உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை
எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!


ண்மையில் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு மூன்று குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளை யடுத்து, நடுவணரசுப் புலனாய்வுத் துறையினர்(C.B.I.), தென்மொழி யன்பர்களையும் உ.த.மு.க. அன்பர்களையும் பலவகையிலும் ஆங்காங்கே கடுமையாக அணுகி உசாவி வருவதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. தலைமையகங்களிலும் அவ் வுசாவல்கள் நடந்து வருகின்றன.

பொதுவாக நடுவணரசுக்கு - குறிப்பாக இராசீவுக்குத் தாங்கள் செய்யும் குற்றங்கள் என்னென்ன என்பது பற்றியோ, அவற்றைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றியோ, அதனால் மக்களிடையில் என்னென்ன எதிர்விளைவுகள் நேரும் என்பது பற்றியோ சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. அதைப்பற்றி யார் என்ன கருதினாலும் சரி, தாங்கள் செய்வதைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் முரண்டும், பொதுமக்கள் நலன் கருதாத தன்மையும், இந்திரா காலத்தை விட, இராசீவ் காலத்தில் அரசுக்கு மிகுதியாகவே உண்டு. இந்த அகங்கார - ஆணவ எண்ணமே இராசீவ் அரசுக்கு வெடிகுண்டாக அமைந்துவிடக்கூடியது. வேறு வெடிகுண்டுகள் தேவையே இல்லை.

மக்கள் தங்களுடைய இழுப்புகளுக்கெல்லாம் அல்லது கட்டுப்பாட்டுக்கெல்லாம் அடங்கி நடக்கவேண்டுமே அல்லாமல், தாங்கள் மக்கள் விரும்பும் அல்லது அவர்களுக்கு நலந்தரும் போக்குக்கு ஆளாகி விடக் கூடாதே என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கிறது என்பதைக் கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் உறுதி செய்துள்ளன. இத்தகைய எதிர்விளைவு நிகழ்ச்சிகள் இங்கு அங்கு என்னாதபடி இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இன மக்களிடம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே நடந்து வருவது எல்லாருக்கும் தெரியும். இது ஏதோ திடுமெனக் கிளம்பி விட்டதாக யாரும் கூறிவிட முடியாது.

ஆட்சி அதிகாரக்காரர்களின் வன்முறைப் போக்கும் மிகத் திமிரான நடவடிக்கைகளும், மக்களிடையே கொந்தளிப்பையும் மனக்கொதிப்பையும் ஏற்படுத்துவது உலகெங்கணும் நடந்துவரும் செய்தியே! அவற்றுக்கான எதிர்விளைவு அடையாளங்களே அண்மையில் நடந்த குண்டு வெடிப்புகளும், பிற வன்முறை நிகழ்ச்சிகளும், இவற்றைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருத்தல் கூடும். ஏனெனில், நடுவண் அரசை எதிர்க்கின்ற அரசியல் முது தலைவர்களெல்லாம் தமிழகத்தைப் பொறுத்த வரையில், நன்கு காயடிக்கப் பெற்ற - ஆண்மையற்ற - கோழைகளாகவே இருப்பதை நாம் பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளில் உள்ள இரண்டு மூன்று துணிவுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, பிற அனைத்துப் பேரும், நடுவணரசு எது செய்தாலும் என்ன பேசினாலும் அவற்றுக்கு எதிராக வலிக்காமல் பேசும் - நோகாமல் அடிக்கும் தந்திரக்காரர்களாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடுவணரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகளையெல்லாம் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவர்களாக, இங்குள்ள இளைஞர்கள் மாறிவருவதில் வியப்பில்லை. கருத்தளவில் போராடிப் போராடிக் கோரிக்கையளவில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி நடத்தித் தீர்மானங்கள் போட்டுப் போட்டு, இனி அவற்றினும் விஞ்சிய வகையில் பேரணிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தி நடத்திச் சோர்வுற்ற – சலித்துப் போன, குருதி கொப்புளிக்கும், இளம் உள்ளங்களே, இப்பொழுது கருவிகளைத் தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களின் போக்குகளைத் தவறு என்று கூறுவதற்கு முற்பட்டவர்கள், அரசின் போக்குகளையும் கண்டிக்கத் தெரிந்தவர்களாக அல்லது கண்டிக்கத் துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இளைஞர்களின் எழுச்சிகளை மட்டும் கண்டிப்பதும், அவற்றுக்கு மூல காரணமாக உள்ள அரசின் அரம்பத்தனமான, கொள்ளையடிப்புத் தன்மையிலமைந்த நடைமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் எந்த வகையில் ஞாயமானது என்று கேட்க விரும்புகிறோம்.

இனி, இவை எப்படியோ இருக்கட்டும். இளைஞர்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள் என்பதற்காக, இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – ஒடுக்க வேண்டும் என்னும் அரசின் தவறான கொள்கைக்காக, இந்தப் பழியை யார்மேல் போடலாம் என்றபடி நம் தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசுக் காவல்துறை மேல்மட்ட அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாகப் பலவிடங்களிலும் பல வகையிலும் ஆய்வு செய்து அலையோ, அலையென்று அலைந்து, அங்கும் இங்கும் சுற்றி, இறுதியில் நம் தென்மொழி அலுவலகத்திற்கும் அச்சகத்திற்கும் வந்து, ஒருவாறு நிறைவு கொண்டு, நம்மைப் பற்றியும், நம் தென்மொழி அன்பர்களைப் பற்றியும், உ.த.மு.க. தொண்டர்களைப் பற்றியும், தென்மொழி, தமிழ்நிலம் விற்பனை செய்யும் முகவர்களைப் பற்றியும், பலவாறு நம்மிடம் வினாக்கள் எழுப்பியும், அவர்களிடம் சென்று உசாவியும், பல்வேறு வகையான நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் செய்து வருகிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், ஒருவன், எத்துணைக் கொடியவனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் திருடனாகவும் இருந்தாலும், ஒரு மதத்தைச் சார்ந்த செயல்களைச் செய்வானானால், அவன் எத்துணை நல்லவனாகவும், அறக்காப்பாளனாகவும், நேர்மையாளனாகவும், மக்களால் மதிக்கப்பட்டு, குமுகாயத்தில், ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று விடுகிறானோ, அதேபோல, ஓர் அறக் கொடியவன், சுரண்டல்காரன், முடிச்சுமாறி, கொள்கைக்காரன் அல்லது கொலைகாரன் கொஞ்சம் பசையுள்ளவனாக விருந்து, ஆளுங்கட்சியைச் சார்ந்து இயங்கிவிட்டால், அவனுக்குக் காவல் துறையினராலோ, அல்லது அறத்துறையினராலோ எந்தவகைத் தொல்லையோ இடர்ப்பாடோ அல்லது தண்டனையோ ஏற்படுவதில்லை; மாறாக அவர்கள் சார்பிலிருந்து பாதுகாப்போ, பாராட்டோ, பட்டங்களோ, வெகுமதிகளோ கிடைத்து விடுகின்றன. இன்னும் பொதுமக்களிடமிருந்தும் அளவற்ற மதிப்பும் பெருமையும் வேறு ஏற்பட்டுவிடுகின்றன.

ஆனால், நம்போல், மக்கள் நலம் கருதித் தூய தொண்டிலோ, நேர்மையான நடவடிக்கைகளிலோ உண்மையான போக்கிலோ, ஆனால் அரசைச் சாராமல் வேறு எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், இயங்கும் ஒருவர்க்கு, இத்தகைய காவல்துறைக் கடுபிடிகளும், நெருக்கங்களும், உசாவல்களும், மிரட்டல் உருட்டல்களும் தாம் பரிசுகளாகக் கிடைக்கின்றன.

இருப்பினும் இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், மனம் சோர்வுறாமல், செயல் நெகிழ்ச்சி கொள்ளாமல் நாம் பாடாற்றியாக வேண்டும்; தொண்டு செய்தாக வேண்டும். ஏனெனில் இது நாமே விரும்பி ஏற்றுக்கொண்ட தூய பணி; மக்கள் தொண்டு; காலத்தால் கட்டாயப்படுத்தப் பெற்ற தேவையான கடமை!

இந்தத் தூய மக்கள் தொண்டு, தமிழின முன்னேற்றமும் இன, நாட்டு விடுதலை நோக்கமும் உயிராகக் கொண்ட பணியானாலும், இன்றைய பார்ப்பனிய முதலாளிய நடுவணரசுக்கு நேர் எதிரானது! அதன் கரவான அரசியல் அடிமைத்தனத்திற்குத் துளியும் அடி பணியாதது. இங்குள்ள பிற ஒப்போலை - பதவி நாட்டம் கொண்ட கட்சிகளைப் போல் அல்லாமல், அரசை நேரடியாக எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்னும் இனமான, உரமான கொள்கையை உடையது, இதன் வலிமை நாளுக்கு நாள் வளர்ந்து வருவது. எனவே, இதை எவ்வாறாயினும் ஒடுக்கிவிட வேண்டும் என்று இராசீவ் அரச நினைப்பதில் வியப்பில்லை. அதற்காக, ஒரு கால கட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதற்கு நல்ல சூழலாக அண்மையில் தமிழகத்தில் சில குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் நடந்ததை அடிப்படையாகக் கொண்டு, அதற்குப் பின்னணியாக நாமும் நம்மைச் சார்ந்த தொண்டர்களும் இருக்கவேண்டும் என்று கருதி, நம்மைக் கடந்த பதினைந்து இருபது நாள்களாகக் கடுமையான உசாவல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், நடுவண் ஒற்றுத் துறையைக் கொண்டு, ஆளாக்கி வருவதாக நாம் கருதவேண்டி உள்ளது

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாம் நம்மை அணியப்படுத்திக் கொண்டவர்களே என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே நாம் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. மாறாக, நாம் நம் கொள்கையில் இன்னும் வலிவுடையவர்களாகவே இயங்கப் போகிறோம் என்பது நம் வரலாறு போன்ற உண்மையும் உறுதியும் வாய்ந்ததாகும்!

இறுதியாக இராசீவ் அரசுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். தமிழ்மொழியும், தமிழ் இனமும், தமிழ்நாடும் தில்லியின் அரசியல் வல்லாண்மையிலிருந்து விடுபடும் வரை நம் நேர்மையான போராட்டம் ஓயப் போவதில்லை என்பதை இன்றிருந்து நாளை அழியப் போகும் இராசீவும் அவரின் அடிவருடித் தமிழர்களும் ஆட்சி அதிகாரக் கும்பல்களும் தெளிவாக உணர்ந்து கொள்வார்களாக.

வெல்க மக்கள் போராட்டம்! விளைக மக்கள் விடுதலைப் புரட்சி!

— தமிழ்நிலம், இதழ் எண். 104, மே, 1988