வேண்டும் விடுதலை/பிரிவினைத் தடைச்சட்டம்

விக்கிமூலம் இலிருந்து

பிரிவினைத் தடைச் சட்டம்

ங்குப் பிரிவினை பற்றிப் பேசப் பெறுகின்றதோ, அங்கு பிரிவினைக்குத் தக்க பொருட்டுகள் இருக்கும் என்பதையும் எங்குப் பிரிவினைக்குத் தடையிருக்கின்றதோ அங்கு விடுதலை வேட்கை மிகும் என்பதையும், வெள்ளையர் ஆட்சியிலும் அதை எதிர்த்துத் தன்னாட்சி நிறுவிய பேராயக்(congress) கட்சி வரலாற்றிலும் இன்னும் பிற உலக நிகழ்ச்சிகளிலும் நாம் தெளிவாகக் கண்டோம்.

எங்கும் பிரிந்து போக விரும்புவார் சிறுபான்மையராக விருப்பதையும், பிரிந்து போகத் தடையிடுவார் பெரும்பான்மையராக விருப்பதையும் நாம் அறிவோம். இப்பெரும்பான்மையரிடமிருந்து சிறுபான்மையினர் பிரிந்துபோக விரும்புவது ஏன்? இதற்கு வெறும் உணர்ச்சியும் மேலோட்டமான எண்ணமும், சட்ட திட்டங்களில் வலிந்த கட்டுக் காவல்களால் தகர்த்தெறியத் தக்க காரணங்களுமே அடிப்படையாக விருக்க முடியாது. பெருத்த அரசியல் வரலாற்று மொழி, பண்பாட்டு அடிப்படையிலேயே ஒரு சாரார்க்கு விடுதலை வேட்கை பிறக்கும். அவை பொருட்டே ஒரு கூட்டம் அவ்விடுதலை வேட்கைகையத் தடுக்க முயற்சி செய்யும்.

உலகியல் முறைப்படி ஒருவர் பிரிவு கேட்டதோ, இன்னொருவர் அதைத்தடுத்து ஒற்றுமையை வலியுறுத்துவதோ குற்றமாகாது. ஆனால் விடுதலை வேட்கையினர் தாறுமாறான வழிகளில் அதனை வற்புறுத்துவதோ, ஒற்றுமை விரும்புவார் ஆணை அடக்குமுறைகளால் அதனைத் தடுக்க முயல்வதோ தான், தமக்கும் நாட்டுக்கும் சொல்லொணாக் கேடுகளைப் பயக்கும்.

அண்மையில் இந்திய அரசியலார் கொண்டுவர விருக்கும் பிரிவினைத் தடைச் சட்டம், எதிர்காலத்தில் என்றேனும் ஒரு நாள் இந்தியா பற்பல வகையில் பிளவுண்டு போகும் என்பதற்கே அடிப்படையாகுமன்றி, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்குக் கட்டாயம் வழி வகுக்காது.

குடியரசு அமைப்பு முறையின் முழு முதல் அடிப்படைச் சிறப்பு என்ன வென்றால், எல்லாக் குடிமக்களின் அன்றிக் குடிமக்களில் ஒருசிலரின் அவ்வப்பொழுதைய உரிமைக் குரலுக்குக் செவி சாய்ப்பதே ஆகும். அவ்வுரிமைக் குரல் எழுப்பப்படுகையில் அதற்குச் சரியான வகையில் அமைவு கூறி அதனைத் தணிக்க முயல்வதே குடியரசு முறையைக் கட்டிக்காக்க விரும்புவார் செய்ய வேண்டிய செயலாம். அஃதன்றிக் குடிமக்கள் சிலரால் எழுப்பப் பெறும் உரிமை வேட்கையின் குரல்வளையை அழுத்தி நெரித்து அக்குரலெழாமல் தடுக்கும் குடியரசை விட, தன் விருப்பம் போல் மக்களை அலைக்கழித்து அச்சுறத்தித், தன் வலிந்த கைகளால் குரலெழுப்பும் மக்களைத் தடுத்து வன்மம் புரியும் முடியரசே நூறு மடங்கு மேலாம்.

இந்தியப் பேராயக் கட்சியின் ஆளுநர், அண்டை நாட்டாரொடு எல்லைப் போரிட்டுக் கொண்டிருக்கும் இதே பொழுதில் எவ்வகையிலும் தமக்குத் தொல்லை தராத - மாறாகத் துணை புரிகின்ற ஒரு சார் மக்கள், தாம் பின்னர் எழுப்பப் போவதாகக் கூறும் விடுதலைக் குரலுக்கு அணையிட முயன்று, அவர் தம் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாகின், அந்நிலை எத்துணைப் பெருந் தீங்கை விளைவிக்கும் என்று நாம் கூறற்கியலாது.

இப்பொது நிலைகளை ஒருவாறு விடுத்துப் பிரிவினைக்குரிய சிறப்பு நிலைகளை ஒரு சிறிது பார்ப்போம்.

இந்திய அரசினர் இப்பிரிவினைத் தடைச் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் இந்நிலைக்குத் தமிழ்நாட்டில் அன்று தொட்டிருந்து வரும் விடுதலை யுணர்வே தலையாய காரணமாக விருக்க முடியும். அண்மையில் நடந்த தேர்தலில் பெருமளவில் மக்கள் துணையைப் பெற்று மாநில அரசவையிலும், நடுவண் அரசவையிலும் ஒரு நல்லிடத்தை கைக் கொண்ட தென்னக விடுதலைக் கட்சி ஒன்றின் நிலை வலுத்த பின்பு, இத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதே, இதனை வலியுறுத்திக் காட்டும்.

தமிழ் நாட்டு மக்கள் ஒரு சிலர்க்கு உடன்பாடற்றவையாக இத்தென்னக விடுதலைக் கட்சிக் கொள்கைகள் இருந்தாலும், அக் கட்சிக்கு அடிப்படையான தமிழக விடுதலை யுணர்வையும், வரலாற்று உண்மையையும், எவரும் மதியாது புறக்கணித்துவிடல் முடியாது. ஓரளவிற்கு அந்தக் கட்சியின் உணர்வு, தமிழர் தம் உள்ளத்துக் கனல் விட்டுக்கொண்டிருக்கும் உரிமை உணர்வே என்று கூறுவதானாலும் அது மிகையாகாது.

இவ்விடுதலை உணர்வு இன்று நேற்று ஏற்பட்டதா? அன்றி வெள்ளையரை எதிர்த்துப் பொருதிக் காலக் கோளாறுகளால் தன்னாட்சியை மறைமுகமாக நிறுவிக் கொண்ட பேராயக் கட்சியின் விடுதலை உணர்விற்குப் பின்னர் தோன்றியதா? பருக்கைச் சோற்றுக்குக் கையேந்தி, படுக்கும் பாய்க்கு உடல் சொரிந்து, பிறன் வீசி எறியும் ஒரு சில காசுகளைக் குனிந்து பொறுக்கிக் கும்பி நிறைக்கும் தன்மானமிழந்த தம்பிரான்மார்கள் ஒரு சிலரன்றி, உண்மைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவனுடைய உள்ளுணர்விலும் எழுந்ததாகும் இத்தமிழக விடுதலை வேட்கை இதை எவராலும் அழித்துவிடல் முடியாது. தமிழ் மொழி உள்ளளவும் தமிழன் இருப்பான். தமிழன் இருக்கும் வரை, தமிழ் நாட்டுணர்வும் இருந்தே தீரும் என்பதை எவரும் மறந்துவிடல் வேண்டாம்.

மொழி, இலக்கிய, பண்பாட்டு, சமய அடிப்படையில் தனக்கு ஓரகம் நடைபெறுங் காலத்து ஒவ்வொரு தமிழனும் எழுந்து தன் விடுதலையுணர்வை வெளிப்படுத்தியே தீர்வான் வெறும் சட்ட திட்டங்களாலும், அடக்கு முறைகளாலும் இதனை அடக்கிவிடல் முடியாது. போலி ஒற்றுமை மணிலாக் கொட்டையின் புறத் தோலைப் போன்றது. வேட்கையுள்ளத்தால் அக்காய் உடைத் தெறியப்படும்பொழுது மணிகள் விடுதலை பெற்றே தீரும்.

முற்றி முதிர்ந்து வளர்ந்து பரந்து சிறந்த ஓரினத்தின் ஆணி வேரை ஒருவராலும் அவ்வளவு எளிதில் அறுத்தெறிந்து விடல் முடியாது. தமிழ் மொழி விடுதலை, தமிழ் இலக்கியப் பண்பாட்டு விடுதலை, தமிழர் சமய விடுதலை என்பவற்றிற்குத் தீங்கு நேருங்கால் நாட்டு விடுதலை முழக்கம் எம்மருங்கும் ஒலித்தே தீரும். அக்கால் விடுதலை முழக்கமிடும் இத்தென்னகக் கட்சியோடு ஒவ்வொரு தமிழனும் ஒன்றித் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள நேரினும் நேரும் என்று அரசியலார்க்கு எச்சரித்துக் கூறுகின்றோம். சாவைவிட அடக்கியொடுக்கப் படுந்தன்மை. இனிப்பதன்று. இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வைவிடப் பன்னூறாயிர மடங்கு உயர்ந்து வலிந்ததாகும் தமிழக விடுதலை யுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும்புயலை மீன் வலை கொண்டு மறிக்கும் மடமைச் செயல் போன்றது. குடியரசு கொள்கைக்கே மாறான இச் சட்டம் நன்மை பயப்பதன்று. மேலும் மேலும் விடுதலை உள்ளத்தைக் கிண்டிக் கிளறுவதாகும். ‘துஞ்சு புலி இடறிய சிதடன்’ போல ஆளுநர் ஆகிவிடக் கூடாது என்பதே நாம் விரும்புவதாகும்.

- தென்மொழி, சுவடி 1 ஓலை-2, 1963