உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/பன்னிரு ஆழ்வார்கள்

விக்கிமூலம் இலிருந்து

4. பன்னிரு ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் பன்னிருவர். எம்பெருமானின் திருக்குணங்களில் ஆழங்கால்பட்டுத் தம்மை மறந்த நிலையில் இருந்தமையால் 'ஆழ்வார்கள்' என்ற திருப்பெயரைப் பெற்றுத் திகழ்ந்தனர். இதனைக் கவிஞர் நாரா. நாச்சியப்பன்,

அண்ணலை மேக வண்ணன்
ஆகிய பெருமாள் தன்னை
எண்ணியே நாளும் நெஞ்சில்
இருத்தியே அன்பில் ஆழ்ந்து
நண்ணியே நின்ற தாலே
நல்முற ஆழ்வார் என்று
திண்ணமாய்ப் போற்றப் பெற்றார்
செல்வர்பன் னிருவர் தாமே.[1]

என்று கூறுவார். இவர்கள் வரலாற்றைக் கால வரலாற்றின்படி ஈண்டுக் கூறுவேன்.

(1-3). முதலாழ்வார்கள் : இவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற திருப்பெயரினர் மூவர். இவர்கள் மூவரும் அயோநிஜர்களாய் (யோநி வழிப் பிறவாதவர்களாய்) ஒர் ஐப்பசித் திங்களில் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர் என்பது குருபரம்பரைச் செய்தி. அதாவது பொய்கையார் 'கல்லுயர்ந்த நெடுமதில்சூழ் கச்சி திருவெஃகாவில்'[2] பொற்றாமரைப் பொய்கையில் திருவோண நட்சத்திரத்தில் திருமாலின் 'பாஞ்சசன்யம்' என்ற திருச்சங்கின் கூறாக அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணமாகப் பொய்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார். பூதத்தார் திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரம்) நறுமணம் வீசித் திவ்வியமாய் இருப்பதொரு குருக்கத்திப் பந்தலில் ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் 'கெளமோதகி' என்னும் கதையின் கூறாகப்பிறந்தார். வடமொழியில் (பூ-சத்தாயாம்) என்ற தாது வடிவாகப் பிறந்தது பூதம் என்ற சொல். இது சத்தைப் பெற்றது என்று பொருள்படும். எம்பெருமானின் திருக்குணங்களை அநுபவித்தே சத்தைப் பெற்றார் என்னும் காரணம்பற்றியே பூதத்தாழ்வார் என்று திருநாமம் ஆயிற்று. பேயார் திருவல்லிக்கேணி என்னும் திவ்விய தேசத்திற்குத் தெற்கிலுள்ள தேனமர் சோலைமாடமாமலையிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலின் திருக்குளத்தில் உண்டானதொரு செவ்வல்லி மலரில் ஐப்பசித் திங்கள் சதய நட்சத்திரத்தில் திருமாலின் ‘நந்தகம்’ என்ற வாளின் கூறாகத் தோன்றினார். இவர் ஒப்புயர்வற்ற பக்தியுடையவராய் பார்ப்பவர்கள் கண்ணில் 'இவர் பேய்பிடித்தவர்' என்னும்படிநெஞ்சழிந்து கண் சுழன்று அழுதும் சிரித்தும் தொழுதும் எழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அலறியுமே பொழுது போக்கிக் கொண்டிருந்தமையால் பேயாழ்வார் என்ற திருநாமம் பெற்றனர்.இவர்கள் மூவரும் பார்ப்பனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை. இவர்தம் பிறப்பே அதற்கு அரணாக அமைகின்றது.

ஒர் அற்புத நிகழ்ச்சி: நடுநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகிய திருக்கோவலூரில்[3] ஓர் அற்புத நிகழ்ச்சிநடைபெறுகின்றது. கதிரவன் மறைந்த பின்னர் வானம் இருண்டு விடுகின்றது. மழை கொட்டப்போகும் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்நிலையில் தூறலில் நனைந்து கொண்டே மிருகண்டு என்ற ஒர் அந்தணர் இல்லத்திற்கு வருகின்றார். ஒருவர் மழைக்கு ஒதுங்கவும், இரவு நேரத்தைக் கடக்கவும் இடம் கேட்கின்றார். இல்லத்திற்குரியவர் வீட்டின் முன்புறமுள்ள இடைகழி (ரேழி - என்பது உலக வழக்கு) யைக் காட்டி அதில் ஒருவர் படுக்கலாம் என்று கூறி இடம் கொடுத்துக் கதவினைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே போய்விடுகின்றார். வந்த இவர்தான் பொய்கையாழ்வார். மழையோ வலுக்கத்தொடங்கு கின்றது. சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே வீட்டில் தங்க இடம் கேட்கின்றார். பொய்கையார் 'ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்' என்று கூறிக் கொண்டே வந்தவருக்கு இடம் தருகின்றார். மேலும் சிறிது நேரம் கழிந்ததும் மழையில் நனைந்து கொண்டே மூன்றாவதாக மற்றொருவர் அதே இல்லத்திற்கு வந்து ஒதுங்க இடம் வேண்டுகின்றார். இடைகழியிலிருந்த இருவரும் 'ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்’ என்று கூறிக் கொண்டே அவரையும் அழைத்துக் கொள்ளுகின்றனர். இப்போது வந்தவர் பேயாழ்வார்.

இந்நிலையில் குரல் கொடுக்காமால் உள்ளே நுழைவதற்கு இசைவும் பெறாமல், நான்காவதாக யாரோ ஒருவர் நுழைந்து விடுகின்றார். நெருக்கத்தினால் இது தெரிகின்றது. இந்தப் புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு கிடைக்கவில்லை. பொய்கையாழ்வார் ஒரு விளக்கேற்றுகின்றார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யான்அடிக்கே குட்டினேன் சொல்மாலை
இடராழி நீக்குகவே என்று.[4]

என்பதுதான் அந்த விளக்கு. உலகத்தை அகலாகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைத்திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி விடுகின்றார். இந்தப் பாசுரத்தின் மகிமையால் அந்த இடைகழியில் 'பளிச்' என்ற ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விடுகின்றது. புறத்தே கவிழ்ந்துகிடந்த இருளும் நீங்கி விடுகின்றது. அதே சமயத்தில் பூதத்தாழ்வாரும் ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்(கு) ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். [5]

அன்பை அகலாகவும்,பொங்கிவரும் ஆர்வத்தை நெய்யாகவும், சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்று கின்றார் பூதத்தார். இந்த விளக்கினால் அகத்தே மண்டிக் கிடந்த உள் இருட்டும் நீங்கி விடுகின்றது. உடனே அந்தப் பேயாழ்வார் நான்காவது ஆளைக் கண்டுபிடித்து விடுகின்றார். அந்த எக்களிப்பே ஒரு பாசுரமாக வடிவங் கொண்டு நான்காவது ஆள் எம்பெருமானே! (“திருக்கோவலூர் தீங்கரும்பே") என்று காட்டி விடுகின்றது.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;-செருக்கிளரும்
பொன்ஆழி-கண்டேன்; புரிசங்கம் கண்டேன்;
என்ஆழி வண்ணன்பால் இன்று.[6]

என்பது பாசுரம். பேயாழ்வார் முதன்முதலாகப் பெரியபிராட்டியாரின் அருள் வடிவத்தைக் காண்கின்றார். பொன்மேனியையுடைய அன்னையாருடன்கூடிய எம்பெருமானின் மரகதத் திருமேனி இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கின்றது. மரகத மலையில் உதித்து ஒளிவீசி வரும் இளஞாயிறு போலத் தோன்றி இருவரது ஒளியையும் பொன் ஒளியும் மரகத ஒளியும் கலந்து ஒளிர்கின்ற அந்தக் கலப்பு ஒளியையும் காண்கின்றார். 'திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்' என்பதால் இது பெறப்படுகின்றது. இருவர் சேர்த்தியால் சேர்ந்த 'சமுதாய சோபை என்பது' பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான விளக்கம்.

ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டதும் பக்திப் பெருக்கில் திளைத்துப் போகின்றனர். பொய்கையாழ்வார். தமதுபாசுரத்தைத்தொடர்ந்து முதல் திருவந்தாதியை 100 பாசுரங்களால் பாடி நிறைவு செய்கின்றார். பூதத்தாழ்வார் தமது பாசுரம் தொடங்கி இரண்டாம் திருவந்தாதியை முடிக்கின்றார். பேயாழ்வார் தமது பாசுரத்தைத் தொடர்ந்து மூன்றாம் திருவந்தாதியைத் தலைக்கட்டுகின்றார். இங்ஙனம் குருபரம்பரை என்ற நூல் கூறுகின்றது. இந்த மூன்று திருவந்தாதிகளும் (முதல், இரண்டு, மூன்று) நாதமுனிகள் தொகுத்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா பகுதியில் முதலாவதாக இடம் பெற்றுள்ளன. அஞ்ஞான இருள் அகற்றப்பெறின் இறைவன் காட்சியளிப்பான் என்ற உண்மையை முதலாழ்வார்களின் வரலாற்றால் அறிகின்றோம்.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா!- வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி.[7]

என்ற பொய்கையாழ்வாரின் பாசுரமும் இந்த நிகழ்ச்சிக்கு அகச்சான்றாக அமைந்து எடுத்துரைப்பதாக உள்ளது.

இங்ஙனம் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிகள் அருளிச் செய்த திருக்கோவலூரை - திவ்வியப் பிரபந்தம் பிறந்த திவ்விய தேசத்தை - நினைந்து,

பாவரும் தமிழால் பேர்பெறு பனுவல்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு.[8] என்று போற்றிப் புகழ்வர் வில்லிபுத்துராரின் திருமகனார் வரந்தருவார் வேதாந்த தேசிகரும்,
பாட்டுக்கு உரிய பழையவர்
மூவரைப் பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள்தரும் மாயன்
நலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை
அந்தி நடைவிளங்க
வீட்டுக்கு இடைகழிக் கேவெளி
நாட்டும் அம் மெய்விளக்கே.[9]

[மாடு - செல்வமாகிய ஆன்மா; நான்மறை அந்தி - உபநிடதம்; நடை - வழி, வெளி - உபாயங்கள்]

என்று போற்றியுள்ளார். அவரே இந்த வரலாற்றையும் 'தீங்கரும்பு கண் வளரும்?'[10] என்ற திருமங்கையாழ்வாரின் திருமொழியையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் ஆலையின் உருளைகளாகவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானை நெருக்குண்ட இடமாகிய திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும் அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் உருவகித்து ஒரு வடமொழிச் சுலோகத்தாலும்[11] பாராட்டியுள்ளார். மேற்குறிப்பிட்ட திருக்கோவலூர் நிகழ்ச்சிக்குப் பின்னர், இம்மூவரும் திருவல்லிக்கேணியில் திருமழிசையாழ்வாரைச் சந்தித்து அளவளாவியதாக வரலாறு. பின்னர் இவர்கள் திருக்கோவலூர் ஆயனாரைத் தொழுது விடை பெற்று நெடுங்காலம் திருப்பதிகள் தோறும் சென்று மங்களாசாசனம் செய்து யோகபலத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்திருந்து வையத்தினரை வாழ்வித்தனர் என்பது வைணவர்களின் நம்பிக்கை, ஆனால் இவருக்குப் பின்னர் தோன்றின ஆழ்வார்களுள் ஒருவராவது இவரைச் சந்தித்ததாகச் சான்றுகள் இல்லை.

இவர்கள் வாழ்ந்த காலம் : ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் வாழ்ந்த காலத்தை ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் என்று கருதுவர்.

(4). திருமழிசையாழ்வார் : இவர் தொண்டைநாட்டில் உள்ள திருமழிசை[12] என்ற திருத்தலத்தில் பகவானை வழிபட்டு வந்த 'பார்க்கவர்' முனிவருக்கும் 'கனகாங்கி' என்ற கட்டழகிக்கும் (தேவர் உலகிலிருந்து வந்தவள்) தைத்திங்கள் 'மகம்' நட்சத்திரத்தில் 'சுதர்சனம்' என்னும் திருவாழியின் அம்சமாக அவதரித்தவர். தசைப் பிண்டமாக தேவமங்கை அப்பிண்டத்தை வெறுத்து அருகிலுள்ள பிரப்பம் புதரில் எறிந்து விட்டுத் தன்னுலகம் சென்று விடுகின்றாள்.சின்னாளில் தசைப் பிண்டம் சிறந்ததோர் ஆண்குழந்தை வடிவமாகப் பரிணமித்து உயிர் பெறுகின்றது. பசி, நீர்விடாயால் பரிதவித்துத் தனியே அழுது கொண்டிருப்பதை அறிந்து அவ்விடத்தருகே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஜெகந்நாதப் பெருமாள் பிராட்டியுடனே எழுந்தருளி அக்குழந்தையைக் குளிரக் கடாட்சித்து அதன் பசி தாகங்களை அகற்றி தமது திருமேனியைக் காட்டித் தேற்றி மறைந்தருள்கின்றார். பின்னர் அத்தெய்வக்குழந்தை அப்பெருமானது பிரிவை ஆற்றாமல் மீளவும் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தது.

வளர்ப்பு : இந்நிலையில் அப்போது பிரம்பறுக்க வந்த 'திருவாளன்' என்னும் குறவன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அருகில் வந்து குழந்தையை வாரி எடுக்கின்றான்.அவன் மக்கட்பேறு இல்லாதவன். அக்குழந்தையை எடுத்துவந்து தன் மனைவியான 'பங்கயச்செல்வியிடம்' தர, இருவரும் அதனை அன்புடன் போற்றி வளர்க்கின்றனர். குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மிக்க இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்று யோகியராக விளங்கியது. இவர்தம் குழவிப்பருவத்தில் ஆவின்பால் கொடுத்து வந்த பாகவதர் ஒருவருக்கு இவர் அருளால் பிறந்த 'கணிகண்ணன்' என்பான் இவருக்கு இணைபிரியாத் தொண்டனானான்.

திருமழிசையார்[13] உண்மைத் தத்துவம் இன்னதென அறிய முயன்று சமணம், பெளத்தம், சைவம் முதலிய எல்லாச் சமயங்களையும் ஆய்ந்து இறுதியில் திருமாலே முழுமுதற் கடவுள் எனத் தெளிந்து அப்பெருமானை, இடைவிடாது தியானித்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் நெடுங்கால யோகத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போதுதான் முதலாழ்வார்கள் மூவரும் இவரைச் சந்தித்து அளவளாவிப் பிரிந்தனர். பின்னர் இந்த ஆழ்வார் முதலாழ்வார்கள் அவதரித்த திருத்தலங்களைத் தரிசித்து விட்டுத் 'திருக்குடந்தை' செல்லத் திருவுள்ளம் கொண்டார் இடையில் 'கச்சிநகர் திருவெஃகாவில்' எழுந்தருளியிருந்து தமக்கு உரிய பணிபுரிந்து வந்த மூதாட்டி ஒருத்தியைக் குமரியாக்கினார். இதனை அறிந்த அந்நகரத்து வேந்தன் தன் கிழத்தனத்தையும் போக்கியருளுமாறு கணிகண்ணன் மூலம் ஆழ்வாரை வேண்ட, அவர் அதற்கு இணங்கவில்லை. அரசன் அவ்விருவரையும் நகரை விட்டு வெளி யேறுமாறு ஆணையிடடான். உடனே வெஃகணைக் கிடந்த திருமாலையும் தம்முடன் வெளியேறுமாறு வேண்டி மூவருமாக நகரை விட்டேகினர். இச்செய்தியை அறிந்த மன்னன் ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை மீண்டும் நகருக்கு வருமாறு வேண்டியழைத்து அவருக்குத் தொண்டு பூண்டனன் ஆழ்வார் தம் வாணாளின் இறுதியில் திருக்குடந்தையில் வாழ்ந்து திருநாட்டை அலங்கரித்தனர். இதனால் கும்பகோணத்தைத் 'திருமழிசைப் பிரான் உகந்த இடம்' என்று பேசுகின்றார். வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை, கும்பகோணத்திற்கு 'குடமுக்கு' ‘குடமூக்கில்' என்ற திருநாமங்கள் உண்டு. எனவே, திருமழிசையாழ்வார் “குடமுக்கிற் பகவர்"(கும்ப கோணத்து பாகவதர்) என்று ஒரு சமண ஆசிரியர்குறிப்பிடுகின்றார். 'முக்காலமும் உணர்ந்த முனிவர்களில் ஒருவர்' என்றும் பாராட்டுகின்றார் அந்த ஆசிரியர். இதனால் குருபரம்பரைக் கதைகள் தோன்றுவதற்கு முன்னரே பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்களைப்போல் திருமழிசையாரும் தமிழர்களால் பெரிதும் போற்றப் பெற்றனர் என்பதை அறியமுடிகின்றது. இவர்தம் அருளிச் செயல்கள் : (1) திருச்சந்த விருத்தம் (2)நான்முகன் திருவந்தாதி என்ற இரண்டும் இவர்தம் அருளிச் செயல்களாகும். இவற்றுள் முன்னது கம்பீரமான சந்த விருத்தத்தாலான 120 பாசுரங்களைக் கொண்டது. ஓதுவார் உள்ளத்தில் உணர்ச்சியைக் கிளரச் செய்யும் பான்மையது. இது முதலாயிரத்தில் பெருமாள் திருமொழியை அடுத்து இடம் பெற்றுள்ளது. பின்னது 96 வெண்பாக்களைக் கொண்டது. இஃது இயற்பாத் தொகுதியில் முதலாழ்வார் பிரபந்தங்களை அடுத்து இடம் பெற்றுள்ளது.

வாழ்ந்தகாலம்: இவர் வாழ்ந்த காலத்தைச் சரியாக அறுதியிடுவதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. எட்டாம் நூற்றாண்டுக்குமுன் முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்று அறுதியிடுவர் ஆய்வாளர்கள்.

(5). தொண்டரடிப் பொடியாழ்வார்: சோழ நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. புள்ளம் பூதங்குடி[14] இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.(பெரி. திரு. 51) இதன் அருகில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் 'திருமண்டங்குடி' என்ற ஒருசிற்றூரில் திருமாலின் 'வைஜயந்தி' என்னும் வனமாலையின் கூறாக ஆடித் திங்கள் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு முன்குடுமிப் பார்ப்பனருடைய திருமகனாகப் பிறந்தார் இந்த ஆழ்வார். இவரது பிள்ளைத் திருநாமம் 'விப்ர நாராயணன்' என்பது. இளமையிலேயே நான்கு திருமறைகளையும் ஆறு சாத்திரங்களையும் கசடறக் கற்றுத் துறை போய வித்தகர். ஞானவைராக்கியங்கள் நிறையப் பெற்று வளர்ந்து வந்தார். இவருக்கும் வைகுண்டத்தினின்றும் சேனை முதலியார்(விஷ்வக்சேனர்) எழுந்தருளி 'பஞ்சசம்ஸ்காரம்' முதலிய சடங்குகளைச் செய்து வைத்தார் என்று நம்புவர் வைணவப் பெருமக்கள். திருமணத்தில் விருப்பமற்று மாணியாக நின்று திவ்விய தேசங்கட்குச் சென்று எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்யக் கருதி முதலில் கோயில் என வழங்கும் 'திருவரங்கத்தை' அடைந்தார். அழகிய மணவாளனின் வடிவழகினால் கவரப்பற்று திருவரங்கத்திலேயே தங்கி விட்டார். திருநந்தவனம் அமைத்து திருத்துழாய் மாலைகள், பல்வேறு பூ மாலை வகைகள் முதலியவற்றைத் தயாரித்து அரங்க நகர் அப்பனுக்குச் சமர்ப்பிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு நின்றார். தமது நிலைக்கேற்ப அந்தணர் திருமாளிகையில் அன்னபிட்சை வாங்கி அமுது செய்துவந்தார்.

இவர் வாழ்வில் ஏற்பட்ட 'மாற்றம் தேவதேவி' என்ற விலைமாதின் வலையில் சிக்கியது.'பொன்வட்டில் களவு' என்ற நிகழ்ச்சியை உண்டாக்கி எம்பெருமான் ஆழ்வாரை அந்த வலையினின்றும் விடுவித்தது இவர்தம் வாழ்வில் நேரிட்ட அற்புத நிகழ்ச்சி பிறகு பெரியோர்களின் யோசனைப்படி தாம் செய்த பிழையை போக்கும் கழுவாயாக அடியார்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தை உட்கொண்டு தூய்மையானார் அடியர்க்கு அடிமைபூண்டு ஒழுகி அதன்காரணமாகத் 'தொண்டரடிப்பொடி' என்ற திருநாமம் பெற்றனர். இந்த ஆழ்வார் 105 ஆண்டுகள் வாழ்ந்து அதன்பிறகு நலம் அந்தம் இல்லதோர் நாட்டை அடைந்ததாகப் பெரியோர்கள் பணிப்பர்.

இவரது அருளிச் செயல்கள்: இந்த ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள் (1) திருமாலை (45 பாசுரங்கள்), (2) திருப்பள்ளி எழுச்சி (10 பாசுரங்கள்)என்பவை. அறுசீர் விருத்தத்தாலாயது இது முதலாயிரத்தில் திருச்சந்த விருத்தத்தை அடுத்து இடம் பெற்றுள்ளது. பின்னது எண்சீர் விருத்தத்தாலாயது. முன்னதை அடுத்து முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

இவரது காலம் : திருமங்கை மன்னனும் இவரும் சம காலத்தவர் (ஏழாம் நூற்றாண்டு) எனக் கருதுவார் பேராசிரியர் மு. இராகவய்யங்கார்.[15] திருமங்கையாழ்வார் திருவரங்கம் திருமதிலையும் சிகரங்களையும் பெருஞ்செலவிட்டுக் கட்டுவித்த பொழுது தொண்டரடிப்பொடியாழ்வார் திருத்தொண்டு செய்து வந்தார் என்று 'குரும்பரம்பரைகள்' கூறுவதாலும் திருமங்கையாழ்வார் காலத்தே சமணம் முதலிய புறச்சமயங்கள் வைதிகச் சமயக் கடவுளரை இகழ்ந்து வந்த செய்தியை இந்த ஆழ்வார் குறிப்பிடுவதாலும் அங்கனம் கருதினர் பேராசிரியர் அய்யங்கார் அவர்கள். ஆயினும் பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள் வேறு சில சான்றுகளைக்கொண்டு. இவரைத் திருமங்கையாழ்வாருக்கு முற்பட்டவராகக் கருதுவார்.[16]

6). குலசேகராழ்வார் : கேரள மாநிலத்தில் 'கோழிக்கோடு' (கொல்லிநகர்) என்ற பகுதியை ஆண்டுவந்தவன் திடவிரதன் என்னும் அரசன். இவனுடைய அரசமாதேவி நாதநாயகி பல்லாண்டுகள் இவர்கட்கு மக்கட்பேறு இல்லை. பின்னர் திருமாலுக்குச் சிறப்பான ஆராதனங்கள் செய்து வழிப்பட்டதன் காரணமாக மாசித்திங்கள் புனர்ப்பூச நட்சத்திரத்தில் திருமாலின் மர்பிலுள்ள 'கெளத்துவமணியின்' கூறாக இளவரசராகத் தோன்றினார். இவருக்குப்பெற்றோர் இட்ட பெயர் 'குலசேகரன்' என்பது. இளமையிலிருந்தே குலசேகரர் திருமால் பக்தியில் தலைசிறந்து விளங்கினார். இளமையிலேயே அரசுரிமையை வெறுத்துத் திருவரங்கம் சென்று திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டனர் என்று குருபரம்பரை கூறும். தம் திருமகனாருக்குப் பட்டம் கட்டிவிட்டுத் துறவுபூண்டனர் என்று செப்பும் திவ்விய சூரி சரிதம். தாம் அரசு புரிந்த காலத்தில் அரவணையில் பள்ளிகொண்ட எம்பெருமானையும் அவனடியார்களையும் பெரிதும் ஆதரித்து வந்தார் ஆழ்வார். இதன் காரணத்தால்தான் இவருக்கு உலக பற்றின்மை ஏற்பட்டது என்று கருதி அரசர்க்கு அடியார்களின்மீது ஒரு வெறுப்புண்டாக ஒரு திட்டம் வகுத்தனர் அமைச்சர்கள். அரண்மனையில் களவு போன அரதனமாலையைக் கவர்ந்தவர்கள் அடியார்கள் என்று அவர்கள்மீது ஒர் அடாப் பழியைச் சுமத்தினர். ஆயின் ஆழ்வார் பரமனடியார் ஒருபோதும் அது செய்யார் என்று பாம்புக் குடத்தில் கைவிட்டு சூளுறவு செய்து அவ்வடியார் பெருமையை நிலை நாட்டியதை,

ஆரம் கெடப்பரன் அன்பர்கொள்
ளார் என்(று) அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பின்கை
இட்டவன் மாற்றலரை
வீரம் கொடுத்த செங்கோல்கொல்லி
காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி
வேந்த்ர் சிகாமணியே.[17]

என்ற பாசுரத்தின் மூலம் அறியலாம்.

இவரது அருளிச்செயல்: ஒரே ஒரு பிரபந்தம் - 'பெருமாள் திருமொழி' (105 பாசுரங்கள்). இது முதலாயிரத்தில் நாச்சியார் திருமொழிக்கு அடுத்து இடம் பெற்றுள்ளது.

இவர் வாழ்ந்த காலம்: பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று அறுதியிடுவர்.[18] பேராசிரியர் மு. இராகவய்யங்கார் இந்த ஆழ்வாரும் திருமங்கை மன்னன், தொண்டரடிப் பொடிகள் ஆகிய மூவரும் சமகாலத்தவர் என்று கருதுவர்.

(7). திருப்பாணாழ்வார் : இவர் 'கங்கையிற் புனிதமாய காவிரி' நதிக் கரையிலுள்ள திரிசிரபுரம் உறையூரில் திருமாலின் 'ஶ்ரீவத்சத்தின்' (மறு) கூறாகக் கார்த்திகை மாதம் உரோகிணி நட்சத்திரத்தில் ஓர் அந்தணாளனது நெற்பயிர்க்கழநியில் தோன்றினார். பாணர் குலத்துப் பிறந்தான் ஒருவன் தன் நல்லூழின் காரணமாக மருவிய காதல் மனையாளின் மலடு நீங்க அந்தத் தெய்விகக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான்.அந்தக் குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இயற்கையிலேயே இளமைதொட்டு உலகப் பற்றற்று எம்பெருமானது இணைத் திருவடித் தாமரைகட்கே தம் மனத்தைப் பறி கொடுத்தார். வேதாந்த தேசிகர் இவரைப் ‘பாண்பெருமாள்’[19] என்றே சிறப்பித்துப் பேசுவர். 'பாணர்’ என்ற திருநாமத்துடன் விளங்கிய 'பாண்பெருமாள்' நாரத முனிவர் போன்று ஞான பக்தி வைராக்கியங்களுடன் இசைத் திறனும் வாய்க்கப்பெற்ற பாணருக்குச் சேனை முதலியார் (விஷ்வக்சேனர்) எழுந்தருளி ஒருவரும் அறியா வண்ணம் திருவிலச்சினை சாதித்துச் சென்றார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. காவிரியின் தென் கரையிலிருந்து கொண்டே திருவரங்கப்பெருமான்மீது யாழில் வைத்துப்பாடிச் சேவித்து வந்த இவரை எம்பெருமான் தன் கனவில் கட்டளையிட்டவாறு திருவரங்கப்பெருமானின் அர்ச்சகர் உலகசாரங்க முனிவர் பாண்பெருமாளைத் தம் முதுகில் சுமந்து சென்று அரங்கநகர் அப்பன் முன்னர் இறக்கி விட்டார்.[20] ஆழ்வாரும் அணியரங்கனது திருமேனியைப் பாதாதிகேசமாகச் சேவித்து அதில் ஆழ்ந்து அதன் அழகை அதுபவித்தார். அந்த அநுபவம் பின்புள்ளாருக்கும் தெளிவாகும் பொருட்டுப் பத்துப் பாசுரங்களாக அருளினார். இறுதியாக,

அண்டர்கோன்அணி
அரங்கன்என் அமுதினைக்
கண்ட கண்கள்மற்(று)
ஒன்றினைக் கானாவே.[21]

என்று தம் துணிவினை வெளியிட்டு மிகவும் உவப்புடன் நின்றார். எம்பெருமான் அவரை அங்கீகரிக்க அவரும் அனைவரும் காண அப்பிரானது திருவடிகளில் கலந்து மறைந்து இரும்புண்ட நீராயினார்.[22]

இவரது அருளிச்செயல் : அரங்கநகர் அப்பன்மீது பாடிய பத்துப் பாசுரங்கள் கொண்ட 'அமலனாதிபிரான்' என்ற பிரபந்தம். இது நாலாயிரத்தில் முதலாயிரத்தின் இறுதியில் ‘கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு' முன்னர் இடம் பெற்றுள்ளது.

இவரது காலம் : இப் பூவுலகில் இந்த ஆழ்வார் நடையாடினகாலம் 50 ஆண்டுகள் தொண்டரடிப் பொடியாழ்வார் வாழ்ந்த காலமே இவர் வாழ்ந்த காலம் என்பதாகக் கருதுவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார்.[23]

(8). திருமங்கையாழ்வார் : சோழ மண்டலத்தில் 'திருவாலிநாடு' என்பது ஒரு பகுதி. அப்பகுதியில் 'குறையலூர்' என்பது ஒர் ஊர். அவ்வூரில் கள்ளர் குலத்தில் திருமாலின் 'சார்ங்கம்' என்ற வில்லின் கூறாகக் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்ததாகக் கொள்வர் வைணவப்பெருமக்கள். பிறந்த குழந்தை நீலநிறமாக இருந்தது பற்றி 'நீலன்' என்ற பெயர் வழங்கியது. பெற்றோர் இட்ட பெயர் 'கலியன்' என்பது. இத்திருநாமத்துடன் வளர்ந்து அறிவு, ஆற்றல்கள் நிரம்பப் பெற்றவராய் தக்க பருவம் வந்ததும் தம் தந்தையின் உரிமைகளைப் பெற்றுத் தாமே ஆலி நாட்டின் தலைவராகவும், சோனாட்டரசன் கீழ்த் தானைத் தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார். திருநாங்கூர் பகுதியில்[24] ‘அண்ணன் கோயில்’ என வழங்கும் 'திருவெள்ளக்குளம்' என்னும் திருப்பதியில் மருத்துவத்தொழிலை மேற்கொண் டிருந்த வைணவர் ஒருவரால் அருமையாக வளர்க்கப் பெற்று வந்த 'குமுதவல்லி' என்ற பெண்மணியை ஒரு சில நிபந்தனைகளின்படி திருமணம்புரிந்து கொண்டு தாமும் பரமபாகவதராகி அவளுடன் திருமாலடியார்களை ஆராதிப்பதில் செல்வங்களையெல்லாம் செலவிட்டார். அரசிறையாகத் தம்மிடமிருந்த பொருளும் இச்செலவில் கரைந்தது. நாளடைவில் இவருடைய இச்செயல் வெளிப்பட அரசன் இவரது சிற்றரசு உரிமையையும் பறித்துக் கொண்டதுடன் இவரையும் சிறையிலிட்டனன். பின்னர் திருமாலின்அருளால் கச்சியில் பெரும்பொருள் பெற்று அரசனுக்குரிய கடனைத் தீர்த்துச் சிறையினின்று விடுதலை பெற்றார்.

திருமால் கைங்கரியம் புரிவதற்குக் கையிலே வேறு 'பொருளின்மையால், 'நீர்மேல்நடப்பான்', 'நிழலில்ஒதுங்குவான்', 'தாள்ஊதுவான்', 'தோலாவழக்கன்' ஆகிய நால்வரின் துணை கொண்டு ஆறலைத்துப் பொருளிட்டி அப்பொருளைக் கொண்டு அன்பர்கட்கு அமுது செய்வித்து வரலாயினர். ஒருநாள் தம்பதிக்கு (திருநகரிக்கு) அடுத்த திருமணங்கொல்லை என்ற ஊர்ப்புறத்தில் ஒர் அரசமரத்தில் பதுங்கியிருந்தபொழுது ‘வயலாளி மணவாளன்' அந்தண இளைஞர் வடிவத்துடன் மணவாளக் கோலத்துடன் புதுமணம் புணர்ந்த தம்மனைவியுடன் எல்லாவிதப் பொன் அணிகளைப் புனைந்து கொண்டு பரிவாரம் சூழ வந்து கொண்டு இருந்தார். கலியன் தம் கூட்டத்துடன் அவர்கள்மேல் விழுந்து பொன் அணிகளையெல்லாம் களையச் செய்தார். அவற்றையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி தூக்கிச் செல்ல முயன்றபோது தூக்க இயலாமல் மந்திரம் பண்ணினைபோலும்’ என்று தம் வாளையுருவி நெருங்கிக் கேட்க அவரும் கலியனது வலத்திருச் செவியில் திருமந்திரத்தை உபதேசித்தார். அன்றியும், தாமும் பெரிய திருவடிமேல் காளமேகம் போன்ற திருமேனியுடன் பெரியப்பிராட்டியார், பூமிப் பிராட்டியார் சமேதராகச் சேவை சாதித்தார். இங்ஙனம் வழிப்பறி செய்யப் பெற்றவர் ஆண்டாளை மணம் புரிந்து வந்த திருவரங்கப் பெருமானே என்று திவ்விய சூரி சரிதம் குறிப்பிடும்.

கலியனுக்கு ஞான பக்தி வைராக்கியம் ஏற்படலாயிற்று. ‘வாடினேன் வாடி’ என்று தொடங்கி 'நான்கண்டு கொண்டேன்' 'நாராயணா என்னும்நாமம்' என்று முடியும்பத்துப்பாசுரங்களைப் பாடி முடித்தார். பின்னர் எம்பெருமானின் பெருங்கருணைத் திறத்தை வியந்து அம்மந்திரம் பிறந்த திவ்வியதேசத்தை (பதரி) வணங்கத் திருவுள்ளங் கொண்டு அங்குச் சென்று அதனை மங்களாசாசனம் செய்கின்றார். தொடர்ந்து வடநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டிநாடு, மலை நாடு ஆகியவற்றிற்கு திருத்தலப் பயணங்களை மேற்கொண்டு 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்கின்றார். இங்ஙனம் தொடர்ந்து இறையதுபவம் பெற்று நெடுங்காலம் வாழ்ந்து முடிவில் நெல்லை மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடியில்[25] இறைவன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினர்.

இவரது அருளிச் செயல்கள் : இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் ஆறு. அவை: (1) பெரிய திருமொழி (2) திருக்குறுந்தாண்டகம் (3) திருநெடுந்தாண்டகம் (4) திருவெழுக்கூற்றிருக்கை (5) சிறிய திருமடல் (6) பெரிய திருமடல் என்பவையாகும். இவற்றை 'மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோனின் ஆறங்கங்கள்' எனக் கருதுவர் வைணவப் பெருமக்கள்.இவற்றில் முதல் மூன்றும் பெரிய திருமொழியாக வடிவம் கொள்ளுகின்றன. இறுதி மூன்றும் இயற்பாப் பகுதியில் இடம் பெறுகின்றன.

இவரது காலம்: இந்த ஆழ்வார் வாழ்ந்த காலம் கி.பி. (716-881) என்று கொள்வர் ஆய்வாளர்.

ஒரு குறிப்பு: இவரது முறுகிய பக்தி நிலையை உண்ர்ந்து ‘திருநெடுந்தாண்டகமே' இவர் இறுதியாகப் பாடியது (சரமப்பிரபந்தம்) என்பர் ஒரு சாரர், பிறிதொரு சாரர் பெரிய திருமடலே இறுதியாகப் பாடியது (சரமப்பிரபந்தம்) என்று வற்புறுத்துவர் எது எங்ஙனமாயினும் இரண்டுமே உயர்ந்த பக்தி நிலைகளை காட்டுகின்றன என்பதை நாம் அறிகின்றோம். இரண்டையும் ஆழ்ந்து கற்று ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப் பெற முயல்பவருக்கு அவரவர் மனப்பக்குவத்திற்கு ஏற்ப எது ‘சரமப்பிரபந்தம்’ என்ற உண்மை தட்டுப்படும்.

(9). பெரியாழ்வார்: தென்தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துரில் வேயர் குலத்தில் பாகவத சம்பிரதாயத்தைத் தழுவியிருந்த குடும்பத்தில் பெரிய திருவடியின் (கருடன்) கூறாக ஆனி மாதம் 'சுவாதி' நட்சத்திரத்தில் தோன்றினார். தந்தையார் முகுந்த பட்டர்; அன்னையார் பதுமவல்லி. இவரது பிள்ளைத் திருநாமம் 'விஷ்ணுசித்தர்.' [26] இவர் மாலவனுக்கு மலர்த்தொண்டு புரியும் கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தார். அதற்காக அழகிய நந்தவனம் ஒன்று அமைத்து அதனைப் பரிபாலித்து வந்தார். இவர் திருமாலின் பரத்துவத்தைப் பலரும் அறிந்து மகிழுமாறு வாதம் செய்து நிலைநாட்டியதற்காக பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுப் பட்டர்பிரான் என்ற விருதையும் பெற்றார்.

பாண்டியன் கொண்டாடப்
பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம்
எடுத்தூத- வேண்டிய
வேதங்கள் ஒதி
விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய
பற்று.[27]

என்ற வெண்பாவால் அறியலாம். இங்ஙனம் தான் பெற்ற பொருளைத் தம்மூர்த் திருமால் கைங்கரியத்தில் செலவிட்டு அப்பெருமானை - ஆலிலைப் பள்ளியானை - வழிபட்டு வாழ்ந்தார் என்பது குருபரம்பரைகளால் அறியப்பெறும் செய்தி. இதனை இவர்தம் திருவாக்குகளும் உறுதி செய்கின்றன.[28] இங்ஙனம் இவரது வரலாற்றோடு இவரது திரு வாக்குகள் பெரிதும் ஒத்துள்ளன.

இந்த ஆழ்வார் காலத்துப் பாண்டிய மன்னன் பூனிவல்லபன் என்பான்[29] இப்பெரியார் காலத்தே இராச புரோகிதராக இருந்தவர் திருக்கோட்டியூர்த் தலைவரான செல்வ நம்பி என்னும் சீரியோர்.[30]

இவரது அருளிச் செயல்கள்: இவர் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. (1) திருப்பல்லாண்டு (2) பெரியாழ்வார் திருமொழி. இவை இரண்டும் முதலாயிரத்தில் தொடக்கத்திலேயே அமைந்திருப்பவை. வேதாந்த தேசிகர் திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று; பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தை சேர்ந்ததே என்று நிலை நாட்டுவர்.

இவர்காலம் : ஆராய்ச்சியாளர் இவர்காலம் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 835-862) காலத்தவர் என்று கருதுவர்.[31] பெரியாழ்வார் 85 திருநட்சத்திரங்கள் வாழ்ந்தவர் என்பது குரு பரம்பரைகளால் அறியப் பெறுகின்றது. ஆகவே, இவர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கொள்ளலாம்.

(10). கோதை நாச்சியார் : பெரியாழ்வாரின் 'பெண் கொடி' எனத் திகழ்ந்த இவர் ஆடித் திங்கள் பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியாரின் கூறாக அவதரித்தவர். ஆழ்வார் அமைத்த நந்தவனமே இவர்தம் தோற்றத்திற்கு இடனாய்ப் பொருந்தியது. அந்த மலர்வனத்தில் ஒருபுறம் பச்சை பசேலென்று செழித்து வளர்ந்த திருத்துளவே இவர் வீற்றிருந்ததற்கு நிலைக்களனாய் அமைந்தது. பெரியாழ்வார் அக் குழவியைக் கண்டெடுத்து தமது மகளாகவே கருதி கோதை என்ற திருநாமம் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இளமையில் கலைகள் முழுதும் தன்னடைவே நிரம்பப் பெற்று வளர்ந்து வந்தாள் கோதை. ஆழ்வாரைப் போன்றே கோதையாரும் இளமை தொட்டே கண்ணன் பக்தியில் ஈடுபட்டாள். தந்தையருளால் குழந்தையாகக் கருதின கண்ணன் இவளுக்குக் காதலனாக அமைந்து விடுகின்றான். தந்தைக்குத் தெரியாமல் அவன் வடபத்திரசாயிக்கு (ஆலிலைப்பள்ளி யானுக்குக் கட்டிவைத்த திருமாலையைச் சூட்டிக் கொண்டும், காறை பூண்டு கூறையுடுத்து, கைவளை குலுக்கிக் கோவைச் செவ்வாய்திருத்தித் தன் அழகைக் கண்ணாடியில் கண்டு பல நாளும் கோதை மகிழ்ந்து வந்ததை ஒரு நாள் ஆழ்வார் கண்டு விட்டார். தன் மகளுடைய அடாத செயலுக்கு அவளைக் கடிந்து கொண்டார். அன்றிரவு வடபெருங்கோயிலுடையான் ஆழ்வார் கனவில் தோன்றி அவர் மகள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு விருப்பமாகும் என்று குறிப்பிட்டார். அன்றுமுதல் தன் திருமகளார் சூடிய திருமாலைகளையே நாளும் சாத்திப் பெருமாளை உவப்பித்து வரலானார். அதுமுதல் அவளுக்குச் 'சூடிக்கொடுத்தாள்' எனத் திருநாமம் வழங்கலாயிற்று. தம் மகளாரின் பெருமையை மெச்சிய ஆழ்வார் 'என்னை ஆண்டாள் இவளே' என்று தன் மகளைத் தழுவி உச்சி மோந்தார். அன்று முதல் கோதையாருக்கு 'ஆண்டாள்' என்ற திருப்பெயரும் நிலைத்து விட்டது. மங்கைப் பருவமடைந்ததும் ஆண்டாள் மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்.[32] என்று கூறித் திருவரங்கப் பெருமானையே கணவனாக வரித்தாள். ஆழ்வாரும் தன் கனவில் பெருமாள் உரைத்தபடியே தன் மகளை அழகிய மணவாளன் முன் நிறுத்த, அவ்வெம்பெருமானும் அவளை வரவேற்றுப் பெருவிருப்புடன் அங்கீகரித்தருளினான். ஆண்டாளும், அப்பெருமானுடன் கலந்து மறைந்தாள். இவ்வரலாறு பின் பழகிய பெருமாள் ஜீயர் 'குருபரம்பரை’ முதலியவற்றில் நுவலப் பெற்றதாகும்.

இவரது அருளிச் செயல்கள் : இப்பெருமாட்டி அருளிச் செய்தவை (1) திருப்பாவை (2) நாச்சியார் திருமொழி. என்ற இரண்டு பிரபந்தங்களாகும். இவை இரண்டும்முறையே முதலாயிரத்தில் பெரியாழ்வார் திருமொழிக்கு அடுத்து இடம் பெற்றுள்ளன.

இவர் காலம்: பெரியாழ்வார் வாழ்ந்த காலமே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று.(திருப் 13) என்ற குறிப்பினை எடுத்துக் கொண்டு ஆய்ந்து இக் காலத்தை அறுதியிடுவர் மு.இராகவய்யங்கார் (கி.பி. 731) பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் இவர் வாழ்ந்த காலம் கி.பி. 850 ஐச் சுற்றிய ஆண்டுகளாகக் கொள்வர்.[33] இவர் காலத்தைக் கடைச்சங்க காலமாகக் கருதுவது பொருந்தாது.[34]

(11) நம்மாழ்வார் : இவர் பாண்டி நாட்டில் நெல்லை மாவட்டத்தில் பொருநையாற்றங் கரையிலுள்ள 'ஆழ்வார் திருநகரி' என்று வழங்கும் திருக்குருகூரில் திருமாலிடம் வழி வழியாக அன்பு பூண்டொழுகும் வேளாளர் குலத்தில் சேனை முதலியாரின் கூறாக வைகாசித் திங்கள் பெளர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். தந்தையார் காரியார் என்னும் செல்வர். அன்னையார் உடைய நங்கையார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் 'மாறன்' என்பது மற்றொரு பெயர் 'சடகோபன்' என்பது பிறந்த நாள் தொட்டுக் குழந்தை பாலுண்ணல் முதலிய இயல்புகள் ஒன்றுமின்றி இருந்தது. அது பிறந்த பன்னிரண்டாம் நாள் அவ்வூரில் எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருமுன்பு அக்குழந்தையை விட்டனர் பெற்றோர். அஃது அங்குள்ள புளிய மரத்தடியில்[35] சென்று அமர்ந்தது. அங்ஙனம் அமர்ந்த குழந்தை பதினாறு வயது வரை கண்விழித்துப் பார்த்தல் பேசுதல் முதலியன ஒன்றுமின்றி இறைவனை நினைந்து அமர்ந்திருந்தது.

அயோத்தி முதலான இடங்கட்கு திருத்தலப் பயணமாகச் சென்ற மதுரகவி ஆழ்வார் தென் திசையில் தோன்றிய பேரொளியை வழிகாட்டியாகக் கொண்டு திருநகரிக்கு வந்து சேர்ந்தார். ஆழ்வார்நிலையைக் கண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்முன் இட்டு ஒலியுண்டாக்கினார். ஆழ்வார் கண் விழித்துப் பார்த்தார். மதுரகவிகள் அவருடன் பேச நினைத்து "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்"[36] என வினவினார். அதற்கு நம்மாழ்வார். “அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” என்று விடையளித்தார்.

அவ்விடையைச் செவிமடுத்த மதுரகவிகள் மிக மகிழ்ந்து அவரையே ஆசாரியனாகக் கருதி அவருக்குத் தொண்டு பூண்டொழுகுகின்றார். ஆழ்வார் மதுரகவிகளுக்குச் சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று தத்துவங்களையும் உபதேசித்தார். இறைவனை நினைந்த வண்ணம் மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆழ்வார் கவி பாடத் தொடங்கினார். அக் விகளே அவரது அருளிச் செயல்களாகும்.

இவரது அருளிச் செயல்கள் : இந்த ஆழ்வாரின் அருளிச் செயல்கள்; (1) திருவிருத்தம், (2) திருவாசிரியம், (3) பெரிய திருவந்தாதி, (4) திருவாய்மொழி. இவை முறையே இருக்கு, யஜுர், அதர்வணம், சாமம் என்ற நான்கு மறைகளின் சாரமாக அமைந்துள்ளன என்பது அறிஞர்களின் கொள்கை. இவற்றுள் முதல் மூன்றும் இயற்பாத் தொகுதியிலும் நான்காவது இசைப்பாத் தொகுதியிலும் அமைந்துள்ளன.

இவரது காலம் : இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று கொள்வர் ஆய்வாளர்.[37]

(12) மதுரகவியாழ்வார் : இவர் குமுதருடைய[38] கூறாகச் சடகோபர் தோன்றுவதற்கு அருணோதயம்போல் நெல்லை மாவட்டத்தில் திருக்குருகூர்க்கு அருகியிலுள்ள திருக்கோளுரில் சாம வேதிகளான பூர்வசிகைப் பார்ப்பனர் குலத்தில் சித்திரை மாதம் சித்திரைநட்சத்திரத்தில் தோன்றினார். இளமையிலேயே வேதம் சாத்திரம் முதலியவற்றைப் பயின்று செந்தமிழில்

தேர்ச்சிப் பெற்று செவிக்கினிய செஞ்சொற்கவிகளைப் பாட வல்லவராய்த் திகழ்ந்தார். அதனால் ‘மதுரகவி’ என்ற திருநாமமும் பெற்றார். மெய்யுணர்வினால் அவாவற்றுத் திருமால் பக்தி விஞ்சி தீர்த்த யாத்திரையிலும், திவ்வியதேசயாத்திரையிலும் திருவுள்ளங் கொண்டு வடநாட்டுத் திருப்பதி களைச் சேவித்துக் கொண்டு திருஅயோத்தியில் தங்கியிருந்தார்.

ஒருநாள் திருக்கோளுர் எம்பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திசையில் கண்செலுத்திய பொழுது அப்பக்கத்தில் வானுறவோங்கி விளங்கும் திவ்வியமான ஒரு பேரொளியைக் கண்டார். இங்ஙனமே அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் கண்டு வியப்புற்று விடுப்பூக்கத்தினால் (Curiosity) உந்தப்பெற்று அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நெடுவழி கடந்து ஆழ்வார் திருநகரியை அடைந்தார். அடைந்தவர் உறங்காத்திருப்புளியாழ்வாரின் அடியில் யோகத்திலிருந்த நம்மாழ்வாரின்திருமேனியைச் சேவித்தார். கண்மூடி மெளனியாய் இருந்த அவரைச் சோதிக்கும் பொருட்டு சில உபாயங்களை மேற்கொண்டார். ஆழ்வாரும் அவர் கேட்ட வினாக்கட்கு விடையருள மதுர கவியும் அவரது ஞான பக்தி வைராக்கியத்தில் ஈடுபட்டு அவரையே ஞானாசிரியனாகக் கொண்டு சரணம் புகுந்தார். நம்மாழ்வாரும் தாம் அருளிய நான்கு பிரபந்தங்களையும் மதுரகவிகளுக்கு உபதேசித்தார். அவரும் அப்பிரபந்தங்களைக் கைத்தாளமெடுத்துப் பண்ணிசையோடு ஒதிக் கொண்டு ஆழ்வாரின் தலைமைச் சீடராய்த் திகழ்ந்தார். ஆழ்வார் திரு நாட்டை அலங்கரித்த பின்னரும் அவருடைய அர்ச்சை உருவமான திருமேனியை அத்திருநகரில் எழுந்தருளப்பண்ணி

நித்திய நைமித்திக உற்சவங்களை நடத்திக் கொண்டும், தம் ஆசாரியரின் பெருமைகளை வெளியிட்டுக் கொண்டும் சிலகாலம் அத்தலத்திலேயே காலங்கழித்துப் பின்பு அத்திருத் தலத்திலேயே சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தான அந்தமில் இன்பப் பெருவீட்டை அடைந்தார்.

இவரது அருளிச் செயல் : தம்முடைய குருநாதர்மீது 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பதினொரு பாசுரங்களடங்கிய திவ்வியப் பிரபந்தத்தை அருளிச் செய்தார்.இது நாலாயிரத்தில் முதலாயிரத்தின் இறுதிப் பிரபந்தமாகச் சேர்க்கப்1பெற்றுள்ளது. இஃது எட்டெழுத்து மந்திரமாகிய பெரிய திருமந்திரத்தின் மிக முக்கியமான 'நமப் பதத்தின்' பொருளை விளக்குவதாகக் கொண்டுள்ளனர் பெரியோர்கள்.

இவர் வாழ்ந்த காலம் : இவரை நம்மாழ்வார் வாழ்ந்த காலமாகக் கொள்வர் ஆராய்ச்சி அறிஞர்கள். பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்வர்.

இறுவாய்: ஆழ்வார்களை பன்னிருவரில் பொய்கையார், பூதத்தார், பேயார், ஆண்டாள், திருப்பாணாழ்வார் ஆகிய ஐவரும் மனித யோநியில் பிறந்தவர்களல்லர். திருமழிசையார் தேவயோநியில் மனித உருவத்தில் பிறந்தவர் அல்லர். பெரியாழ்வார், தொண்டரடிப்பொடிகள், மதுரகவிகள் ஆகிய மூவரும் பார்ப்பன மரபினர். குலசேகராழ்வார் அரச(சத்திரிய) மரபினர்.திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தவர். நம்மாழ்வார் வேளாளர் மரபினர். இப்படிச் சொல்வதைவிட எல்லோரும் தொண்டக்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதே சிறப்பு.


  1. ஆழ்வார்களின் ஆராஅமுது (கழகம்); சிறப்புப் பாயிரமாலை-1
  2. காஞ்சி சொவண்ணம் செய்த பெருமாள் கோயில்.
  3. இது 108 திவ்வியதேசங்களில் ஒன்று. விழுப்புரம்-காட்டுபாடி இருப்பூர்த்தி நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது.
  4. முதல் திருவந்1
  5. இரண்-திருவந்.1
  6. மூன்-திருவந்1
  7. முதல் திருவந்.86
  8. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்-6
  9. தே.பி. 89
  10. பெரி. திரு 2
  11. தேகளிஸ்வரஸ்துதி-7
  12. திருமழிசை-திருவள்ளுர்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது இத்தலம்
  13. இவர் வரலாறு மிக நீண்டது. இதனைக் காண விரும்புவோர் ஆழ்வார்களின் ஆராஅமுது என்ற நூலில் பக்தி சாரர் (4வது கட்டுரை ) என்ற கட்டுரையில் காணலாம். (கழகம்).
  14. இது சோழ நாட்டிலுள்ள 40 திவ்விய தேசங்களில் ஒன்று
  15. ஆழ்வார்கள் கால நிலை-பக் 139
  16. Religion and Philosophy of Nalayira Divya Prapandham with Reference to Nammalvar (Ph.D thesis p.123)-S.V. Univesity Publication)
  17. தனியன் = மணக்கால்நம்பி அருளியது.
  18. History of Tamil language and literature-p. 110
  19. தே.பி. 130 (அமிர்தாசுவாதினி)
  20. இதனால் இந்த ஆழ்வாருக்கு முனிவாகனர் என்ற மற்றொரு திருநாமமும் ஏற்பட்டது.
  21. அமலனாதி.-40
  22. திரு நீலகண்டயாழ்ப்பாணர் என்ற சிவனடியார். திருவாலவாய், திருவாரூர்த் திருக்கோயில்களின் வாயில்களில் நின்று பாட, அவரைச் சிவபிரான் தம் திருமுன்பு அழைத்துக் கொண்டார் என்ற பெரிய புராணத்தில் வரும் செய்தி இப்பாண்பெருமாள் வரலாற்றுடன் ஒப்பிடற்பாலது.
  23. ஆழ்வார்கள் கால நிலை-பக். 157
  24. இப்பகுதியில் சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் 11 தேசங்கள் அடங்கியுள்ளன.
  25. பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 18இல் இஃது ஒன்று.
  26. இவர் திருமொழியின் பதிகம்தோறும் உள்ள முத்திரைக் கவியால் (திருக்கடைக் காப்புச் செய்யுளாலும் உறுதிப்படும்)
  27. பாண்டிய பட்டர் அருளிச்செய்த தனியன் இவர் பிற்கால ஆசிரியர்களில் ஒருவர்.
  28. திருப்பல் 8,9, பெரியாழ். திரு 5,1:3.5.
  29. பெரியாழ் திரு 4-2;7 இதில் நெடுமாறன்"என்று ஆழ்வார் குறிப்பிடுவர். இவன் காலம் கி.பி. 835-862.
  30. திருப்பல் 8,9; பெரியாழ் திரு 4.48
  31. Gopinatha Rao, History of Sri Vaishnavas p.23; K.A.N. Sastri; History of South India-p 415.
  32. நாச்.திரு1:5
  33. Religion and Philosophy of Nalayiram with Special Reference to Nammalvar.
  34. ஈ.எஸ். வரதராச ஐயர்: தமிழ் இலக்கிய வரலாறு வைணவமும் தமிழும் - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1957
  35. இஃது உறங்காப்புளி என வழங்கப் பெறும். திருவனந்தாழ்வானே இந்த மரமாக வந்து அவதரித்தருளியதாக ஐதிகம். ஆழ்வார் எழுந்தருளிய மரத்தைப் பின்னுள்ளோர் திருப்புளியவாழ்வார் என வழங்கினார்.
  36. செத்தது -உடல் அறிவற்றது; சிறியது - உயிர், அஃது அணு வடிவமானது; பிறத்தல் - உயிர் தன் வினைகட்கேற்ப உடம்பை அடைதல், எத்தைத் தின்று- எதனை அநுபவித்து.
  37. Gopinatha Rao, History of Srivaishnavas-p.21
  38. நித்திய சூரிகளில் ஒருவர்.