உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தனித்தமிழ்நாட்டுச் சிக்கலைக் கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்

விக்கிமூலம் இலிருந்து

தனித்தமிழ் நாட்டுச் சிக்கலை மிகக்
கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்!

நடுவணரசுக்குப் பாவலரேறு எச்சரிக்கை!

மிழர்கள் உலகில் மிகவும் பழைமையான இனத்தைச் சேர்ந்தவர்கள், தொன்மையான நாகரீகம் படைத்தவர்கள். இன்றைக்கு உலகில் உள்ள நாகரீகங்கள் அனைத்திலும் அவர்களது நாகரீகத் தாக்கம் இல்லாத ஓர் இன நாகரீகமே இல்லை. அதுபோலவே அவர்களின் கலையியலும் பண்பாட்டியலும் மிகமிகப் பழைமையானவை. அவர்களது மொழியும், உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூல முதன்மையானது. சமசுக்கிருத மொழி எவ்வளவு பழைமையானதோ, அதைவிடப் பத்து மடங்கு பழைமையானது தமிழ் மொழி. சமசுக்கிருதத்தில் தமிழ் மொழியின் சொற்களும் சொல் முலங்களும் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகம். இத்துணைப் பழைமையும் சிறப்பும் முதன்மையும் வாய்ந்த மொழியையும், தொன்மைப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் படைத்த அதன் இனத்தையும் இன்று, அரசியலாலும், பொருளியலாலும், குமுகாயத்தாலும், கலை, பண்பாட்டாலும், மொழியாலும் அடிமைப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கின்றது ஓர் இனம் என்றால், இஃது எத்துணை இரங்கத்தக்க கொடுமை வாய்ந்த ஒர் உண்மையாக இருக்கிறது. உலகில் தமிழினம் அவ்வாறு கொடுமைப்படுத்தப்படும் நாடுகள் இரண்டு. ஒன்று தமிழ்நாடு மற்றொன்று இலங்கை

இந்திய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பெருமை பேசித் தமிழையும் தமிழினத்தையும் நாலாந்தர ஐந்தாந்தர நிலையில் வைத்துள்ளது. இந்தியா, இதன் முழு ஆட்சியையும் ஆரியம் தன் தந்திரத்தாலும், அரசியல் சூழ்ச்சியாலும், மதப் புரட்டுகளாலும் கைப்பற்றிக் கொண்டு, இந்நாட்டின் மிகப் பழைமையான உரிமையின மக்களை தமிழர்களை அவர்கள் தம் நிலையினின்று ஒரு சிறிதும் மீளாதவாறு மிகவும் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது இந்தியாவின் ஆரியப் பார்ப்பன அரசு. இந்த அடிமை நிலையின் முழு இழிவையும் இயலாமையையும், அண்மையில், தமிழீழத்தில் அடித்து, நொறுக்கி, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் இன மக்களுக்கு ஒரு வகையிலும் நேரிடையாக உதவ முடியாமற் போன பொழுதே, தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. என்ன கொடுமை! தாம் வணங்கத்தக்க பெற்றோர்கள் முன்னிலையிலும், தாம் பேணத்தக்க தம் உடன்பிறப்புகள் முன்பும், தாம் வழிபடத்தக்க தம் அன்புக் கணவன்மார்கள் எதிரிலும் தமிழ்ப் பெண்கள், ஆ! எவ்வாறு கதறக் கதறக் கற்பழிததுச் சீரழிக்கப்பெற்றுச் சிதைக்கப் பெற்றார்கள்! அவ்வாறு அவர்கள் சிதைக்கப் பெற்ற பொழுது, எப்படி அவர்கள் குமுறித் துடிக்கும் நெஞ்சோடும், குமைந்துருகும் உயிரோடும், செயலற்ற உடலோடும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் உணர்விழந்து கரைந்தார்களோ, அப்படித்தான், இத்தமிழ் நாட்டில் உள்ள ஐந்து கோடித் தமிழர்களும் (தேசியம் பேசும் இந்திரா அடிமைகள் தவிர) நைந்தழிய வேண்டியிருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் எப்படி ஓர் உரிமை நாட்டில் வாழ்வதாக ஒப்ப முடியும்? இனி இந்தியாவில் தமிழர்கள் எப்படி அடிமையாக வைக்கப்பட்டு இருக்கின்றார்களோ, அப்படியே இலங்கையிலும் தமிழர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதுடன் மிக கொடுமைக்கும் இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு அண்மையில் அங்கு நடந்த இனக் கலவரங்களும் அழிவுகளுமே மிகத் தெளிவான வெளிப்படையான சான்றுகளாகும்!

உலகில் தமிழர் வாழும் ஏறத்தாழ நாற்பத்தேழு நாடுகளில், மேற்கூறிய இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே அவர்கள் மட்டுமே ஆளுமை உரிமைபெற முடியும். ஏனெனில் அவையிரண்டுமே இன்றைய நிலையில் அவர்களின் தாய் நாடுகள். வரலாற்று அடிப்படையில் இந்த இரண்டு நாட்டிலும் அவர்களுக்குள்ள ஆளுமை உரிமையை, வேறு எந்த நாட்டு அரசாலும் இனத்தாலும் மறுத்துவிடவோ, அல்லது மறைத்துவிடவோ முடியாது.

கடந்த காலங்களில் தமிழினத்துக்கு நேர்ந்த வாழ்வுரிமைத் தாக்கங்களால் மீண்டும் இவ்வினத்துக்கு உரிமை உணர்வு இக்கால் கிளர்ந்தெழுந்துள்ளது. அவ்வுணர்வைச் செயற்படுத்துவதற்குரிய முழுத் தகுதியும் முழுவுரிமையும் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழ்ந்து வரும் தமிழர்களே! இரண்டு நாடுகளிலுமே அவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தோன்றியதும் இவ்விரு நாடுகளையும் உள்ளடக்கிய இலெமூரியா என்னும் இந்நிலப்பகுதியிலேயே ஆகும்! எனவே அவர்களின் இனவுரிமைத் தாக்கத்தையும் வாழ்வுரிமைச் சிக்கலையும் முன்வைத்து ஆட்சியுரிமைக் கோரிக்கைக்கு எழுச்சிக் குரல் கொடுப்பார்களேயானால் அவர்களைத் தடுத்து நிறுத்திவிடவும், அவர்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிடவும் உலகில் இன்றுள்ள எந்த ஆற்றலாலும் இயலாது. அந்த அளவுக்கு இந் நிலவுருண்டைப் பகுதியில் நிலவுரிமை படைத்தவர்கள், அவர்கள்!

தமிழர் வாழ்வுரிமை பெறத் தக்கனவாகிய மேற்கண்ட இரண்டு நாடுகளில், இன்றைய நிலையில் இலங்கை வாழ் தமிழர்களே ஆட்சியுரிமைக்குப் போராடும் வகையில் கிளர்ச்சியுற்றுப் போராடத் தலைப்பட்டுள்ளனர். அவர்களின் தமிழீழத் தனி நாட்டுப் போராட்டம் பல்வேறு அரசியல் உரிமைக்குப் பின்னர் வடிவம் பெற்றதாகும். அது கடந்த முப்பத்தைந்தாண்டுக் காலமாக நடந்து வருவது, அவ்வகையில் இலங்கைத் தமிழினச் சிறுபான்மையரை ஒடுக்கி அடக்கி ஆண்டு கொண்டுள்ள, சிங்களப் பெருபான்மையினம், அங்குள்ள தமிழரை முற்றாக அழிப்பதற்கே திட்டமிட்டுள்ளது என்பதைக் கடந்தகால இன அழிப்புக் கலவரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

கடந்த சூலை மாதக் கலவரம் இதுவரை அங்கு நேர்ந்த கலவரங்கள் அனைத்துக்கும் கொடுமுடியானது; கொடுமையானது. அரசு படைத்துறை, காவல்துறை, சிங்கள மக்கள் ஆகிய நான்கு ஆற்றல்களும் ஒருமுகமாக அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நின்று, நேரடியாக அவர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இவ்வினப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காண இன்று இந்தியா அதில் தலையிட்டுள்ளது. அதன் தலையீடு நல்ல நோக்கத்துடன் அமைந்ததாக, அதன் நடைமுறைகளைக் கொண்டு கணிக்க முடியவில்லை. அதன் தொடக்கமே தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழீழம் தனியே பிரிந்தாலன்றி, இலங்கையிலுள்ள தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கு வழியே இல்லை; அந்த நம்பிக்கை யெல்லாம் கடந்த கால இனக் கலவரங்களின் வழி முழுதுமாக அழிக்கப்பட்டு விட்டன. தமிழீழக் கோரிக்கையின் வெற்றியில்தான் எதிர்காலத் தமிழினத்தின் வாழ்வு அமைந்து கிடக்கிறது. அடிமையுற்றுக் கிடக்கும் தமிழினத்திற்கு, இவ்விரண்டு உரிமைத் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்றேனும் தன்னரசு பெற்றால்தான், எதிர்கால முன்னேற்றத்திற்கு வழியுண்டு. எனவே, இரண்டு நாடுகளில் முன் விழிப்புள்ள தமிழீழக் கோரிக்கையை வெற்றி பெறச் செய்வதில் உலகத் தமிழினம் முழுவதுமாக முனைந்து பாடுபடுவது ஒரு தேவையும் காலத்தின் கட்டாயமுமாக அமைந்துவிட்டது.

ஆனால், தமிழீழக் கோரிக்கையின் வெற்றி, அதன் அண்டை நாடான தமிழ்நாட்டிலும் ஒரு தன்னாட்சிக் கோரிக்கையை எழுப்பி விடுமோ என்று இந்திரா அரசு அஞ்சுவதாகத் தெரிகிறது. இந்த அச்சத்தின் அடிப்படையில் அது தமிழீழக் கோரிக்கை வெற்றிக்கு முழு அளவில் உதவுவது என்பதும் ஒரு கனவேயாகும். எனவே அதன் முயற்சி தமிழீழ விடுதலைக்கு எவ்வகையானும் பயன்படவே முடியாது. அவ்வாறின்றி, அது தமிழீழக் கோரிக்கை தவிர்த்த வேறு தீர்வுக்கு முயற்சி செய்வதைத் தமிழர்கள் எள்ளளவும் ஏற்கமாட்டார்கள்.

இந்த இக்கட்டான இன அழிவுச் சுழலில் இந்திய(இந்திரா) அரசுக்கு நாம் கூறுவதும் எச்சரிப்பதும் இதுதான். ஒருவேளை, ஓரின உணர்வின் அடிப்படையில் செயவர்த்தனேயின் தமிழின அழிம்பு முயற்சிகளுக்கு ஆதரவாகவும், தமிழீழ விடுதலை நோக்கத்திற்கு எதிராகவும், இந்திரா காந்தி, நடுநிலைத் தீர்வு செய்வது போன்ற வெளிப்படை முயற்சியில், மறைமுகமாகவும் தந்திரமாகவும் செயல்பட்டு, செயவர்த்தனேயின் நோக்கத்திற்கு வெற்றியையும், தமிழீழக் கோரிக்கைக்குத் தோல்வியையும் ஏற்படுத்திக் கொடுப்பாரானால், அல்லது அதில் விரைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஒரு காலத்தாழ்வை இடையில் புகுத்தி, தமிழின உணர்வைத் தணிவிக்கும் சூழ்ச்சியில் ஈடுபடுவாரானால், அந்நிலை, இந்தியாவிலும் எதிரொலியை ஏற்படுத்தித் தனித்தமிழ்நாட்டுப் போராட்டத்திற்கு உரமிட்டது போல் ஆகும் என்று எச்சரிக்க விரும்புகின்றோம். ஓர் இனம் அடிமைத்தனத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து போவதைவிட, உரிமைப் போராட்டத்தில் ஒரேயடியாக மாண்டு போவதையே நாம் விரும்புகிறோம். ஏனெனில் விடுதலையுணர்வு என்பது அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தில் இயல்பாகத் தோன்றுவது. அது வலுப்பெறுமானால், எத்துணைக் கொடுமையான வல்லாண்மைப் போக்கையும் எதிர்கொள்ளத்தக்கது என்பதை ஆள்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

- தமிழ்நிலம், இதழ் எண். 23, செபுதம்பர், 1983