வேண்டும் விடுதலை/தமிழ்நாட்டை முழு இறைமையுடைய தனிநாடாகப் பிரித்து தமிழரே ஆளுமை செய்வது

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழ்நாட்டை முழு இறைமையுடைய
தனிநாடாகப் பிரித்துத்
தமிழரே ஆளுமை செய்வது

— என தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு
உறுதியாகவும் இறுதியாகவும் தீர்மானிக்கிறது !


டந்த திசம்பர் 27, 28-இல், சென்னை மாநகரில், பெரியார் திடலில், நாம் அனைவரும் மிக்க ஆர்வத்துடனும், அழிக்கவொண்ணாத் தேவையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு இறுதியில் நடந்தே முடிந்தது.

காலம் இக் கருத்துக்கு இயைபாக இருக்கவில்லையானாலும், காவல்துறை கட்டவிழ்த்து விடப் பெற்றுக் கையில் பை வைத்துக் கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களெல்லாம், தடுத்து நிறுத்தப் பெற்று, ஆய்வு செய்யப்பெற்று, உசாவலுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்னும் அஞ்சத்தகுந்த நடுநடுக்கும் அரசியல் சூழலிலும், தமிழுக்கு ஆதரவாகவும் இந்திக்கு எதிராகவும் குரல் கொடுத்த தமிழின வீரர்கள் இருபத்தையாயிரவர்க்கு மேல் கடுஞ்சிறை புகுந்த நேரத்திலும் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு யார் வரப் போகிறார்கள் என்று எண்ணியிருந்த வேளையிலும், நூற்றுக்கணக்கான வீரத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் முதலிய அனைவரும் கருத்தரங்கில் மிகத் துணிவுடன் கலந்துகொண்டனர்! ஒப்போலை இட்டனர். தனித்தமிழ்நாடுதான் தேவை என்று உறுதியான கொள்கையைத் தேர்ந்தனர்.

அடடா! எத்துணை ஆர்வம் அவர்கள் முகத்தில் குமிழிட்டது! எத்துணை வீரம் அவர்கள் பேச்சில் கொப்பளித்தது! எத்துணை உறுதி அவர்கள் குரலில் கனன்று நின்றது! காட்சி! காட்சி! கண்கொள்ளாக் காட்சி!

இறுதியாக, இரண்டாம் நாள் முடிவில், ஒப்போலைக் கருத்தெடுப்பு மிக மிக அமைதியாக, மிக மிக நேர்மையாகப் பொறுப்புணர்வுடன் நடைபெற்றது. அதன் முடிவோ அனைவரும் வியக்கும்படி அமைந்திருந்தது. வியப்பு! வியப்பு! வாய்மேல் விரல் வைக்கும் வழிந்தோடும் வியப்பு!

முடிவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பெற்றது. தேர்தலில் கலந்துகொண்டவர்கள் : 241. இவர்களுள் இந்தியத் தேசியத்திற்காக ஒப்போலையிட்டவர் ஏழு பேர்; மாநிலத் தன்னாட்சியை விரும்பி ஒப்போலை இட்டவர் இருபத்து மூவர்! தனித்தமிழ்நாட்டுக் கொள்கையே, எதிர்காலத் தமிழின முன்னேற்றத்திற்கு ஏற்றந் தருவது என்று உறுதியாகவும் இறுதியாகவும் ஒப்பம் அளித்தவர், இருநூற்று எட்டு பேர்! இது மொத்தத்தில் 87 விழுக்காடு!

இந்தியத் தேசியத்தை விரும்பும் 2.7 விழுக்காடு எங்கே! மாநிலத் தன்னாட்சியை விழையும் 9.6 விழுக்காடு எங்கே ! தனித்தமிழ்நாட்டை வேட்கும் 87 விழுக்காடு எங்கே!

எத்துணைப் பொருத்தமான தீர்ப்பு!

தமிழக மக்கள் அனைவருமே வந்து கொடுத்த தீர்ப்போலையாக அம்முடிவு பெரும் வெற்றி முழக்கத்துடன், பெரியார் அரங்கமே எதிரொலிக்குமாறு உரக்க வாழ்த்தி வரவேற்கப் பெற்றது. அதைக் கேட்ட அனைவரும் தமிழகமே தனியாட்சி எய்தியது போன்று பூரிப்பெய்தினர், அங்கு வந்திருந்தோர்! தமிழகத்திலுள்ள - அங்கு வர வாய்ப்புக் கிடைக்காத தமிழரும் - பிற வெளிநாட்டுத் தமிழரும் அவ்வெற்றி முழக்கத்துடன் தங்கள் வாழ்த்தொலியையும் கலந்து ஒலிப்பார்களாக!

வெல்க தமிழின முன்னேற்றக் கழக முயற்சிகள்!

வாழ்க தனித்தமிழகப் போராட்டம்!

விரைந்து சமைப்போம் தனித்தமிழ்நாடு!

— தமிழ்நிலம், இதழ் எண். 78, சனவரி 1987