வைகையும் வால்காவும்/வாழ்வாங்கு வாழ்பவன்

விக்கிமூலம் இலிருந்து

வாழ்வாங்கு வாழ்பவன்


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ஆல்-தனக்கோர்
உவமையிலா மார்க்கின் உயர்கொள்கை போற்றிக்
கவலையற நின்றான் லெனின். 1

செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்;ஆம்-பெயர்க்க
அரியகொடுங் கோல் அகற்றி ஆர்பொதுமை நாட்டிப்
பெரியனாய் நின்றான் லெனின். 2

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் அன்றோ -சூழ்வார்தம்
குண்டுக்கு மாளாது, கொள்கை செயல்படுத்தி
எண்திக்கும் தின்றான் லெனின். 3

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்; உண்மை!- மெய்வாழ்வால்
எய்துசெல்வம் ஏழையர்க்கும், எல்லார்க்கும் ஈந்துலகில்
தெய்வமாய் நின்றான் லெனின். 4