உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/விடுதலை பெறுவது முதல் வேலை

விக்கிமூலம் இலிருந்து


விடுதலை பெறுவது முதல் வேலை!


‘தமிழகம் விடுதலை பெறவேண்டும்’ - என்ற கருத்தே நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிக்காரர் சிலர்க்குப் பெருத்த எரிச்சலை மூட்டுவதாகும். அதற்கவர் சொல்லும் கரணியங்கள் வியப்பானவையாகும். முதலில் “தமிழகம் எங்குக் கட்டுப் பெற்றுக் கிடக்கின்றது? தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே அண்மையில்தானே வெள்ளைக்காரன் கைகளினின்று மீட்கப் பெற்று உரிமை எய்தியது? உரிமை பெற்றபின் நமக்கென்று ஒரு குடியரசமைப்பையன்றோ அமைத்துக் கொண்டுள்ளோம்? இவ்வமைப்பின் கீழ் உள்ள நிலத்தின் எந்தப் பகுதியும் அடிமையுற்றுக் கிடக்கின்றது என்பது பொருளற்றதே. அவ்வாறு அடிமையுற்றுக் கிடக்கும் ஒரு நிலப்பகுதியன்றோ விடுதலையுரிமைக்குப் போராடலாம்? தமிழகம் எப்படி அடிமை நாடாகும்?" - என்பது அவர்களின் எதிர் வினாவாகும். இத்தகையவர்கள் விடுதலை என்ற சொல்லின் பொருளையே சரிவரப் புரிந்து கொள்ளா தவர்களாவர். புரிந்து கொண்டாலும் ஒப்புக்கொள்ளாதவர்களாவர். இத்தகையவர்களுக்கும். இவர் தம் மதிமயக்கமான பேச்சுகளினாம் கட்டுண்டு தமக்குத்தாமே அடிமையுற்றுக் கிடக்கும் பேதைத் தமிழர்க்கும் முதற்கள் விழிப்பூட்டியாகல் வேண்டும்.

ஓராட்சிக்குள் அடங்கும் தனி மாந்தன் ஒருவனின் உரிமைகள் என்பவை வேறு கூட்டுமாந்த உரிமைகள் என்பவை வேறு. வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொன்னால் நம் ஒவ்வொருவரின் கைகால்களிலும் இரும்பு விலங்குகளை மாட்டி நம் குடுமிகளைப் பிடித்து அவன் எப்பொழுதுமே ஆட்டிக் கொண்டிருக்கவில்லை. நம் தனிப்பட்ட இயக்கங்களை நாம் உண்ணுவது, உறங்குவது உடுத்துவது மனைவி மக்களுடன் உறவாடுவது போன்றவற்றின் ஈடுபாடுகளை அவன் தடைசெய்து வைத்திருந்தான் என்பதிலும் பொருளில்லை. மாறாக இவைபோன்ற எல்லா வகையான இன்பநுகர்ச்சிகளுக்கும் அவன் ஆட்சிக்காலத்தில் பெரிதும் நல்ல வாய்ப்புகளையே ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். நம் கல்விக் கண்களையும் திறந்து நம்மைப்பற்றியிருந்த அறியாமை இருளையும் ஓட்டுதற்கு அவன் பெரிதும் உதவியிருந்திருக்கின்றான். அப்படிப்பட்ட நிலையில்- அவன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொல்வதற்கே தனிபட்ட ஒருவனைப் பொறுத்தமட்டில் எந்த ஒர் அடையாளமும் இல்லாத நிலையில் அவனுக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்று ஏன் சொல்லிக் கொண்டிருந்தோம்? .

அவன் நமக்கு- தனிப்பட்ட நம் ஒருவருக்கு என்ன வகையான நன்மை செய்திருந்தாலும். நம் எல்லாருக்கும் வேண்டாதவனாக இருந்தான் என்பதைக் கருதியே அவன் நம்மை அடிமைப்படுத்தியிருந்தான் என்று கூற வேண்டியிருந்தது. நாம் எல்லாரும் சேர்ந்து அவனை ஒன்றும் கேட்க முடியாது. நம் எல்லாரைப் பற்றியும் நாமே எண்ணி முடிவுகட்டிக் கொள்ள முடியாது. அவன் உதவியின்றி நம் எல்லாராலும் எங்கும் செல்ல முடியாது. நம் எல்லாருக்கும் சொந்தமான இந்நிலப்பகுதியில் ஒரு துண்டு நிலத்தை வெட்டியெடுத்துக் கப்பலில் போட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு போனாலும் நாம் அவனைப் போய் ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்க முடியாது. இங்கிருந்த பொன்னையும் பொருளையும் வாரிக் கொண்டு போய் அவன் நாட்டில் குவித்துக் கொண்டாலும் அவன் பார்த்து ஏதாவது கொடுப்பதை - நாம் பெற்றுக் கொண்டாலொழிய நாமாகப் போய் அவன் கொண்டு போனவற்றைப் பிடுங்கிக் கொண்டு வர முடியாது. நம்மை முன்னேற்றிக் கொள்ளக்கூடிய எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றினாலும் நாம் அவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது. அவற்றைச் செய்தித்தாளில் எழுதிப்பரப்பிவிட முடியாது. நாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும்.அவன் ஒப்புக்கொண்டால்தான் ஆயிற்று இல்லையென்றால் நாம் எழுதாமலும் பேசாமலும் ஊமை நாடகந்தான் போட்டுக் காட்டிக் கொண்டிருக்க முடியும். ஆனால் இத்தனைத் தடைகள் இருந்தாலும் அவன் நமக்குச் சோறு போட்டான். இங்கிலாந்திலிருந்து நம் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைக் கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து நமக்குக் கொடுத்தான்; உடைகளை நன்றாக உடுக்கக் கற்றுக்கொடுத்தான். இருந்தாலும் இவற்றிலெல்லாம் நாம் நிறைவுபெற்றுவிடாமல், நம் குடுமி என்னவோ அவன் கையிலிருப்பது போன்ற உணர்ச்சியே நமக்கிருந்து வந்தது. நம் கைகால்களைக் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டு நமக்குச் சோறு போட்டுக் காப்பது போன்ற உணர்ச்சியே நம் எல்லாருக்கும் இருந்தது. எனவே நாம் அவனுக்கு அடிமையுற்றுக் கிடப்பதாகக் குமுறினோம்; குமைந்தோம்; புழுங்கினோம்; பேசினோம்; எழுதினோம்; இறுதியாக அவனிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டதாக ஒருகால் பகுதித்தாளில் எழுதி வாங்கிக் கொண்டு அவனைக் கப்பலேற்றி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டோம்.

அந்தக் கால் தாளை நாம் (நாம்கூட அன்று ; நமக்காக யாரோ ஒருவர்) வாங்கிக் கொண்டவுடன், நமக்கென்னவோ நம் கைகால்களில் உள்ள விலங்குகளெல்லாம் தகர்க்கப்பட்டன. போன்ற ஓர் இன்ப உணர்ச்சி இருந்தது; உரிமைஉணர்ச்சி இருந்தது. இந்த மகிழ்ச்சியில் நாம் ஆடினோம்; பள்ளுப் பாடினோம்! ஆரவாரம் செய்தோம். ஆனால் அதன் பின்னும் நமக்குப் பசித்துக்கொண்டு தான் இருந்தது; உடை தேவையாகத்தான் இருந்தது; நாமும் உழைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. நாம் இந்த உலகில் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் உழைத்துத் தான் ஆகவேண்டும்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்; தொல்லைப்பட்டு வாழ்ந்துதான் ஆகவேண்டும். இவற்றிலிருந்து எவனும் நம்மை விடுதலை செய்துவிட முடியாது. ஆனால் இவற்றைப் பற்றி யெல்லாம் விளங்கிக் கொள்ளாத நம் தலைவர்கள் அன்றெல்லாம் "வெள்ளைக்காரனை நாம் ஓட்டிவிட்டால் நம் ஆற்றிலெல்லாம் தண்ணீருக்கு மாறாகப் பால் ஓடும்; நெய் ஒடும்; நம் மலைகளில் கொட்டிக் கிடக்கும் கல்லெல்லாம் பொன்னாகும்; கடுகெல்லாம் மலையாகும்” என்றெல்லாம் கனவுகண்டு கிளுகிளுப்பை மூட்டிக் கற்பனைவளம் பொங்கப் பேசினார்கள், ஆனால் வெள்ளைக்காரன் போனபின் நம் ஆறுகளில் பாலும் ஒடவிலை, நெய்யும் ஓடவில்லை. இருந்த தண்ணீரும் வற்றிப்போனது. கல்லெல்லாம் பொன்னாகவில்லை; கடுகும் மலையாகவில்லை; நம் பெண்டு பிள்ளைகள் காதுகளிலும் மூக்குகளிலும் போட்டுக் கொண்டிருந்த கடுகத்துணைப் பொன்னும் பறிபோய்விட்டது. பின் என்னதான் பயன்? உரிமை பெற்றது எதற்கு? விடுதலை பெறுவது எதற்கு? இந்தக் குழப்பங்கங்களி லிருந்துதான் நாம் உண்மையை உணர்ந்தாக வேண்டும் அந்த உண்மைகள் என்பவை எவை? உரிமைகள் என்பவற்றிற்கு என்ன விளைவு? விடுதலைக் கனியின் சுவை என்ன? அதன் பரிமாணப் பொருள் எது ? தமிழனுக்கும் அது தேவைதானா? இவற்றை முதலில் விளங்கிக்கொள்வோம்.

மக்களினத்தைப் பொறுத்தவரையில் ஒருண்மையை முதன் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த மக்களினம் என்றைக்கும் பழக்க வழக்கத்திற்கு அடிமையுற்ற இனமே! இந்தப் பழக்க வழக்கந்தான் நமக்கு அறியாமையாகவும் இருப்பது; அறிவாகவும் இருப்பது. நாம் அறியாத ஒன்றைத் தவறாகவும் அறிந்த ஒன்றைச் சரியாகவும் கருதிவிடுகின்றோம். எடுத்துக்காட்டாக, நாம் கண்டு அறிந்த சிவவடிவம், மால்வடிவம் முதலிய வடிவங்களையே இறைவன் உருவங்கள் என்று நம்புகின்றோம். ஏசுநாதரையும், புத்தரையும் மக்களில் உயர்ந்தவர்கள் என்றே நினைக்கின்றோம். இனி, ஏசுநாதரையும், புத்தரையும் வழிபடுபவர்கள் நாம் வணங்கும் வடிவங்களை இறைவனுடையன என்று ஏற்பதில்லை. இவ்வாறு பழக்க வழக்கமே நமக்கு அறிவாகிறது. நமக்குப்பழக்கமும் வழக்கமும் அல்லாதது அறிவில்லாததாகி விடுகின்றது. இந்த உண்மை நம் எல்லா வகையான இயக்கங்களிலும் ஊடுருவி நிற்கின்றது. இந்த உண்மையின் அடிப்படை நம்மை எங்குக் கொண்டுபோய் விட்டுவிடுகின்றது தெரியுமா? நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ளும் ஓர் அறியாமைப் படுகுழியிலே கொண்டுபோய்த் தள்ளிவிடுகின்றது. எனவே நாம் எதைப் படித்தாலும், எதை எண்ணினாலும் நம் பழக்க அடிமைத்தனத்தினின்று விடுபடவே மறுத்து விடுகின்றோம். இந்த அமைப்பின் புறச் செய்கையாகத்தான் நாம் அரசியல் அமைப்பிலிருந்தும் குமுகாய அமைப்பிலிருந்தும் நம்மை முன்னோக்கிக்கொண்டு செலுத்த முடியாமல் அழுந்திப்போய் விடுகின்றோம். இதனாலேயே விடுதலையுணர்வு என்று நாம் கேள்விப்பட்டவுடன் நாம் உழைக்காமல் உண்டுவிட முடியுமா? பாய் போடாமல் படுத்துக்கொள்ளமுடியுமா? என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றோம். அரசியல் தலைவர்களும் நம் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலையுணர்வையும், உரிமை எய்துவதையும் நம் கண்பார்வைக்கும் காதுப்பறைக்கும் தக்க படியான கோணங்களில் - பரிமாணங்களில் உருவாக்கிக் காட்டுகின்றனர். ஆனால் விடுதலை என்பது என்ன?

அதுதான் ஒவ்வொரு மாந்தனின் உயிர்ப்பயன்; ஒவ்வோரினத்தின் இயக்க முடிவு. ஒவ்வொரு நாட்டின் இறுதி அரசியல், மொத்தத்தில் உலகின் இறுதிக்கொள்கை, அங்கு நாம் உழைக்கலாம்; உண்ணலாம்! உழைக்கவும் தடையிருக்கக்கூடாது; உண்ணவும், தடையிருக்கக் கூடாது. மாந்தன் மலையை வெட்டிக் கடலில் போடலாம்; கடல் நீரை வயலுக்குப் பாய்ச்சிக் கொள்ளலாம். என்ன விரும்புகின்றானோ அதைப் படிக்கலாம்; எதை விரும்புகின்றனோ அதை எழுதலாம். எப்படி வாழ விரும்புகின்றானோ அப்படி வாழலாம். அதற்காகத் தன்போல் ஒருவன் அப்படிச் செய்வதை இவன் தடுக்கவும் கூடாது; இவன் விருப்பத்தை இன்னொருவன் தடுக்கவும் கூடாது. இந்த அமைப்பை இவனே ஒருவகையான கோணத்தில்-ஒரு பரிமாணத்தில் அமைத்துக்கொள்ள இவனுக்கு உரிமையிருக்க வேண்டும். இவ்வுரிமைக்கு எவன் தடையாக இருக்கின்றானோ அவன் இவனின்று மாறுபட்டவன். அவன் கோணம்பரிமாணம் எல்லாமே இவன் கோணத்திற்கும் பரிமாணத்திற்கும் மாறுபட்டன. இப்படி ஒருவனன்றி ஓரினமே இயங்குமானால் அவ்வினத்திற்குப் பிறிதோர் இனம் மாறுபட்ட இனம். அந்த இனமும் இந்த இனமும் தனித்தனி இயக்கம் உடையன. தொடக்கம் உடையன; முடிவு உடையன பயன் உடையன.

இவ்வாறு இன்றி உலக மாந்தரனைவரும் ஒரே யியக்கமும் ஒரே வகையான பரிமாணமும் உடையவராக நாம் கருதிக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறு இல்லை. இப்படி நான் கூறும் கருத்துப் புதிய உலக அமைப்புக்கு எள்ளளவும் மாறுபட்டதில்லை. இன்னுஞ் சொன்னால் அந்த அமைப்புக்குப் புதிய வடிவம் கொடுப்பது புதிய வலிவூட்டுவது வரப்போகும் பல புதிய சிக்கல்களை விடுவிப்பது. முதலில் ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் உலக மக்களினம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பு, அமைப்பு இயக்கம், இயல்பூக்கம் முதலியன உண்டு என்றால் - அவற்றில் ஒவ்வோரினமும் பிறிதொன்றிற்கு வேறுபட்டுக் கிடக்கின்றது என்றால், ஒன்றையொன்று பகைத்துக்கொண்டுதான் கிடக்க வேண்டும் என்பதில்லை. எருமைகளும் மாடுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டுந்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அவை வெவ்வேறு இனங்களே! இவ்வேறுபட்ட உணர்வை ஒன்றுபோல் கருதுவதென்பது வேறு; ஒன்றாக்கி விடுவதென்பது வேறு ஒன்று போல் கருதுவதென்பது அறிவால் நமக்குக் கிடைத்த பயன்; ஒன்றாக்கி விடுவதென்பது அறியாமையால் நாம் கண்ட இருள் துயரம் ! எந்த வகையான அறிவியல் உலகம் வந்தாலும் உலக மாந்தர் எல்லாரும் ஒரே வகையினர்; இனத்தினர் என்ற தன்மை வரவே வராது: அவரவர்களின் உறுப்புகளும் பிறவும் ஒன்றுப்பட்டே இருக்கும். உணர்வு வேறுபட்டுத்தான் இயங்கும். இந்த உண்ர்வு நிலைக் கொப்ப அறிவு கலக்கப் பெற்றதோர் இயக்கமே மாந்தரை வேறு பிரிக்கின்றது. நாம் எல்லோரும் ஓரினந்தான். ஆனால் பல்வேறு பிரிவினர் இப்பிரிவு நிறத்தினடிப் படையிலோ 'சாதி’யின் அடிப்படையிலோ அமைந்த தன்று; நிலத்தின் அடிப்படையில் அமைந்தாகும். மூலத்தோற்றத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்! அறிவியல் முன்னேற்றத்தின் எந்தப் புள்ளியிலும் ஓர் உருசியனும் ஒரு சப்பானியனும் ஒன்றாகி விடுவதென்பது தவறு. இந்நிலையை நாம் மிக நன்றாக மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டால், வேறுபாட்டுணர்வுக்கே, பகையுணர்ச்சிக்கே இடமில்லாத வகையில் புரிந்து கொண்டால், ஓரினத்தைப் பிறிதோர் இனம் அடிமைப்படுத்தியோ, ஒன்றின் இயக்கத்துக்குள் பிறிது ஒன்றை அடக்கிக் கொண்டோ வாழ்வது என்பது குற்றமாகவும் கொடுமையாகவும் கருதப்படும்.

இங்கு ஒருண்மையை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும் நிலத் திணையியலில் எப்படிப் பூண்டினமும், புல்லினமும் தண்டினமும், மரவினமும் பகுக்கப் பெறுகின்றனவோ, விலங்கியலில் எப்படிக் குதிரையினமும், நாயினமும், யானையினமும், பகுக்கப் பெறுகின்றனவோ அப்படியப்படி மாறுபாடுற்று விளங்குகின்றனவேயன்றி ஒரேயினத்துள் வேறுபாடுகள் கொண்டு இவை விளங்கவில்லை. குதிரை யொன்றையும் அதன் இனத்தினதான கழுதை ஒன்றையும் இணைத்து எவ்வாறு கோவேறு கழுதையை நாம் படைத்துக்கொள்ள முடியுமோ, அப்படியே இந்தியனையும் சீனனையும் இணைத்து இந்தோசீனனையும், இந்தியனையும் ஐரோப்பியனையும் இணைத்து இந்தோ ஐரோப்பியனையும் நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் இந்தியனும் சீனனும் இந்தோசீனனும் இந்தோ ஐரோப்பியனும் ஓரினத்தவரல்லர். தனித்தனி இனத்தவரே. இப்படிப் பகுப்பதில் நமக்கு வேறுபாட்டுணர்வுதானே மிகும்; ஒற்றுமையுணர்விற்கு இடம் உண்டாவது எப்படி என்றால், இந்தியனும் சீனனும் வேறுவேறு என்று சொல்வோமே தவிர, இந்தியனைவிடச் சீனன் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நாம் சொல்லுதல் கூடாது. உயர்வு தாழ்வு என்பது அறிவாலும், உழைப்பாலும் பண்பாட்டாலும், நாகரிகத்தாலும் கருதப்படுவது. ஆனால் அவ்வாறு கருதப்பெறும் உணர்வுகளிலும் கசப்புச்சுவை இருத்தல் கூடாது. இங்கு நாம் முகாமையாகக் கவனிக்க வேண்டியது, இக்கட்டுரையின் கருத்துப் பொருளாக நாம் மதிக்கவேண்டியது என்ன வென்றால் ஓரினத்தின் வாழ்வு இன்னோரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாதென்பதுதான். இதையே சற்று அறிவியல் விளக்கமாகக் கூறினால் ஓரினத்தை, அல்லது பல இனங்களை ஆட்சி செய்யும் உரிமை, பிறிதோர் இனத்தில் அல்லது பிறிதோர் இனத்தின் நலத்தை மட்டுமே கருதக்கூடிய ஒருவரின் அல்லது ஓரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாது என்பதே!

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் விடுதலையுணர்ச்சியின் பரிமாணப் பொருள் எழுதப் பெறுதல் வேண்டும். உரிமையுணர்வின் அறிவியல் பொருள் கூறப்பெறுதல் வேண்டும். இதில் இன்னொரு கருத்தும் கவனிக்கப்படுதல் வேண்டும். உரிமை வேண்டும் இனம் என்னென்ன குறைகளைக்கூறி உரிமை கேட்கின்றது என்பதும் அதேபோல் உரிமை தரவேண்டிய இனம் என்னென்ன நிறைகளைக்கூறி உரிமைதர மறுக்கின்றது என்பதுமே அது. இப்பொழுது இதுவரை நாம் ஆராய்ந்த கருத்துகள் அனைத்தையும் வைத்து நாம் வெள்ளைக்காரனிடம் உரிமைகேட்ட வரலாற்றை நினைவு கூர்வோமானால் நமக்கு விடுதலையுணர்வின் அகரவரிசை தெரிந்துவிட்டது போன்ற ஓருணர்வு ஏற்படும். அதுதான் இது. அஃதாவது விடுதலை என்பது வயிற்றுப் பசியில்லாம லிருப்பதற்கோ, உழைக்காமல் உண்பதற்கோ கேட்கப்படுவதன்று அப்படியானால் நாம் விடுதலையே கேட்டிருக்க மாட்டோம். பின் விடுதலை என்பது எது? அது நம் மான உணர்வில் பழுத்த பயனுடைய கனி. அது நம் வயிற்றை நிரப்பாது; உணர்வின் நரம்புகளை நிரப்பும் உழைக்காமல் உண்ண வைக்காது; உழைப்பது மிகுந்து உண்பது குறைவாக இருந்தாலும் அது நம் நெஞ்சத் துடிப்புக்கு நிறைவளிப்பதாகும். எனவே வயிற்றை நிரப்பி வாழ்க்கையின் உள்ளுணர்வை நிரப்பாமல் இருப்பதே விடுதலை என்று ஆகாத பொழுது வயிற்றையும் நிரப்பாமல் வாழ்வின் உள்ளுணர்வுக்கும் பொருந்திவராத இன்றைய ஆட்சியை நாம் எப்படி விடுதலையாட்சி என்று கருதுவது? இதையும் சிலர் விடுதலைதான் உரிமையாட்சிதான் என்று கருதுகின்றார்களே என்றால், அவர்கள் ஒரு வேளை வயிறுமுட்ட உண்பதாலும் கள்ளக்காசு அடிக்க முடிவதாலும் ஏழையினத்தைச் சுரண்டிவாழ வழியிருப்பதாலும் தான் மட்டும் மேலானவன் என்ற பட்டயம் தீட்டிக்கொள்ள முடிவதாலுமே அவ்வாறு கருதலாம் நடக்கலாம். அவ்வாறு இல்லாத இருக்க முடியாத பிறர் எப்படி இந்த ஆட்சியை விடுதலை ஆட்சி தன்னுரிமை ஆட்சி என்று கருதிக்கொள்ள முடியும்?

எனவே நம்மைப் பொறுத்த வரை, தமிழர்களாகிய நம் இனம் நம்மினும் வேறுபட்ட முற்றிலும் மாறுபட்ட வடவாரிய இனங்களினால் ஆளப்படுவதும் அதன் பொருட்டு மாள விருப்பதும் விடுதலை பெறும் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகும். அரசியலில் பொருளியலில் குமுகாயவியலில், பண்பாட்டியலில் நமக்குப் பொருந்திவராத ஓர் ஆட்சி, குடியாட்சி என்று இயங்கினாலும் சரி முடியாட்சி என்று கூறப்பெற்றாலும் சரி, நம் உரிமைகளைப் பெறும் பொருட்டு நாம் பெற விரும்புவது, பெற வேண்டுவது விடுதலையே. இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னால் இந்தியக் குடியரசாட்சியினின்று நாம் - தமிழர்களாகிய நாம், நம் நாட்டை - நம் இனம் பரவிய இந்நிலத்தை- இந்நிலத்தில் உள்ள மக்களின் நலத்தை. இந்நலத்தின் அடியொட்டி விளையும் வாழ்க்கை வளத்தை உண்மையிலேயே நம்முடையனவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதுதான் நாம் கூறும் விடுதலைக்குப் பொருளாகும்.

நம் துயரங்கள் மலைபோல் வளர்ந்துவிட்டன; நம் தேவைகள் கடல் போல் பெருகிவிட்டன; நம் இழிவுகள் இன்று கூட்டித் தூய்மைச் செய்ய முடியாத அளவுக்கு மேலும் மேலும் மண்டிவிட்டன. பேச்சு உரிமையற்று விட்டோம்; எண்ண உரிமையற்று விட்டோம் நம்மைக் குமுகாயத்தின் அடித்தளத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம். நமக்குப் பசி பெரிதுதான்; ஆனால் பசி மட்டும் பெரிதில்லை; சோறு தேவைதான்; ஆனால் சோறு மட்டும் தேவையில்லை; நமக்கு வறுமையுண்டு; துயரம் உண்டு; போராட்டம் உண்டு; ஒற்றுமை எண்ணம் உண்டு. ஆனால் அவை போலவே நமக்கு மானமும் உண்டு, நம்மை நம் இனமல்லாத, நம் இனத்தின் நலம் பாராட்டாத எவனும் ஆளுதல் கூடாது. ஆம்! நாம் வடவனுக்கு - ஆரியனுக்கு என்றுமே அரசியலிலும் குமுகாய அமைப்பிலும் அடிமைகளல்லர்! உரிமைபெற வேண்டியவர்கள். விடுதலை வேண்டுபவர்கள். இதனை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அறிவின் பெயரால் அறிவியலின் பெயரால் இதனைப்பெற வழியில்லை என்றால், வலிவின் பெயரால் நாம் இதனைப்பெற்றே ஆகல் வேண்டும். என் உடன்பிறந்த தமிழனே! நீ என்ன சொல்கின்றாய்? விழி; எழு; நட!

-தென்மொழி, சுவடி :7, ஒலை 2, 1969