வேண்டும் விடுதலை/காவிரிச் சிக்கலை இனச் சிக்கலாக மாற்றிவிட்டார் பங்காரப்பா

விக்கிமூலம் இலிருந்து


 
எளிதாகத் தீர்க்கப்பட வேண்டிய காவிரி நீர்ச் சிக்கலை
இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா...!


இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும்


(6.1.92 'சத்ரியன்’ இதழ்க்கு அளித்த
நேருரையில் பாவலரேறு!)

மிழர்களும் தமிழ்நாடும் எந்த வகையிலும் வளம் பெறவும் கூடாது. முன்னேறி விடவும் கூடாது என்பதுதான் இப்பொழுதைய தில்லி அரசின் எண்ணமாகும்.

பார்ப்பனீயமும் முதலாளியமும் சேர்ந்து இயங்குவதே தில்லி ஆட்சி. அதற்கு இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும், எந்தத் தேசிய இனமும் எந்த நிலையிலும் வலுப்பெற்றுவிடக் கூடாது என்பதே உட்கருத்தாகும்.

அவ்வாறு வலுப்பெறுமானால் அந்த மாநிலமும் அந்தத் தேசிய இனமும் தன் அதிகாரக் கட்டுக்குள் இல்லாமற் போய்விடுமே. என்பதுவே தில்லியரசின் கவலை கரவான எண்ணம்..!

இதற்கு உகந்தவராக, தில்லி அரசுக்கு, அஃதாவது இந்திரா பேராய (காங்கிரசு)க் கட்சிக்குக் கிடைத்தவர்தாம் பங்காரப்பா..!

இவர் 1990 அத்தோபரில், வீரேந்திர பாட்டீல் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர். எல்லா நிலைகளிலும் இவர் தமிழர்களுக்கு நேர் எதிரானவர். இதற்கு முன்னர் இருந்த முதல்வர்களைக் காட்டிலும் இவர் பெரும் கன்னட வெறியர். இவர் பதவிக்கு வந்த பின் கர்நாடகத்தில் வாழும் தமிழர் முன்னேற்றத்தில் ஒரு கண்ணாக இருந்து அவர்களைப் பலவகையிலும் ஒடுக்க முற்பட்டார்.

பணி நிலைகளில் தமிழர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளைக் குறைத்தார். கல்வி நிலையிலும் தமிழ்க்கல்வியைப் பின்தள்ளிக் கன்னட மொழிக்கே அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தார். கன்னடம் படித்தவர்க்கே அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். தமிழர்கள் புதுத் தொழில் தொடங்குவதற்கும் வாணிகம் செய்வதற்கும் பல முட்டுக் கட்டைகளைப் போட்டார்.

எனவே, தமிழர்கள் அங்குப் பலவகையிலும் தொல்லைகளே பெற்று வந்தனர். அவர்கள் வீடுகள் கட்டவும், நிலங்கள் வாங்கவும் வாய்ப்பின்றி மிகவும் இடர்ப்பட்டு வந்தனர். அதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களுரை விட்டே வெளியேறிப் போயினர்.

பங்காரப்பா ஆட்சிக்கு வந்த நேரம், தமிழகத்திலும் ஆட்சி மாறியது. செயலலிதா தாம் பதவிக்கு வந்த பின், முன்பு விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் ஆதரவாயிருந்த நிலையை மாற்றிக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் செயலிலும், அவர்களை அறவே தமிழகத்திலிருந்து வெளியேற்றும் நிலையிலும் வெகு முனைப்புக் காட்டினார்.

காரணம் விடுதலைப்போராளிகள் எங்கு தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்து தம்மைக் கவிழ்த்து விடுவார்களோ அல்லது அழித்து விடுவார்களோ என்று அஞ்சினார். எனவே, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

இந் நடவடிக்கைகள் கர்நாடகத்திலும் குறிப்பாகப் பெங்களூரிலும் விரிவடைந்த பொழுது, பங்காரப்பா செயலலிதாவிற்கு அனைத்து வகையிலும் துணையாக இருந்தார்.

இருவரும் கன்னடத் தாய்மொழியினர். ஆகையால், தமிழீழ எதிர்ப்பு முயற்சிகளைக் கைகோத்துக் கொண்டு செயல்படுத்தினர். போராளிகள் பலரைப் பெங்களூரிலிருந்து சிறைப்பிடிக்கவும் அழிக்கவும் கர்நாடக முதல்வர் பங்காரப்பா, தமிழக முதல்வர் செயலலிதாவிற்குப் பெரிதும் துணையாக நின்றார்.

இதற்கிடையில்தான் ஏற்கனவே இருந்த காவிரி நீர்ச் சிக்கலும் பெரியளவில் உருவெடுத்தது.

இதன் உண்மையான சிக்கல் என்ன? அது பற்றிச் சிறிதேனும் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக, சிலர் வரலாற்று நிலைகளை இங்குக் கூறியே ஆதல் வேண்டும்.

காவிரி கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில், குடகு மலையில் தோன்றிக் கர்நாடகம் வழியாகத் தமிழ்நாட்டில் பாய்ந்து, தஞ்சை மாவட்டத்தைத் தாண்டி வங்காளக் குடாக் கடலில் கலக்கிறது.

அதன் மொத்த நீளம் ஏறத்தாழ 500 கற்கள் (800 கி.மீ.) இதில் 200 கற்கள் கர்நாடகத்திலும், 261½ கற்கள் தமிழ்நாட்டிலும், 52 கற்கள் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் எல்லையாகவும் அமைந்திருக்கின்றன.

இதனுடன் எட்டு கிளையாறுகள் இணைகின்றன. இவற்றுள் ஏமாவதி, ஆரங்கி, இலட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணதி ஆகிய ஐந்தும் கர்நாடகத்திலும், பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை தமிழ்நாட்டிலும் பாய்கின்றன.

இவற்றுள் கபினி, அமராவதி, பவானி ஆகிய முன்றும் கேரளத்தில் தோன்றிக் கர்நாடகம் வழியாகக் கபினியும், தமிழ்நாடு வழியாகப் பவானியும் அமராவதியும் காவிரியுடன் கலக்கின்றன.

காவிரியில் ஓடுகின்ற தண்ணீர் மூடகிலிருந்தே வந்துவிடாமல், இடையில் அதனுடன் வந்து கலக்கின்ற மேற்கூறிய சிற்றாறுகளின் தண்ணீருமாகும். இந்த வகையில் அதில் பாய்வதாகக் கணக்கிடும் 79,200 கோடி கன அடி தண்ணீரில் (74000 கோடி க.அ. தண்ணீர் என்பதும் ஒரு கணக்கு) கர்நாடகம் 38,800 கோடி க.அ. (388 டி.எம்.சி.) நீரும், தமிழ்நாடு 21700 கோடி க.அ. (217 டி.எம்.சி) நீரும், கேரளம் 1250 கோடி க.அ. (125 டி.எம்.சி.) நீரும், அஃதாவது கர்நாடகம் 53 விழுக்காடு, தமிழ்நாடு 30 விழுக்காடு, கேரளம் 17 விழுக்காடு காவிரியாற்றுக்குத் தண்ணீர் தருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தண்ணீரைக் கர்நாடகமும் கேரளமும் தென்மேற்குப் பருவ மழையாலும், தமிழ்நாடு வடகிழக்குப் பருவ மழையாலும் தருவதாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

எனவே, காவிரி நீரைக் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள ஞாயம் உண்டு என்னும் நிலையில், இந்நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், முதன் முதலில் 1892-ஆம் ஆண்டிலும், அதன்பின் அது சில திருத்தங்களுடன் 1924-ஆம் ஆண்டிலும் அன்றைய மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் செய்துகொள்ளப்பெற்றது.

இந்த ஒப்பந்தம், மேலும் கர்நாடகத்தில் மைசூரில் 1924-இல் ஓர் அணையும், தமிழகத்தில் மேட்டுரில் 1934-இல் ஓர் அணையும் கட்டிக் கொள்ளவும் வழிவகுத்தது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுதும், அதன்பின்னர் 1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொழுதும், கர்நாடக, தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் அமைப்பு நிலைகள் வேறு வேறு; எல்லைகளும் மாறின. நில அமைப்பு மாறுபாடுகளும் எல்லை மாற்றங்களும் ஒப்பந்தத்தில் சில சிக்கல்களை உருவாக்கிவிட்டன.

அதன்பின்னர் தமிழ்நாடு பவானி ஆற்றுக்குக் குறுக்கேயும், கர்நாடகம் கபினி ஆற்றுக்கு குறுக்கேயும், ஒவ்வோர் அணையைக் கட்டிக் கொண்டன. அதன்பின்னும் கர்நாடகம், தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தபோதும், நடுவணரசு இசைவு தராத நிலையிலும், ஏமாவதி ஆற்றுக்குக் குறுக்கேயும், ஆரங்கி ஆற்றுக்குக் குறுக்கேயும் இரண்டாவது மூன்றாவது அணைகளைக் கட்டிக் கொண்டது.

தமிழ்நாடு மறுத்தும், திட்டக்குழு இசைவு பெறாமலும் கட்டப்பட்ட இவ்விரண்டு அணைகளாலும் காவிரிநீர்ச் சிக்கல் மேலும் இறுகியது. இது தொடர்பாக 1968 முதல் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை தொடங்கி இன்னும் தீர்ந்தபாடில்லை. நடுவண் அரசு இந்தச் சிக்கலைக் கண்டும் காணாததும் போலவே நமக்கென்ன என்று இருந்துவிட்டது. அதனால் சிக்கல் மேலும் மேலும் இறுகி, 1970 முதல் 26 பேச்சுகள் நடந்தும் - இன்னும் தீர்வு இல்லாமல் இருந்தது.

அதன் இறுதி முயற்சியாக 1990 சூன்-2-இல் பம்பாய் உயர்நீதிமன்ற நடுவர் சிட்தோசு முகர்சி தலைமையில், காவிரி நீர் பங்கிடுவதற்கான நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி நடுவணரசு அமைத்தது.

அந்நடுவர் மன்றம், கர்நாடகம், தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் பரவலான சுற்றுச் செலவு செய்தும், பார்வையிட்டும், ஆங்காங்குள்ள உழவர்களின் நேரடியான வாய்மூலங்களைக் கேட்டும், அவற்றை நன்றாக ஆய்ந்து, ஆண்டுதோறும், கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 2050 கோடி கன அடி (அஃதாவது 205 டி.எம்.சி.) தண்ணீர் விடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகத்தான் அது செல்லாது என்று கர்நாடகம் பங்காரப்பா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தையும் ஒரு புதுச்சட்டத்தையும் போட்டது.

அதன் பின்னர் நடந்த கதைதான் அனைவருக்கும் தெரியும்.

நடுவர் மன்றத் தீர்ப்பைப் பங்காரப்பா கடுமையாக எதிர்த்தார். நடுவணரசு அதை உச்சநீதிமன்றக் கருத்துரைக்கு அனுப்பியது; அது, நடுவர் மன்றத் தீர்ப்பு சரியென்றும், கர்நாடகம் அதையெதிர்த்துச் சட்டம் இயற்றியது தவறென்றும் கூறியது; நடுவணரசு அதை அரசிதழில் (கெஜட்டில்) வெளியிட்டது.

அது வெளிவந்த நாளிலிருந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை, தீவைத்தல் முதலிய கொடுமைகள் கன்னடக் காடையர்களால் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இது காவிரி நீர்த் தீர்ப்புக்கு எதிராக எழுந்த போராட்டம் அன்று என்பதை அது தொடங்கிய மூன்று, நான்கு நாள்கள் நிகழ்ச்சிகளே காட்டி விட்டன.

இது திட்டமிட்டுத் தமிழர்களின்மேல்; தமிழினத்தின் மேல் நடக்கின்ற ஓர் இனப்படுகொலையே ஆகும்.

ஆயிரக்கணக்கில் தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் புடைவைகளை அவிழ்த்துவிட்டு அவர்கள் அம்மணமாகவே விரட்டப்பட்டுள்ளனர்.

இக்கலவரங்களால் 2000-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையர்கியுள்ளன. ஓரிலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத்தேடி தமிழகத்திற்குள் தங்கள் உடைமைகளையும் வீடு வாசல்களையும் விட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள வந்துள்ளனர். இன்னும் வந்த வண்ணமாகவே உள்ளனர்.

இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தியது பங்காரப்பாவின் மேலுள்ள கடுமையான குற்றமாகும். அதற்காகவே அவரைப் பல தண்டனைகளுக்கும் உள்ளாக்கலாம்.

அத்துடன் அவர் தூண்டிவிட்டதன் பேரிலேயே இக்கொடுமைகள் நிகழ்ந்தன என்று கர்நாடக முன்னாள் முதல்வர் இராமகிருட்டிண கெக்டே கூறுவது மிகமிக உண்மையானதாகும்.

ஆட்சியில் ஊழலும் கட்சியில் எதிர்ப்பும் பங்காரப்பா தேடிக் கொண்ட இழிவுகளாகும். இவற்றைத் திசைதிருப்பவே இவர் இக்கலவரங்களைத் தூண்டி விட்டார் என்று கெக்டே கூறியுள்ளார்.

1983-இல் இலங்கையில் தமிழர்களைச் சிங்களவர் கொடுமைப்படுத்தியதைப் போல், இங்கும் தமிழர்கள் கொடுமைக்கும் அழிவுக்கும் உள்ளாக வேண்டியுள்ளது பற்றித் தமிழ் நலம், தமிழர் நலம் கருதும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

இத்தனை கொலை, கொள்ளை, தீவைப்பு, மாந்தர் இழிவு, பொருள் சேதங்கள் நடந்தும் நடுவணரசு, அதன் தலைமையமைச்சர் நரசிம்மராவ். அவரின் அமைச்சர்கள், இந்திரா கட்சித் தலைவர்கள் எனப்படுவோர் ஒரு கண்டனம், சிறு வருத்தம், கண்டிப்பு - எதுவும் சொல்லவில்லையே..!

அதுதான் இந்தியா. அதுதான் பார்ப்பனிய ஆட்சி..!

தமிழினம் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவணரசின் கோட்பாடு. கொள்கை. மறைமுக ஏற்பாடு. எல்லாம்..!

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வெறும் பேச்சளவில்தான்.!

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுகையில், அது அயல்நாட்டுச் சிக்கல், நாம் தலையிடுவது கூடாது என்று ஞாயம் பேசினர், இங்குள்ள அரசியல் தலைவர்கள்...!

ஆனால், இங்கேயே ஒரு மாநிலத்து மக்கள் இன்னொரு மாநிலத்து மக்களை அழித்து ஒழிக்கிறார்களே - அதை என்னவென்று கூறி அமைதி சொல்வார்கள்..?

எல்லாவற்றுக்கும் விடை ஒன்றுதான். காவிரி நீர்ச்சிக்கலை இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா!

இனி, தமிழினம் தமிழர்கள் . தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது தான். அதன் நோக்கம் (இலட்சியம்). இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும் என்ற நிலைக்குப் போவதுதான் என்றால் அதைக் காலமே இத்தகைய சூழல்களை உருவாக்கட்டும்.!

— தமிழ்நிலம், இதழ் எண். 151, பிப்பிரவரி, 1992