோ, ஒடுக்கவோ இயலாமற்போன, அதே வழிகளை நாமும் கடைப்பிடித்து இந்தித்திணிப்பை ஒடுக்கவோ, ஒழித்தோ விட முடியுமா என்பதே நமது கேள்வி.
'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' என்பார் திருவள்ளுவர். தந்தை பெரியார் அவர்கள் கையாண்ட அதே முறைகளை, அந்த அளவில் கூட கையாளாமல், அவர் ஈட்டியை எடுத்துக் குத்தியிருந்தால் நாம் ஆணியைக் கொண்டு குத்துவதைப்போல், அவர் தகரி(பீரங்கி)யைக் கொண்டு வேட்டுக் கிளப்பியிருந்தால், நாம் பட்டாசு வெடிகளைக் கொளுத்தி, அந்த வெறி யானையின் முன்னர் போடுவதுபோல், நாமும் சலசலப்புகளைக் கிளப்புவதும், தகரக் குவளைகளை எடுத்துத் தட்டிக் காட்டுவதும், தீப்பந்தங்களைப் போன்ற தீர்மானங்களை, வெறும் வாய்ச் சொற்களால் கொளுத்தி வீசி எறிவதும், போராட்டங்கள் என்னும் பெயரில் வண்ண வாணங்களையும், விளம்பரப் பூ மத்தாப்புகளையும் கொளுத்திப் பெரியார் திடலிலிருந்து வெளியிட்டுக் காட்டுவதும், ஏற்கனவே நாம் கண்டும், காட்டியும், கையாண்டும் புளித்துப்போனவையும், சலித்துப் போனவையுமான வழிமுறைகள் இல்லையா, என்பதே நம் அடுத்த கேள்வி.
தந்தை பெரியார், 1930ஆம் ஆண்டு, தஞ்சை, நன்னிலத்தில் கூட்டிய சுயமரியாதை மாநாட்டிலேயே (திராவிடர் கழகமாகக் கருக்கொண்டு உருவாகாமல் இருந்தபொழுதே இந்தியை எதிர்த்துப் பேசியும், தீர்மானம் போட்டும் காட்டினார். அதன்பின் 1937இல் இராசாசி இந்தியைக் கட்டாயமாக்கியதை, அதே ஆண்டு இறுதியில், மாநாடு கூட்டிக் கண்டித்துத் "தமிழ்நாட்டை தனிநாடாகப் பிரிக்க வேண்டும்" என்னும் வரலாற்றுப் புகழ்மிக்கத் தீர்மானத்தையும் நிறைவேற்றிக் காட்டினார்.
இன்று, நாம் அதுபோல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவும், நிறைவேற்றவும் தொடை நடுங்கிக்கொண்டு, அஞ்சியஞ்சி, 'இப்படியே இந்தியைத் திணித்துக் கொண்டிருந்தால், இந்தியா சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்' என்று பேசியும், அப்பேச்சையே கூடத் தீர்மானமாக நிறைவேற்றத் துணிவின்றி, 'ஆங்கில மொழியையே இணைப்பு மொழியாக ஆக்கவேண்டும்' என்று ஆங்கிலத்தையே தூக்கிப் பிடித்தும், தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறோம். காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு வரும் போரின் இந்தித் திணிப்புக்கு இந்த எதிர்ப்பும், இணைவான், இனிப்புப் பேச்சும் போதுமா, என்பதே நம் மூன்றாவது கேள்வி
சூடற்றுச் சுரணையற்று, நாம் காட்டுகின்ற உள்ளுணர்வுகளையும், கருத்துகளையும் கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், ஒரு சிறு அளவிலும் காதிலோ, கருத்திலோ வாங்கிக் கொள்ள்த வட் நாட்டு இத்தி வெறியர்களுக்கும், வலதிகார் வஞ்சகர்களுக்கும், நெஞ்சில் ஈரமும் - இரக்கமும் அற்ற அர்சியில் கென்டியவர்களுக்கும் பெரியார் என்னும் அரிமாவாலேயே இவ்வகையான முயற்சிகளின் வழி உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் அவரேந்திக் கீழே போட்டுவிட்ட, எரிந்துபோய்க் கரியாகிவிட்ட போராட்ட நெய்ப் பந்தங்களை நாம் எடுத்து வீசி என்ன பயன்? யார் அஞ்சிக் குலை நடுங்கப் போகிறார்கள்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா?
1978 ஆகத்து 15-இல் பெரியார் திடலில், மானமிகு வீரமணி கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலேயே நம்மை ஏதோ, மதிப்பும் அன்பும் காட்டி அழைத்துக் கலந்துகொண்டு கருத்துரையாற்றக் கேட்டுக் கொண்டதால், நாம் அன்றே, அங்கேயே, கலைஞர், செட்டி நாட்டரசர், கி.ஆ.பெ. குன்றக்குடி அடிகளார், கி. இராமலிங்கனார் போன்ற தலைவர்களையெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு சொன்னோம். 'இந்தியை எதிர்ப்பதெல்லாம் வீணான முயற்சிகள்: இந்தியை எதிர்க்கமுடியாது; பெரியாரை விட நாம் ஒன்றும் அதிகமான முயற்சியை அதில் செய்துவிட முடியாது; எனவே, இந்தியை எதிர்த்து மாநாடுகள் கூட்டுவதையும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதையும், போராட்டங்கள் நடத்துவதையும் கூட நாம் விட்டுவிட வேண்டும். இவ் வகையாலெல்லாம் நம் ஆற்றலை இழந்துகொண்டே போகக்கூடாது; நாம் இந்தியை எதிர்ப்பதை விட்டுவிட்டு இந்திய அரசையே எதிர்க்கவேண்டும். தமிழ்நாட்டைத் தனிநாடாகப் பிரிக்கப் போராடவேண்டும். தமிழ்நாடு தனியாகப் பிரியும்வரை இந்தியும் ஒழியாது; வடநாட்டுச் சுரண்டலும் வல்லாண்மையும் ஒழியாது; பார்ப்பணியமும் ஒழியாது; இந்து மதமும் ஒழியாது; அதனால் தமிழும் வாழாது; தமிழனும் தலையெடுக்கமாட்டான்” என்று.
இதுபோலும் கருத்துகளை நாம் கூறுவதாலேயே 'திராவிடர் கழகம்' நம்மை ஒதுக்கிவைத்திருக்கிறது என்பதையும், நம் மிகச்சிறிய இயக்க முயற்சிகளுக்கும், ஆங்காங்கே, தரப்பெறுகின்ற ஆதரவைத் தடைப்படுத்தி, வளரவிடாமல் செய்கின்றார்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம். நாம் எவருக்கும் எதிராகவோ, அல்லது நம் வாழ்க்கை உயிர் பிழைப்புக்காகவோ, எந்த முயற்சியையும் தொடங்கவில்லை; செய்துகொண்டும் வரவில்லை. இமைய மலை போலும் நலன்களைக்கூட, நாம் எடுத்துக்கொண்டு சுமந்து நிற்கும் கொள்கைக் குன்றுக்காக, எற்றி உதைத்துவிட்டு, எட்டி வந்து, இடறாமல் நடைபோட்டு வருகிறோம். இந்த நிலைகளை நாம் எந்த விளம்பர நோக்கத்துடனும் கூறவில்லை. இந்திரா காந்தி, இராசீவ் காந்தி அல்லர், எந்தக் காந்தியையுமே, நம் மொழி, இன, நாட்டுநலக் கொள்கையில் என்றுமே பொருட்படுத்தியதும், மதித்ததும் கூட இல்லை. 'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்னும் கொள்கையுணர்வில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது எம் வாழ்க்கை இம் மூச்சு அதன் பொருட்டு நிறுத்தப்படும் என்பதற்காக நாம் வருந்திக்கொண்டும் அஞ்சிக்கொண்டும் வாழவேண்டிய தேவை நமக்கில்லை. ஊரை அடித்து உலையில் கொட்ட வேண்டிய இன்றியமையாமையும் எமக்கில்லை. இன்றும் அரிசியும், பருப்பும், உப்பும், புளியும் அன்றாடப் பட்டியலிலேயே சேர்க்கப் பெற்றுள்ளன. எனவே, இன்றிறந்தாலும் ஒன்றுதான் என்று இறந்தாலும் ஒன்றுதான்! எனவே எவருக்காகவும் அஞ்சிக்கொண்டு, நமக்கென்று தேர்ந்து கொண்ட மொழி - இன - நாட்டு நலக் கருத்துகளைப்பற்றி உண்மைகளை யாருக்காகவும் ஒளிக்க வேண்டுவதில்லை.
இவற்றையெல்லாம் நம் நல்ல நெஞ்சுணர்வால் எண்ணிப் பாராமல் எம்மேல் இல்லாத பழிகளையும் இழிவுகளையும் சாற்றிக் கொண்டும், தூற்றிக்கொண்டும் கோழைகளையும் வயிறு கழுவ வாழ்க்கை நடத்தும் மோழைகளையும் தூண்டிவிட்டுக் கொண்டும், எம் தூய மொழி, இன, நாட்டு நலத் தொண்டுக்கு மாசு கற்பித்து, எம்மையோ எம் கருத்துகளையோ வீழ்த்திவிட முடியாது என்பதால், இக் கருத்துகளை இத்துணை அழுத்தந்திருத்தமாக வெளியிட வேண்டியிருக்கின்றதென்று அன்பர்கள் கருதிக்கொள்ள வேண்டுகின்றேன். மற்று, இனநல, நாட்டுநலக் கொள்கையில் நாம் தொய்வு கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? யாருக்காக நாம் அஞ்ச வேண்டும்? பின்னர் ஏன் நம் முயற்சிகளில் இத்துணைத் தொய்வு? அச்சம்? கோழைத்தனம்?
என்ன இந்தி எதிர்ப்பு வேண்டிக் கிடக்கிறது இன்னும்? மாநாடுகள் எதற்கு? தீர்மானங்கள் எதற்கு? சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கே, சொல்லிக் கொண்டிருந்தவற்றையே, சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருக்கிறோம்! இவற்றால் யாருக்கு என்ன புதுப்பயன் விளைந்து விடப் போகிறது? ஏன் நம்மிடத்தில் இந்த அடிமைத்தனமும் மடிமைத்தனமும்! நாங்கள் கூட்டினால், இந்தி எதிர்ப்பு மாநாடு சிறப்புறாது என்ன பயனும் விளைந்துவிடாது என்பது போலவேதான் நீங்கள் கூட்டினாலும்! ஏன், கலைஞர் கூட்டுவதுதானே! அவர் கூட்டினால் வடநாட்டு அரசு, ஓரளவுக்கு அஞ்சும்! ஆனால் அவர் அவர்களைப் பார்த்து அஞ்சுகிறார் அஞ்சுவதும், நாணுவதும், ஆமைபோல் வாழுவதும், கெஞ்சுவதுமாக எத்தனை நாளைக்குக் கிடப்பது?
இந்தியைப் பற்றித்தான் எல்லா வரலாறும் இங்குள்ளவர்களுக்குத் தெரியுமே! கடந்த அறுபது ஆண்டுகளாக அதுபற்றிய விளக்கங்களும், அதை எதிர்த்துத் தகர்க்க வேண்டிய தேவைகளும்தாம் மலைமலையாக கூறப்பட்டு வந்துள்ளனவே! இன்னும் யாரைத் தட்டியெழுப்ப இம் மாநாடுகள்? யாருக்கு உணர்வூட்டுவதற்கு இம்முயற்சிகள்? யாரை ஏமாற்றுவதற்கு இப்போராட்டங்கள்?
நாம் இனி எழுப்ப வேண்டுவது, மக்களை அன்று நம்மைத்தான் நாம் எழுப்பிக் கொள்ளவேண்டும்!
நாம் இனி உணர்வூட்ட வேண்டுவது, இளைஞர்களுக்கு அன்று, நமக்குத்தான் உணர்வூட்டிக் கொள்ளவேண்டும்!
நாம் இனி, ஏமாற்றுவதற்காகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது; ஏமாறாமல் இருக்கின்றோம் என்கிற போராட்டங்களை நடத்த வேண்டும்?
எழுதியிருக்கின்ற இந்தி எழுத்துகளை அழித்தால் அவன், மீண்டும், நம்முடைய வரிப்பணத்தை எடுத்தே நன்றாக அழுத்தந் திருத்தமாகவும், முன்னையவற்றையும் விடப் பெரிதாகவும் எழுதிக் கொள்கிறான்!
நாம் தூக்கும் கரிநெய்(தார்)ச் சட்டிக்கும் எழுது தூரிகைக்கும் செலவழிக்கும் பணத்தை, வெடி மருந்துக்கும், துமுக்கிக்கும் (துப்பாக்கி) செலவழிக்க வேண்டும். அதே எழுத்துகளை யாகிலும் மண்ணெய் கொண்டு அழிக்காமல் துமுக்கிகொண்டு சுடப் போகிறோம் என்று அறிவிக்க வேண்டும். இந்திக்காரனைச் சுடாமற் போனாலும், இந்தி எழுத்தையாவது சுடும்படியான புதிய போராட்டத்தை, உந்துவேகம் கொண்ட உணர்வுச்செயலை நாம் நடத்திக்காட்ட வேண்டும்.
இதற்குப் பெயர்தான் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ !
தந்தை பெரியார் கரிநெய்ச்சட்டி எடுத்துக்கொண்டு போய் இந்தியை அழித்தால், நாம் துமுக்கி கொண்டாவது அந்த எழுத்தைச் சுட்டிக்காட்டிப் போராட வேண்டாவா? இப்படிச் செய்தாலன்றோ, நமக்குப்பின் வருபவர்களாகிலும், அதே துமுக்கியை எடுத்துப் போரிட வருவார்கள்!
எனவே, பறவைகளை விரட்டுகின்ற முறையில், 'ஆலோலம்' என்னும் இந்தி எதிர்ப்புக் கருத்துகளை மாநாடுகளில் எடுத்துக் கூறி அல்லது பாடி, இந்தி என்னும் காட்டெருமையை விரட்ட முடியாது. அதைக் கல்லால் அடித்துத் துரத்துகின்ற வகையில், 'தனித்தமிழ்நாடு' என்னும் கொள்கைக் கல்லால் அடித்து விரட்ட வேண்டும். 'தமிழ்நாடு தனிநாடு' ஆகாமல் இந்தி ஒழியாது! யாராலும் ஒழிக்க முடியாது. இதனைத் தெளிவாகத் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்துதான் 1937-இலேயே தனித்தமிழ் நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தினார்கள். ஆனால், உயிர் மூச்சான இந்தக் கொள்கை என்னாயிற்று? ஏன் கைவிடப்பட்டது? இந்தக் கொள்கையை முன்வைத்து நாம் போராடினால் என்ன? ஏன் அச்சம்? அச்சப்பட்டு அச்சப்பட்டுத் தமிழினம் இத்துணைக் காலம், ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் அடிமையுற்றது போதாதா? அடுத்த தலைமுறையில் இப்பொழுதுள்ள போராட்ட நிலைகள் என்னாகும்? – என்பவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவற்றுக்கெல்லாம் முற்ற முடிந்த முடிபாக – வலித்தமான – ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டாவா?
வீரமணி நடத்துகின்ற இந்த இந்தியெதிர்ப்பு மாநாட்டைக் கலைஞர் நடத்தினால், எல்லா நிலையிலும் இன்னும் வலுப்பெற வாய்ப்பிருக்குமே! மேலும் இதுபோன்ற மாநாடுகளைக் கடந்த அறுபது ஆண்டுகளாகச் சென்னையிலேயே நடத்திக் கொண்டிருப்பதை விட, வடமாநிலங்களில், குறிப்பாகத் தில்லியிலேயே போய் நடத்தினால், இன்னும் எழுச்சியாக இருக்காதா?
வடநாட்டுத் தலைவர்களையும், இங்கு நடைபெறும் இந்தி எதிர்ப்பில் சேர்ப்பது ஒருவகை விளம்பரத்திற்குத்தானே பயன்பட முடியும்? அவர்களால் என்ன விளைவு ஏற்பட்டுவிட முடியும்? அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்திரா பேராயத்தை – அதன் ஆட்சியை எதிர்க்க இதையொரு வாய்ப்பாகத்தானே பயன்படுத்திக் கொள்கிறார்கள்! மேலும், அவர்கள் இந்தியை எதிர்ப்பதானால், அத்தகைய எதிர்ப்பை நம் தென்னாட்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து பேசுவதுதானே முறை? அந்த வகையில் அவர்கள் வடநாட்டுத் தலைவர்களையும் இணைத்துப் போராடலாமே! அவ்வாறில்லாமல், அவர்கள் தென்னாட்டில் கூட்டப்பெறும் மாநாடுகளில் வந்து, இந்தியெதிர்ப்புக் கருத்துகளை இங்குள்ள மக்களிடமே கூறுவதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது? அவர்களின் பொருட்டாகவே நாம் ஆங்கிலத்தை வேறு அளவிறந்து தூக்கிப்பிடித்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்நேரத்தில், இங்குள்ள திராவிடர் கழகத் தோழர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் ஆங்கிலத்தை முன்னிருத்தி இந்தியை எதிர்க்கத் தேவையில்லை. தமிழ்மொழியை முன்னிருத்தியே – தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வளத்தையும் முன்வைத்தே – இந்தியை நாம் எதிர்க்கவேண்டும். நாம் நம் தாய்மொழிக்காக இந்தியை எதிர்த்துப் போராடுகையில், இந்திக்காரர்கள் ஆங்கிலத்துக்காக இறங்கிவரட்டுமே! இப்பொழுது நாம் தமிழுக்காக இந்தியை எதிர்க்கிறோமா, அல்லது ஆங்கிலத்துக்காக அதை எதிர்க்கிறோமா? ஏன், இதில் குழப்பம் உண்டாக்க வேண்டும்?
தமிழ்மொழியை எண்ணுகையில் நமக்கு ஆங்கிலமும் சரி, வேறு எந்த மொழியும் சரி, அனைத்தும் இந்தியைப் போலவே அயல் மொழிகளே! ஆங்கிலம் என்றால் சருக்கரை மொழி; தமிழ் என்றால் வெல்லமா? இந்த மனப்பான்மையுடன் நாம் இந்தி எதிர்ப்புச் செய்யும்வரையில், நம் கோரிக்கையும் வெற்றி பெற முடியாது; நாமும் தன்னுரிமை பெறமுடியாது.
ஆங்கிலம் என்கிற மொழியின் பயன்படுத்தத்திற்காக நாம் அதைப் படித்துக்கொள்வதென்பது வேறு அதற்காக நாம் இந்தியை எதிர்ப்பது என்பது வேறு. தமிழுக்காகவே நாம் இந்தியை எதிர்க்கின்றோம் என்பதைப் பட்டையை உரித்தாற்போல் பளிச்சென்று வடநாட்டானுக்கு அடித்துச் சொல்ல நாம் ஏன் தயங்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரை, ஆங்கிலமும் இந்தியும் ஒன்றுதான். ஆங்கிலம் அறிவு மொழியானால் என்ன? அதற்கு மட்டும் நாம் அடிமை ஆகலாமா? 'இந்திமொழி வேண்டாம், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கு' என்று நாம் சொல்லும்போது, 'ஆங்கிலம் என்னும் வேற்று நாட்டு மொழிக்காக' நாம் வழக்குரிமை (வக்காலத்து) வாங்குவதாக அவர்கள் கூறுவார்களே தவிர, நம் தாய்மொழி தமிழுக்காகப் போராடுவதாக அவர்கள் கூறமாட்டார்களே!
அண்மையில் சென்னை, உயர்நெறி மன்றத்தில், இந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சலுகையைக் காட்டி மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று தொடுக்கப்பெற்ற வழக்கொன்றில், 'இந்தியை எதிர்த்ததை, தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் போராடியதாகக் கருதுவதற்கு இடமில்லை' என்று தீர்ப்பு வழங்கியதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (தினமணி 28.11.1985) (வழக்கு மன்றத் தீர்ப்பின் பிற பகுதிகள் நம் கருத்துக்கு மாறுபட்டவையாகவே உள்ளன என்பதை நாம் கவனிக்கவேண்டிய தேவையில்லை.)
ஆங்கிலம் - இந்தி - தொடர்பான இந்தக் கருத்தையும் 1978ஆம் ஆண்டில் மதிப்பிற்குரிய வீரமணி அவர்கள் கூட்டிய மாநாட்டிலேயே நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
எனவே, நம் தாய்மொழியான தமிழ்மொழியை வளர்க்கவும் வளப்படுத்தவுமே நாம் இந்தியை எதிர்க்கவேண்டும். இதே காரணத்துக்காகவுமே சமசுக்கிருதத்தையும் நாம் தவிர்க்கிறோம்; அல்லது எதிர்க்கிறோம் என்பதையும் அறிதல் வேண்டும்.
ஆங்கிலம் இந்தியாவின் இணைப்புமொழி ஆகவேண்டும் என்பதை வடநாட்டு இந்தி வெறியர்களும், இங்குள்ள தேசிய அடிமைகளும் ஒப்பமாட்டார்கள். இதற்குக் காரணம் வடவர்க்கு இந்திமொழியின் மேல் உள்ள வெறியும், இங்குள்ள தேசியத் திருடர்களுக்குத் தமிழ்மொழியின்மேல் உள்ள பற்றின்மையுமே! அதுபோலவே, இந்தியை எதிர்ப்பதற்கும் நாம் தமிழை விரும்புவதே அதன் மேலுள்ள பற்றே காரணமாக இருக்கவேண்டும்.
'சப்பான் மொழியில் படிக்க சீனர் விரும்பமாட்டார்கள்' என்பதை, 'இந்தியில் படிப்பதைத் தமிழர் விரும்பமாட்டார்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக மதிப்பிற்குரிய வீரமணி கூறுகிறார். 'அவ்வாறு கூறும்போது தமிழர் ஆங்கிலத்தில் மட்டும் படிப்பதை ஏன் விரும்பவேண்டும்?'
'எனக்குத் தமிழ்ப்பற்று இல்லாமல் இல்லை' என்று வீரமணி சொல்ல வேண்டுவதில்லை. அவ்வாறு இல்லை என்று யார் சொன்னது?
'ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ச்சிபெற்றிருக்கிறது – என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அந்த அளவுக்குத் தமிழும் வளர்ச்சிபெறவேண்டும்' என்னும் கருத்து இன்னும் தோன்றவில்லையே என்பதுதான் நம் வருத்தம்; மனக்குறை! அந்நிலை எளிதில் முடிகிறதோ இல்லையோ அந்த நோக்கமே நமக்கு வேண்டியதில்லை என்று நாம் சொல்ல முடியுமா? அப்படியானால், தமிழுக்காக நாம் ஏன் இத்தனை முயற்சிகள் செய்யவேண்டும்? எனவே, இந்திமொழிக்கு மட்டுமன்று, சமசுக்கிருதத்திற்கு மட்டுமன்று, ஆங்கிலத்திற்கும் நாம் அடிமையாகி விடக்கூடாது என்பதே நம் வலித்தமான ஒன்றிணைந்த கொள்கையாக, உணர்வாக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்து, இன்றுள்ள சூழலில் இயலாமல், அல்லது, நிறைவேறாமல் இருக்கலாம். நாளைக்கும் அது நிறைவேறக்கூடாது என்றிருக்கலாமா? எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.
ஆங்கிலத்தை நாம் விரும்பிக் கற்கலாம்; அதன்வழி, இன்றுள்ள அறிவியல் பயனையும் நாம் பெறலாம். ஆனால், வாழ்வியல் பயனையும், இழந்துபோன உரிமைகளையும், இனநலத்தையும் நாம் நம் தாய்மொழி வழியாகத்தானே பெறமுடியும்!
இந்தியோ எதற்கும் பயன்படாத ஒரு வெற்றுமொழி. இந்திய தேசிய நீரோட்டம் இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பதற்காக மட்டுமே இந்தியைக் கற்கவும், தொழில்மொழியாக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதனால் முழுப்பயன் பெறுபவர் அல்லது பெறப்போகிறவர்கள் வடநாட்டுக்காரர்களும் இந்தி வெறியர்களும் பார்ப்பனர்களுந்தாம். தமிழரோ, இந்தியால் என்றுமே இரண்டாந்தரக் குடிமக்களாகவே இருக்க முடியும். ஆங்கிலத்தை ஏற்பதும் ஓரளவு இத்தகைய விளைவைத்தானே ஏற்படுத்தும்? ஆங்கிலத்தை, நம் தமிழ்மொழியை இன்றைய அறிவியல் வாழ்க்கைக்கேற்பத் தகுதியுடையதாகச் செய்வது வரையே, பயன்படுத்திக் கொள்ளும்படி செய்தல் வேண்டும். இறுதிவரையிலான, நிலையான முடிவு ஆங்கிலமே என்று இருக்கும்படி நாம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது; அவ்வாறு காலப் போக்கில் ஆகிவிடும்படி நாம் விட்டு விடவோ திட்டமிடவோ கூடாது.
ஏற்கனவே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆங்கிலத்தையும், பிரெஞ்சையும் செருமனியையும், சீன, உருசிய, மொழிகளையும், அந்தந்த நாடுகளில் படித்தும் பேசியும் வருவதுடன், தங்கள் தாய்மொழியான தமிழைப் படிக்க வாய்ப்பின்றியும், மறந்தும் வருகின்றனர். அத்தகைய நிலை ஆங்காங்குள்ள சூழல்களாலும் ஏற்படுகிறது. அந்த நிலைகளைத் தடுக்கவும் அவர்களுக்கிருக்க வேண்டிய தமிழ் ஈடுபாட்டை வளர்த்தெடுக்கவும் ஆன கவலையும், முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்நேரத்தில், நம் அனைத்து முயற்சிகளும், போராட்டங்களும், நம் தாய்மொழியான தமிழை நோக்கியும், இன அடிமை நீக்கத்தையும் உரிமை மீட்பையும், நாட்டு விடுதலையையும் கருத்தில் கொண்டுமே செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.
எனவே, விளம்பரத்திற்காகவும், நம்மேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கைக்காகவுமே நாம் வீணான போராட்டங்களையும், பயனற்ற முயற்சிகளையும் செய்துகொண்டிராமல், திட்டமிட்டுத் துணிவான, ஒட்டுமொத்தமான நாட்டு விடுதலை முயற்சியைக் கையிலெடுக்க வேண்டும் என்றும், அதையும் கலைஞர் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்றும், பிற தமிழின நலங்கருதும் தலைவர்கள் இன்றைய அரசியல் பயன்களைக் கருத்தில் கொள்ளாமல் அதற்குத் துணிந்து, துணைநிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்துலக அளவில் இராசீவ்காந்தி தம் கைகளை வலுப்படுத்திக்கொள்ளும் அரசியல் தந்திர முயற்சிகள் நாள்தோறும் வேறு வேறு வகைகளில் திட்டமிட்டுச் செய்யப்பெற்று வருகின்றன. கிழக்காசிய வல்லதிகார நாட்டுத் தலைவர்கள் பலர் ஒன்றுகூடி, மக்களின் உண்மையான கோரிக்கைகளை நசுக்கிக் கீழ்மைப்படுத்தி வருவதும், அவர்களுடன் இணைந்து இராசீவ் காந்தியும் அத்தகைய முடிவை நோக்கித் திட்டமிட்டு வருவதும் இந்தியாவையே குடியரசு என்னும் பெயரால் ஓரதிகார ஆட்சிக்கும், மன்னர் மரபு தழுவும் ஒரு குடும்ப ஆட்சிக்கும் உட்படுத்த முயன்று வருவதும், இந்நிலையில் இந்தியத் தேசிய இனங்களின் உரிமையுணர்ச்சிகளே எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் வாய்ப்புக் கூறுகள் வலிமை பெற்று வருவதும் உற்று நோக்கத் தக்கன. எனவே, நாம் உண்மையான தமிழின முன்னேற்றத்தையும், உரிமை மீட்பையும் நலத்தையும் விரும்புவோமானால், அத்தகைய முயற்சிகளுக்கான காலம் இதுவே என்று கருதி, இங்குள்ள அனைத்து இயக்கங்களும் தமிழ்த் தேசிய உரிமைக் குரலை உடனே எழுப்பியாக வேண்டும் என்று, மன, அறிவு, செயல் காழ்ப்பின்றி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
- தமிழ்நிலம், இதழ் எண். 68, சனவரி, 1986