வேண்டும் விடுதலை/தமிழை விரும்புங்கள்! தமிழரை நேசியுங்கள்! தமிழ்நாட்டுப் பற்றுக் கொள்ளுங்கள்!

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழை விரும்புங்கள்! தமிழரை நேசியுங்கள்!
தமிழ்நாட்டுப்பற்றுக் கொள்ளுங்கள்!


ம் அரும் பெறல் தாய் மொழியாம் தமிழ் மொழி உலக மொழிகளிலெல்லாம் இனியது; எழில் மிக்கது; மிகப் பழைமையானது; முதன்மையானது; மூத்தது; தாய் போன்றது; இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது; உயிரோட்டமுள்ளது; உணர்வு சான்றது; அறிவு நிரம்பியது; மெய்யறிவு கால் கொண்டது; பண்பாடு மிகுந்தது; பயனுடையது; அறிவியல் மூலங்கள் கொண்டது; அழியாது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் தகைமை சான்றது, இவ்வாறு இன்னும் இதன் சிறப்பியல்புகளை மேன்மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இன்று இத்தன்மைகளெல்லாம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. உண்மையான தமிழ்த் தேசியத் தன்மைகளை, பொய்யான இந்தியத் தேசியக் கற்பனைக் கருத்துகளாலும், தேசிய ஒருமைப்பாடு என்னும் நடைபெறாத செயற்கை உணர்வாலும் மூடி மறைத்து அழிக்கப்பார்க்கின்றது தில்லியரசு. இதற்கு நம்மவர்களும் துணை போகிறார்க்ள்.

நம் தாய்மொழி உணர்வைத் தவறு என்கிறார்கள். தாய் மொழியாகிய தமிழ்ப்பற்று என்றாலே முகஞ்சுழிக்கிறார்கள். தாய் மொழியில் பேசுவதையே வெறி என்கின்றனர்! இன்னும் தூய தமிழில் பேசுவதை எழுதுவதை 'வன்முறை' என்பது போல் வெறுத்து இகழ்கின்றனர். இதை எங்கே போய்ச் சொல்லி முறையிடுவது? எந்த வழக்கு மன்றத்தில் எடுத்துக் கூறி ஞாயம் கேட்பது?

அவரவர் தாய் மொழியில் பேசுவது தவறா? அவரவர் தாய் மொழியைப் பேணுவது குற்றமா? இந்தியத் தேசியம் என்னும் முரண்பாடான கொள்கைக்காக இந்தி மொழியில் பேசுவதுதான். சரியா? இந்தி மொழி வளர்ச்சிக்காகப் பல்லாயிரங் கோடி உருபாவை நம் வரிப் பணத்தில் செலவிடுவதா? தாய் பசித்திருக்க, நம் பிள்ளை பாலுக்கு ஏங்க வேற்றுத் தாய்க்கு விருந்து வைப்பதா? வேறு பிள்ளைக்குப் பாற் சோறு ஊட்டுவதா? எங்கு அடுக்கும் இக்கொடுமை? யாருக்கு நிறைவு தரும் இம் மாற்றாந்தாய் மனப்பான்மை?

எனவே, எத்துணைத் துயர் அடுக்கடுக்காக வந்தாலும் நம் தாய்மொழியான தமிழை நாம் வளர்த்தே ஆக வேண்டும். அது தான் நமது கடமை. தாய்மொழி வழியாகத்தான் நாம் கல்வி கற்றாக வேண்டும். அதன் வழியாக நாம் அறிவு பெறுவதுதான் நமக்கு ஏற்றது; இயல்வது. என்ன மொழியாயினும் நமக்குப் பிறர்மொழி பிறமொழிதான். ஆகவே நம் தாய் மொழியை நாம் விரும்ப வேண்டும்; விரும்பிப் படிக்க வேண்டும். அதைக் கண்ணும் கருத்துமாக நாம் பேணிக் காக்க வேண்டும். அதுவே நமக்கு வாழ்வியலைக் கற்பிக்கும்மொழி; அறிவை, அறிவியலைக் கற்பிக்கும் மொழி. அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில வகையில் அது வளர்ச்சி குன்றியிருக்கலாம். அவ்வவ்வகை யிலெல்லாம் அதை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் இலக்கிய வளமையைப் போலவே, வாழ்வியல் சிறப்பைப் போலவே, இஃது அறிவியல் வளம் பெற்றதாகவும் வேண்டும். பல்வேறு அறிவியல் கூறுகளை யெல்லாம் நம் மொழியில் வளர்த்தெடுக்க வேண்டும்.இதற்கு நம் அரு முயற்சி. வேண்டும். பெரிதும் உழைக்க வேண்டும்.

நம்மிடையே வேறு பல மொழி பேசுபவர்கள் இருக்கலாம். அவர்களுள் தெலுங்கு பேசுபவர் இருக்கலாம்; கன்னடம் பேசுபவர் இருக்கலாம்; மலையாள மொழி பேசுபவர் இருக்கலாம். அவர்களெல்லாரும் நம் தாய் நாட்டில் வாழலாம். அவர்களும் நம் தாய்மொழியாகிய தமிழைத் தங்கள் தாய்மொழிகளுடன் படிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. பார்க்கப் போனால் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்மொழி போன்றதுதான், தமிழ் மொழியிலிருந்தே அவர்களின் தாய்மொழியாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், முதலிய திராவிட மொழிகள் தோன்றின. தமிழில்லாமல் அம் மொழிகள் இயங்க முடியாது. எனவே, அவர்களுக்குத் தமிழ் தாய்மொழியே! இன்னும் சொன்னால், அவர்களுக்கு அம் மொழிகள் தாய் மொழிகளானால் நம் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்க்குத் தாயான மொழியே! அஃதாவது பாட்டி மொழியே! தமிழை அவர்கள் வெறுப்பது தேவையில்லை தாய்க்குத் தாயான தமிழ்மொழியில்லாமல் அம்மொழிகள். உயிர் வாழ முடியாது. எனவே அவர்களுக்கும் நம் தமிழ் மொழியைப் படிக்கும் கடமையுண்டு உரிமை உண்டு. அவர்களும் இம் மொழியை விரும்பிப் படிப்பிதில் தவறில்லை; கேடில்லை; இழுக்கு ஒன்றும் இல்லை.

இனி, தாய்மொழிக்கு அடுத்தபடி நம் தமிழினம் மேலானது ஆகும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நம் தமிழினத்தை நேசிக்க. விரும்ப உறவு கொண்டாட வேண்டும். தமிழினத்தவர்கள் அனைவரும் நம் உடன் பிறப்புகளே! உறவானவர்களே! அவர்கள், சாதி நிலையில் மத நிலையில் வேறு வேறானர்கள் ஆகலாம். அவர்கள் முதலியார்கள், செட்டியார்கள் வேளாளர்கள், கவண்டர்கள், பிள்ளைமார்கள், படையாட்சிகள் என்று வேறு வேறாகப் பிரிந்து காணப்படலாம். இன்னும் அவர்களுள் தாழ்ந்த சாதியினராகப் பள்ளர்கள், பறையர்கள் சாணார் என்று கீழ்ச் சாதியிராக மதிக்கப் பெறலாம். ஆனால் அவர்கள் எல்லாரும் தமிழ் மொழியைத் தாய், மொழியாகக் கொண்ட தமிழரே! அவர்கள் அனைவரும் ஓரினத்தவரே! அவர்களுக்குள் சாதிப் பாகுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஏற்றத் தாழ்வில்லாத தமிழர்களே! அவர்கள் இன்று நேற்றன்று; கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக இத் தமிழ் நிலத்திலேயே! வாழ்ந்து வருபவர்களே! தொடக்கத்தில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருந்ததில்லை. இடைக்காலத்திலேயே அவர்கள் செய்யும் தொழில்களால் வேறுபட்டுப் போனார்கள். பல வேறு சாதிகளாகப் பிரிந்து போனார்கள். பிளவுபட்டுப் போனார்கள். அதனால் அவர்களுக்குள் வேற்றுமை தலையெடுத்தது; வேறுபாடுகள் தோன்றின; பகைகள் கால் கொண்டன; ஏற்றத் தாழ்வுகள் இடம் பிடித்தன. தொடர்புகள் அறுந்தன; உறவுகள் முறிந்தன. உண்மைகள் மறைந்தன. எனவே அவர்கள் நிலையாக வேறுபட்டனர். வேறுபட்டது மல்லாமல், ஒருவருக்கொருவர் பகைகொண்டு, ஒருவரையொருவர் அழித்தொழிக்கவும் முற்பட்டு விடுகின்றனர். எனவே தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது; இழிந்து வருகிறது; ஒற்றுமையுணர்வுகள் குறைந்து, வேற்றுமை யுணர்வுகள் மிகுந்து, சீர்குலைந்து சிறப்பிழந்து வருகின்றது.

இந்த நிலைகளின் உண்மையுணர்ந்து தெளிந்தவர்களே தமிழினத்தை ஒன்று படுத்தத் துணிகின்றனர். இதன் வேற்றுமைப் பாடுகளை அகற்ற முயற்சி செய்கின்றனர். எப்படியாயினும் இவ்வினத்தில் வேரோடிக் கிடக்கும் சாதி வெறிகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்ற அரும்பாடு படுகின்றனர். இருப்பினும் இம் முயற்சி ஒரு சாண் ஏறினால் ஒரு முழம் சறுக்குவதாகவே உள்ளது. இவ்வாறு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே இச் சீர்திருத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பயனோ மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் தமிழின முன்னேற்றத்தை விரும்பாதவர்களும் எதிர்ப்பவர்களும் முறியடிப்பவர்களுமான இதன் எதிரிகளின் வலிவு மிகுந்து வருவதே ஆகும்.

தமிழினம் முன்னேறிவிட்டால் எங்கு தன்னினம் பின்னிறக்கம் அடைந்து விடுமோ என்று அஞ்சியும் அலமருண்டும். அதன் எதிரி இனம் இதனைப் பலவகையிலும் ஒற்றுமைப்படாமல் தடுத்து வருகிறது. அத்துடன் மேலும் அதன் உட்பிளவுகளையும் பகைமைகளையும், வேறுபாடுகளையும் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது. பல வகையான சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அதன் பொருட்டு மேற்கொள்ளுகிறது. சாதியுணர்வுகளைப் பல நோக்கங்களுக்காகத் தூண்டி விட்டும், தம் மூடநம்பிக்கைகளைப் பலவகையிலும் வேரூன்றச் செய்தும், தமிழ் மக்களுக்குள் உடன்பாட்டுச் சிந்தனையையும், உரிமை உணர்வையும் அழித்து வருகிறது; தமிழின இளைஞர்களிடம் பொழுது போக்கு, போலி விளையாட்டு உணர்ச்சிகளை வேரூன்றச் செய்தும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பரப்பியும், அவர்களிடம் கால் கொள்ள வேண்டிய மொழி, நல, இனநல, நாட்டு உரிமை நல்லுணர்வுகளை முளையிலேயே கிள்ளி வருகிறது.

ஆனால் நம் இளைஞர்கள் இவைபற்றிய உண்மை நிலைகளை நன்கு உணர்ந்து கொண்டு, இவ்வினம் முன்னேறுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் செய்து, எப்படியாகிலும் தமிழின நலம் காக்கவேண்டும். அதற்கு இப்பொழுதிருந்தே நம் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் உள்ளத்தில் ஓர் உறுதி- சூளுரைஎடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நம் இன மக்களின் மேல் அன்பு பொழிதல் வேண்டும் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இவ்வினத்தில் உள்ள சாதி வேற்றுமைகளைக் களைந்தெடுப்பதாய் உறுதி பூணுதல் வேண்டும் ; இந்நிலைக்கு முதலில் தங்களிடம் உள்ள சாதியுணர்வைக் களைந்து நீக்குதல் வேண்டும். சாதியற்ற சமனிலைக் குமுகாய உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறெல்லாம் பெரும்பாலார் முயன்றுதான் இவ்வினத் தாழ்ச்சியை நீக்கப் பாடுபடுதல் வேண்டும்.

இனி, அடுத்தபடி, நம்நாட்டின் பற்றை மேலும் மிகுவித்துக் கொள்ளுவது இன்றியமையாதது. நாட்டுப்பற்றுக்கு இனப்பற்று அடிப்படை, நம்முடைய மொழி, நம்முடைய இனம் என்று சொல்லுவதைப் போல் நம்முடைய நாடு என்றும் சொல்வதே இயற்கைக்குப் பொருந்திய உணர்வாகும். மொழியில்லையேல் இனமில்லை; ஓர் இனம் வாழ்கின்ற நிலப்பரப்பே நாடு. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் - தமிழினத்தவர்கள் - வாழும் நிலப்பரப்பு தமிழ்நாடு ஆகும். எனவே நம்நாடு தமிழ்நாடு என்றே உணர்தல் வேண்டும்.

இந்தியாவை நம் நாடாகக் கருத முடியாது. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா முழுவதம் தமிழர்கள் வாழும் நாடாகத்தான் இருந்தது. காலத்தால் அந்நிலை குறுகி, இப்பொழுதுள்ள நில அளவே தமிழ்நாடு எனப்படும். நிலைக்கு வந்து விட்டது. இதுவும் தமிழினத்தின் கேடுகளால் நேர்ந்த நிலைதான். எனவே இப்பொழுதுள்ள தமிழ்நாட்டை மேலும் நாம் காத்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லெனின் இதுவும் குறுகிப் போய் ஒன்றுமிலாமல் ஆகித் தமிழினம் நாடற்ற நாடோடி இனமாக ஆகிவிடும். எனவே தான் நாம் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டு, இந்நிலப்பரப்பைக் கட்டிக் காக்க வேண்டும்.

இப்பொழுதைய நிலையில் தமிழ்நாடு, தில்லி ஆட்சிக்கு அடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. இன்னும் சொன்னால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இந்தியா குடியரசு நாடு என்பதால், நாமும் உரிமை பெற்று வாழ்கிறோம் என்று சொல்வது பொருந்தாது. இனி, அவ்வாறு கூறுவது தவறுமாகும்; உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். நாம் உரிமை பெற்றதாகக் கூறமுடியாது: உரிமை பெற்றிருப்பது உண்மை என்றால், நாம் நம் தாய்மொழியில் கல்வி கற்கவும், கற்றவுடன் அரசுப்பணி செய்யவும் வாய்ப்பிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறில்லை; இப்பொழுதைய நிலையில் நாம் தாய்மொழியில் கல்விகற்கவும் முடியாது; ஒரு வேளை கல்வி கற்றாலும் நாம் அரசுப்பணியில் அமரவும் முடியாது. இனி, இதற்கு மாறாக, நாம் தில்லிக்காரர்கள் பேசும் மொழியாகிய இந்தி மொழியில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுகிறோம். இந்தி மொழியில் படித்துப் பட்டம் பெற்றால் உடனே அரசுப்பணி கிடைக்கும். சம்பளமும் கூடுதலாகவே கிடைக்கும். இந்நிலை எதைக் காட்டுகிறது? நாம் தில்லியரசுக்கு அடிமை என்பதையே உறுதிப்படுத்தவில்லையா இந்த இழிவான நிலைமாறியாக வேண்டுமா? இந்நிலை மாறியாக வேண்டாமா? இதற்கு இளைஞர்கள் எதிர்காலத் தமிழ்க்குடி மக்களாகிய மாணவர்கள் ஆகியோர்தாம் ஒரு முயற்சி செய்தாக வேண்டும்; ஒரு முடிவு கண்டாக வேண்டும்; போராடியாக வேண்டும். உரிமைக்காகப் போராடாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

நமக்கு மொழியுரிமை இல்லை; இன முன்னேற்றத்திற் கென்று எதுவும் செய்ய முடியாது. தமிழ் நாட்டுக் கோயில்களில் நம் தாய் மொழியாகிய தமிழில் கூட வழிபாடு செய்ய நமக்கு உரிமையில்லாத பொழுது, வாழ்வியல் உரிமைகளுக்கு எப்படி வழி கிடைக்கும்?

இவற்றை யெல்லாம் மாணவர்கள் நன்கு எண்ணிப் பார்த்து தமிழ் மேல் விருப்பமும், தமிழினத்தின் மேல் பாசமும், தமிழ் நாட்டின் மேல் பற்றும் கொண்டு இயங்குதல் வேண்டும். அல்லாக்கால் தமிழ் நாட்டின் தமிழினத்தின், தமிழ் மொழியின் எதிர் காலம் இருண்டுவிடும். இவ்விருளைப் போக்க ஒளியேற்ற வேண்டாமா? அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்குதான் என்ன? சிந்தியுங்கள் இளைஞர்களே! சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!.

- தமிழ்ச்சிட்டு, குரல் 19, இசை, 4, 1988