வேமனர்/சொற்றோகுதியும் குறிப்புகளும்

விக்கிமூலம் இலிருந்து
பின்னிணைப்பு-3

சொற்றோகுதியும் குறிப்புகளும்

அட்டங்கி : இப்பொழுது குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். புரோலயாவேமா (14-ம் நூற்) என்ற ரெட்டி அரசர் காலத்தில் இவ்வூர் தலைநகராக இருந்தபொழுது பெரும் புகழுடன் திகழ்ந்தது.

அத்வைத வேதாந்தம்: கெளடபாதர் என்பவரால் முதன் முதலாக இந்தியாவில் ஒழுங்குபடுத்தியுரைக்கப்பெற்றது. இதற்குச் சிறந்த விளக்கம் நல்கியவர் சங்கரர்.

அபினவகுப்தர் : (ஏறக்குறைய கி.பி. 1000). இவர் தத்துவ அறிஞர்; அணியியல் வல்லுநர்.

அப்பகவி : காக்குநூரி அப்பகவி என்பவர் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கண யாப்பு நூல்களின் ஆசிரியர். நன்னயரால் எழுதப் பெற்றதாகக் கருதப்பெறும் வடமொழி நூலாகிய ஆந்திர சப்த சிந்தாமணி என்ற நூலினை மொழி பெயர்த்து மேலும் பல புதிய பொருள்களைச் சேர்த்துள்ளார்.

அமரகோசம் : கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், (வின்டர்னிட்ஸ் கருத்துப்படி) வாழ்ந்தவராகப் கருதப்பெறும் அமரசிம்மர் என்ற புத்த சமயத்தவரால் தொகுக்கப் பெற்ற மிகவும் புகழ் பெற்ற வடமொழிப் பேரகராதி. இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பெற்ற ஒரு பொருள் பல சொற்களைக் கொண்ட அகராதியாகும். அமரகோசத்திற்குக் கிட்டத்தட்ட ஐம்பது உரைகள் உள்ளன.

அரம்பை : தேவர்களும் அரக்கர்களும் அமுதம் பெற வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அக்கடலினின்றும் எழுந்த உம்பர் உலக அழகி. தன்னைவிட முனிவர்கள் சிறந்த மதிப்பைப் பெற்றுத் தன்னை ஒதுக்கி விடுவர் எனக் கருதி அவர்களை வசியம் செய்து தவறாண நெறியில் செலுத்துவதற்கு இவள் அடிக்கடி இப்புவிக்கு இந்திரனால் அனுப்பப்பெறுபவள்.

அருந்ததி வசிட்டரின் மனைவி. ஒரு குறிக்கோள் துணைவி என மதிப்புடன் போற்றப் பெறுகின்றவள். தீண்டத்தகாத வகுப்பினைச் சேர்ந்தவர். அருந்ததி என்பது அதிகாலையில் தோன்றும் ஒரு நட்சத்திரமுமாகும்.

அலங்கார சாத்திரங்கள்: அணியியல் நூல்கள். எம். வின்டர்னிட்ஸ் கூறுகிறார்: "மிகப் பண்டுதொட்டே இந்தியாவில் 'அணியியல் ஓர் அறிவியல்போல் பேணி வளர்க்கப் பெற்றுள்ளது'. கவிஞர்கட்குத் துணையாக இருப்பதைவிட அவர்கட்குத் தடையாக இருக்கும் அளவுக்கு அது தீவிரமாகப் பேணி வளர்க்கப்பெற்றது.

ஆந்திரம்: ஆந்திரம், தெலுங்கு என்பன ஒரே பொருளையுடையவை. இவை மக்களையும், நிலப் பகுதியையும், மொழியையும் குறிக்கும். ஆந்திரர்கள் மிகப் பழங்குடி மக்கள்; இந்து சமயத்தின் மிகப் பெரிய பழங்கால நூலாகிய ஐத்திரேய பிராமணத்தில் இவர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளனர். இவர்களுடைய மொழி திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்திய யூனியனைச் சேர்ந்த பல மாநிலங்களில் ஆந்திரமும் ஒன்று, இஃது இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பு 275, 280 சதுர கிலோ மீட்டர்கள். 1961 மக்கட் கணிப்புக் கணக்குப்படி இம்மாநிலத்தின் மக்கள் தொகை 35, 983,477 ஆகும்.

ஆந்திர சரஸ்வத பரிஷத்: இஃது ஒர் இலக்கிய ஆராய்ச்சி அமைப்பாகும். முதன் முதலாக 1911-ல் சென்னையில் தொடங்கப் பெற்றது; பின்னர் இதன் நூலகமும் அலுவலகமும் காக்கிநாடாவிற்கு மாற்றப் பெற்றன. மிகவும் வள்ளண்மை வாய்ந்த பித்தாபுரம் மாமன்னரான திரு ராவ் வேங்கட்ட கூர்ம மகிபதி சூர்ய ராவ் என்பவர் இதன் புரவலர்களுள் ஒருவராவர். இதன் நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஓலைச் சுவடிக் கையெழுத்துப் படிகள் உள்ளன.

இராமகவி, துரக: சிறந்த தெலுங்குக் கவிஞர். சினமூட்டப் பெற்றால் கீழான நிலைக்கு இறங்கக் கூடியவர். வசைபாடுவதில் வல்லவர். கி.பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

இராமர்: இராமாயணத்தின் கதைத் தலைவர். கோசல நாட்டின் பேரரசர் தசரதரின் மகன். விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்று கருதப் பெற்றுப் பல கோடி இந்துக்களால் பூசிக்கப் பெறுபவர்.

இராமசாமி, காவல்லி வேங்கட்ட, (1765-1840) முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதின இந்திய எழுத்தாளர்களின் குழுவைச் சேர்ந்த சவல்லி சகோதரர்களில் ஒருவர். இராமசாமி கல்கத்தா இலக்கியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் பண்டிதராகவும் பணியாற்றியவர். விஸ்வகுணதர்சம் அல்லது இம்மைப்பண்புகளின் கண்ணாடி என்ற நூல் வேங்கடாச்சாரி என்பவரால் எழுதப் பெற்ற வடமொழி நூலின் முதல் மொழி பெயர்ப்பு நூலாகும்; இதுவே இவரது முதல் நூலுமாகும். இது கி.பி. 1825-ல் அச்சிடப் பெற்றது. இவரது அடுத்த நூல் தக்கணக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு என்ற நூலாகும். இது கி.பி. 1829-ல் வெளியாயிற்று. இந்த இரண்டு நூல்களும் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த கல்கத்தாவின் மேலுயர் நீதி மன்ற முதன்மை நீதிபதி சர். எஃப். டபிள்யூ மாக்னட்டன் என்பாருக்கும் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு வில்லியம் பெண்டிங்கிக்கும், அவர்கள் இசைவுபெற்று அன்புக் காணிக்கையாகப் பெற்றதால், இவர், இவர் காலத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற புகழுடனும் மதிப்புடனும் திகழ்ந்திருக்க வேண்டும்.

இராமாநந்தர்: எஃப். இ. கீய் என்பார்க் கருத்துப்படி இராமாநந்தர் கி.பி. 1400 முதல் 1470 வரை உள்ள காலப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்; இவர் கருத்துப்படியே "ஒரே ஒரு கடவுள்தான் உண்டு; அவரைப் புலன்களால் அறிய முடியாது; அவர்தான் இராமர் என்பவர்; ஆனால் உருவ வழிபாடு பற்றியோ, இந்துக்களின் பல தெய்வக் குழுவைப் பற்றியோ, அல்லது பழைய புராணத் தொகுதி பற்றியோ அவரால் மறுக்கப்பெறவில்லை. இவருடைய ஆளுமையின் ஈர்ப்பால் இவரது சீடர்களுள் சூத்திரர், தீண்டத் தகாதவர், இஸ்லாமிய நெசவுக்காரர் (கபீர்) பெண்ணோருத்தி ஆகியோரும் இருந்தனர்.”

இராமாயணம்: இதன் நேர் பொருள் "இராமனின் அலைந்து திரிதல்" என்பது. இராமாயணம் இரண்டு இந்து இதிகாசங்களில் ஒன்று; மற்றோன்று மகாபாரதம். இராமனது நாடு கடத்தல் பற்றியும் அடுத்து அரசனகப் பட்டம் சூட்டிக் கொள்ளுதலைப்பற்றியும் கூறுவதுதான் இதன் கரு அமைப்பாகும் (Theme). வடமொழியில் சிறந்த கவிஞராகிய வால்மீகி என்பவரால் இயற்றப் பெற்றது. நூலின் காலம் இன்னும் வரையறுக்கப் பெறவில்லை; ஆயினும் வின்டர்னிட்ஸ் என்பார் "இராமாயணத்தின் முக்கிய பகுதி வால்மீகியால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும்; அதன் பிறகு பிறர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் பாடல்களைச் சேர்த்துக் கொண்டே போயிருத்தல் வேண்டும்" என்று கூறுவர்.

இராயர் சீமை: குன்றுகள் அடங்கிய ஆந்திரத்தின் உட்பகுதி. இதில் சித்தூர், கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் என்ற நான்கு மாவட்டங்களும் அடங்கும். அடிக்கடி இப்பகுதியில் வறட்சி தோன்றுவதுண்டு.

இராய்தாலர்: சக்கிலி இனத்தைச் சேர்ந்தவராயினும் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் மிகவும் வணக்கத்திற்குரியவராக வாழ்ந்த கவிஞரும் ஞானியும் ஆவார். சிட்டோடாவின் இளவரசியான ஜாலி என்பவர் இவரது பல சீடர்களில் ஒருவர்.

இரால்லப்பள்ளி அருந்த கிருஷ்ண சர்மா: தெலுங்கு, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், பாலி மொழிகளில் வல்லுநரான இவர் ஒரு தலைசிறந்த இசை அறிஞராகவும் திகழ்பவர். சமூக சமயக் கொள்கைகளில் இவர் வைதிகப் போக்குடையவராயினும், சகிப்புத்தன்மையற்றவர் அல்லர்: தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதுபவர். வேமனரைப் பற்றி ஆந்திரப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளை ஆற்றியவர். பாலி மொழியிலிருந்து கீதா-சப்தஸ்தி என்ற நூலைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர். நல்ல இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியவர். கி.பி. 1893-ல் பிறந்த இவர் மைசூர் மகாராசர் கல்லூரியில் கி.பி. 1912 முதல் 1949 வரையில் தெலுங்கு விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இப்பொழுது தன் மக்களுடன் பெங்களூரிலும் திருப்பதியிலுமாக வாழ்கின்றார்.

இராஜமகேந்திரபுரம்" ஆங்கிலத்தில் 'இராஜமந்திரி' என வழங்குகிறது. இந்நகர் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதலாம் அம்மராஜு வாலோ (கி.பி. 921-945) அல்லது இரண்டாம் அம்மராஜு வாலோ (கி.பி. 945-970) நிறுவப்பெற்ற இந்நகர் கீழைச் சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. பிற்காலத்தில் கொண்டவீட்டைச் சார்ந்த ரெட்டி அரசர்களின் ஒரு கிளையினருக்குத் தலைநகராகவும் திகழ்ந்தது. நன்னயர், விரேச்லிங்கம் ஆகியோரின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் ஆந்திர இலக்கிய வரலாற்றில் இஃது ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.

இராஜாஜி (கி.பி. 1879-1976): 'சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்ற முழுப் பெயரின் சுருக்கம் இது. இந்தியாவின் மூத்த அரசியல் வல்லுநரும் காந்தியடிகளின் நெருங்கிய நண்பருமான இவர் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சர், இந்தியக் குடியரசின் உள்துறை அமைச்சர், வங்காளத்தின் ஆளுநர், இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் ஆகிய பதவிகளில் பல்வேறு காலங்களில் சேவை புரிந்தவர். இவருடைய கூரிய அறிவும், சொல் திறனும், தெளிவான எழுத்தும் இவரை எங்கும் அறியச் செய்திருந்தன. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி கி.பி. 1959-ல் சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.

இலக்குமணராவ், கே. வி. (கி.பி. 1877-1923):சிறந்த ஆராய்ச்சி வல்லுநர், வரலாற்று அறிஞர். தெலுங்கில் வீட்டுப் பல்கலைக் கழக நூலகத்தைத் தோற்றுவித்தவர்; இலக்கியம், வாழ்க்கை வரலாறு, வரலாறு, அறிவியல் ஆகிய துறைகளில் தரமான நூல்களை எழுதி வெளியிட்டவர். தெலுங்கில் அனைத்தும் அடங்கிய கலைக் களஞ்சியம் வெளியிடத் திட்டமிட்டார்; அதன் மூன்றாம் தொகுதிப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இறைவனடி சேர்ந்து விட்டார்.

இலக்குமி நரசிம்ஹம், சிலக்கமர்த்தி (கி.பி. 1867-1945):விரேச லிங்கத்தின் சீடரான இவர் ஒரு கவிஞர்; நாடக ஆசிரியர்; வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர்; கட்டுரைகள் எழுதினவர், நகைச்சுவை ததும்ப எழுத வல்லவர். தம்முடைய ஆசிரியருக்குச் சமூக சீர்திருத்தப் பணிகளில் பல்வேறு வகைகளில் துணை செய்தவர். கி.பி. 1910-ல் இவர் கிட்டத்தட்டக் குருடரானார்; ஆயினும், தம் வாழ்நாளின் இறுதி வரையிலும் இவரது எழுத்து வெள்ளம் தடையின்றிச் சென்றுகொண்டிருந்தது.

இலங்கை:இராமரின் துணைவியைத் தூக்கிச் சென்ற இராவணனின் தலைநகர். இந்நகர் இருந்த தீவிற்கும் இலங்கை என்றே பெயர். இராமாயணத்தின் திட்டமான பதிப்பை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பரோடா கீழைநாட்டு ஆய்வு நிலையத்தினர் இன்றைய சிலோன (இலங்கையை) இராவணனின் நாட்டுடன் சேர்த்துப் பேசுவதை ஒப்புக் கொள்வதில்லை.

இலிங்கம்: ஆண் குறியின் வட மொழிப் பெயர். கல்லால் செய்யப் பெற்ற இந்த வடிவங்களைச் சிவபக்தர்கள் வழிபடுகின்றனர்.

இனகொண்டா:(சரியாக உச்சரித்தால் இது வினு கொண்டா என்பது): இந்த நகரமும் இதன் கோட்டையும் ஆந்திர வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இஃது இப்பொழுது குண்டூர் மாவட்டத்திலுள்ளன; இதே பெயரில் இஃது ஒரு வட்டத்தின் தலைமையான இடமாகத் திகழ்கின்றது.

உபநிடதங்கள்:இருநூறுக்கு மேற்பட்ட இப்பெயர் கொண்ட நூல்கள் தத்துவ உரையாடல்களை நுவல்பவை; பெரியவையும் சிறியவையுமான இவை சிறப்பினலும் பெயர்பெற்றவை. இவற்றுள் சில யாப்பு வடிவத்திலும், சில உரைநடையிலும் காணப் பெறுகின்றன. இவற்றின் காலம் புத்தர் காலத்திற்கு முன்னுள்ள காலம் முதல் இக்காலம் வரையிலும் உள்ள காலம் என்பதாக வரையறுக்கப்பெறுகின்றது. அல்லா உப நிடதமும் கிறித்து உபநிடதமும் இன்று உள்ளன. இது போன்று ஒன்றுபடுத்தப்பெற்ற அல்லது வரையறுக்கப் பெற்ற உபநிடதத் தத்துவம் போன்று வேறு ஒரு நூலும் இல்லை என்று சொல்லலாம். டாக்டர் எஸ். இராதாகிருட்டி ணன் கூறுவது: உபநிடதங்களின் நோக்கம் தத்துவ உண்மைகளை மட்டிலும் அடைவதில் இல்லை. . . . ஒன்றுக்கொன்று பொருந்தாதவையும் அறிவியல் முறைக்குப் பொருந்தாதவையும் அவற்றிலுள்ளன. ஏ.பீ. கீத் என்பார் மேலும் தெளிவாக உரைப்பார். அவர் கூறுவது: (உபநிடதங்களின்) கொள்கைகள் வரலாற்றுக் கவர்ச்சிகளைக் கொண்டவை; தத்துவ நோக்கில் இவை சிறிது கூட எண்ணுவதற்குத் தகுதியுடையன அல்ல."

ஊர்வசி:உம்பருலகத்து ஆடலணங்கு. இவளுடைய கண்கவர் வனப்பு குறித்து எழுந்த கட்டுக்கதைகள் ஒரு சிறந்த நாடகத்தை எழுதுவதற்குக் காளிதாசரையும், ஒரு சிறந்த கவிதையைப் படைப்பதற்கு இரவீந்திரநாத தாகூரையும் ஊக்குவித்தன. இவள் வசிட்டர், அகத்தியர் இவர்களுடைய அன்னையாகக் கருதப்பெறுகின்றாள்.

எர்ரப்பிரகடா, எடப்பிடி(கி.பி. 1280-1350):புரோலயா வேமாரெட்டியின் அரண்மனையில் பெரும்புகழுடன் திகழ்ந்த ஒரு பெருங் கவிஞர். இவர் நன்னயர் குறையாக விட்டதும், திக்கனர் தொடாததுமான மகாபாரதத்தின் மூன்றாவது பருவத்தை இவர் மொழி பெயர்த்துத் தலைக்கட்டியவர். இந்த இடைவெளியை நிரப்புவதற்கு மிகத் திறமையுடன் சமாளித்துள்ளார். இவர் இவ்வாறு தொடங்குகிறார்: "நன்னயரின் நடையிலும் புலப்படாத முறையில், திக்கனரின் நடைக்குச் செல்லுகின்றது இந்த இலக்கியம்".மகாபாரதத்தின் இந்த மூன்று மொழி பெயர்ப்பாளர்களும் தெலுங்குக் கவிதையின் முக்கவிகள் (கவித்திரயம்) என்று ஒருசேர சிறப்பிக்கப் பெறுகின்றனர். எர்ரப்பிரகடா வேறு நூல்களையும் செய்துள்ளார்; அவற்றுள் மிகச் சிறந்தது ஹரி வம்சத்தின் மொழி பெயர்ப்பாகும். இவருடைய தனிப்பட்ட சிறப்புப் பெயர் பிரபந்த பரமேஸ்வரர்” என்பது: "பிரபந்தங்களின் தலைவர்" என்பது இதன் பொருளாகும்.

கடப்பை: இராயர் சீமையில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர்: இதன் தலைநகரின் பெயரும் இதுவே.

கண்டிகோட்டா : இது கடப்பை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரம். நகரைச் சுற்றிப் பழைய கோட்டையொன்றும் உள்ளது. வேமனரின் மூத்த சகோதரர் சில காலம் இந்தக் கோட்டையின் தலைவராக இருந்தார் என்ற செய்தி வழங்கி வருகிறது. இதற்குத் தக்க ஆதாரம் இல்லை.

கபீர்:இடைக்கால இந்தியாவிலிருந்த மிகச் சிறந்த மறைமெய்மையாளர்களுள் ஒருவர். இவர் பிறந்த நாள் பற்றிக் கற்று அறிந்த புலவர்களிடையே இன்னும் முடிந்த முடிபு ஏற்படவில்லை; இவர் இறந்த நாள் பற்றியும் இதேநிலைதான்: ஆயினும் பெரும்பாலோர் இவர் காலத்தை 15-ம் நூற்றாண்டு என அறுதியிட்டுள்ளனர். இவருடைய பெற்றோர்கள் பற்றியும் கருத்து வேறுபாடு உள்ளது. இவர் பெற்றோர்கள் இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றும், பிராமணக் கைம்பெண் ஒருத்தியால் கைவிடப் பெற்று இஸ்லாமியப் பெற்றோர்களால் வளர்க்கப் பெற்ற குழந்தையென்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. நெசவுத் தொழிலை மேற் கொண்டிருந்தவர். இராமாநந்தரின் சீடராகிய இவர் சமய வெறியைப் பழித்துக் கூறியவர்; ஒரே கடவுளே வழிபட வேண்டுமென்று பரிந்துரைத்தவர். இக்கடவுள் அல்லாவாகவோ இராமனாகவோ இருக்கலாம் என உரைத்தவர்.

கர்நாடகம்: கன்னடமும் கர்நாடகமும் ஒரு பொருட் சொற்கள்: "ஆந்திரம் என்ற சொல்லைப் போலவே இவை மக்களையும் குறிக்கும்; நாட்டையும் காட்டும்; மொழியையும் உரைக்கும். ஆந்திரத்திற்குத் தென்மேற்கில் கர்நாடகர் மைசூர் மாநிலத்தைக் கொண்டுள்ளனர். மைசூர் மாநிலம் இப்பொழுது கர்நாடக மாநிலம் என்ற பெயரில் வழங்கி வருகிறது.

கர்நூல்: இராயர் சீமையின் மாவட்டத் தலைநகரம்; மாவட்டத்தின் பெயரும் இதுவே. கி.பி. 1953 அக்டோபருக்கும் 1956 அக்டோபருக்கும் இடையிலுள்ள காலத்தில், அதாவது ஆந்திர மாநிலம் அமைக்கப் பெற்ற பின்பும் விசாலாந்திரப் பிரதேசம் உண்டாவதற்கு முன்பும் கர்நூல் மாநிலத்தின் தலைநகராக இருந்து வந்தது.

காக்கத்தியப் பேரரசு: கி.பி. 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெட்ராஜு என்பவரால் நிறுவப் பெற்றது. இதன் தலைநகர் வாரங்கல். பிரதாபருத்திரன் ஆட்சியில் இவன் டெல்லி சுல்தானாகிய கியாஸ் உத்தீன் துக்களக்கின் மகன் உலூக் கான் என்பானால் ஒரு போரில் தோற்கடிக்கப் பெற்றான். இத்துடன் இப் பேரரசும் அழிந்தது. காக்கத்தியப் பேரரசு சிறப்புடன் திகழ்ந்த காலத்தில் இது திரிசிராப்பள்ளி வரையிலும் விரிந்து கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதையும் தன்னாட்சியின் கீழ்க் கொண்டிருந்தது.

காளிதாசர்: இந்தியாவின் தலைசிறந்த சமஸ்கிருதக் கவிஞர்; நாடக ஆசிரியர். இவருடைய இலக்கியங்கள் பழைய சமஸ்கிருதக் கவிதை, நாடகங்களின் கொடுமுடிகள் என்று பொதுவாகப் போற்றப் பெறுகின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இன்னும் தெளிவாக அறுதியிடப் பெறவில்லை. ஆயினும் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில், கி.பி. 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், இவர் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப் பெறுகின்றது. இவருடைய தலைசிறந்த நாடகம் சாகுந்தலம். இவருடைய புகழ் பெற்ற கவிதை மேகதூதம் என்பது. வழக்கிலுள்ள இவரது நூல்கள் யாவும் ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பெற்றுள்ளன.

காந்தியடிகள்: இவரது முழுப் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (கி.பி. 1869-1948) என்பது. இக்காலத்திய ஞானி; மகாத்மா. தம்முடைய அகிம்சைப் போராட்ட முறையில் இந்தியா சுதந்திரம் அடையச் செய்தவர். கி.பி. 1948 சனவரி 30-ம் நாள் இந்து வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பெற்றார்.

கிரியர்சன், சர் ஜார்ஜ் ஆப்ரகாம் (கி.பி. 1851-1941): பல சிறப்புகளுடன் பொருந்திய கற்று உணர்ந்த அறிஞராகிய இவர் கி.பி. 1873-ல் இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்.) அலுவலராகச் சேர்ந்து 1903ல் ஒய்வு பெற்றவர். ஆங்கிலமும் இந்துஸ்தானியும் உட்படப் பல்வேறு இந்திய மொழிகளில் வல்லுநரான இவர் இந்திய மொழி மதிப்பீட்டு அமைப்பின் (Linguistic Survey of India) தலைவராக நியமனம் பெற்றார், இப் பொறுப்பில் இவர் பெரும் புகழுடன் சேவை புரிந்தார்.

கிருஷ்ணன்: வசுதேவரின் மைந்தன், யாதவ குலத்தின் தலைவன். மகாபாரதத்தில் இவன் அரசியல்-தத்துவ வல்லுனனாகப் புகழ் பெற்றுச் சிறந்து திகழ்ந்தவன். பகவத் கீதையின் ஆசிரியன். இராமனுக்கு நிகராக இவனும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப் பெற்று இந்துக்களால் வழிபடப் பெறுகிறான். இந்துக்களின் கடவுளர்களனைவரிலும் பகட்டான தோற்றமும் மிக்க எழுச்சியும், புனைவியல் திறமும் கொண்டு மிகச் சிறப்பாகத் திகழ்கின்றான். கருநீல வண்ணமுடைய இவன் மஞ்சள் நிற ஆடையையணிந்து, குழலூதி ஆயிரக் கணக்கான இளம் பெண்களின் இதயத்தைக் கவர்ந்தவன்.

குண்டூர்: ஆந்திரத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மாவட்டமும் இப் பெயர் கொண்டது.

குரு: ஆசிரியர்; அறிவு புகட்டுபவர். சில சந்தர்ப்பங்களில் இச்சொல் தலைவர் என்ற பொருளிலும் வழங்கி வருகின்றது. 'தொங்கல குரு' (கொள்ளைக்காரர்களின் தலைவன்) என்ற தெலுங்குச் சொற்றொடரில் கொள்ளைக்காரர்களின் தலைவன் என்ற பொருளைக் காணலாம்.

குறள்: தமிழர்களின் தலைசிறந்த நீதி இலக்கியம். தமிழர்களால் 'மறை' எனப் போற்றப்படுவது. நீதி மொழிகளடங்கிய இந்நூல் மூன்று பகுதிகளையுடையது. முதற்பகுதியில் அறமும், இரண்டாம் பகுதியில் பொருளும் (அரசியல் பற்றியது) மூன்றாம் பகுதியில் காதலும் துவலப் பெறுகின்றன. 1330 குறட்பாக்களையுடைய இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.

கொண்டவீடு: ஒரு நகர், கோட்டை, நிலப்பகுதி இவற்றின் பெயர். அனவோத்த வேமாரெட்டி (கி.பி. 1353-1364) என்ற அரசர், இவருக்குப் பின் வந்தவர்கள் இவர்களின் தலைநகர். இடைக்கால ஆந்திர வரலாற்றில் இது பெரும் பங்கு கொண்டது.

கோதாவரி: இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப் பெரிய ஆறு; 1498 கி.மீ. நீளமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கின்றது. இதன் நீளத்தில் கிட்டத்தட்டப் பாதி (720 கி.மீ.) ஆந்திர மாநிலத்தில் பாய்ந்து செல்லுகின்றது. இதன் கரையில் உள்ள மிக முக்கியமான நகர் இராஜ மகேந்திரபுரம் (இராஜமந்திரி).

சங்கரர்: ஈடு எடுப்பற்ற சிந்தனையாளர். எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவராகலாம். அத்வைத வேதாந்தம் என்ற தத்துவத்தை விளக்கியவர். இவரால் நிறுவப் பெற்ற சமய மையங்களின் தலைவர்கள் "சங்கராச்சாரியர்கள்" என்று வழங்கப் பெறுகின்றனர். இப்பொழுது ஐந்து பெரிய சங்கராச்சாரியர்களைத் தவிர வேறு சில சிறிய சங்கராச்சாரியர்களும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக முதல் சங்கராச்சாரியர் "ஆதி சங்கரர்" என்று குறிப்பிடப் பெறுகின்றார்.

சதகம்: தனித்தனியாக முடிவு பெறும் நூறு பாடல்கள்; இவை ஒரே யாப்பில் பாடப் பெறுபவை. "சதகத்தின்" சிறப்பியல்பு மகுடம் அல்லது பல்லவி போன்றதைக் கொண்டிருப்பதாகும்; பாடலின் இறுதிச் சொல் (அல்லது அடி) ஒருவரின் பெயர் அல்லது இதற்கு முன்னருள்ள அடிகளில் பேசப்பெற்ற தெய்வத்தின் பெயர் கொண்டிருக்கும். மகுடம், கையாளப்படும் யாப்பை அறுதியிடுகின்றது. ஆகவே இது பாடலின் அமைப்பிற்கு வடிவம் நல்குகின்றது.

சக்தநூல்: கர்நூலின் பழைய பெயர்.

சர்க்கார், பினாய்குமார் (கி.பி. 1887-1949): வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் மிகுதியாகவும் சிறப்பாகவும் எழுதிக் குவித்த திறமை மிக்க வித்தகர். ஒரு சிறந்த பொருளியல் அறிஞர் என்றும், சமூக இயல் வல்லுநர் என்றும் உலகப் புகழைப் பெற்றவர். பல மொழிகளில் பெயர்க்கப்பெற்ற இவரது நூல்கள் பல நாடுகளின் கல்விக்குறியனவும் பிற வற்றிற்குரியனவுமான நற்பெயர்களை அவருக்கு நல்கின.

சர்வக்ஞர்: இவருடைய உண்மையான பெயர் "புஷ்ப தத்தர்" என்பது; ஒரு சூத்திரக் கைம்பெண்ணுக்கும் ஒரு பிராமணனுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருடைய படிப்பினைகள் கிட்டத்தட்ட வேமனருடையவைபோல் உள்ளன. இ.பி.ரைஸ் என்பார் இவர் கிட்டதட்ட கி.பி. 1600-ல் வாழ்ந்தவராகக் கருதுகின்றார்; ஆனால் ஒருவரும் இவருடைய காலத்தைப்பற்றி வரையறுத்திலர்.

சிரீசைலம்: இந்தியாவின் ஒரு சிறந்த யாத்திரீகத் தலம். சிவனை வழிபடுவோர் மிகச் சிறந்த தெய்விகமாக பன்னிரண்டு இலிங்கங்களுள் ஒன்று இங்கு இருப்பதாக நம்புகின்றனர்: மராட்டியப் பேரரசர் சிவாஜி இப் புனிதத் தலத்திற்கு வந்து போன பல யாத்திரிகர்களுள் ஒருவர். இப்பொழுது நீர்மின்சாரத் திட்டம் ஒன்று இங்குச் செயற்படுகின்றது.

சிரீநாதர் (கி.பி. 1365-1440): அரசர்களின் நண்பரும் அவர்களின் தனிப் பற்றுக்குரியவருமான இவர் ஒரு நாடோடி; ஒரு பெருங் கவிஞர். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் சரி சமமான புலமையுடையவர். எவரும் திகைக்கும்படியான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, வறுமையிலும் நண்பர்களின்றியும் மடிந்தவர்.

சிரிபதி (பண்டித): தெலுங்கு எழுத்தாளர்களில் சைவ சமயத்தை பற்றி முதன் முதலாக எழுதியவர். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பாதியில் 'சிவதீபிகை' என்ற நூலை எழுதினவர்.

சிவன்: ('ஷிவன்’ எனவும் உச்சரிப்பதுண்டு): தொடக்கத்தில் இவர் ஆரியரின் கடவுள் அல்லர். 'திரிமூர்த்தி' என்ற கருத்து எழுந்த காலத்திலிருந்து, அதாவது பிரமன் படைப்புக் கடவுளாகவும், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், சிவன் அழிக்கும் கடவுளாகவும் கருதிய காலம் முதல், சிவன் திரி மூர்த்திகளில் ஒருவராக இடம் பெற்றார். ஆனால் சமயப் பற்றுடன் சிவனை வழிபடுவோர் இந்தப் பிரிவினைச் செயல்களையோ, அல்லது பொதுவாக்த் தம்முடைய கடவுளுக்கு அப்பால் விஷ்ணுவிற்கு முந்து நிலையைத் தருவதையோ ஒப்புக் கொள்வதில்லை. இவர்கட்குச் சிவனே முழு முதற் கடவுள். திரிமூர்த்திகளின் மூன்று செயல்களையும் இவர் ஒருவரே மேற்கொள்கிறார் என்று கருதுபவர்கள். 'சிவன்’ என்ற சொல்லுக்கு 'நற்குறியான’ என்பது சரியான பொருள்.

சிவன்ராத்திரி (ஷிவன்ராத்திரி எனவும் உச்சரிப்பதுண்டு): மாசி மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்சு) தேய் பிறையின் பதினான்காவது இரவு. சிவனை வழிபடும் பக்தர்கள் பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவு முழுவதும் விழித்திருப்பர்.

சூத்திரர்: இந்துத் திருமறைகளின்படி முதன்முதலாக பிராமணர்கள் பிரமனின் வாயினின்றும், ஷத்திரியர்கள் அவருடைய புயங்களினின்றும், வைசியர்கள் அவருடைய வயிற்றினின்றும், சூத்திரர்கள் அவருடைய காலடிகளினின்றும் தோன்றினர். இவர்களுடைய தாழ்வான இடத் தோற்றத்தின் காரணமாக இவர்கள் சாதி அமைப்பில் இயல்பாகவே தாழ்வான நிலையை அடைந்தாக வேண்டும். தீண்டத்தகாதவர்களான இவர்கள் பிரமனுடைய பிள்ளைகள் இலராதலின் இவர்கள் சாதிகளினின்றும் நீக்கப் பெற்றனர்.

சோமநாதர், பால்குரிக்கி: தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் இம்மொழிகளின் வளமான எழுத்தாளரான இவர் வீரசைவ சமயத்தைத் தீவிரமாகப் பரப்பி வந்தவர். பசவ புராணத்தைத் தவிர, இவர் எழுதிய வேறு பெரிய நூல்கள் பண்டித ராத்ய சரித்திரம், அனுபவசாரம் என்பவையாகும். இவர் பசவரின் சீடர்.

சைத்தன்யர் (கி.பி. 1486-1533): வங்காள ஞானியர்களுள் இவர் மிக மிகப் புகழ் பெற்றவர். தம்முடைய வாழ்க்கையாலும். போதனையாலும், வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், வேறு பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள பல்வேறு கவிஞர்களை மிகச் சிறந்த பக்திப் பாடல்களை எழுதுவதில் ஊக்குவித்தவர். மனைவி தன் கணவனைச் சரணம் அடைவதைப் போலவே இறைவனிடம் முழு நிறைவான சரணம் அடைதல் வேண்டும் என்பது இவர் கூறும் செய்தியின் அடிப்படையான குறிப்பாகும். இந்தியா முழுவதிலும் சைத்தன்ய வழிபாட்டு முறையைத் தழுவியவர்கள் பல கோடி மக்களாவர்.

சைவர்கள்: சிவனை வழிபடுவோர் சைவர்கள் என வழங்கப்படுகின்றனர். இவர்களுள் எதிர்ப்பார்வமுள்ள பகுதியினர் வீரசைவர்களாவர்.

ஞானதேவர் (கி.பி. 1275-1295): மராட்டிய ஞானியருள் தலை சிறந்தவர். இவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர். பகவத் கீதையின் உரையான ஞானேஸ்வரி என்ற நூல் இவற்றுள் மிகச் சிறந்ததாகும்.

டுபாய்ஸ், ஜே. பி.: கிட்டத்தட்ட கி.பி.1770-ல் பிறந்த இவர் ஒரு ஃபிரெஞ்சு மதகுரு. தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட இவர் முப்பத்தொரு ஆண்டுகள் கிறித்தவ சமயப் பரப்பாளராகக் காலங் கழித்தார். உள்ளுருக் கொத்த ஆடையணிந்து உள் நாட்டுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு சாதாரண மக்களிடையே அவர்களுள் ஒருவராக வாழ்ந்தார். இவருடைய "இக்துக்களின் தோரணைகளும், பழக்கங்களும், ஆசாரங்களும்" என்ற நூல் கி.பி. 1792-க்கும் 1823க்கும் இடையில் வாழ்ந்த இந்துச் சமூகத்தினரைப் பற்றிய நம்பகமான செய்தியைத் தருகின்றது.

தண்டி: அணி இலக்கண ஆசிரியர். இவருடைய காலம் இன்னும் உயிருள்ள வாதத்திலேயே உள்ளது. இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்திருத்தல் கூடும்.

தர்மசாத்திரங்கள்: இந்துக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அவர்களை நெறிப் படுத்துவதற்காக அமைந்த சட்டத் தொகுதிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முனிவரால் எழுதப் பெற்றதாகக் கருதப்பெறுகின்றது. சாதியின் படிமரபினையும் படிமரபின் மேல் எல்லையில் இருப்பவர்களின் உரிமைகளையும் காப்பதையே அச்சட்டத் தொகுதி மிகவும் முக்கியமாக வற்புறுத்துகின்றது. கிட்டத்தட்ட ஐம்பது சட்டங்களில் மனு, யக்ஞவாக்கியர், பராசரர், கௌதமர், ஆபஸ்தம்பர் ஆகியோர் எழுதிய சில சட்டங்கள் பெரியவையாகும்.

தமிழ்நாடு: ஆந்திரத்திற்கு நேர்த் தெற்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி. இது கன்னியாகுமரி வரையிலும் நீண்டுள்ளது. சென்னை மாநிலம் என்ற பழைய பெயர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று மாற்றப் பெற்றது. தெற்கத்திய மாநிலங்களில் மிகவும் முன்னேற்ற டைந்த மாநிலம். ஆந்திரத்தை விடச் சிறிதான இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 336,86,953 (1961-மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி).

தாகூர், இரவீந்தரநாத (கி.பி. 1861-1941): காளிதாசர், பவபூதி இவர்கட்குப் பின்னர் இந்தியாவில் தோன்றிய மிகப் பெருங்கவிஞர். 1913-ல் இலக்கியத்திற்கு நோபெல் பரிசு பெற்றவர்.

தாது (கி.பி. 1554-1603): ஒரு சிறந்த கவிஞர்; திருத்தொண்டர். தம்பெயரில் ஒரு வழிபாட்டு முறையை நிறுவியவர்: ஆமதாபாத் இவர் பிறப்பிடம்: ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை இராஜஸ்தான் மாநிலத்தில் கழித்தவர்.

திக்கனர்: கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்: அரசியல் வல்லுநர். தெலுங்குக் கவிஞர்களுள் மிகப் பெரிய கவிஞர்; இவர் "கவிப் பிரமன்" (கவிஞர்களுள் முதன்மையானவர்). நான்காவது பர்வம் தொடங்கி எஞ்சிய மகாபாரதம் முழுவதையும் தெலுங்கில் மொழி பெயர்த்தவர். தத்துவஞானியாக இல்லாத ஒர் அரசியல் வல்லுநராக இருந்தபடியால் அந்தப் பெருங்காப்பியத்தில் பகவத் கீதைப் பகுதியை மொழி பெயர்க்காது விட்டார். அரசியல் சூழ்ச்சியைப்பற்றியும் போர் முறைபற்றியும் அக் காவியத்தில் துவலும் பகுதிகளைத் தெலுங்கில் மொழி பெயர்த்துச் சிறப்பெய்தியவர். தம்முடைய அரசப் புரவலராகிய மனுமசித்தியின் அரசு அண்மை நாட்டு அரசரால் கைப்பற்றப் பெற்ற பொழுது, வாரங்கல் அரசர் கணபதி தேவரின் துணையை நாடி, சேனையைக் கொணர்ந்து கைப்பற்றியவரைத் துரத்தி அடித்தவர்.

திருவள்ளுவர்: சமணராயினும் அல்லராயினும் குறளாசிரியர் உறுதியாகத் தாழ்ந்த வகுப்பினரைச் சார்ந்தவரே. உண்மையில் இவருக்கு வழங்கும் பெயர் (இது அவருடைய உண்மையான பெயரன்று) "வள்ளுவர் வகுப்பைச் சார்ந்த ஒரு திருத்தொண்டர்" என்று பொருள்படுகின்றது; வள்ளுவர்கள் உயர் சாதி மக்களன்று. இவருடைய காலமும் இன்னும் சரியாக அறுதியிடப் பெறவில்லை; பல்வேறு ஆய்வாளர்கள் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலப் பகுதிகளை இவர் வாழ்ந்த காலமாகக் கருதுகின்றனர்.

துக்கராம் (கி.பி. 1598-1649): மராட்டிய நாட்டின் கவிஞர்; திருத் தொண்டர். இவர் ஒரு சிறு வணிகர்; ஆயினும் இவர் மராட்டிய மன்னர் சிவாஜி அனுப்பிய நன்கொடைகளை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்; இவர் வளமான எழுத்தாளர்; 4,600 பாசுரங்களை இயற்றியுள்ளார்.

தெலிங்கானா: கிட்டத்தட்ட பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் தெலுங்கு நிலப் பகுதி (ஆந்திரம்) முழுவதையும் "தெலிங்கானா” என வழங்கி வந்தனர். இப்பொழுது இச்சொல் சிறிது மாற்றப்பட்ட நிலையில் (தெலங்கானா) ஒன்பது தெலுங்கு மாவட்டங்கள் அடங்கிய பகுதியைக் குறிக்கின்றது. இந்த ஒன்பது தெலுங்கு மாவட்டங்களும் அடங்கிய பழைய ஐதராபாத் மாநிலத்துடன் அடங்கி இருந்தன. இவை இப்பொழுது ஆந்திரத்துடன் இணைக்கப்பெற்று விட்டன.

தெலுங்கு: 'ஆந்திரத்'தைக் குறிக்கும் இதே பொருளுடைய மற்றொரு சொல்; 'ஆந்திரம்' என்னும் சொல்லைப் போலவே, இதுவும் மக்களையும் குறிக்கும்; நிலப் பகுதியையும் குறிக்கும். வரலாற்றாசிரியர்கள் இன்னும் தெலுங்கர்களும் ஆந்திரர்களும் முதன் முதலாக ஒரே வகுப்பினரா அல்லது இரண்டு வெவ்வேறு வகுப்பு மக்களா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையிலுள்ளனர்.

தேவதாசி: இச் சொற்றொடரின் நேர்ப்பொருள் ஒரு பெண் அடிமை அல்லது கடவுளர்களின் வேலையாள் என்பது. இவளது கடமை திருக்கோயிலில் டாடுவதும் ஆடுவதுமாகும். இச் செயலுக்கென்றே இவள் உரிமையாக்கப் பெற்றவள். இவளுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக வரியற்ற நிலம் விடப் பெற்றிருந்தது; ஆனால் பொதுவாக எல்லோருமறிந்த விபசாாம் இவளுடைய வருமானத்தின் குறையை நிரப்பும் ஒரு வழியாக அமைந்தது. சில தேவதாசிகள் கலைத்திறம் நிறைந்த ஆடலணங்குகளாகவும் பாடகர்களாகவும் திகழ்ந்தனர். இப்போது இள மங்கையரைக் கடவுளருக்கு உரிமையாக்கும் பழைய வழக்கத்தைச் சட்டம் மூலம் விலக்கப் பெற்றுள்ளது.

தோடி ராகம்: இசையின் ஒரு முறை.

நன்னயர்: பதினோராம் நூற்றாண்டில் இராஜமகேந்திரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரத்தின் கரையோரப் பகுதியை ஆட்சி புரிந்த கீழைச் சாளுக்கிய அரசனை இராசராசநரேந்திரனின் அரசவைக் கவிஞர். தன் அரசப் புரவலரின் ஆணைக்கிணங்க, நன்னயர் மகாபாரதத்தின் மொழி பெயர்ப்பை மேற்கொண்டார்; ஆனால் அதனை முடிக்கும் வரை இவர் உயிர் வாழவில்லை. முதல் இரண்டு பருவங்களையும் மூன்றாவது பருவத்தின் ஒரு பகுதியையும் மட்டிலுமே மொழி பெயர்த்தார். ஒரு தெலுங்கு இலக்கணம் உட்பட ஏனைய ஐந்து நூல்கள் இவர்பெயர்மேல் ஏற்றப் பெற்றுள்ளன. ஆனால் இக் கருத்து இன்னும் வாதத்திற்குரியதாகவே உள்ளது. அங்ங்ணமே, இவர்தான் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராவர் என்று கொண்டாடப் பெறும் உரிமையும் வாதத்திற்குரியதாக உள்ளது. என்ற போதிலும், இவரது நூலை வழக்கிலுள்ள மிகப் பழைமையான தெலுங்கு. இலக்கியமாக இருப்பதால், இவர் 'வகனுசாசனர்' (மொழியின் சட்டத்தை வழங்கியவர்) என்று போற்றப் பெறுகின்றார்.

நாகார்ச்சுனர்: புத்த சமய தத்துவ அறிஞர். பேராசிரியர் ஸ்டெச்சர்பாஸ்கியின் (இரஷ்ய நாட்டு அறிவியல் கழகத்தைச் சார்ந்தவர்) கருத்துப்படி "மானிட இனத்தின் தத்துவ அறிஞர்களுள் மிகமிகச் சிறந்தவர்." கி.பி. முதல் நூற்றாண்டினைச் சார்ந்த இவர் மத்யமிகா பிரிவு புத்த தத்துவத்தை வளர்த்தார். இப்பொழுது ஆந்திரத்தில் நாகார்ச்சு மலை என வழங்கப்பெறும் சிரீபர்வதத்தில் தம்முடைய இறுதி நாட்களைக் கழித்தார்.

நாமதேவர் (கி.பி. 1270-1350): தையல் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த இவர் ஒரு மராட்டியக் கவிஞர்; திருத்தொண்டர்; பஞ்சாப்பில் இவர் பத்து ஆண்டுகளைக் கழித்தார். இவருடைய பாடல்களில் சில 'கிரந்தா சாகிப்' என வழங்கப் பெறும் சீக்கர் மறையில் இடம் பெற்றுள்ளன.

நானக் (கி.பி. 1469-1536): சீக்கிய சமயத்தை நிறுவியவர்: ஆகவே, இவர் சீக்கர்களின் குருக்களுள் முதல் குரு ஆகின்றார். இப்பொழுது மேற்குப் பாகிஸ்தானிலுள்ள தால் வண்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து உலகிற்குப் பொதுவான அன்பு, சகோதரத்துவம் ஆகிய நற்செய்தியைப் போதித்தார்.

கெல்லூர்: இதன் பழம் பெயர் விக்கிரம சிங்கபுரம் என்பது. இப்பொழுது இப் பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகும். குண்டூரில் பிறந்த போதிலும் திக்கனர் தம்முடைய வாழ்நாளின் சிறந்த பகுதியை இந்த நகரில்தான் கழித்தார்.

பகவத் கீதை: கிறித்து சமயத்தில் புதிய ஏற்பாடு பெறும் பெரிய இடத்தை இந்து சமயத்தில் கீதை பெறுகின்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனன் என்ற இரண்டு கதை மாந்தர்களிடையே நடைபெற்ற உரையாடல் வடிவத்தில் இது காணப் பேறுகின்றது. இது 650 பாடல்களைக் கொண்டது. சார்லஸ் வில்க்கின்ஸ் (1784) என்பார் இதனை முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தேவகீதம் (The Song of the Celestial) என்ற பெயரில் காணப்பெறும் சர் எட்வின் ஆல்னால்டு என்பாரின் மொழி பெயர்ப்பே இன்று புகழ் பெற்றுத் திகழ்கின்றது. நூற்றுக்கணக்கான உரைகளில் சங்கரரின் உரையே காலத்தால் முற்பட்டது. அண்மைக் காலத்தில் எழுதப்பெற்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துப் புகழ்பெயர் பெற்றவை திலகர், அரவிந்தர், காந்தியடிகள் இவர்களுடைய உரைகளே. உரையாசிரியர்களைப் போலவே உரைகளும் அடிப்படையில் வேறுபட்டவையாகக் காணப் பெறுகின்றன. சிலர் "பகவத் கீதையின் தத்துவம்" என்று குறிப்பிட்ட போதிலும் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் "இதனை ஒரு தத்துவ நூல் என்று சொல்வதை விட பழம் பெரும் சமய நூல் என்று சொல்வதே பொருத்தமானது" என்கின்றர்.

பசவபுராணம்: கி.பி. 12-ம் நூற்றாண்டில் பால்குரிக்கி சோமநாதர் என்பாரால் பாவடிவில் இயற்றப் பெற்ற பசவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது.

பசவர்: வீர சைவம் என்ற சமத்தை நிறுவியவர். மனித இனத்தைச் சாதி, வகுப்பு என்று மனிதர்களால் செயற்கையாக உண்டாக்கப் பெற்ற எல்லா வேலிகளையும் எதிர்த்து நிறுவப் பெற்ற சமய இயக்கமாகும் இது. கி.பி. பன்ணிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மைசூர் மாநிலத்தில் (இப்போது கர்நாடக மாநிலம்) பாகெவாடி என்ற சிற்றூரில் பிறந்த பசவர் இந்தியாவின் மிகச் சிறந்த சமய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

பரதர்: நாட்டியம், நாடகம், நாடக அரங்கு இவற்றின் கலைகளைக் கண்டறிந்ததாகப் புராணத்தில் குறிப்பிடப் பெரும் ஒரு முனிவர்.

பவபூதி: காளிதாசருக்குப் பின்னர் சமஸ்கிருதத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். உத்தரராம சரிதம், மகாவீர சரிதம், மாலதி மாதவம் என்ற இவருடைய மூன்று நாடகங்களில் உத்தரராம சரிதமே மிகச் சிறந்ததாகும். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். விதர்ப்ப நாட்டில் (மேரார்) பிறந்த இவர் அரச ஆதரவை நாடி உச்சயினி அல்லது காஷ்மீரத்தில் குடியேறினர்.

பாசண்டன்: திருமறைகளின் ஆதிக்கத்தை மறுத்த ஒரு நாத்திகர்!

பிரபந்தம்: நகரங்கள், ஆறுகள், மலைகள், பருவங்கள், காடுகள். ஏரிகள் முதலியவற்றின் வருணனைகளைக் கொண்ட கவிதையாலான நூல். இஃது அரசர்கள், அரசியர்கள், இளவரசர்கள், இளவரசியர்கள் இவர்களின் பால்வாழ்க்கையைப் பற்றி மிக நுணுக்கமாகக் கூறுவது. வேட்டையைப் பற்றியும் போர் பற்றியும் குறிப்பிடுவது. இத்தகைய பல நிபந்தனைகளின் அடிப்படையில் உண்மையிலேயே சிறந்த ஒரு கவிஞரைத் தவிர பிறரால் செய்யப்பெற்ற பிரபந்தம் செயற்கையாகவும் எரிச்சலை ஊட்டுவதாகவும் அமையும்.

பிரபாகர சாஸ்திரி, வேட்டுரி (கி.பி. 1888-1950): இவர் ஒரு சிறந்த ஆய்வாளர்; திறனாய்வாளர். ஓலைச் சுவடிகளினின்றும் பிறவற்றிலிருந்தும் பல நூல்களைச் சேகரித்து, பதிப்பித்து, வெளியிட்டவர். பழைய நூல்கட்கு இவர் எழுதிய முன்னுரைகள் சிறந்த மதிப்புடையவை.

பிரமன்: இந்து திரிமூர்த்திகளில் படைப்புக் கடவுள். செந்நிறத் தோற்றத்தையும் நான்கு தலைகளையும் கொண்டவர். ஏனைய இருவரைப் போலன்றி இவர் மிகக் குறைவான வழிபாட்டினைப் பெறுகின்றார்.

பிரம்மசூத்திரங்கள்: தத்துவ முதுமொழிகள் அடங்கிய நூல். இதனை வியாசர் எழுதியதாகச் சொன்னபோதிலும் டாக்டர் எஸ். என். தாஸ்குப்தர் கருத்துப்படி இது மிகப் பழமையான நூலன்று. இவை (சூத்திரங்கள்) வேறு இந்திய தத்துவ முறைகளனைத்தையும் கண்டனம் செய்வதாக அமைத்திருப்பதால், இவை பழங்காலத்தில் எழுதப் பட்டிருக்க முடியாது' என்கின்றார் அவர்; கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஒரு காலப் பகுதியில் இவை இயற்றப் பெற்றிருத்தல் கூடும் என்று நம்புகின்றார், ஜேகப்பி என்பார் பிரம்மசூத்திரங்கள் இன்னும் பிற்பட்ட நூல் எனக் கருதுகின்றார். இவர் கி.பி. 200க்கும் 450க்கும் இடைப்பட்ட காலத்ததாகும் என அதனை அறுதியிடுகின்றார். அதன் உரைகளில் சங்கரர், இராமாநுசர், மத்துவர் ஆகியோர் இயற்றிய உரைகளே மிகவும் புகழ் பெற்றவை காலத்தால் மிகப் பிற்பட்டது. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனுடையதாகும். உரைகட்கும் சில உரைகள் உள்ளன.

பிராமணன்: உயர்சாதி வகுப்பினன்; இவனைப் பூசுரன், அதாவது பூமியில் தேவன் என்று வழங்குவதும் உண்டு. இவனைத் "துவிஜன்" (இரு பிறப்பாளன்) என்றும் கூறுவர் (பூணூல்-காண்க).

பிரெளன், சார்லஸ், ஃபிலிப்: (கி.பி. 1798-1884): இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) அலுவலர். இவர் தெலுங்கர்களிடமும், தெலுங்கு மொழி, தெலுங்கு இலக்கியத்தின் மீதும் அதிக அன்பு காட்டினார்; அவற்றிற்காக சிறந்த சேவையும் புரிந்தார். தெலுங்கு இலக்கணம், தெலுங்கு-ஆங்கிலம், ஆங்கிலம்-தெலுங்கு அகராதிகள் இவற்றை ஆயத்தம் செய்து வெளியிட்டதுடன், நூற்றுக் கணக்கான ஓலைச் சுவடிப் படிகளையும் சேகரித்தார். முதன் முதலாகப் பழங்கால நூல்களைச் சேகரித்து, ஒப்பு நோக்கிப் பதிப்பித்து, அச்சிட உள்நாட்டுப் புலவர்கட்கு உதவியும் ஊக்கமும் தந்தார். இவரது இடைவிடாத உழைப்பால் வேமனரின் இலக்கியப் புகழுக்கும் அடிப்படைப் பணிகளைப் புரிந்தார்.

பீமன்: (பீமசேனன் எனவும் வழங்கப் பெறுவான்). மகாபாரதத்தின் காவியத் தலைவர்களாகிய பாண்டவ இளவரசர்களில் இரண்டாமவன். பேருருவமும், பேராற்றலும், இராக்கதப் பசியும் கொண்ட இவனை இந்திய ஹெர்க்குவீஸ் எனக் கூறலாம்.

புராணங்கள்: இந்துக்களின் பழைய வரலாறுகளும், கட்டுக்கதைகளும் அடங்கிய தொகுதிகள். வழி வழி வரும் மரபுப்படி பதினெட்டுப் பெரிய புராணங்களும் பதினெட்டு சிறிய புராணங்களும் உள்ளன; ஆனால் இரண்டாவதாகக் குறிப்பிட்ட தொகுதிகள் பெரியனவாக இருப்பதாகக் கண்டறியப் பெற்றுள்ளது. எல்லோரும் அறிந்த இந்து சமயம் பேரளவில் புராணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. தம்முடைய மொழிப் பெயர்ப்பாகிய விஷ்ணு புராணத்திற்கு எச். வில்சன் எழுதிய நூல்முகம் புராணங்களின் சிறிய நல்ல ஆய்வாகத் திகழ்கின்றது.

பூணூல்: (யஞ்னோபவீதம்'-சமஸ்கிருதம்): இந்துக்களின் நம்பிக்கையின்படி ஒரு பிராமணன் ஒரு பருத்தி நூலை அணியும் பொழுது இரண்டாவது பிறப்பெடுக்கின்றான். இந்தச் சடங்கு அவனுக்கு "இரு-பிறப்பாளன்" என்ற தகுதியை உரிமையாக அளிக்கின்றது.

பூர்வகவி துதி: பழங்காலக் கவிஞர்களைப் போற்றுவதென்பது இதன் பொருள். மரபு வழியாக வரும் எல்லாக் கவிதை நூல்களிலும் இஃது இன்றியமையாததாக இருக்க வேண்டியது. இது சர்வ சாதாரணமாக இருப்பினும், ஒரு சிறந்த செயலை நிறை வேற்றுகிறது; நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், சிறிதும் வரலாற்று உணர்வைக் காட்டாத ஒரு நாட்டிற்குச் சிறிதளவு வரலாற்றுச் செய்திகளைத் தந்து கொண்டுள்ளது.

போப், டாக்டர் ஜி. யு: தமிழில் ஆழ்ந்த புலமையடைந்த கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஓர் அறிஞர். கி.பி. 1886-ல் இலண்டன் மாநகரிலிருந்து குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். அதன் பின்னர், மற்றொரு சிறந்த நூலாகிய திருவாசகத்தை மொழி பெயர்த்தார்.

போத்தனர்: (கி.பி. 1400-1475): மகா பாகவதத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்த ஒரு பெரிய தெலுங்குக் கவிஞர். பெரும்பாலும் தாமாகவே படித்துணர்ந்த எளிய மனிதர் இவர் அரசின் ஆதரவைப் புறக்கணித்தவர். தம்முடைய இலக்கியத்தைத் தமது வழிபடு கடவுளுக்குக் காணிக்கையாக்கினர். உண்மையும் இனிமையும் இவருடைய கவிதையின் உயர் சிறப்பியல்புகளாகும்.

போஜன்: பல இந்து அரசர்கள் இப்பெயரைத் தாங்கியவர்களாகத் திகழ்ந்தனர். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த தாராவைச் சேர்ந்த இவர்களுள் ஒருவர் சிருங்காரப் பிரகாசம் என்ற அணி இலக்கணத்தின் ஆசிரியர். இதே துறையில் இன்னொரு நூலும் இவர் எழுதியதாகச் சொல்லப் பெறுகின்றது. (சரஸ்வதி-கந்தப்புராணம்).

மகாத்மா: இதன் சரியான பொருள், பெரிய ஆன்மா என்பது. எல்லோரும் அறியக் கூடிய ஆன்மத்திறம் உள்ளவர் மிக்க மரியாதையுடன் மகாத்மா என்று விளிக்கப் பெறுகின்றார், இக் காலத்தில் காந்தியடிகள் ஒரு மகாத்மாவாக இருந்தார்.

மகாபாரதம்: இராமாயணத்தைப் போலவே, மகாபாரதமும் இந்தியாவின் மிகச் சிறந்த சமஸ்கிருதப் பெருங் காப்பியமாகும். இன்றைய வடிவில் இலியத்தும் ஒடிஸ்ஸியும் சேர்ந்த அளவைவிட எண்மடங்கு பெரியது. மரபுப்படி இதன் ஆசிரியர் மிகப் பழைய முனிவராகிய வியாசர் என்பவர். இந்நூலின் காலம் தெரியவில்லை; ஆனால் சில புலவர்கள் "இதன் தொகுப்பு கி.மு. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக இன்றைய வடிவத்தை அடைந்திருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு வந்துள்ளனர் (எம். வின்டர்னிட்ஸ்).

மகுடம்: ஒரு கிரீடம். தலைப்பு அல்லது பல்லவி எனவும் பொருள்படும்.

மசுலிப்பட்டணம்: ஆந்திரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைநகர். இஃது ஒரு கடற்கரை நகரம். பெரிய துறைமுகமும் இங்கு உண்டு. 17, 18-ம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இவர்களிடையே நேரிட்ட வாணிக, அரசியல் ஆதிக்கத்தின் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. மசுலிப் பட்டினம் என்பது 'மச்சிலிப் பட்டினம் (மீன் பட்டினம்) என்பதன் திரிந்த வடிவம். பண்டைக் காலத்து கிரேக்கப் புவியியல் வல்லுநர்கள் இதனை 'மசலியா அல்லது "மைசோலியா' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மல்லி: பூத்த மல்லிகை மலர். இதன் கொடிக்கும் இப்பெயர் வழங்குகின்றது.

மல்லிகார்ச்சுனர் (பண்டிதர்): காக்கதீயப் பேரரசர் (கி.பி. 1110. 1158): இரண்டாம் புரோலாவின் காலத்தவர். இவர் சிறந்த புலவர்; வாதமிடுவதில் வல்லவர். தம்முடைய வாதமிடும் திறமையினால் தம் காலத்துப் புத்தசமயத்தினரை பொது மேடையில் வாதங்களில் தோற்றோடச் செய்தார். இவருடைய சிவ தத்துவசாரம் என்ற நூல் சைவ தத்துவத்தை விளக்கும் ஒரு நல்ல ஆய்வு நூல்; இலக்கிய நயமும் செறிந்தது.

மன்மதன்: (காமதேவன் எனவும் வழங்கப்படுவான்): காதல் கடவுள். இவன் என்றும் இளைஞனாகவும், அழகுடையவனாகவும் இருப்பவன்; ஆயினும் இவன் உருவிலியாகக் கருதப் பெறுபவன்; கிளி இவனது ஊர்தி, கரும்பு வில்லைக் கொண்டு மலர்களாலான ஐந்து கணைகளை விடுபவன்.

மால: ஆந்திரத்தில் தீண்டத்தகாத வகுப்பினரின் இரு பெரிய தொகுதிகளில் ஒன்று (பறையர் வகுப்பு). இரண்டாவது தொகுதி மாதிகா (சக்கிலியர் வகுப்பு).

முக்கர்ஜி, துர்ஜாத்தி பிரசாத்: (கி.பி. 1894-1961): உலகப் புகழ் பெற்ற ஒரு சிறந்த சமூக இயல் வல்லுநர், இலக்குமண புரி (Lucknow) பல்கலைக் கழகத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். கூரிய அறிவும், தாமாகவே சிந்திக்கும் ஆற்றலும், அரிய உணர்வாற்றலும் கொண்டவர். வங்க மொழியிலும் ஆங்கில மொழியிலும் கைதேர்ந்த எழுத்தாளர்.

மூகசிந்தப்பள்ளி: வேமரின் பிறப்பிடமாகக் கருதப்பெறும் ஒரு சிற்றூர். ஆனால், நெல்லூர் மாவட்டத்தில் இப் பெயர் கொண்ட இரண்டு ஊர்களும், குண்டூர், கடப்பை, சித்தூர் மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஊரும் உள்ளன.

யமன்: நரகத்தின் தலைவன். பச்சை வண்ணத்தவன். சிவந்த ஆடையை அணிந்தவன். கருநிறமுள்ள எருமைக் கடாவை ஊர்தியாகக் கொண்டவன்.

ரெட்டி, டாக்டர் சி. ஆர். (கி.பி. 1880-1951): ஒரு சிறந்த கல்வி நிபுணர். சில சமயம் அரசியலிலும் பங்கு கொள்வதுண்டு. ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் துணை வேந்தராகப் பணியாற்றியவர். ஒரு குறுகிய காலத்தில் மைசூர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் சேவை புரிந்தவர். அவ்வப்போது தோன்றும் நகைச்சுவையும் திறமையாக பதிலிறுக்கக் கூடிய ஆற்றலும் இவரிடம் இயல்பாக இருந்தபடியால் இவர் ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ்வதற்குக் காரணமாக இருந்தன. இவர் ஒரு புகழ் பெற்ற திறனாய்வாளரும் கூட.

லால்தாசர்: கபீரின் போதனைகளால் தாக்கம் பெற்றவர். "லால் தாஸர்கள்" என்ற ஒரு பகுதியினரை உண்டாக்கியவர். ஆல்வர் என்பது இவரது பிறப்பிடம். இவருடைய பெற்றோர்கள் மேவாஸ் என்ற ஆதிக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர் பிறந்த நாள் அறியக் கூடவில்லை; கி.பி. 1648-ல் காலம் சென்றார்.

வங்கூரி சுப்பாராவ்: (கி.பி. 1886-1923): சிறிய உற்பத்தியாளராகவும் வாணிகராகவும் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் இலக்கிய ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் வெளியிட்ட நூல்களில் வேமனரின் வாழ்க்கை வரலாறு, சதகக் கவிஞர்களைப் பற்றி ஓர் ஆய்வு நூல், தெலுங்கு இலக்கிய வரலாறு என்ற நூல்களும் அடங்கும்.

வசிட்டர்: வேதங்களிலும் புராணங்களிலும் மிக அதிகமாகக் குறிப்பிடப் பெறும் ஒரு பழங்கால முனிவர். இருக்குவேதத்தில் பல பாடல்கள் இவர் பெயரில் உள்ளன. தர்மசாத்திரம் ஒன்று இவர் இயற்றியதாகக் கூறப் பெறுகின்றது. இவர் ஊர்வசியின் மகன். வேதங்களில் வரும் கட்டுக்கதையின்படி மித்திரனும் வருணனும் ஒரு வேள்வி நடந்தபோது ஊர்வசியைக் கண்ணுற்றனர்; அவர்கள் காமவெறி உச்ச நிலையை அடைந்து, இந்திரியம் வெளிப்பட்டது. அவற்றில் ஒரு பகுதி தரையில் விழ, அதனின்றும் வசிட்டர் தோன்றினார். மற்றொரு பகுதி ஒரு சாடியொன்றில் விழ, அது அகத்தியரை உருவாக்கியது. இதனால் கும்பமுனி என்ற பெயர் பெற்றனர் போலும்!

வியாசர்: பராசரரின் நெறியற்ற முறையில் பிறந்தவர்; அதனால் அவர் 'கணினர்' (வைப்பாட்டி மகன்) என வழங்கப் பெறுகின்றார். கருநிறமுடைய இவர் ஒரு தீவில் பிறந்தார்; ஆகவே இவர் 'கிருஷ்ண த்வைபாயனர்' எனவும் வழங்கப் பெறுகின்றார். இவருடைய பல பெயர்களில் வியாசர் அல்லது வேதவியாசர் என்ற பெயரே யாவரும் அறிந்தவை. வேதங்களைத் தொகுத்துப் பாகுபடுத்தி வெளியிட்டதாகக் கருதப் பெறுவதே இதற்குக் காரணம் ஆகும். (வியாசர் என்பதற்கு 'தொகுப்பாளர்' என்பதே உண்மையான பொருள்). மகாபாரதம், பிரம்மசூத்திரங்கள், பதினெட்டு பெரிய புராணங்கள் ஆகியவற்றின் ஆசிரியரும் இவரே எனக் கருதப் பெறுகின்றார்.

விஷ்ணு: இந்துக் கடவுளர்களனைவரிலும் விஷ்ணுவே அதிக பக்தர்களைக் கொண்டுள்ளார். இந்து திரிமூர்த்திகளில் இவரே காக்குங் கடவுள்; தேவைப்படும் போதெல்லாம் தீமையைப் போக்கவும், நன்மையை நிலைநாட்டவும் இப்புவியில் இவர் 'அவதாரம்' செய்வதாக நம்பப் பெறுகின்றது. இவர் இது காறும் ஒன்பது முறை அவதாரம் செய்துள்ளதாகவும், பத்தாவது முறை 'கல்கி' என்ற அவதாரம் செய்வார் எனவும் புராணங்கள் பறை சாற்றுகின்றன.

வீணை: மிகப் பழங்காலமாகவே இந்தியாவில் பயன்படுத்தப்பெறும் நரம்பு இசைக் கருவி. இந்தியக் கலையில் நான்முகனின் துணைவியும் கல்வியின் செல்வியுமான நாமகள் (சரசுவதி) வீணையைத் தம் கையில் வைத்திருப்பதாகக் காட்டப் பெறுகின்றது. அங்ஙணமே இவர் மகன் நாரதரும் காட்டப் பெறுகின்றார்.

வீரசைவம்: பசவரால் தோற்றுவிக்கப் பெற்ற எதிர்ப்பார்வநிலையிலுள்ள சைவ சமயம். இதனைத் தழுவியவர்கள் சிவனையே முழு முதற் கடவுளாக வழிபடுகின்றனர்.

விரேசலிங்கம், கந்துக்கூரி (கி.பி. 1848-1919): இக்கால இந்தியாவின் சிறந்த புதல்வர்களில் ஒருவராகிய இவர் சமய, சமூக சீர்திருத்தவாதி. தெலுங்கு இலக்கியத்திற்கு இவர் செய்த சேவை பலதிறப்பட்டது; தெலுங்கில் முதல் புதினம், முதல் நாடகம், முதல் எள்ளல் நூல், முதல் வாழ்க்கை வரலாற்று நூல், முதல் தன்-வரலாற்று நூல்கள், வேறு பல முதல் நூல்கள் எழுதிய பெருமை இவரைச் சாரும். "இந்திய இலக்கியப் படைப்பாளர்கள்" என்ற வரிசையில் சாகித்திய அகாடமி விரேசலிங்கத்தைப்பற்றி ஒரு சிறிய நூலை வெளியிட்டுள்ளது.

வேங்கட்ட ரத்தினம், சர் ரகுபதி: (கி.பி. 1862-1939): பெரும் புகழ் பெற்ற கல்வித்துறை வல்லுநர், சமூக சீர்திருத்தவாதி, சமய ஆசிரியர். வீரேசலிங்கத்தின் காலத்தில் வாழ்ந்த இளைய தலைமுறையினர். தேவதாசிகள், தீண்டத் தகாதவர்கள், சமூகத்தில் தாழ்நிலை அடைந்துள்ள பிறர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திகழ்ந்து பணியாற்றியவர்.

வேதங்கள்: இந்து சமய சாத்திரங்களில் மிகப் பழைமையும் அதிகார முத்திரையும் பெற்றவை வேதங்கள். பக்தியுடையவர்கள் இவை இறைவனால் தரப் பெற்றவை என நம்புகின்றனர். இருக்கு, சாமம், யஜூர், அதர்வம் என நான்கு வேதங்கள் உள்ளன. இருக்கு வேதமே மிகப் பழைமை புடையது.

வைசியர்: இந்துக்களின் சாதிப் பகுப்பில் மூன்றாவது சாதியினர். தெலுங்கில் 'கோமட்டி' எனவும், இந்தியில் 'பணியர்' என்றும் வழங்கப் பெறுபவர்கள். காந்தியடிகள் 'பணியர்' மரபில் வந்தவர்.

ஜோன்ஸ், சர் வில்லியம்: (கி.பி. 1745-94): மிகத் திறமை வாய்ந்த பிரிட்டிஷ் சட்ட வல்லுநர். கி.பி. 1783-ல் கல்கத்தா மேலூயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் பெற்றவர். அதற்கு அடுத்த ஆண்டிலேயே வங்காள ஆசியக் கழகத்தை நிறுவுவதில் மிக முக்கிய பங்கினை மேற் கொண்டார். ஐரோப்பிய, ஆசியப் பல மொழிகளில் வல்லுநராகிய இவர், ஒப்பியல் இலக்கணம் என்ற அறிவியல் துறையைத் தொடங்கினர். இந்து சட்டம், முஸ்லீம் சட்டம் என்ற இரண்டு நூல்களைத் தவிர, காளிதாசரின் நாடகங்களில் ஒன்றையும் மொழி பெயர்த்தார். பல்வேறுபட்ட திறன்களை இயல்பாகவே பெற்ற இவ்வறிஞர், குறுகிய காலத்திற்குள்ளேயே மறைந்து விட்டார். இந்திய இலக்கியத் துறைக்கு இஃது ஓர் பேரிழப்பாகும்.

ஸ்மித், வின்சென்ட் ஏ. (கி.பி. 1848-1920): ஓர் இந்திய சிவில் அலுவலர்; கி.பி. 1871-ல் பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் இந்திய வரலாறு-பண்பாட்டுத் துறையில் மிகக் கடினமாக உழைத்தார். முதன் முதலாக முயன்று எழுதிய இவரது பல நூல்களில் ஒன்று அசோகரது வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகக் கூறுவது; மற்றொன்று இந்தியாவின் தொடக்கக் கால வரலாறு (1904), மூன்றாவது இந்தியாவிலும் இலங்கையிலும் கலை வரலாறு. இந்தியாவின் ஆக்ஸ்போர்டு வரலாறு என்ற நூல் 1918-ல் வெளியிடப் பெற்றது; இதுவே இவரது கடைசிப் பெரிய நூலாகும்.

ஹிந்தி: இந்தியாவில் மிக அதிகமான மக்களால் பேசப்படும் மொழி. இந்தியக் குடியரசின் 'ஆட்சி மொழியாக இம் மொழி இந்திய அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப் பெற்றுள்ளது.

ஹேமச்சந்திரர்: (கி.பி. 1088-1172): மிகவும் நன்கு கற்றறிந்த சமணப் பேரறிஞர். இவர் கவிஞராகவும் வரலாற்றறிஞராகவும், அணி இலக்கண ஆசிரியராகவும், வேறுபல துறைகளில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். சமஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் நன்கு எழுத வல்லவர்.

ஷீரசாகாம்: பாற்கடல். இந்துக்களின் கட்டுக்கதையின்படி, ஏழு கடல்கள் உள்ளன; உப்புநீர்க் கடல், தூயநீர்க் கடல், பாற் கடல், தயிர்க் கடல், கடைந்தெடுத்த வெண்ணெய்க் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல் என்பவை அவை.