உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/மொழி, இன, நாட்டு உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன!

விக்கிமூலம் இலிருந்து

மொழி, இன, நாட்டு உரிமைகள்
படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன!


ம் தமிழினத்தின் நிலை வரவரக் கேடடைந்து கொண்டே போகின்றது. இந்திராவினால் எத்தனையெத்தனைத் தொல்லைகளை இத் தமிழினம் அடைந்ததோ, அவற்றை விட இன்றைய தலைமையமைச்சர் இராசீவால் இத்தமிழினம் மிக மிகச் சீர்கேடடைந்து வருகின்றது. தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழினம் மட்டுந்தான் இவ்வாறு இராசீவால் தொல்லையுறுகின்றது என்றில்லை. தமிழீழத்தில் உள்ள ஈழத்தமிழர்களும் ஒவ்வொரு நாளும் இவரால் படும் தொல்லைகளையும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் உலகமே அறிந்து அவற்றுக்கு மாற்றாக ஒன்றும் செய்யவியலாமல் கையற்று நிற்கின்றது.

இராசீவ் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகக் கரவாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும், இவ்வினத்தையே அழித்தொழிக்கும் குறிக்கோளுடனும் நடந்துகொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது. பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களின் தனித்தன்மைகளையுமே தம் சூழ்ச்சியான அரசியல் நடவடிக்கைகளால், திட்டங்களால் அழித்தொழித்துவிட்டு, ஆரிய இனக் கலைப் பண்பாடுகளையே பெரிதும் வளர்த்தெடுத்து நிலைப்படுத்துகிறார். எனினும், பல்லாற்றானும் சிறந்து விளங்கும் இத் தமிழ்ப் பேரினத்தின் அனைத்துத் தனித் தன்மைகளையும் பிற யாவற்றினும் மேலாக நேரிடைத் தாக்குதலால் அச்சு அடையாளமின்றித் தரையோடு தரையாக மண்ணோடு மண்ணாகவே தேய்த்து ஒன்றுமில்லாமல் செய்துவிடப் பார்க்கிறார். இதை அவரால் செய்ய முடியுமோ முடியாதோ, ஆனால் அவர் இறுதி முயற்சியாக உறுதி கொண்டு செய்ய முற்பட்டுவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

தமிழினத்தின் மொழி, இன, நாட்டு உரிமைகள் படிப்படியாக இராசீவால் பறித்தெடுக்கப்படுகின்றன. தமிழ்மொழியை மூன்றாந்தர நாலாந்தர மொழியாகவே நடுவணரசு மதிப்பிடுகிறது. உலகின் மூல முதல் மொழியாகிய தமிழ், ஏதுமற்ற இந்தி மொழிக்கு மிக மிகத் தாழ்வான மொழியாகவே மதிக்கப்படுகிறது. உருப்படியான ஒரு சிறப்பையும் கொண்டிராத, இலக்கண வழுக்களும் மிகப் பிந்திய இலக்கியங்களையும் கொண்டுள்ள இந்தி மொழிக்கு ஆண்டுக்கு நூறு கோடி உருபா செலவிட்டால், இலக்கிய இலக்கணச் செழுமையுற்று விளங்கும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு கோடி உருபாவே செலவிடப் பெறுகிறது. அதுவும் அந்தத் தமிழையும் பார்ப்பனத் தமிழாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறது.

இனி, இன நிலையில் நம் இனத்தவர்கள் தமிழர் என்று தங்களை எழுத்தளவில், பள்ளிச் சான்றிதழ், ஒப்போலைப் பதிவுகள், பிற அரசுப் பதிவேடுகள், எல்லைக்கடவுகள் முதலியவற்றில் பதிந்து கொள்ளவும் உரிமையற்றவர்களாகவே உள்ளார்கள். வேறு பிற திராவிட மொழியினத்தவர்கள், தங்களைத் தெலுங்கர், கன்னடியர், மலையாளர், குசராத்தியர், வங்காளியர், மராட்டியர் என்று தங்கள் இனத்தின் பெயர்களை அரசுப் பதிவேடுகளில் பதிவு செய்து கொள்ள உரிமை இருக்கும்பொழுது, தமிழர் மட்டும் 'இந்து' என்னும் மதந்தழுவிய பெயரையும், பிள்ளை, முதலி, படையாச்சி, செட்டி, கவுண்டர் என்னும் சாதி தழுவிய பெயரையும் மட்டுந்தாம் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றால், இஃதென்ன கொடுமை ! ஏன் தமிழர் மட்டும் தங்கள் இனப்பெயரைப் பதிவுசெய்து கொள்ள உரிமையில்லாதவர்களாக வேண்டும்?

இனி, தமிழினத்தின், தமிழ்நாட்டின் சிறுசிறு உரிமைகளுக்காக ஏன் அவ்வப்பொழுது தில்லியரசை நாடிப் போக வேண்டும்? கல்வி, வணிகம், தொழிலமைப்பு, உணவு, இதழ் வெளியீடு போன்ற நூற்றுக்கணக்கான இன்றியமையாத தேவைகள் ஒவ்வொன்றிற்கும் கூட நடுவணரசை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற நிலை இன்னும் நமக்கு எதற்கு? நம் கலைகள், பண்பாடுகள் முதலிய அனைத்தின் மூலப் பெயர்களும் அழிக்கப்பட்டுப் பாரதக் கலைகள், பாரதப் பண்பாடுகள் என்று மாற்றாந்தாய்ப் பெயர் சூட்டி அழைக்கப்படும் இழிநிலை நமக்கு ஏன்? ஒவ்வொரு நிலையிலும் தமிழர் என்ற தனித்தன்மையை நாம் இழந்து ஆரியமயப்படுத்துகிறோம். அல்லது இந்திக்காரர்க்கு நாம் அடிமைகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம்? இவ் விழிநிலையை இன்னும் எத்தனைக் காலத்திற்கு நாம் பொறுத்துக் கொள்வது? எங்குப் பார்த்தாலும் இந்தி, சமசுகிருதம், ஆரியம், முதலாளியம் - என்று மாற்றார்களின் மொழிக்கும் இனத்திற்கும் ஆளுமைக்கும் என்றென்றுமே தலையசைத்துக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டிருக்க நாம் நிலையான அடிமைகளா? உரிமை வாழ்க்கையை முதன்முதல் அமைத்துக் கொண்டவரும், அவ்வுரிமையை உலக மக்களுக்கு முதன் முதல் கற்றுக் கொடுத்தவரும் தமிழரில்லையா? வரலாறு அவ்வாறிருக்க, இன்னு முழுப் பச்சைப் பார்ப்பனியத்திற்கும், வடநாட்டு முதலாளியத்திற்கும் ஏன் நாம் கால் கை பிடிக்கவும், கண்காணிகளாகவும் வேண்டும். தன் மானமற்ற குமரி அனந்தன்களும், திண்டிவனம், வாழப்பாடிகளும், ம.கோ. இரா. அடிமைகளும் அவ்வாறு இருக்க விரும்பினால் தன்மானம் மிக்க நாமும் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?

இவ்விழிவு நிலைகளை ஒழித்துக் கட்டுவதற்கு இங்குள்ள எந்த இயக்கமும் போராட முன்வரவில்லை; முன் வராது. எனவே, தன்மானமும், இனமானமும் மிக்கவர்கள்தாம் ஒன்று கூடி உயர்த்தெழுந்து உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அவர்களைப் பிரிவினைக்காரர்கள், தேசியப் பகைவர்கள், வன்முறையாளர்கள், தீய ஆற்றல்கள் என்றெல்லாம் வல்லதிகாரக் குற்றஞ்சாட்டிப் பற்பல துன்பங்களுக்கு ஆளாக்கலாம். இருப்பினும் இக் கொள்கைக்காக மக்கள் போராடியே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல் தலைமை (அதை எவர் கைப்பற்றினாலும்) இங்குள்ள எல்லா வகையான எழுச்சி நிலைகளையும் அடக்கித் தன்னாளுமை பெறவே பாடுபடுகிறது! சில நேரங்களில் சில நிலைகளில் அது துணிவு பெற்று ஒருவாறு நடுவணரசைப் பேச்சளவிலாகிலும் எதிர்ப்பதுபோல் நடிக்கிறதென்றால் அல்லது நாடகமாடுகிறதென்றால், அதுவும் தனக்கு வலிவு தேடிக்கொள்ளவோ தனக்குக் கிடைத்த பதவியை நிலைநிறுத்திக் கொள்ளவோ, அல்லது மறைமுகமாகத் தங்கள் விட்டுக் கொடுப்பு அல்லது இனக் காட்டிக் கொடுப்பு நிலைகளுக்குப் பொருளியல் நிலையில் நன்றி தேடிக் கொள்ளவோதான் இருக்க முடியும். இத்தகையவர்களுக்கு அழிக்கப்பட்டு வரும் தமிழினத்தைப் பற்றியோ, பெருமை குறைக்கப்பட்டு வரும் தமிழ்மொழியைப் பற்றியோ, நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பற்றியோ அக்கறையோ கவலையோ எவ்வாறு இருக்க முடியும்?

ஏதோ அரசியல் ஆளுமை உரிமைகளுக்காகப் போராடுவதாக இங்கு ஆட்சிக்கு வரும் மாநில அளவிலான கட்சிகள் அவ்வப்பொழுது பெயர் பண்ணிக் கொண்டு, விளம்பரம் தேடிக் கொள்வதுதான் மிச்சம்! மற்றபடி, இங்குள்ள தன்மானத்(!) தமிழர்கள் இராசீவுக்கு ஆட்சியரண் சேர்ப்பதற்குப் பேரம் பேசும் தரகு முதலாளிகளாகவேதாம் இருக்கிறார்கள்.

இதுவரை இங்கு ஆட்சிக்கு வந்த, வரும் அதிகாரக்காரர்கள் செய்த அரசியல் முயற்சிகளால் அப்படி என்ன நன்மை ஏற்பட்டு விட்டது? இவர்கள் இங்குள்ள அரைக்காலே வீசம் ஆளுமை உரிமைக்காக நடுவணரசுடன் போராடும் அரசியல் முயற்சிகள் தேவையே இல்லை. ஒட்டுமொத்தமான இனநல முயற்சிகளே தேவை! இனநலமே எதனினும் பெரியது! வலியது! எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது!

"மனநலம் நன்குடையராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து" "மனநலத்தினாகும் மறுமை; மற்றஃதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து" - என்பன நம் இனக்காப்பு நூலாகிய திருவள்ளுவம் நமக்குக் கற்பிக்கும் நெறிமுறைகள்.

"இனம் நலமாக - வலிவுள்ளதாக - இருக்கும் நிலையில்தான், அது, நம் மனநலத்தால் பெற்ற - பெறுகின்ற அறிவு நிலைகள் ஆகிய இலக்கியம், இலக்கணம், மொழி, வாழ்வியல், அறிவியல் முதலியவற்றையும், மனநிலைகள் ஆகிய கலை, பண்பாடு, ஒப்புரவு, உலகியல், பொதுமை முதலியவற்றையும், அறநிலைகளாகிய சமன்மை, பொதுவுடைமை, அரசியல், அறவியல் முதலியவற்றையும் நாம் கட்டிக் காத்துக் கொள்ள முடியும்” என்பது முதல் குறள் நெறியின் திரள் கருத்து.

அதே போல், "மேற்கூறிய மனநலத்தின் அனைத்துக் கூறுகளும் தாம் ஓர் இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுவன ஆகும்; மற்று, அவைதாம் ஓர் இனத்திற்கு நலமாகவும், காப்பாகவும் இருக்கும்” என்பது இரண்டாம் குறள் நெறியின் அடைவுக் கருத்து!

இவ்விரு திருக்கூற்றுகளால் நாம் பெறப்படுபவை என்னென்றால், ஓர் இனத்தின் முழு நலமே, வலிவே, அவ்வினத்தின் அனைத்து அறிவுக் கூறுகளுக்கும் காப்பாக இருப்பது போல், அவ்வறிவுக் கூறுகளுமே அவ்வின வலிவுக்குக் காப்பாக அமைவன ஆகும். நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி, இலக்கியம் முதலியவை நம் இனத்துக்கு வலுவூட்டக் கூடியவை. ஆனால் அவை இற்றை வடநாட்டுப் பார்ப்பனிய முதலாளிய இராசீவ் அரசால் அழிக்கப்படுகின்றன. அதேபோல் நம் இனத்தின் வலிவே - நலமே - நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றுக்கும் காப்பாக விளங்கக் கூடியன. அந்த இனமும் இன்றைய ஆரியமயத் தில்லியரசால் அழிக்கப்படுகிறது. இவ்வாறு நம் இனத்தின் காக்கும் பொருளும், காக்கப்படும் பொருளும், மற்றோர் இனமாகிய நம் பகை இனத்தால் அழிக்கப்படுகையில் நம் எதிர்காலமே இருண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டாவா?

இதை நம் மக்கள் உணர்ந்து எழுச்சியுற்றுப் போராடித் தடுத்து நிறுத்த முன்வர வேண்டாமா ? முன் வருதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் பழம்பெருந் தமிழினம் உய்வு பெறும். அதுவரை நாம் எதிர்கொள்ளும் எத்தகைய அரசியல், பொருளியல், வாழ்வியல், வரலாற்றியல், பண்பியல் ஆகியனவும் மற்றும் பிற அனைத்து நலன்களும் பயனற்றனவே, நிலையற்றனவே ஆகும்!

- தமிழ்நிலம், இதழ் எண். 129, செபுதம்பர், 1989