வேண்டும் விடுதலை/விடுதலைப் பாசறை கட்டமைக்கப்படுகிறது

விக்கிமூலம் இலிருந்து

 
விடுதலைப் பாசறை கட்டமைக்கப்படுகிறது!


ரும் மே மாதம் 5, 6ஆம் பக்கல்களில், தென்னார்க்காடு மாவட்டம், பெண்ணாடகத்தில 'தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு'ம், ‘தேசிய இனங்களின் விடுதலை மாநாடு'ம் நடைபெற விருக்கின்றன. மாநாடுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பெற்று வருகின்றன. தமிழின, தமிழ்நாட்டு மறுமலர்ச்சியையும் விடுதலையையும் விரும்பும் அனைத்து உள்ளங்களும் தவறாமல், தவிர்க்காமல் மாநாடுகளுக்கு வந்திருந்து, நல்ல எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறுவதற்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பொதுவாகவே, மாநாடுகளை நடத்துவதிலும் பேரணிகள், ஊர்வலங்கள் போவதிலும் நமக்கு நம்பிக்கையில்லை. ஆனால், குடியரசு நாட்டில், இப்பொழுதைய வல்லாட்சியதிகாரமும், மக்கள் உரிமைக் கோரிக்கைகளை அடக்கியொடுக்கும் ஆட்சிப் போக்கும் உள்ள நிலையில், நேர்மையான முறையில், நம் கருத்துகளை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துக் கூற இவற்றைத் தவிர வேறு வழிகள் இல்லை. எனவேதான் நாமும் இடையிடையே கூட்டங்களைக் கூட்ட வேண்டியிருக்கின்றது. பிறர் கூட்டும் கூட்டங்களில் சில நேரங்களில் கலந்துகொள்ளவும் வேண்டி யிருக்கின்றது. ஆனால், இவ்வகை முயற்சிகளே போதுமானவையாகவும், தொடர்ந்து செய்யக் கூடியனவாகவும் இருக்க வேண்டும் என்பது நம் கொள்கையன்று. மேலும் இத்தகைய மாநாடுகள், பேரணிகள் என்பவற்றைக் கூறிப் பொதுமக்களிடம், பொருளியல் சுரண்டல் நடத்துவதும் நமக்கு விருப்பமான செயல் அன்று. நம்மிடம் போதுமான பொருள்வள வாய்ப்பிருந்தால், பொது மக்கள் உதவியில்லாமலேயே இவற்றைச் செய்துகாட்ட இயலும். ஆனால் இதை இப்பொழுது கூறி என்னபயன்?

இக்கால் நடைபெறவிருக்கும் மாநாடு, நம் எதிர்காலக் கொள்கையையும் நடவடிக்கையையும் ஓரளவு உறுதி செய்யப் பயன்படும் என்றே நாம் கருதுகிறோம் ஆனாலும் இம் மாநாடு நாம்மட்டும் தனித்துக் கூட்டுகின்ற ஒன்றன்று; கொள்கைத் தீவிரமும், மக்கள் நல நோக்கமும் உண்மையான உறுதியான செயற்பாடும் உள்ள நான்கைந்து இயக்கங்கள் கூடி அமைக்கும் மாநாடுகள் இவை. எனவே, வெளிப்படையான பயன் இப்பொழுதைக்குக் குறைவாக இருந்தாலும், எதிர்காலத் திட்ட அமைப்பிற்கு இம் மாநாட்டுச் செயற்பாடுகள் வலிவான அடிப்படைகளைக் கட்டாயம் தோற்றுவிக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

உண்மையான இனநலங் கருதுபவர்கள் தங்கள் பாங்கில் ஏதாவது இயன்ற அளவு செய்து கொண்டிருப்பார்களே தவிர, பிறரின் செயல்களை மூக்கறுப்பதும், முடக்கம் செய்வதும் ஆகிய தன்னம்பிக்கைக் குறைவான வேலைகளில் என்றும் ஈடுபடக் கூசுவார்கள். ஆனால், நம் தமிழினத்தைப் பொறுத்த மட்டில் வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பொதுநலத்தையும் ஒரு வாணிகமாகக் கருதி, இவ்வகையில் முயற்சி செய்யும் பிற அணியினரை ஒடுக்கவும் ஒழிக்கவும் பார்க்கின்றனரே தவிர, எங்கிருந்து வரினும் எவ்வகையில் வரினும் பொதுநல, இனநல முயற்சிகளை வரவேற்றுப் போற்றிக்கொள்ள மனமற்றவர்களாகவே உள்ளது வருந்தத்தக்கது. நம் தமிழினப் பொதுமை நல உணர்வு இன்னும் படிநிலை வளர்ச்சி எய்தவேண்டும் என்பதையே வன்மையாக இது காட்டுகிறது.

இனி, நாம் இன நலத்துக்கென்று முயற்சி செய்கையில், அந்நலத்துக்கான பல்வேறு கூறுகளில் ஒவ்வொன்றுக்குமாக ஒவ்வொரு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தேவையற்றதும், மக்களைத் திசை திருப்புவதுமான ஒரு முயற்சியே என்பது நம் தெளிவான கருத்து நம் தமிழினத்தைப் பொறுத்த அளவில் நமக்கு வந்துற்ற வீழ்ச்சிகளைப் பார்க்குமிடத்து, நம் இன, நாட்டு விடுதலைக்காக ஒட்டுமொத்தமான ஒரு முயற்சியையே படிப்படியாக வளர்த்தெடுக்க வேண்டுமேயல்லாமல், வேறு எந்த வகையான சிறு சிறு முயற்சியும் அறவே பயனில்லாமல் போய்விடும் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இந்தியெதிர்ப்புக்காக ஒரு போராட்டம், வகுப்புரிமைக்காக ஒரு முயற்சி, மாநில உரிமைகளுக்காக ஓர் அறைகூவல், என்பன போன்றவை யெல்லாம் சிறு சிறு முயற்சிகளே ஆகும். இவையனைத்தையும் உள்ளடக்கிய நாட்டு விடுதலையே இக்கால் நமக்கு வேண்டப் பெறுவது.

இம்முயற்சியில் ஈடுபடும் அல்லது கருத்து வளர்க்கும் இயக்கங்கள் மிகமிகக் குறைவே. 'தமிழ்நாடு தமிழர்க்கே' என்னும் கொள்கைக் குரலை ஓங்கி ஒலிக்கவே அஞ்சிக் கொண்டுள்ளவர்கள், தமிழினத்திற்கொன்றும் பெரிதாகச் செய்துவிட முடியவே முடியாது. வெறும் விளம்பர வளர்ச்சிக்கும், பொருள் வாய்ப்புகளுக்குமே அம் முயற்சிகள் பயன்படலாம். ஆனால் தமிழினத்தை முன்னேற்றுவதற்கு அவை ஒரு விரல் நுனியளவும் பயன்பட முடியாது.

இக் கால் நடைபெறவிருக்கும் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளவர்கள் ஒன்றும் ஊரை ஏமாற்றி உலையில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லர். உண்மையான இன நாட்டு விடுதலைக்காகத் தங்களையே ஈகப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களின் கடந்தகால தொடர்ந்த வரலாறுகள் இவற்றைத் தெளிவாக உணர்த்தும் அவர்கள் மேல் பல குறைகளும் இழிவுகளும் பழிகளும் கூறிக் கொண்டிருப்பவர்கள் ஒன்றால், அவர்களின் நடவடிக்கைகளை நேரிடையாக உணராதவர்களாக இருக்க வேண்டும்; அன்றால், அவர்கள் நிலைப்பாடுகளிலும் வினைப் பாடுகளிலும் பொறாமை கொண்ட தந்நல உணர்வாளர்களாக இருக்க வேண்டும். இனி, இவர்கள் செய்கின்ற இடைத்தடுப்புச் செயல்களும், மூடி மறைப்புகளும், ஊடறுப்புகளும், வஞ்சகங்களும், உண்மையான நம் முயற்சிகளுக்குச் சிறு சிறு தொல்லைகளாக இருக்குமே தவிர, எல்லைகளாக இருக்க முடியாது.

எனவே, நடக்க விருக்கும் மாநாடுகள் உண்மையான இனநல, நாட்டுநல உரிமை மீட்புகளுக்கானவை, என்று கருதி, அனைவரும் இவற்றுக்கு ஒத்துழைப்புத்தரக் கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலைப் பாசறை கட்டமைக்கப் பெறுகிறது! திட்டங்கள் வகுக்கப்பெறுகின்றன. செயல் மறவர்கள் அனைவரும் தவறாது வந்துகூடி ஒன்றிணைந்து வினைப்பகிர்வு செய்து கொள்ள வேண்டுவது நம் கடமையாகும்! காலக் கட்டாயமுமாகும்!

- தமிழ்நிலம், இதழ் எண். 34 மார்ச்சு 1984