உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தமிழகம் பிரிதலே தக்கது

விக்கிமூலம் இலிருந்து

தமிழகம் பிரிதலே தக்கது


ந்தியா எக்காலத்தும் அரசியலில் ஒன்றிய தனி நாடாக இருந்ததில்லை. மிகப் பழங்காலத்தில் இந்நாடு ஐம்பத்தாறு தேசங்களாகவும். அதன்பின் 1947 வரை 632 சிறு நாடுகளாகவுமே தனித்தனி ஆட்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. ஏறத்தாழ முப்பத்து மூன்று கோடி மக்கள் உடைய முன்னைய இந்தியாவே 632 நாடுகளாகப் பிரிந்து தனித்தனி ஆட்சி ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததென்றால் (1961 மக்கள் கணக்குப்படி) 43.9 கோடி மக்கள் உள்ள இன்றைய இந்தியா தன் ஆட்சி முறையில் ஒன்றியிருக்க வேண்டும் என்பதும், அதனால் பல நன்மைகள் விளையுமென்பதும் அறியாமையாகும். அவ்வாறு இருப்பது பெரும்பான்மையான ஓர் இனத்தின் அல்லது ஒரு மொழியின் தனிப்பட்ட வல்லாண்மைக்கே அடிகோலுமேயன்றி எந்த அரசியல் சட்ட அமைப்பாலும் அதிகாரத்தாலும் நாட்டுக்கு நன்மையாக விளைந்துவிடப் போவது இல்லை. இது இப்படியே இருக்குமானால் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ள இனமோ, ஒரு மொழியோ தான் இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கமுடியும். குறிப்பாகச் சொன்னால் இக்கால் விளையும் எல்லாவகை அரசியல் குமுகாயப் பொருளியல் தோல்விகளுக்குக் கெல்லாம் இவ் வடிப்படையான - பிழையான அரசியல் அமைப்புத்தான் காரணம் ஆகும். இந்தியா தன்னாட்சி பெற்ற இப்பதினெட்டாண்டுக் காலத்தில் பேராயக்கட்சியன்றி வேறு எந்தக்கட்சி இந்திய ஆளுமையைக் கைப்பற்றி இருந்தாலும், அதுவும் இந்தியாவை இந்த நிலைக்குத்தான் - இன்னும் சொன்னால் இதைவிட மிகக் கீழான நிலைக்குத்தான் கொண்டுவந்திருக்க முடியும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம். வெள்ளையனே தன் வல்லதிகாரத்தால் செம்மைப்படுத்தவியலாத இவ்விந்திய ஒருமைப் பாட்டை இங்குள்ள ஒரிரு அரசியல் காயாட்டக்காரர்களின் தம் பதற்றப் போக்காலும் ஆட்சி வெறியாலும் ஏற்படுத்திவிடக்கூடும் என்று காண்கின்ற கனவு என்றும் நிறைவேற முடியாது. அந்நிலை பூனை வளர்க்கத் தெரியாதவன் யானையை வளர்க்க விரும்பியது போலாகும். மொழியாலும் இனத்தாலும், சமயத்தாலும் குலத்தாலும், பண்பாட்டாலும் பலவகையாகப் பகுக்கப்பட்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இப்பிரிவுநிலை தவிர்க்க முடியாதது. இயற்கையுமே ஆகும். பிரிவற்ற ஒரு நிலை இந்நாட்டு முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் என்றும் வழி விட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போயினும் இந்தியாவின் ஒரு மூலையில் மொழியெழுச்சியும், இனவெழுச்சியும், பண்பாட்டு எழுச்சியும், சமயவெழுச்சியும் தோன்றித் தோன்றி அவ்வக்கால் ஏற்பட்டு வருகின்ற சிறியளவு பயன்களையும் அரித்து வருமேயன்றி, ஓர் அமைதி நிறைந்த சூழலையோ அரசியல் முன்னேற்றத்தையோ ஏற்படுத்திவிட முடியா. பிரிவு மனப்பான்மையால் வருகின்ற முடிவன்று இது. உலகவியற்கையினையும், மக்களின் உரிமை வேட்கையினையும், அரசியல் அறிவுவிரிவையும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கின்ற உண்மை இது.

ஏறத்தாழ 43.9 கோடி மக்களுள்ள இந்தியாவில் ஏறத்தாழ 165 மொழிகள் வழங்கி வருகின்றன. இவற்றுள் அரசியல் மொழி சட்டத்தில் உள்ள அசாமி, ஒரியா, உருது, இந்தி, கன்னட, காசுமீர், குசராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராட்டி, மலையாளம், வங்காளம், சமற்கிருதம் முதலிய 14 மொழிகளையும் ஏறத்தாழ 38 கோடி மக்கள் பேசுகின்றனர். இவற்றுள் சமற்கிருதத்தை மட்டும் 1951 ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 555 பேர்களும் 1961 -ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 2666 பேர்களும் பேசிவருவதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் இம்மொழியும் மற்ற 13 மொழிகளுடனும் சேர்த்து எண்ணப்படுவது, இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பெற்ற ஊடுருவல் சூழ்ச்சியால் நேர்ந்த விளைவு ஆகும். இவ்வூடுருவல் இன்றைய நிலையில் எந்த அளவு வளர்ந்திருக்கின்றது என்றால் “சமற்கிருதம்” வழக்கிழந்த ஒரு மொழியன்று” என்று திரு.சி.பி. இராமசாமி அவர்கள் பேசுமளவிற்கும், “சமற்கிருதம் அழிந்துவிடுமானால் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் அழிந்து விடும்” என்று அண்மையில் கூடிய சமற்கிருத மொழிக்குழு கூறுகின்ற அளவிற்கும் என்று கூற வேண்டியுள்ளது. எனவே இந்தியா ஒரு பெரிய நாடாகவே இயங்குமானால் தென்னாட்டுப் பகுதிகளில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும், வடநாட்டுப் பகுதிகளில் வடநாட்டுப் பார்ப்பனர்களும் தாம் மேலோங்கி நின்று இங்குள்ள மற்ற பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று வெளிப்படையாகக் கூறலாம். இவ்வடிப்படை உண்மையை இனி வரப்போகும் இந்தியாவில் உள்ள எந்தக் கட்சியின் ஆட்சியும் மாற்றிவிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம்.

பேராயக் கட்சியில் திரு. காமராசரின் கை ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், உள்ளூர நடைபெறும் பலவகையான ஆட்சி அரிப்புகளில், தமிழர்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் தென்பகுதி வடபகுதிப் பார்ப்பனர்களுக்கு ஏதோ ஒரு வகையிலேனுேம் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டியிருக்கின்றனர். தமிழகத்திற்கு வந்து வாய்த்த அடிமை நிலைகளோ சொல்லுந்தரமல்ல. மொழியாலும், இனத்தாலும், சமயத்தாலும், இன்றையத் தமிழன் மிகக் கீழான நிலையில் தனக்குற்ற அடிமை நிலையினைக் கூட உயர்வு என்று நினைக்கும் அளவிற்கு அறியாமை அடிமையாகக் கிடந்து உழல்கின்றான். இங்குள்ள அரசியல் கட்சிகளும் கூட அவ்வறியாமை அடிமைகளின் கூட்டமாகவே இயங்கிவருகின்றனவேயன்றி, தம்தம் வல்லடிமைப் போக்கை அடியூன்ற உணர்ந்து அறிந்து அதினின்று தேர்ந்து தெளியுமாறில எனவே இன்றிருத்தல் போல இன்னும் எத்தனை ஆண்டுக் காலமாயினும். இப்பொழுதுள்ள காமராசர் போல் இன்னும் எத்தனை காமராசர்கள் வந்தாலும் இந்தியாவின் ஆணி வேருடன் ஊன்றப்பட்டுக்கிடக்கும் இவ்வுண்மையான ஒற்றுமையற்ற ஆண்டான் அடிமைப் போக்கை மாற்றிவிடவே முடியாது. அடங்கி அடங்கித் தலையெடுக்கும் இச்சிக்கலால் தான் இந்தியா இத்தனை காலம் கடன் பட்டும் பொருள்களையும் உழைப்பையும் செலவிட்டும் அகப்புற விளைவுகளில் நசித்துக் கொண்டே உள்ளது. ஊன்றிக் கவனிப்பின் இந்தியாவின் இன்றையக் குமுகாயத் தோல்வியினை உணராமற்போகார்

மேலே குறிப்பிட்ட இயற்கைக் குறைபாடன்றிச் செயற்கை குறைபாடுகளும் இந்தியாவின் ஒருமைப்பாட்டு எண்ணத்தால் செழித்து வளர்ந்து வருகின்றன. தமிழர்களின் வாழ்விற்கு இன்றியமையாமை என்று கருதும் ஒன்று வடவரின் வாழ்விற்கு தேவையற்ற ஒன்றாகப் பட்டுத் தூக்கியெறியப் படுகின்றது. நல்முறைப் பழக்க வழக்கங்களிலும், மொழியீடுபாடிலும், தமிழன் அல்லது தென்னாட்டவர்கள், வடவர்களால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வடநாட்டில் வழங்கும் இந்தி மொழி மட்டும் தென்னாட்டு மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை, அங்கு விளையும் கோதுமை கூட, தென்னாட்டு அரிசியினை அகற்றப்பாடுபடுகின்றது! அரசியல் ஒருமைப் பாட்டிற்காகச் செய்யப்பெற்ற முயற்சிகள் அத்தனையும் தென்னாட்டு மக்களுக்குத் தீங்காவும் இவர்களைத் தாழ்த்துவதாகவுமே அமைந்திருக்கின்றன. இக்கொடுமையை நெடுநாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தொடக்கத்தில் அரசியல் அமைதிக்காக ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உலக ஒற்றுமைக்காக ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும் சிற்சில சீர்திருத்தங்கள் கூட, முடிவில் ஓரின அழிவிற்கும் வளர்ந்து முழுமைப்பட்ட ஒருவகைப் பண்பாடின் வீழ்ச்சிக்கும் சிறந்து நிறைவுகொண்ட ஒரு மொழியின் தாழ்ச்சிக்கும் அடிகோலுவனவாகவே அமைகின்றன. இவையன்றி ஆளுமைத் தொல்லைகளும் பலவாகிப் பெருகி அடிப்படைக் கொள்கையையே ஆட்டி அசைக்கின்றன. தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற ஒரு செயலிற்கு வடநாட்டார் இசைவைப் பெறவேண்டியுள்ளது. இங்குச் செய்யத் திட்டமிடும் ஒரு வாணிகத்திற்குத் தில்லியின் கடைக்கண் பார்வை வேண்டியிருக்கின்றது. மதுரையிலிருந்து சென்னைக்கு விடுக்கப் பெறும் அஞ்சலில் ஒட்டவேண்டிய ஓர் உருவத்தை வடநாட்டினர் தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. தென்னாட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசியல் அல்லது குமுகாயவியல் தலைவர்களின் வாய்களை வடநாட்டினர் தம் கைகள் திறந்து மூட வேண்டியுள;; குமரி முனையில் நடத்தவிருக்கும் ஒரு தாளிகையின் பெயரைக் கூட தில்லியில் தமிழ் தெரியாத தமிழ்ப்பற்றில்லாத தமிழ்ப் பண்பாட்டிற்கு மதிப்பளிக்காத ஒரு வடநாட்டான் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இங்கிருக்கும் சூழல், பண்பாடு, மொழி முதலியவற்றை அங்குள்ள ஒருவன் கணித்து நல்லதைச் செய்துவிட முடியும் என்று எவ்வடிப்படையில் கருதப்படுகின்றதோ நாம் அறியோம். வடநாட்டுத் தாளிகைகள் பெயர்களை இங்குள்ளவர்கள் தேர்ந்தெடுப்பதை அங்குள்ளவர்கள் ஒப்புக் கொள்ளுவர்களா? இவ்வாறு சிறிய சிறிய செயல்களிலெல்லாம் தமிழர் - அல்லது தென்னாட்டவர் தம் அறிவையும், ஆற்றலையும், வடவர்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு விட்டுக் கொடுத்தாலும் இங்குள்ளவர்கள் அவர்களின் முழு இசைவைப் பெறத் தவங்கிடக்க வேண்டியுள்ளது. செயலுக்கும் காலத்திற்கும் ஒத்துவராத இவ்வொருமைப்பாட்டின் அமைப்புக்கு எத்தனைத் துயரமும் பட்டு, தன்மானத்தையும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டுமோ?

இங்குள்ள திருக்குறளை அறநூலாக ஒப்புக் கொள்ளும் வட நாட்டினர் எத்தனைப் பெயர்? இங்குள்ள பாரதிதாசனை ஒரு புலவராக மதிக்கும் வடநாட்டுப் புலவர்கள் எத்தனைப் பெயர்? இங்குள்ள வரலாற்றை அங்குள்ள வரலாற்றோடு பொருத்தி எழுதும் வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் எத்தனைப் பெயர்? இத்தனை ஏன்? இக்கால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றியவராக இங்குள்ளவர்கள் பீற்றிக்கொள்ளும் பாரதியாரை அங்கிருக்கும் எத்தனைப் பெயர்கள் மதித்துப் போற்றுகின்றனர்? எந்தத் துறையிலும் அங்கிருக்கும் தமிழர்களில் ஒருவராகிலும், அல்லது இங்கு நடைபெறும் ஒரு செயலாவது அங்குள்ளவர்களால் மதிக்கப் பெறுவதற்காக எவராகிலும் தெளிவுபட எடுத்துக் காட்ட முடியுமா? காமராசர் ஒருவரைக் காட்டி- அதுவும் அவர் அடிமைத்தனம் தங்களுக்கெல்லாம் ஒரு பெரிய துணையாக இருக்கின்ற காரணத்தை மனத்திற்கொண்டு- வடநாட்டினர் எத்துணை விழிப்பாகத் தங்கள் நலங்களையும், இனங்களையும், மொழியினையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இங்குள்ள அடிமைத் தமிழர்கள் உய்த்துணர்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். மொத்தத்தில் இந்தியாவில் 96.3 இலக்கம் மக்களுக்கே தெரிந்த மொழி, இங்குள்ள 44 கோடிப் பேர்களின் வாயிலும் நுழையத்தான் வேண்டும் என்றும் அவர்கள் இட்ட ஆணை ஒன்றே அமைத்துக் கொண்ட சட்டம் ஒன்றே தென்னாட்டவர்களுக்கு வடநாட்டவர்கள் என்றென்றைக்கும் தீங்கே என்பதைப் தெளிவாகப் புலப்படுத்துகிறதல்லவா?

இந்த நிலையில் இங்குள்ள தந்நலக்காரர் ஒரு சிலரின் நல்வாழ்வுக்காக, ஒருசிலர் பெறும் பட்டம் பதவிகளுக்காக இங்கிருக்கும் நான்கு கோடித் தமிழரும் (இக்கணக்கும் பிழையே, இதுவும் அவர்கள் கணித்ததே.) தம் வாழ்வு நலன்களையும், மொழி நலன்களையும் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டு மென்பது எத்துணை மடமையும், ஏமாளித் தன்மையுமாகும். இச்சூழ்நிலைகள் எல்லாம் மாற வேண்டுமானால் இங்குள்ள ஒருசிலர் பதவியினின்றிறங்கி, வேறு சிலர் அரசியல் அதிகாரம் பெற்றுவிடுவது மட்டும் போதாது. தமிழக அரசியல் அதிகாரத்தை எந்த ஓர் எதிர்க் கட்சி கைப்பற்றினாலும் நிலைமை இதுவாகத்தான் இருக்க முடியும். வேண்டும் பொழுது அரசியல் அதிகாரத்தையோ, சட்ட அமைப்புகளையோ உடனுக்குடன் மாற்றிக்கொள்ள முடியுமாறு, பாராளுமன்றப் பெரும்பான்மை பெற வடநாட்டினரின் ஆட்சியமைப்பை, தனிப்பட இயங்க வல்லமையற்றதும், சட்ட வரம்புக்குட்பட்டதும், எந்த நோக்கத்திலும் விலக்கலுக்கு உட்படுவதுமான இம்மாநில ஆட்சியின் முனை முறிந்த அதிகாரம் இங்குள்ளவர்களின் நன்மைக்கும். தன்மானக்காப்பிற்கும் என்றும் பக்கத் துணையாக இருந்துவிட முடியாது என்பது அரசியல் நுணுக்கமறிந்தவர்களுக்குத் தெளிவான உண்மையாகும்.

மாநில அரசாட்சி மாற்றம் மட்டும் மாநில உரிமைக்காப்பிற்கு துணையாக அமைந்துவிட முடியாது என்ற நிலை சட்ட அடிப்படையில் ஆணியறைந்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது, நாம் ஏன் இன்னும் அரசியல் நாடக அரங்கில் நடக்கும் வெறும் உப்புச்சப் பற்ற நடிப்புகளிலேயே மயங்கிக் கிடக்க வேண்டும்? எல்லாற்றானும் வட நாட்டுப்பிடிப்புகளிலிருந்து தமிழகம் தன்னை விடுவித்துக் கொள்ளமுயலுவதே அறிவுடைமையும், சரியானதும், காலத்தால் செய்யப்பட வேண்டிய செயலும் ஆகும் என்பதை இங்குள்ள தமிழர் ஒவ்வொவரும் உணர வேண்டும். நம் நிலைகளை நாமே வரையறுத்துக் கொள்ளும் உரிமையை நாம் பெற்றாலன்றி நாம் நினைக்கின்ற எந்தத் திருத்தத்தையும் அரசியலிலோ, பொருளியலிலோ குமுகவியலிலோ செய்து விட முடியாது. சிறு வினைகட்கும் மக்கள் ஆற்றலைத் திரட்டுவதும், அதனைக் கொண்டு வடவரை மிரட்டுவதும். அவர்கள் காவலர்களையும் பட்டாளப் படைகளையும் வைத்துக்கொண்டு வெருட்டுவதும், அதற்காகப் பலகோடி உருபாக்களைச் செலவிடுவதும் இந்நாட்டிற்கும் மக்களுக்கும் துளியும் நன்மை பயவா. இருக்க இருக்க மனச் சோர்வும் வாழ்வு அயர்ச்சியும் இவற்றால் ஏற்படுமேயன்றி, வெளி நாட்டினர் ஒரு சிலரைப் போல் ஒப்பற்ற உரிமை வாழ்வையும். அச்சமற்ற அரசியல் நடைமுறைகளையும் அமைத்துக்கொள்ளவே முடியாது. கால் கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தலைக் குடுமியை மட்டும் பிறருடைய கைகளில் நாம் தந்து கொள்ளுவது எவ்வாற்றானும் விடுதலை ஆகிவிடாது. எந்த நலத்தைக் கருதி நாம் அவ்வாறு நம்முடைய குடுமிகளைத் தந்துகொண்டாலும் அது நம்மின் அறியாமையையே காட்டும்; நமக்குத் தாழ்வு வழியையே காட்டும்!

"துறக்க(சொர்க்க)மே என் சிறையாக அமைந்தாலும், நான் அதைத் தாண்டிக் குதித்து விடுதலை பெறவே விரும்புவேன்' என்று கூறும் விடுதலை எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் இப்படிக் கூறுவதால் இந்தியாவின் அரசியல் நலத்திந்கு எந்தவகையிலும் ஊறு நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது. இந்தியாவைப் பல சுற்றுச் சுவர்களால் குறும் பிரிவுகளாகப் பிரித்துவிட வேண்டும் என்பது நம் எண்ணமன்று. ஒவ்வொரு மாநிலமும் தனியாட்சி பெற்று இந்தியக் கூட்டரசாக இயங்கவேண்டும் என்பதே நம் கொள்கை. ஒவ்வொரு மாநிலத்தின் நன்மை தீமைகளும் அவ்வம் மாநில ஆட்சியமைப்பைப் பொறுத்தே அமையவேண்டும். மொழிவழியாகப் பிரிக்கப்பெற்றுத் தன்னாட்சியுரிமைபெய்திய கூட்டுக் குடியரசில் வேற்றுமைகளுக்கே துளியும் இடமில்லை. ஒவ்வொரு நாட்டுப் படைகளும் சேர்ந்து உலக ஒன்றிப்பு அவையின் நடுநிலைப் படைகளை அமைத்தல் போல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் படைகளும் சேர்ந்து சம தொகையினதாக ஒருபெரும் இந்தியப் படையினை ஏற்படுத்தி அதன் புறக்காப்பை வலுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதுவன்றி அவ்வம்மாநிலங்களில் நிகழும் எல்லா வகையான அரசியல், பொருளியல், குமுகாயவியல் மாறுபாடுகளும் அவ்வம்மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டனவாகவே அமைதல் வேண்டும்

தமிழகத்தில் ஓடும் தொடர்வண்டி அஞ்சல் இயக்கம், கல்வியமைப்பு, தொழில் விளைவு முதலியன யாவும் தமிழக அரசையே சார்தல் வேண்டும். தேவையானால் ஒரு மாநிலத்தின் மிகையான விளைவு மற்ற மாநிலத்தின் குறைவான விளைவைச் சரிகட்டுவதற்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து கொள்ளல் வேண்டும். இங்கு நடைபெறும் எந்த ஒரு செயலுக்கும் திருத்தத்திற்கும். இங்கு அமைக்கப்பெறும் அரசையே முழுப்பொறுப்பாக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசு தனக்கு மேலுள்ள அதிகாரத்தைக் காட்டித் தப்பித்துகொள்ளல் இயலாது. இம்முறையால் ஒரு மாநிலத்தின் ஆக்கமும் கேடும் ஆங்குள்ள மக்களின் அறிவையும், சுறுசுறுப்பையும், உழைப்பையும் பொறுத்தனவாகவின், எல்லா மாநிலத்தவரும் பொறுப்புணர்ந்து எல்லாத்துறைகளிலும் மெய்யாக ஈடுபடுகின்ற ஒரு போட்டித் தன்மையை உண்டாக்கிக் கொண்டு முன்னேற வாய்ப்பிருக்கும். ஒரு மாநிலத்தவர் அண்டை அயல் மாநிலத்திற்குச் செல்லுவதும் அங்குள்ள நடைமுறைகளில் ஈடுபடுவதும் இருமாநிலத்தவரின் விருப்பத்தையும் இசைவையும் பொறுத்தனவாக அமைய வேண்டும். இவையன்றி இன்னும் பல விரிந்த அமைப்புகளையும் ஒழுங்குபட இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்கு ஊறு விளையாவண்ணம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உலகம் இக்கால் மெச்சிப் பேசும் குடியரசு முறை எல்லா வகையிலும் இப்பொழுதுள்ளபடியே இருந்துவிட வேண்டும் என்பது உலக அறிஞர்களின் கருத்தன்று. முடியரசு முறையில் எப்படிப் பல தீமைகளும் இயலாமைகளும் இருந்தனவோ அவ்வாறே குடியரசிலும் தீமைகளும் இயலாமைகளும் இருக்கவே செய்கின்றன என்பதே அவர்தம் கருத்தாகும். எனவே இப்பொழுதுள்ள முறையை இப்படியே வைத்துக் கொள்ளுவது தான் சிறந்த தென்று கூற முடியாது. அதிலும் காலப் போக்கில் பல திருத்தங்களைச் செய்தே ஆக வேண்டும். அதன் முடிவு நாம் கூறிய மொழியுரிமைத் தன்னாட்சிக்குத்தான் வித்தாகும். என்பதை எவரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு நாம் வலிந்து கொண்டு செல்லப்படுமுன் நாமே அச்சூழலைத் திருத்தமான முறையில் வரவேற்றுக் கொள்ளுவது தாழ்வோ பிழையோ ஆகிவிடாது. எனவே தமிழக விடுதலை தேவையான இன்றியமையாத ஒன்று! பிற மாநிலங்களும் தன்னாட்சி பெற வேண்டும் என்பது நம் எண்ணம். இதுபற்றிப் பிறிதொருகால் இன்னும் விளங்கப் பேசுவோம்.

- தென்மொழி, சுவடி : 4 ஓலை 5, 1966