வேண்டும் விடுதலை/எரிவதைத் தடுக்காமல் கொதிப்பை அடக்க முடியாது!

விக்கிமூலம் இலிருந்து

 
எரிவதைத் தடுக்காமல் கொதிப்பை
அடக்க முடியாது!


ந்தியாவின் அரசியல் நிலைமை மிகக் கொடுமையானதாக மட்டுமன்று, மிக மிகக் கீழ்மையுடையதாகவும் ஆகிவிட்டது. மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாகிலும் இரண்டு மூன்று இடங்களில் கொடிய அடக்குமுறைக்கும், கொலைகள் கொள்ளைகளுக்கும், துமுக்கி (துப்பாக்கி)ச் சூட்டிற்கும் ஆளாகுகிறார்கள். இந்திராக் கட்சியின் அடக்குமுறைகளும் ஆணவ அதிகார வெறித்தனங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. பணவலிமையும் அதிகாரமும் கைகோத்துக் கொண்டு நாட்டை அலைக்கழிக்கின்றன. ஏழை மக்கள் கேள்வி கேட்பாரற்றுக் காவல் துறையினராலும், படைத்துறையினராலும் சுட்டுப் பொசுக்கப்படுகின்றனர். எந்த வகைக் காரணமும் இன்றி ஆளுங்கட்சிக்காரர்களாக இல்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர்கள் இவ்வாறு துன்புறுத்தப் படுகிறார்கள் என்று தெரிய வருகிறது.

அரசுக்கு எதிராக அன்று, ஆளுங்கட்சிக்கு எதிராகவும், அல்லது தனிப்பட்டட முறையில் அக்கட்சியில் உள்ள யாருக்கு எதிராகவும் நடந்தாலும் கூட, அவ்வாறு நடப்பவர்கள் ‘மக்கள் பகை ஆற்றல்கள்’ (மக்கள் விரோதச் சக்திகள்) அல்லது குமுகாய எதிர்ப்பு ஆற்றல்கள் (சமூக விரோத சக்திகள்), தேசிய இனப் பகைவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள் (விஷமிகள்) என்றவாறு பட்டம் சூட்டப்பெற்று, அவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தவும் கொடுமை செய்யவும் முற்பட்டு விடுகின்றனர். இவ்வகையில் ஆட்சியாளர் கொடுமையும் பணமுதலைகள் கொள்ளையடிப்பும் அளவுக்கு மீறி விட்டன. அரசு அதிகாரிகள் எல்லாரும் தங்களின் இயல்பான சட்டமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டு, ஆளுங்கட்சியில் உள்ள ஓர் எளிய தொண்டனுக்கும் தொண்டர்களாய் இயங்கத் தொடங்கிவிட்டனர். நடுநிலையாக நடக்க வேண்டிய அறமன்றங்களும் நடுவர்களும் கூட அரசுக்கும் ஆளும் கட்சியினர்க்கும் அஞ்சிக்கொண்டு, குடியாட்சி அமைப்பு முறைகளையும் ஞாயத் துறை நேர்மைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டன.

இந் நிலைகளையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் கூட தட்டிக் கேட்க முடியாதபடி நிலை மிகக் கீழாகப் போய்விட்டது. அரசியல் நிலையில் தங்களுக்கு ஒத்துவராத, இணங்கிப் போகாத மாநில அரசுகளை, நடுவணரசு கொஞ்சமும் தயக்கமின்றிக் கவிழ்க்கத் தொடங்கி விட்டது.

நாட்டின் பொருளியல் நிலையோ, அரசியல் நிலையை விட மிகவும் கேடாகப் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொதுமக்களைக் கொள்ளையடிக்கலாம்; அவர்களிடமிருந்து கையூட்டு, பணிக்கொடை, தொண்டுக் கட்டணம் (சேவைக் கட்டணம்), அன்பளிப்பு என்னும் பெயர்களால், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆட்சித் துறை அலுவலகங்கள், காவல்துறை, போக்குவரத்துத் துறை இன்னோரன்ன அனைத்து நிலைகளிலும் பணங்களை அளவுக்கு மீறிச் சுரண்டலாம், கொள்ளையடிக்கலாம், கொழுக்கலாம் என்றாகிவிட்டது. இவற்றை எவரும் கேட்க முடியாதவாறு ஒருவர்க் கொருவர், ஒருதுறைக்கு ஒருதுறை மிகக் கவனமாகவும் இணக்கமாகவும் நடந்துகொள்வது, அலுவலக நடைமுறைகளிலேயே ஒன்றாகிவிட்டது.

மக்களின் இன்றியமையாத தேவைக்கான உண்ணு பொருள்கள், உடுத்தற் பொருள்கள், உறையுள்கள் ஆகியவை அளவுக்கு மீறி, ஏழை மக்களின் கைகளுக்கு எட்டாதவாறும், கிட்டாதவாறும் விலையேற்ற மலைகளில் ஏறி அமர்ந்துவிட்டன. அன்றாடம் தங்கள் உடல்களை வருத்தி வாழ்கின்ற வறுமை மக்களும், ஏழை உழவர்களும், இக் கடுமையான விலையேற்றங்களால் நசுக்குண்டு நலிந்து அங்கங்கு அழியத் தொடங்கி விட்டனர்.

இவையன்றிப் பொழுதுபோக்குகள் என்னும் தன்மையில் கீழ்மையும் கயமையும் முதலாளியக் கோட்பாடுகளும் ஒன்றிணைந்து பூத வடிவாக மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளன.

இவ்வனைத்துச் சீரழிவுகளையும் கொடுமைகளையும் கண்டு கண்டு எண்ணி எண்ணிப் புழுங்கிய இளமை மனங்கள் - இளைஞர்கள், தங்களால் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகி, இவ்வழிம்புகளுக்கெல்லாம் ஆக்கமாகவும் உரமாகவும் இருக்கின்ற முதலாளியப் பார்ப்பனிய நடுவண் அரசுடன் முரண்பட்டு எழுச்சி கொண்டு, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே வெகுண்டு எழுந்து அரசுடன் போராடத் தொடங்கி விட்டனர். தங்கள் கைகளில் கிடைத்த போர்க் கருவிகளை அரசின் அலுவலகங்களின் மேலும், ஆட்சியாளர்களின் மேலும், அவர்கள் பரம்பரையினர் மேலும் வீசத் தொடங்கித் தங்கள் வெறுப்புகளைக் காட்ட முற்பட்டுவிட்டனர். இவர்களை அமைதிப்படுத்தவோ அடக்கவோ வேண்டுமானால், அரசுச் சார்பில் நடைபெறும் அத்தனை இழுக்கல்களையும் சறுக்கல்களையும் சரிப்படுத்த அரசுத்தலைமை முன்வரவேண்டும். எரிவதைத் தடுத்தால் கொதிப்பு அடங்கிவிடுகிறது. அதைச் செய்ய முன்வராமல், இவ்விளைஞர்களை அரசு 'நக்சலைட்டி'னர் என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய வுணர்வுக்கும், பகைவர்கள் என்றும், பிரிவினைக்காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டிக் கொள்ளை முதலாளிகளை ஏவிவிட்டுப் பொதுமக்களுக்கு உண்மைகள் புலப்படாதவாறு மலையளவு விளம்பரங்களைச் செய்யச் சொல்லி மாநாடுகளை நடத்தத் தொடங்கிவிட்டனர்

உண்மையில், இந்தியத் தேசியம் என்பது இந்துமத ஆளுமை, பார்ப்பனியத் தலைமை, முதலாளிய வல்லாண்மை என்னும் பொருளுடையதே! இவற்றுக்கு மாறாக யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், செயலைச் செய்தாலும் அவர்கள் மக்கள் பகைவர்கள், தேசியப் பகை ஆற்றல்கள், பிரிவினைக்காரர்கள் என்று கூறுவது நடைமுறை ஆகிவிட்டது.

இந்த அழிம்புகளை யெல்லாம் ஒழிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்து எழுச்சி கொண்டு எதிர்த்தால்தான் இந்தத் தில்லி வல்லாண்மையை வீழ்த்த முடியும்.

இந்திராக் கட்சி பெரும் பெரும் பணமுதலைகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடுத்துவரும் தமிழ்நாட்டுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பெரும் பெரும் முயற்சிகளையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறது.

தமிழகத்தில் நல்லாட்சி தமிழின முன்னேற்றம் கருதிய தமிழராட்சி வரவேண்டுமானாலும், தமிழீழம் அமைய வேண்டுமானாலும், இங்கு இந்திராக் கட்சி எதிர்க்கட்சியாகக் கூட வரவிடாதபடி தடுத்து நிறுத்த வேண்டும். இல்லெனில் தமிழர்களுக்கு அழிவே நேரும். எனவே தமிழர்கள் அனைத்து நிலைகளிலும் விழிப்பாய் இருக்க வேண்டுவது மிக மிக இன்றியமையாததாகும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 103, மே, 1988