வேண்டும் விடுதலை/தமிழ்த்தேசிய இனவுணர்வாளர்கள் ஒன்றுசேரவேண்டும்

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழ்த்தேசிய இனவுணர்வாளர்கள்
ஒன்றுசேரவேண்டும்!


ந்தியாவில் அடுத்துவரும் காலம் தேசிய இனவிடுதலைப் போராட்டக் காலமாகும். இதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

பஞ்சாபில் இறுதியாக அரசு மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஓர் ஆளும் பிரிவும் இயல்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே. எனவே அதுபற்றி யாரும் அச்சமடையவோ கலக்கமடையவோ தேவையில்லை. ஆனால் இப்போராட்டக் கலவரங்களுக்குப் பின்னர் படிநிலை வளர்ச்சியுறும் (பரிணாமமுறும்) மக்கள் மனவெழுச்சிகளுக்கு நாம் முகாமை (முக்கியத்துவம்) அளிக்க வேண்டும்.

ஒரு நாடு எவ்வளவு முகாமையானதோ அவ்வளவு முகாமையானவர்கள் அதன் மக்கள். இனி, மக்களில் ஆளும் பிரிவினராகிய ஆட்சியாளர்க்குச் சார்பாக இயங்குபவர்கள் எவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களோ, அவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களே, அவர்களுக்கு எதிரானவர்களும். குடியரசமைப்பின் நேர்மையான அரசியல் இலக்கணம் இது. எனவே, ஆட்சியாளர்க்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினர் கிளர்ந்து எழுகிறார்களென்றால், அக் கிளர்ச்சியினை அடக்கியொடுக்க அரசினர் முனைவது குடியரசு அமைப்பு முறைப்படி அறியாமையிலும் அறியாமையாகும். கொள்கை முடிவுகள் (சித்தாந்தங்கள்) என்றும் சாவதில்லை; அவற்றைச் சாகடிக்கவும் முடியாது.

குடியரசுக் கொள்கைப்படி, இணைப்பாட்சிக்கு எத்துணை மதிப்புண்டோ அத்துணை மதிப்பு தனிப்பிரிவு ஆட்சிக்கும் உண்டு. பல்வேறின மக்களின் மனவுணர்வைப் பொறுத்த செய்திகளே இவை! “இந்தியா ஒருநாடு” என்று நிலக்கோள அமைப்பை வலியுறுத்திப் பேசும், ஆட்சியாளர்கள், மக்களின் அமைப்புக்கும் அதைப் பொருத்திக் காட்டிவிட முடியாது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இந்தியா, இதில் எந்தக் கருத்து வேறுபாட்டுக்கும் இடமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு மந்திரமாயப் புரட்டுப் போல், இந்தியா ஓராட்சி முறையில் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அதில் தங்கள் தந்நலவுணர்வு தவிர வேறு அடிப்படைகளைக் காரணங்களாக காட்டிவிட முடியாது. இந்த உணர்வும் ஒருமைப்பாடும் ஆட்டங் காண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே பஞ்சாப், அசாம், நாகலாந்து, மிசோராம் முதலிய இனக் கலவரப் போராட்டங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தேசிய இன விடுதலை உணர்வு என்றோ கனிந்து பயன் நல்கியிருக்க வேண்டும். கொளுத்தப்பட்ட வெடி இடையில் அணைந்துவிட்டது போல், ஏனோ சூடு மங்கிக் கிடக்கிறது. இதற்கு மூலக் காரணம் இங்குள்ள பல்முனைப் போராட்ட முயற்சிகளே ஆகும். பல்முனைப் போராட்ட முயற்சிகள் எப்பொழுதும் இனவிடுதலையைப் பின்னடைவு செய்வன ஆகும் என்பதை, இங்குள்ள இன விடுதலைத் தலைவர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரசியல், குமுகாயத் தலைவர்கள் உணராமல் இருக்கிறார்கள். உணராமல் இருக்கிறார்களோ, அல்லது உணர்ந்தும் துணியாதவர்களாக இருக்கிறார்களோ, நாம் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.

தமிழினத்தின் ஒட்டுமொத்த நலமே, தமிழக விடுதலையில் தான் இருக்கிறது என்பதைத் தமிழின மக்களில் பெரும்பாலார் உணர்ந்திருந்தும், இவ் விடுதலை முயற்சிகள் ஏனோ இன்னும் இங்குத் தலையெழுச்சி கொள்ளாமல் இருக்கிறது. இவ்வெழுச்சி காலத்தால் தூண்டப்பெறுவதற்கும், வழிநடத்திச் செல்லப் பெறுவதற்கும் உரிய தலைவர்கள், மக்களைப் பல்வேறு திசைதிருப்பு முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழினம் இன்று எழுச்சி கொள்ளாவிடில், இதன் உள்ளுணர்வும், உந்து வேகமும் காலத்தால் கரியாகிப் போய்விடும் என்று நாம் அஞ்ச வேண்டியுள்ளது.

எனவே, பஞ்சாபியரின் போர்க்குணமும், வீர வெடிப்புகளும் உடனடியாகத் தமிழர்களிடம் தோன்றியாக வேண்டும். அதன் உந்து விசையை ஒருமுகப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி தமிழ்த்தேசிய இன விடுதலையை விரும்பித் தவங்கிடக்கும் இளைஞர்களிடையில் காழ்கொண்டு எழுச்சி பெறுதல் இன்றைய நிலையில் மிக மிக இன்றியமையாதது.

இதுதொடர்பாக, விரைவில் சென்னையில் ஒரு கலந்துரையாடலை நாம் தொடங்கியாக வேண்டும். அம் முயற்சியின் வரவேற்பைப் பொறுத்தது அதன் செயற்பாடு, எனவே, இம்முயற்சியை முழுமனவுணர்வுடன் வரவேற்கும் தனி மறவுணர்வுள்ளங்களும், ஆங்காங்குக் கிளர்ந்துள்ள இன விடுதலைச் சிற்றியக்கங்களும் ஒன்றிணைந்து ஒரு விடுதலைக் கூட்டணியை உருவாக்க முன்வருதல் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அத்தகைய துணிவான செயல்களுக்குத் தம்மை உள்ளாக்கிக்கொள்ள விழையும் உணர்வாளர்கள் உடனடியாக எங்களுக்குத் தம் உறுதி மொழிகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்! வெல்க, தமிழ்த்தேசிய இன, நாட்டு விடுதலை முயற்சிகள்!

- தமிழ்நிலம், இதழ் எண், 39, சூன், 1984