வேண்டும் விடுதலை/இராசீவின் ஐந்தாய அரசு கரவான, சூழ்ச்சியான ஓர் அமைப்பு!

விக்கிமூலம் இலிருந்து

 
இராசீவின் ஐந்தாய அரசு கரவான,
சூழ்ச்சியான ஓர் அமைப்பு!


ண்மையில் இராசீவ் அரசு, இந்திய அரசியல் சட்டத்தின் 64-ஆவது பிரிவுக்கு ஒரு திருத்தச் சட்ட வரைவைத் திட்டமிட்டுக் கொணர்ந்து, நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் பக்கல் அதைப் பெரும்பான்மை ஒப்போலைகளால் நிறைவேற்றியும் கொண்டது.

பெரும்பாலான இந்திய மாநிலச் சட்டமன்றங்களில் இந்திரா பேராயக் கட்சி தன் ஆட்சி வாய்ப்பை இழந்து போன நிலையில், தனக்குள்ள நடுவணரசு அதிகாரத்தை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி ஆட்சிக்கமர்ந்த மாநிலங்களில், அவற்றின் அதிகாரத்தை ஒடுக்கித், தன் ஆட்சிக் கால்களை எவ்வாறு அகல ஊன்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிக மிகக் கரவாகவும், மிகவும் சூழ்ச்சியாகவும் எண்ணிப் பார்த்தது. இறுதியில், தாயிடத்திலிருந்து குழந்தைகளைப் பிரிக்கின்ற முறையில் மாநிலங்களின் ஆளுமையில் உள்ள சிற்றூர்ப்புறங்களை நேரடியாகத் தன் ஆளுமையின் கீழ்க் கொணரும் முயற்சியாக ஐந்தாய அரசு, (பஞ்சாயத்து ராஜ்ஜியம்) என்னும் ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டது.

இந்த ஐந்தாய ஆட்சி அமைப்பைப் பற்றிச் சுருக்கமாக மதிப்பிட்டால், நடுவணரசு, மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை வாங்கிச் சிற்றூர்ப்புறங்களில், ஐந்து பெயர்கள் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கின்ற செயலே ஆகும்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு முழு அதிகாரம் கொண்ட மாவட்ட அமைப்புகள் மாவட்டக் குழுவாட்சி முறை (District Board Administration) என்று ஒரு முறையிருந்தது. அதில், இன்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (District Collector), வட்டாட்சித் தலைவர்(Tashildar) ஆகியோருக்குள்ள பெரும்பாலான அதிகாரங்கள் கொண்ட குழு ஒன்று செயல்பட்டுச் சிற்றூர்புறங்களில் உள்ள கல்வி, சாலை அமைப்பு, ஊர்ப் பாதுகாப்பு, தண்ணீர் வசதி முதலியவற்றைக் கவனிக்கவும் அவற்றுக்கான பொருள் ஒதுக்கீடு செய்யவும் போதுமான அதிகாரம் பெற்றிருந்தது. மாநில அரசும் அதற்குப் போதுமான பொருள் ஒதுக்கீடு செய்து வந்தது. அந்த மாவட்டக் குழுவாட்சி உறுப்பினர்களும் தேர்தல் வழியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பெறுவார்கள். ஆனால் பேராயக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுக் காமராசர் முதலமைச்சராக வந்தபின் அம் மாவட்டக் குழு ஆட்சி முறையைத் தவிர்த்து விட்டுச் சிற்றுார்ப் புறங்களை ஊராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பிலும், அவற்றைப் படிப்படியாக ஆளுகின்ற அதிகாரத்தை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பொறுப்பிலும் உட்படுத்தினார். ஆனால் அனைத்து அதிகாரங்களும் மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருந்தன.

இதுநாள் வரையிருந்த இம்முறையை மாற்றி மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குறைத்து, பொருள் ஆட்சி உட்பட அவற்றை நேரடியாகச் சிற்றூர்ப்புற ஐந்தாயங்களே(பஞ்சாயத்துக்களே) ஆளுமை செய்யும்படி, அதற்கு அரசியல் அமைப்பியல் சட்டத்தில் உள்ள 64-ஆவது பிரிவை விரிவுபடுத்திப் புதுச் சட்ட அமைப்புகளை இப்பொழுது ஏற்படுத்தியுள்ளது இராசீவ் அரசு.

இப்படிச் செய்ததன் வழி, நடுவண் அரசு, சிற்றூர்ப்புற ஐந்தாய ஆட்சியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு தனக்கேற்றவாறு, சிற்றூர் ஆட்சியை அமைத்துக் கொள்ள முடியும். நடுவணரசு கொணரும் திட்டங்கள் அனைத்தையும் எவ்வகை மறுப்பும் இன்றி அச்சிற்றூர்ப்புற அமைப்புகள் செயல்படுத்தியாக வேண்டும் என்னும் கட்டாயம் அவற்றுக்கு உண்டு. இதனை நடுவணரசுக்கு வேண்டாத அல்லது வேறான மாநில அரசுகள் தடைப்படுத்த முடியாது. இப்பொழுதுள்ள நிலையில் நடுவணரசு போடும் திட்டங்களை எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள் மறுக்கலாம், அல்லது தவிர்க்கலாம். இனி அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுநாள் வரை மாநில அரசுகள் சொல்வதை, நேற்று வரையிருந்த ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மறுக்க இயலாது. மாநில அரசுகளின் கட்டளைப்படி அவை செயற்பட்டாக வேண்டியிருந்தது. இனி, ஐந்தாய அமைப்புகள் அவ்வாறு செயல்பட வேண்டிய தேவையில்லை. ஆனால் நடுவணரசு இடும் கட்டளைப்படி மாவட்ட ஆட்சி அமைப்புகளும், அவற்றின் வழி ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றின் வழி ஐந்தாயங்களும், செயல்பட வேண்டியிருக்கும். இதில் மாநில அரசுகள் குறுக்கிட முடியாது. இம்மாறுதல்களால், மாநிலங்களுக்குள்ள அதிகாரங்கள் உரிமைகள் தவிர்க்கப்படுகின்றன; தகர்க்கப்படுகின்றன. இதுதான் ஐந்தாய அமைப்பால் மாநில அரசு இழக்கின்ற உரிமை. இந்த உரிமையை நடுவணரசு நேரடியாகக் கைப்பற்றிக் கொள்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக இந்த அதிகாரச் செயல்பாடுகள் நேரடியாகவே நடுவணரசால் நிகழ்த்தப் பெறும். பொருளதிகாரத்தைக் கொண்டும் கூட மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள சிற்றூர்களை இனி மிரட்ட முடியாது; பணிய வைக்க முடியாது; தங்கள் சார்பாகத் திருப்ப முடியாது. அந்தப் பொருள் ஒதுக்கீடும், நடுவணரசு வகுத்துக் கொடுக்கின்ற முறையில், மாநிலப் பொருள் குழு ஐந்தாயங்களுக்கு இயல்பாகவே ஒதுக்கியாக வேண்டும். இதிலும் மாநில அரசு தன் அதிகாரத்தைக் காட்ட முடியாது. வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கின்ற அதிகாரத்தைக் கூட நடுவணரசு மாநில அரசுகளுக்கு விட்டு வைக்கவில்லை. அதைக் கூட நடுவணரசின் அதிகாரத்தில் உள்ள மாநிலத் தணிக்கை அதிகாரி பார்த்துக் கொள்வார்.

இம் முறைகள் பற்றி வெளிப்படையாக - பச்சையாகச் சொல்வதானால், வேர்கள் நேரிடையாகக் கிளைகளொடு தொடர்பு கொள்ளும். அடிமரம் வழியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. எனவே கிளைகள் அடிமரத்துக்கன்று, வேர்களுக்கே நன்றிக் கடன் ஆற்றும். இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சி, ஆட்சி அமைக்கிறது என்பதுபற்றி நடுவணரசுக்குக் கவலையில்லை. நடுவணரசில் உள்ள கட்சிக்குத்தான் நாடு முழுதும் கடமைப்பட்டிருக்கும்.

எனவே, இனி மாநிலத்தன்னாட்சி (மாநில சுயாட்சி) என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமன்று, தனிநாட்டுக் கோரிக்கைக்கும் இடமில்லை. ஏனெனில் தனிநாடு கேட்கின்ற உணர்வே தோன்றாதவாறு, நடுவணரசு, தன் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ள சிற்றூர்ப்புறங்களை (அஃதாவது கிராமங்களை)ச் செய்து விட முடியும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இப்பொழுது, மாநில எல்லைக்குள் வானொலி நிலையங்களும், தொலைக்காட்சி நிலையங்களும் இருந்தாலும், அவை எவ்வாறு மாநில ஆட்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், நடுவண் அரசு சொல்கிறபடி - இராசீவ் விருப்பப்படி நடந்துகொள்கின்றனவோ, அப்படியான நிலையில் ஐந்தாய ஆட்சி அமைப்புகள் நடந்து கொள்ளும். எனவே அவற்றின் கீழ் உள்ள மக்களும் அப்படியே நடந்து கொள்வர். மாநில அமைச்சர்களையோ, அவர்கள் கட்சியையோ அவை பொருட்படுத்த வேண்டிய தேவையே இல்லை! இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும், நடுவணரசு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளைப் போல் அடங்கிக் கிடப்பர். மாநில உரிமைகள் என்பவற்றைப் பற்றியோ, அவற்றை வாங்கித் தருவதாகக் கூறும் மாநில அரசுகளைப் பற்றியோ, அவர்கள் கவலைப்படவோ, அக்கறைப்படவோ தேவையில்லாத நிலையில் உயர்ந்துவிடுவார்கள்.

நடுவணரசுக்குகந்த இந்த வாய்ப்பான சூழ்நிலையில், சவகர் வேலை வாய்ப்புத் திட்டம் மட்டுமன்று, இந்திரா நீர்வசதித் திட்டம், இராசீவ் சாலை வசதித் திட்டம், பிரியங்கா கல்வியமைப்புத் திட்டம், இராகுல் தேசியக் குடும்பத் திட்டம், என்று இராசீவுக்கு இனிமேல் பிறக்கப் போகிற பெயரன்கள், பெயர்த்திகள் ஒவ்வொருவரின் பெயராலும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டே போகலாம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்க.

தமிழ்நாட்டில் இராசீவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அவர் மூளையில் தோன்றி, உருசியப் பின்னணியில் உருவாக்கப் பெற்றதே ஐந்தாய ஆட்சித் திட்டம். இவ்வொரே திட்டத்தில் மாநில உணர்வுகள், விடுதலை உணர்வுகள், மாநிலத் தேசிய இன உணர்வுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டு இவ் விந்தியாவையே இந்திரா பாரத் ஆக்கப் போகிறார் இராசீவ். பொறுத்திருந்து பாருங்கள்.

மற்றபடி இத்திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் எவ்வளவோ எதிர்ப்புக் காட்டினர். இருப்பினும் இவ் வைந்தாய ஆட்சி பற்றிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியே விட்டார், இராசீவ். அவருக்கு அவரைப் பற்றித் தவிர வேறு எவரைப் பற்றியும் கவலையில்லை என்பது அவர் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இராசீவுக்கு உள்ள கவலையெல்லாம் தாம் நினைக்கின்ற ஒவ்வொரு திட்டத்தையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான். அதுவுமன்றி அவர் நடவடிக்கைகளை எவரும் எதிர்க்கக்கூடாது என்பதும் அவர் கொள்கையாக இருக்கிறது. அவ்வாறு எதிர்ப்பவர்களையெல்லாம் அவர் சகட்டுமேனிக்குக் கடுமையான சொற்களால் சாடுகிறார். இவருக்குத் தவிர, வேறு எவருக்கும் மக்கள் மேல் பற்றில்லை என்று இவர் கருதுவது, இவர் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் ஐந்தாய அரசைக் கொண்டு வந்த மறைமுகமான நோக்கத்தையும், 18 அகவை வந்த அனைவர்க்கும் ஒப்போலையளிக்கும் உரிமை வழங்கியதையும் பார்த்தால், அவர் விரைவில் இந்தியா முழுமைக்கும் சட்டமன்றத் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒன்றாகவே நடத்த விரும்புகிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. அவ்வாறு இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதானால், அவர் இப்பொழுது அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு முதலிய மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்கள் அரசையும் கலைத்தாக வேண்டும். பாராளுமன்றத் தேர்தல், வரும் திசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. அக் கருதுகோள் உண்மையாக இருந்தால் நம் கணிப்பும் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அஃது உண்மையாக இருந்து விட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டுவிடும். அவ்வாறு கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டால், மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அந்நிலைக்கு இந்த ஐந்தாய அமைப்புகள் கட்டாயம் இராசீவுக்குக் கைகொடுத்தே ஆக வேண்டும். எதற்கும் அண்மைக் கால விளைவுகளைப் பொறுத்தே எதிர்கால இந்தியாவின் நிலைப்பாடு இருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை எதிர்காலமே கட்டியங் கூறி உரைத்து விடும் என்று நம்புக.

— தமிழ்நிலம், இதழ் எண். 22 மே 1989