வேண்டும் விடுதலை/சிறுசிறு நன்மைகளும் சலுகைகளும் இனத்தை ஈடேற்றிவிட முடியாது!
இனத்தை ஈடேற்றிவிட முடியாது
நாம் விரும்பியது போல், தமிழின நலம் கருதும் கலைஞர் ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – தமிழகத்தில் அமைந்துவிட்டது. இந்த ஆட்சி மாற்றமே நமக்கு மகிழ்ச்சி தருவதன்று. மேலும் நாம் மகிழுவதென்பதே இல்லை; நம் இன நல நோக்கம் நிறைவேறும் என்று நம்பிக்கை தோன்றும் வரை நமக்கு எத்தகைய செயல்களும் மகிழ்வூட்ட முடியாது. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது – என்னும் திருவள்ளுவக் கொள்கையுடையவர்கள் நாம்! எனவே, இவர்களின் ஆட்சிப் பேறு தற்காலிகமான ஒரு வல்லாளுமைத் தடுப்பு என்ற நாம் கருத முடியும், மள மளவென்று பொங்கிப் பாயும் வடவாரிய ஆற்று வெள்ளத்தை அணைகட்டித் தடுக்கும் ஆற்றலாகவே கலைஞரையும், தி.மு.க.வையும் நாம் கருதுகிறோம். மற்றபடி இவர்களின் ஆட்சியமைப்பே தமிழினத்திற்கான முழு விளைவையும் – விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்று நாம் எதிர்பார்த்து விட அன்று, நம்பி விடவும் முடியாது. அவ்வாறு நாம் நம்பிவிடும் அளவிற்கு இவர்களும் இதுவரையும் – ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போதும் கூட - தமிழின விடுவிப்புக்கான எந்த முயற்சியும் செய்துவிடவில்லை – என்பதை நாம் உணர்வோம். முதலில், இவர்களிடம் அன்று, பெரியாரிடம் இருந்த திராவிட உணர்வையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பிலும், ஏற்கனவே சிதைந்து கிடக்கும் தமிழின வரலாற்று நிலையிலும், இந்நிலை ஒருவாறு போற்றிக் கொள்ளக் கூடியதாக இருப்பதால், நாம் இவர்களின் வரவை, வேறு யாரையும் விட, வரவேற்கவும், வாழ்த்தவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இன்னுஞ் சொன்னால் வேறு யாரும் நாம் இவர்களை வரவேற்பது போல் – அந்த நோக்கத்திற்காக – அந்த நோக்கத்தின் இன்றியமையாமையை அவர்கள் அறியாததால் – இவர்களை வரவேற்கவும் இல்லை.
இந்நிலையில், இவர்கள் ஆட்சிக் கட்டிலேறி, மக்களியல் நிலையில், அல்லது ஆட்சியியல் நிலையில், ஏதோ சிறு சிறு தீமைத் தவிர்ப்புகளும், நன்மை விளைப்புகளும், அல்லது ஒரு சில சலுகைகளும் செய்து விடுவதாலேயே இவ் வேதுங்கெட்ட தமிழினத்தை ஈடேற்றி விடமுடியாது.
நம்மைப் பொறுத்தவரை, தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகளை மீட்பதும், தமிழ்நாட்டு விடுதலை பெறுவதுமே நம் அனைவர்க்கும் உண்டான ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். மற்ற படி சிறு சிறு ஆக்க நிலைகளெல்லாம் நம்மை மகிழ்வித்து விடவும் முடியா; நிறைவு செய்து விடவும் முடியா. இவர்களெல்லாரும் இவ்வாறின்றித், தங்கள் தங்கள் பதவிப் பேறுகளையும், இன்ப ஆக்கங்களையுமே பெரியனவாகக் கருதி மகிழ்ச்சியுறுகின்றார்களென்றால், இவர்கள் நம் இனத்திற்கான – நம் மொழிக்கான ஒட்டுமொத்தமான விடுவிப்பு எது என்பதையே வரலாற்று, இனவியல், மொழியியல் அடிப்படையில் அறியாமலிருக்கின்றார்கள் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. எனவே, நம்மைப் போன்ற ஆழமான நெஞ்ச வருத்தம் இவர்களுக்கு இருக்க முடியாது.
'நன்றறி வாரில் கயவர் திருவுடையர்; நெஞ்சத்து அவலம் இலர்' – என்னும் திருக்குறள் மொழியை நாம் மறந்தாலும் நம் நெஞ்ச அவலம் நமக்கு என்றும் எப்பொழுதும் எந்நிலையிலும் அதை நினைவூட்டிக் கொண்டே யிருக்கின்றது. நாம் எந்த நிலையில் ஆக்கம் பெற்றாலும், நம் இனம் வலிவு பெற்று, அஃதிழந்து நலன்களைப் பெறும் வரையில், அத்தகைய ஆக்கங்கள் தலைமாறி அழிந்து போய்க் கொண்டேதாம் இருக்கும் என்பதை நம் இன வரலாறு கூறுகிறது. 'மன நலம் நன்குடைய ராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து' என்னும் பொய்யா மொழியை ஓர்க!
நம் முன்னேற்ற முயற்சிகளுக்கான இறுதித் தலைமுறை இது; இறுதி நூற்றாண்டும் இதுதான். எனவே, நாம் இப்பொழுதைக்குப் பெற வேண்டுவன ஆட்சி நன்மைகள் அல்ல; இன, நாட்டு உரிமைகள் மீட்பே! கலைஞரும் அவரின் தோழர்களும் மிகத் துணிவாகவும் அதேபொழுது மிகவும் எச்சரிக்கையாகவும் – 'தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல் கண்' என்றவாறு – நம் தலையாய குறிக்கோள் மேல் எப்பொழுதும் கண் வைத்து, காது வைத்து, மனம் வைத்துச் செயலாற்ற வேண்டும்.
'தூக்கத்தில் உளறினாலும் தூய்தமிழ் உளறும் என் வாய்' – என்பார் பாவேந்தர். அவ்வாறான முறையில் "தூக்கத்தில் உளறினாலும் இனநலமே உளறுமாறு" இவர்களின் உணர்வு, அறிவு, செய்ல அனைத்தும் – கொண்ட குறிக்கோளில் – அல்லது – கொள்ள வேண்டிய குறிக்கோளில் - நாட்டத்தோடு இயங்குதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இம் முயற்சியில் எந்த ஒரு சிறு புறக்கணிப்போ, தோல்வியோ கண்டாலும் தமிழினம் இன்னும் ஐநூறு ஆண்டுகளில், முன்னைய வரலாற்றுச் சிறப்புடைய உரோமானிய, கிரேக்க இனங்களைப் போல் அழிந்துவிடும் என்பது அழிக்க முடியாத உறுதி, உறுதி! எண்ணிப் பாருங்கள்!
– தமிழ்நிலம், இதழ் எண். 17 பிப்ரவரி 1989