உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தமிழருக்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும்

விக்கிமூலம் இலிருந்து

தமிழர்க்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும் கிடைத்துவிடக்
கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை!


டந்த 16.7.1988 செவ்வாயன்று கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஓராண்டுக்காலம் என்ற தலைப்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அங்கு இந்திய உயர் ஆணையர் தீட்சித் பேசும்பொழுது, "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கி விட்டுத், தமிழீழப் போராளிகளிடம் இலங்கை நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இப்படியொரு நிலைமை உருவாகிவிடக் கூடாதென்பதே இந்தியாவின் நோக்கம். அதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது என்று, இந்தியாவின் கரவான உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில் இலங்கைத் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளைப் பலவகையிலும் வெளிப்படுத்தித் தெளிவாகப் பேசியுள்ளார்.

"இலங்கை மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற சிக்கலுக்குக் காலப்போக்கில் தீர்வு ஏற்படும். அதற்காக விடுதலைப் புலிகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தவிர்த்து விட்டு, இலங்கை விடுதலைப் புலிகளுடன் தானே புதிய பேச்சுகளைத் தொடங்கினால் தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று தீட்சித் இலங்கையை எச்சரித்துள்ளார்.

இவ்வெச்சரிக்கை, இந்தியாவின் மறைமுக வல்லதிகாரக் கொள்கையை உறுதிப்படுத்துவதுடன், புலிகளைக் காட்டி, இலங்கை ஆட்சியை எப்பொழுதும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் போராளிகளுக்கும் இலங்கை ஆட்சிக்கும் ஒரு நல்லுறவு ஏற்படுவதையோ அதன் வழி இலங்கையில் அமைதியான ஆட்சி நடைபெறுவதையோ, இவற்றினால் தமிழினத்திற்கு ஒரு நல்விளைவு உருவாவதையோ விரும்பவில்லை என்பதையும் இப் பேச்சு தெளிவாகக் காட்டுகிறது. அதில் அச்சுறுத்தல் உணர்வும் கலந்தே இருப்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனி, தீட்சித் மேலும் பேசுகையில், இந்திய ஆட்சியினரின் உள்மனத்தில் அழுந்திக் கிடக்கும், "தமிழர்க்கு இறைமை ஆட்சி உரிமைகள் உள்ள ஒரு நாடு கிடைக்கவே கூடாது என்னும் கரவான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் பேச்சைக் கவனியுங்கள்.

"இலங்கையில் (அல்லது இந்தியாவிலுமோ வேறு எங்குமோ) தமிழர்களுக்கென தனிநாடு ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் நோக்கமன்று. (இதைத்தான் நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் மக்களுக்குக் கூறி வருகிறோம். அதை இப்பொழுது தீட்சித் (அஃதாவது இராசீவ் பரம்பரையினர் கருத்தை) உறுதிப்படுத்திக் கூறுகிறார். இதை நம் வீடணத் தமிழர்கள் மூப்பனாரும் சிதம்பரங்களும் கவனிக்க வேண்டும். இனி இன்னும் தீட்சித் கருத்தை உண்மைத் தமிழாகள் கவனிக்க வேண்டும்.) இலங்கையில் பிரிவினையை உருவாக்குவதற்கான வேலையில் இந்தியா உடைந்து சிதறுவதற்கான தொடக்கப் பணிகளைத் தொடங்கியதாகத்தான் பொருள். தனி ஈழக் கோரிக்கையை (அஃதாவது தனி ஈழம் அமைவதை) இந்தியா ஒருபோதும் ஆதரித்ததில்லை. தனிஈழக் கோரிக்கையை ஏற்பதென்பது இந்தியா இதுவரை எந்தக் கொள்கைகளுக்காக வழக்காடியதோ, (அஃதாவது இந்தியா ஆரிய இனத்தவர்களாலேயே நிலையாக ஆளப்பெற வேண்டும் என்பதுதான் அவர்கள் கொள்கை என்பதைத் தமிழர்கள் இப்பொழுதேனும் விளங்கிக் கொள்க) அவை அனைத்தையும் தவிர்ப்பதாகும். பிளவுபடாத பல இன் மக்களைக் கொண்ட் நாட்டையே இந்தியா எப்பொழுதும் வலியுறுத்தியுள்ளது. (எப்பொழுது என்றால்; வரலாற்றுக் காலத்திலிருந்தா? இல்லையே, அப்பொழுதெல்லாம் இந்தியா ஒன்றாக இருந்ததில்லையே இந்தியா ஆரியர் தங்கள் கைகளில் ஐரோப்பிய ஆரியர்கள் இந்திய ஆட்சி உரிமையை (சுதந்திரத்தை) ஒப்படைத்த திலிருந்து தானே இந்தக் கரவான ஓரின நுகர்வுரிமையை (ஏக போக சுதந்திரத்தை) பிற இனத்தவர்களுக்கு விட்டுவிடக் கூடாது; நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க முடியும். நேரு, அவருக்குப் பின் அவர் மகள், அவருக்குப் பின் அவர் பெயரன் என்னும் வரிசையில் வந்த வலியுறுத்தம் தானே அது.)

தீட்சித்தின் இந்தக் கருத்துக்கு இலங்கை மகாவேலி மீவளர்ச்சி (அபிவிருத்தி) அமைச்சர் காமினி திச்சநாயக, அக் கருத்தரங்கிலேயே தன் உணர்வு ஒப்புதலை அளித்துக் கீழ்வருமாறு கருத்தறிவித்திருக்கிறார்.

'திராவிடர்கள் (அஃதாவது தமிழர்கள்) பலமுறை இலங்கை மீது படையெடுத்தனர். ஆனால் சிங்கள அரசன் துட்டகைமுனு திராவிட (தமிழ்) அரசன் ஒருவனை முறியடித்து உரிமை இலங்கையை ஏற்படுத்தினான். (அதற்கு முன் இலங்கையின் பெரும்பகுதி தமிழரசர் கையிலும், ஒருசிறு பகுதி(மேற்கே) சிங்கள அரசரின் கையிலும் இருந்தன. துட்டகைமுனு என்பவன் இராசீவ் போன்ற ஆரிய இனவெறியன். அவன் கைக்கு இலங்கை வந்த பின்தான் சிங்களவர் ஆட்சியை, இப்பொழுது இராசீவ் செய்கிற முயற்சியைப் போல் செய்து நிலைப்படுத்திக் கொண்டான்) அந்தச் சிங்கள அரசன் (துட்டகைமுனுவின்) அரத்தம் ஒரு துளியாவது நம் அனைவரின் உடலிலும் ஓடிக் கொண்டுள்ளது. என்றார் (துட்டகைமுனுவின் அரத்தம் சிங்களவன் உடலில் இன்றும் ஓடினால், பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பனிமலை நெற்றியில் புலிபொறித்த கரிகாற் பெருவளத்தான் ஆகியோர் அரத்தங்கள் தமிழினத்த்வர்களின் உடல்களில் ஓடக் கூடாதா, என்ன?)

இனி, அக்கருத்தரங்கில் பேசிய இலங்கை உரிமை (சுதந்திர)க் கட்சி உறுப்பினர் அனில் சிங்கே, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து (ஆனால், தமிழர்களுக்குச் சார்பாக அன்று), தீட்சித்துக்கு விடை கூறும் வகையில் கீழ்வருமாறு பேசியதும் நாம் நினைவில் வைக்கத்தக்கது.

"இலங்கைக் குடிமக்களில் 95 விழுக்காட்டுப் பேர் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. இலங்கை உச்சநெறி மன்றம் கூட ஒருமனதாக அதை ஆதரிக்கவில்லை. நடுவர் சிலர் ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்தையே தெரிவித்துள்ளனர்... வங்கதேசப் போரில் இறந்த இந்திய வீரர்களை விட அதிகமான வீரர்கள் இலங்கையில் இறந்துவிட்டனர்... இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு முழுத் தோல்வியாகும் இலங்கை உரிமை(சுதந்திர)க் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய இலங்கை ஒப்பந்தம் நீக்கப்பட்டு விடும்.

இவரின் இந்தப் பேச்சுக்குத்தான், தீட்சித் "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கிவிட்டுப் புதிய பேச்சுகளைத் தொடங்கினால், தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று விடை தந்து பேசினார்.

எதை மனத்தில் வைத்துக்கொண்டு தீட்சித் இப்படிப் பேசினாரோ, தெரியவில்லை, ஆனால் அவர் சொன்னபடி 'இந்திய இலங்கை ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டுத்தான் போகும் என்பதில் ஐயமில்லை. அதன்படி, தனிஈழமும் உருவாகித்தான் தீரும். இதை யாராலும் தவிர்த்துவிட முடியாது.

தெரிந்தோ தெரியாமலோ, அனில் சிங்கேவும் தீட்சித்தும் இந்த உண்மையை உறுதிப்படுத்திக் கூறியதாகவே நாம் கருதுகிறோம்.

ஒழிக இலங்கை - இந்திய உடன்பாடு!

வாழ்க தனித்தமிழ் ஈழம்!,

- தமிழ்நிலம், இதழ் எண். 108, ஆகத்து, 1988