வைணவமும் தமிழும்/பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

விக்கிமூலம் இலிருந்து3. பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

எம்பெருமானை அநுபவித்தல் பலவகையாக நடை பெறலாம். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், திருகல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல், வடிவழகைச் சொல்லியநுபவித்தல், அவன் உகந்தருளிய திவ்விய தேசங்களின் வளங்களைச் சொல்லியநுபவித்தல், அங்கே அநுபவமுள்ள ஶ்ரீவைணவர்களின் பெருமையைப் பேசி அநுபவித்தல் என்று பல வகையாக நடைபெறும் பக்தி அநுபவம்.இவற்றுள் மிக அருமையான அற்புதமான மற்றொரு வகையும் உண்டு. அஃதாவது ஆழ்வார்கள் தாமான தன்மையைவிட்டு பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பேசியதுபவித்தல். இதனை ‘நாயக-நாயகி பாவனை' என வழங்குவர். இந்த வைணவ தத்துவம் பரம் பொருளுக்கும் ஆன்மாவிற்கும் கூறும் ஒன்பது வகையான உறவுகளில் இதுவும் ஒன்று. இந்த உறவே ஏனைய வற்றினும் சிறந்தது; உயிராயது, இந்த உறவினை விளக்கும் பாசுரங்களை நாலாயிரத்தில் காணலாம். வைணவப் பெருமக்கள் சங்க காலத் தமிழ் நெறியினையொட்டி ஓர் அகப்பொருள் நெறியினைப் பாசுரங்களில் அமைத்துக் காட்டிய பெருமையினைப் பெற்றனர். புருடோத்தமனான எம்பெருமானின் பேராண்மைக்கு முன்னர் உலகிலுள்ள ஆன்மாக்கள் யாவும் பெண் தன்மையினை அடைந்து நிற்கும் என்பது அவர்கள் கண்ட தத்துவம். எனவே ஆழ்வார்கள், குறிப்பாக நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண் தன்மை எய்திப் பல திருக்கோயில் மூர்த்திகளை அநுபவித்ததை அவர்களுடைய திருப்பாசுரங்களில் காணலாம்.

வைணவர்களிடையே நிலவும் மரபொன்று உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆய மங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனால் ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடம் சில சமயம் ஞானம் தலை தூக்கி திற்கும்; சில சமயம் பிரேமம் (காதல்) மீதூர்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலைகளிலிருக்கும் பொழுது அவர்கள் பாசுரங்கள் அருளியுள்ளனர். இதனை,

ஞானத்தில் தம் பேச்சு;
பிரேமத்தில் பெண் பேச்சு’ [1]

என்ற ஆசாரிய ஹிருதயம் என்ற நூல் குறிப்பிடும். அதாவது ஞான நிலையிலிருக்கும்பொழுது அவர்கள் தாமான தன்மையில் நின்று பேசுவர். பிரேம நிலையிலிருக்கும்பொழுது பெண் தன்மையை அடைந்து வேற்று வாயாலே பெண் பேச்சாகப் பேசுவர். அப்பொழுது நம்மாழ்வாருக்குப் 'பராங்குசர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பராங்குசநாயகி என்ற பெண்மைப் பெயர் வந்தடையும்; திருமங்கை யாழ்வாருக்குப் 'பரகாலர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் 'பரகால நாயகி' என்ற பெண்மைப் பெயர் வந்து சேரும்.

1. மூன்று வகைப் பாசுரங்கள் :

இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது, அவர்கள் தோழி தாய் மகள் என்ற மூவரில் ஒருவரின் நிலையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். இதனை,

"சம்பந்த உபாய பலன்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்
ஞாவஸ்தைகளுக்குத் தோழி,
தாயார் மகள் என்று பேர்"(133)

[பிரஜ்ஞாவஸ்தைகள் - மூன்று காலங்களையும் அறியும் அறிவின் நிலை]

என்று ஆசாரிய ஹிருதம் பேசும்.இங்ஙனம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்குத் தத்துவமும் கூறுகின்றது.

இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் பாசுரங்களும் தோழி சொல்வதுபோல் உருக்கொண்டு 'தோழிபாசுரம்' என்று பெயர் பெறும்; தாய் சொல்லுவது போல் வடிவெடுத்துத் 'தாய்ப் பாசுரம்' என்று திருநாமம் பெறும்; தலைவி சொல்வதுபோல் வடிவெடுத்து 'மகள் பாசுரம்' என்று வழங்கப்பெறும். இங்ஙனம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்கள் வெளிவந்தாலும் பாசுரங்கள் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களேயாவர். இதனைப் பதிகங்கள் தோறும் வரும் பலசுருதிப் பாசுரங்களால் (திருக்கடைக் காப்புச் செய்யுட்களால்) தெளிவாகும். மலை நாட்டுத் திருப்புலியூர் எம்பெருமான் மீது தோழிப் பாசுரமாக அருளிய பாசுரத்தின்[2] பலசுருதிப் பாசுரத்தில் தொண்டர் 'தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன், சொல், நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள் இவைப்பத்தும்' என்று வருவதைக் காணலாம். திருவரங்கப் பெருமான்மீது தாய்ப்பாசுரமாக அருளிய பதிகத்தின்[3] பலசுருதிப்பாசுரத்தில் 'வண்குருகூர்ச் சடகோபன், முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும்' என்று அமைந்திருப்பதைப் பார்க்கலாம். மலை நாட்டுத் திருமூழிக் களத்து உறையும் என்பெருமான்மீது மகள் பாசுரமாக அருளிய பதிகத்தின்[4] திருக்கடைக்காப்புச் செய்யுளில் 'வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த; அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும்' என்றும் வருவதை நோக்கலாம். ஏனைய அகப்பொருள் பாசுரங்களிலும் இதே போக்கு இருப்பதையும் கண்டு மகிழலாம். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகி வேறு வேறு பெயர்களைப் பெற்றாலும் அவற்றில் பாய்ந்து செல்லும் நீர் ஒரே ஆற்று நீராக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ஙனமே ஆழ்வாரது சொல் மாலைகள் மூன்று நிலைகளாக வழிந்து புறப்பட்டாலும் அவை ஆழ்வார்களது பாசுரங்களாகவே தலைக்கட்டும்.

(அ) திருவாய்மொழியில் : இது திருமாலவன் கவி[5] என்றும் சிறப்பிக்கபெறும். 'சடகோபன் செந்தமிழ்' என்ற இந்நூலில் நம்மாழ்வார் பகவானை நூறு பதிகங்களால்

அநுபவித்து இனியராகின்றார். இவற்றுள் 73 பதிகங்கள் ஆழ்வார்தாமான தன்மையில் பேசியவை. பெண் பாவனையில் பேசியவை 27 பதிகங்கள். பெண் நிலையிலிருந்து பேசிய வற்றுள் தோழி பாவனையில் பேசியவை 3 பதிகங்கள்; தாய் பாவனையில் பேசியவை 7 பதிகங்கள்; மகள் பாவனையில் பேசியவை 17 பதிகங்கள், பரகாலன் பைந்தமிழிலும் 27 பதிகங்கள் அகப்பொருள் பற்றியனவாக உள்ளன என்று சிலர் காட்டுவர். அவர்கள் கருத்துப்படி பெரிய திருமொழியில் உள்ளவை 23 பதிகங்கள்; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்; மடல்கள் 2 ஆக 27 பதிகங்கள். இவற்றுள்ளும் தாய் பாவனையில் உள்ளவை 12 பதிகங்கள்; மகள் பாவனையில் உள்ளவை 15 பதிகங்கள்; தோழி பாவனையில் உள்ளவை ஏதும் இல்லை.

(ஆ) பரகாலன் பைந்தமிழில் : உள்ளவற்றை ஆழ்ந்து நோக்கினால் அவற்றுள் சில அகப்பொருள் துறைகளில் அமைந்தவை அல்ல என்பது தெளிவாகும். தாய் பாவனையில் உள்ளனவற்றில் ஒன்பது பதிகங்கள்தாம் அகப்பொருள் துறையில் அமைந்தவை. அடியில் கண்ட பெரிய திருமொழியில் உள்ளவை,

104. கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

10.5 கண்ணனைச் சப்பாணி கொட்டவேண்டுதல்

10.7. கண்ணனது செயல் குறித்து யசோதை பணித்தலும், ஆய்ச்சியர் முறையிடுதலும்

மூன்று பதிகங்களும் தாய்ப் பாவனையில் வகைப்படுத்திக் காட்டப்பெற்றாலும் அவையசோதைப் பிராட்டியுடையனவே

யன்றிப் பரகால நாயகியினுடையவை அல்ல. இங்ஙனமே கண்ணனோடு ஊடி உரைத்தல் (108) என்ற திருமொழி மகள் பாசுரம் போல காணப்படினும் அதுவும் பரகால நாயகியின் பாசுரம் அல்ல.

2. தத்துவம் :

இங்கனம் மூன்று வகையாகச்சொல்லும் பாசுரங்கட்குத் திருமந்திரத்தின் அடிப்படையில் தத்துவம் கூறி விளக்கமும் அளித்துள்ளனர் நம் முன்னோர்கள் ஆசாரியப் பெருமக்கள். 'ஒம் நமோ நாராயணாய' என்பது திருமந்திரம். இதிலுள்ள ஒம்+நமோ+நாராயணாய என்ற மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் செப்புகின்றன. அவை; 'சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம்' என்பன.[6] மற்றும் ஒம் என்னும் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளைக் கொண்டது. இந்த மூன்று எழுத்துகளும் மூன்று பதங்களாய் நின்று மூன்று பொருள்களைத்தெரிவிக்கும். அதாவது அகாரம் பகவானையும் அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கிநிற்கும் நான்காம்வேற்றுமை (லுப்த சதுர்த்தி) அடிமைத் தன்மையையும், உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யார் ஹத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தலையும்) மகாரம் ஞானவானாகிய சீவான்மாவையும் தெரிவிக்கின்றன. திருவெட்டெழுத்து மந்திரத்தின் மூன்று சொற்களாலும் குறிப்பிடப்பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை

உணர்த்தவே தோழி, தாய், மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று இவற்றை 'அவஸ்தா திரய விருத்தி' (திரயம்-மூன்று அவஸ்தை-நிலை) என்று பேசும் ஆசாரிய ஹிருதயம் (சூத்138)

(1) தோழிப் பாசுரங்கள் : மேற்கூறப்பெற்ற விளக்கத்தி லிருந்து தோழியின் பாசுரங்களினால் ஆன்மாக்கள் யாவும் திருமாலைத் தவிர பிற தெய்வங்கட்கு அடிமைப்பட்டவை (அநந்யார்ஹசேஷத்துவம்) அல்ல எனவும் அவை தமக்குத் தாமே அடிமை அல்ல எனவும் தெளிவாக அறிய முடிகின்றது. திருவாய்மொழியில் தோழியின் கூற்றாக வரும் 'தீர்ப்பாரையாம் இனி' (4,6) 'துவளில் மாமணிமாடம்' (6,5) 'கருமாணிக்கமலை' (8,9) என்ற மூன்று திருவாய் மொழிகளையும் ஊன்றிப் படித்தால் அநந்யார்ஹசேஷத்துவம் தெரியும். எடுத்துக்காட்டாக 'துவளில் மணி மாடத்' திருவாய் மொழியில் பத்தாம் பாசுரம்:

பின்னைகொல்? நிலமா மகள்கொல்?
திருமகள் கொல்?பிறந் திட்டாள்
என்னமா யங்கொலோ? இவள்நெடு
மால்என்றே நின்று கூவுமால்;
முன்னிவந்து, அவன்நின்று, இருந்து
உறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும்; அவ்வூர்த்
திருநாமம் கேட்பது சிந்தையே (6.5:10)

[பின்னை நப்பின்னை; நிலமாமகள்-பூமிப்பிராட்டியார்; திருமகள்-பெரியப் பிராட்டியார்; மாயம்-அதிசயம்; கூவுதல்-அழைத்தல்; சென்னி-தலை; சிந்தை-எண்ணம்]

இவளது ஈடுபாட்டின் மேன்மையைக் கண்டு "இவள் நப்பின்னைப் பிராட்டியோ? பூமிப் பிராட்டிதானோ? பெரிய பிராட்டிதானோ? என்ன ஆச்சரியமோ? இவள் நெடுமால் என்றே கூவா நிற்பாள்; முன்னதாகவே அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள். அந்தத் திருத்தலத்தின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இரா நிற்பாள்" என்கின்றாள் தோழி.

ஆழ்வார் கிருட்டினாவதாரத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையை நோக்குங்கால் “நப்பின்னைபிராட்டிதானோ?” என்று நினைக்கத் தோன்றும்; வராகப் பெருமான் திறத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையைநோக்குங்கால் “பூமிப் பிராட்டி தானோ?” என்று நினைக்கத் தோன்றும்; இராமாவதாரத்தில் இவள் கொண்டுள்ள ஈடுபாட்டை நோக்கினால் “சீதாப்பிராட்டிதானோ?" என்று நினைக்கத் தோன்றும்.

'பிறந்திட்டாள்' இங்கு ஈடு : “அவர்கட்கு இவள் படி (ஒப்பு) இல்லாமையாலே அவர்கள் ஒப்பு அன்று; போகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ? என்னுமாம்”,

இப்பதிகம் முழுவதையும் நோக்கினால் தலைவி எம்பெருமான்மீது ஈடுபட்டிருக்கும் (அநந்யார்ஹத்துவம் திறத்தைக் காணமுடிகின்றது. பிரணவத்தில் உகாரத்தின் பொருள் அநந்யார்ஹத்துவம் என்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

(2) தாய்ப் பாசுரங்கள் : தாய்ப் பாசுரங்கள் ஈசுவர பாரதந்திரியத்தையும் அவனே உபாயமாகின்றான் என்பதையும் தெரிவிக்கின்றன. பெண்பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய். அப் பெண் தக்க வயதையடைந்ததும் பேராண்மைக்கு இருப்பிடமாகவுள்ள எம்பெருமானிடம் கழிபெருங் காதலையுடையவளாகின்றாள். அவன் இருக்குமிடத்தைப் போய்ச் சேரவேண்டும் என்று பதறுகின்றாள். இங்ஙனம் பதறும் தன்மகளைத் தடுத்து நிறுத்துகின்றாள் திருத்தாயார். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்பது நடைபெற வேண்டிய ஒழுங்குமுறை என்றும், அங்ஙனமின்றி தலைவியே தலைவன் இருக்கும் இடத்திற்குப் புறப்படுவது குலமரியாதைக்குச் சிறிதும் பொருந்துவதன்று என்றும் நினைக்கின்றாள் தாய்.

திருமந்திரத்தின் இரண்டாவது சொல்லாகிய 'நம' என்பது இந்நிலையைக் குறிக்கின்றது. இச்சொல்லை ந+ம என்று இரண்டாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனிப் பொருளைத் தருதலின் பதங்களாயின.[7] இவற்றுள் ஆறாம் வேற்றுமையுடன் கூடிய ‘ம’ என்னும் பதம் சேதநன் ஈசுவரனுக்கு உரியவன் என இயம்பும் நான்காம் வேற்றுமையின் பொருளுக்கு மாறாய்த் 'தனக்குத்தான் உரியன்' என்னும் பொருளைத் தருகின்றது. ஆனால் ‘ந’ என்னும் பதமோ அதற்கு எதிர்மறைப் பொருளால் அதனைத்தடுத்து நிறுத்தித் தனக்குத் தான் உரியனல்லன் என்பதை அறிவிக்கின்றது.[8] ஈசுவரனுக்கு உரியவன் என்பது பெறப்படுகின்றது. இம்முறையில் இச்சொல் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது. அஃதாவது இச்

சொல் ஞானத்தினால் ஏற்படும் சுதந்திரத் தன்மையை ஒழிக்கின்றது. இதன் காரணமாக ஏற்படும் “தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும்” என்ற எண்ணத்தையும் நீங்குகின்றது. இனி இவளைக் காத்து இரட்சிப்பவன் ஈசுவரனே ஆகின்றான் என்ற துணிவு பிறக்கின்றது. அஃதாவது ஈசுவரனே உபாயம் என்ற பொருள் கிடைக்கின்றது. இந்த மனநிலையைத் தான் ‘தாய்' என்று குறிக்கப் பெறுகின்றது. திருவாய்மொழியில் தாய் பாவனையில் பேசும் ஏழு பதிகங்களும்[9] ஈசுவரபாரதந் தரியத்தையும், அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன. ஆகவே இவை உபாயத்தில் உறுதி பூண்டிருக்கும் நிலையிலே எழுந்த பேச்சுகள் என்பது தெளிவாகின்றது.

தாய்ப்பாசுரமாக நடைபெறுவதில் ஒன்றைக் காட்டுவேன் ‘மண்ணை இருந்து துழாவி (44) என்னும் திருவாய்மொழியில் ஐந்தாம் பாசுரம் :

கோமள ஆன்கன்றைப் புல்கி,
'கோவிந்தன் மேய்த்தன' என்னும்;
போம்இள நாகத்தின் பின்போய்
‘அவ்ன்கிடக் கையீ' தென்னும்;
ஆமளவு ஒன்றும் அறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே (5)

[கோமளம் - இளமை அழகு; கிடக்கை - படுக்கை; ஆம் அளவு - ஆகும் அளவு; மால்-மயக்கம்]

இதில் ‘இவளுக்கு இத்துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகிலேன்’ என்கின்றாள். இப்பாசுரத்தை ஊன்றித் திரும்பத் திரும்பப் படித்தால் தாய்ப்பாசுரத்தின் தத்துவம் தட்டுப்படும்.

(3) மகள் பாசுரங்கள் : பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவனுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து தலைவனுடைய ஒப்பற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள்; குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் என்னும் பதற்றத்தை உடையவள் இவள். காலக் கழிவையும் இவளால் சிறிதேனும் பொறுக்க முடியவில்லை. பிரணவத்தினாலும், நமஸ்ஸாலும் எல்லோருக்கும் சேவியாய் (தலைவனாய்), சரண்யனாய் அறுதியிடப் பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் இவனே. பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் இவை உணரப்பெற்ற பின்பு 'நாராயணாய' என்ற சொல்லால் கூறப் பெற்றுள்ள சொரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றின்[10] சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்பவன் இவன். எம் பெருமான் சாத்தியோபாயமாக[11] இருந்தால் தான்செய்யும் சாதனங்கள் முடிவுற்றபிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக்கூடுமென்று பொறுத்திருக்கலாம். ஆனால்

அவன் சித்தோபாயமாக[12] இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரணம் இல்லை. 'அவனே உபாயம்' என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருப்பவள் இவள். இந்த மனநிலை தான் 'மகள்' (தலைவி) என்று குறிப்பிடப் பெறுகின்றது. ஆழ்வாரின் மகள் பாசுரங்களாக உள்ள பதிகங்கள் யாவும் இந்த நிலையையே குறிக்கின்றன. இந்த மூன்று நிலைகளும் தோன்றுவதை ஆசாரியஹிருதம் விளக்குகின்றது. .

திருவாய்மொழியில் மகள் பாவனையில் நடைபெறும் பதிகங்கள் பதினேழு.[13] இவற்றுள் தூதுப் பதிகங்களாக நடைபெறுபவை நான்கு[14] எடுத்துக்காட்டாக "ஊரெல்லாம் துஞ்சி” (54) என்ற திருவாய் மொழியில் முதல் பாசுரம் :

ஊரெல்லாம் துஞ்சி
உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர்
நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம்
பாம்பணையான் வாரானால்
ஆர்எல்லே வல்வினையேன்
ஆவிகாப் பார்இனியே (1)

[துஞ்சி-உறங்கி, நீண்டது-நெடுகிச் சென்றது; ஆல்அந்தோ பார்-பூமி, பாம்பணையான் - சேஷசாயி, ஆவி - உயிர்]

“பிரளய ஆபத்தில் வந்து உதவினவன் என்னைக் காதல் நோயாகிய பிரளயம் நோக்க வந்து உதவாத பின்னர், இனி நான் பிழைத்திருத்தல் என்பது ஒருபொருள் உண்டோ?" (ஈடு) என்று தான் வாழ்வதில் நசை அறுக்கின்றாள் பாரங்குச நாயகி.

“ஊராருடைய பழிமொழியே எருவாகத் தன்னுடைய காதல் வளருவதாகையாலே அந்த எருவுக்கு அவகாசம் இல்லாத படி ஊரெல்லாம் துஞ்சிற்றே!” என்று வருந்துகின்றாள்."பண்டு இராமாயணப் பெரும்போரில் நாகபாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு சாம்பாவன், மகராசர் (சுக்கிரீவன்), தொடக்கமானார் உணர்ந்திருந்தார்கள் அன்றோ? இங்கு அங்ஙனம் ஒருவர்கூட இலராயினரோ, பழிசொல்லுவார்,இதம் சொல்லுவார், சாத்துணையாவார் இவர்கள் எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்” என்கின்றாள்.

“ஊரை விட்டு வெளியே சென்று தரிக்கைக்கும் அவகாசம் இல்லாமல் உலகெல்லாம் நள்ளிருளாயிற்று. கண்ணாலே ஒரு பொருளைக் காணமுடியா நிலையாயிற்று. நீரில் வாழும் பிராணிகள் அனைத்தும் ஆழ இழிந்து அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. இரவு-பகல் என்ற வேற்றுமையின்றி ஒரே காளராத்திரியாயிற்று, மானிடர்களுடைய இரவைக் காட்டிலும் தேவர்களுடைய இரவுக்கு அதிக நீட்சியுண்டு, அதனினும் விஞ்சிய நீட்சியாயிற்று”என்கின்றாள்.

“இந்த நிலையில் பரம காருண்யரான அந்தப் பாம்பனையானும் வாரா தொழிந்தான். பிரளயாபத்து வந்தவாறே உலகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்துப் புரக்கும் பெருமான் இப்பேராபத்தில் வந்து முகங்காட்டி உதவுகின்றீலன். இப்படியான பின்பு தரிக்கும் வகை என்னோ?!" என்கின்றாள். இந்தப் பாசுரத்தில் தலைவியின் துடிப்பையும், பதற்றத்தையும் காணமுடிகின்ற தல்லவா?

(4) பகவத்விஷயகாமம் : வேதாந்தகளில் குறிப்பிடப்பெறும் பக்தி இங்ஙனம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்றலை அறிய முடிகின்றது. இவர்கள் எம்பெருமான்மீதுகொள்ளும் காமம் பகவத்விஷயகாமம் என்று வழங்கப்பெறும். இவர்கள் மாதவன் மீது கொள்ளும் காமம் மற்றவர்கள் மங்கையர்மீது கொள்ளும் காமத்தினின்றும் வேறுபட்டது. ஆயினும் சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் பேரின்ப அநுபவமாகிய இந்த பகவத் விஷயகாமத்திற்கும் கூறப்பெறும். சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாக இருப்பவை போல் பகவத் விஷயாதுபவத்திற்கும் பரபக்தி[15], பரஞானம்[16], பரமபக்தி[17], என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களின் வாயிலாக அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று சமயச் சான்றோர்கள் கொள்வர்.

காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் கவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ஙனமிருக்க காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள். அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன ? உடல் நலத்திற்குக் காரணமான வேப்பிலை உருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியில் பூசி உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரைகட்குச் சருக்கரை பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத்தினை உடையவர்கட்குக் காட்டப்பெறும் உக்தி முறையாக இறையனார் களவியலிலும்[18] கூறப்பெற்றுள்ளமையை ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஒர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை.

(5)மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை: தூது என்பது ஒருவர் தம்முடைய கருத்தை வேறொருவருக்கு இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது. சங்க இலக்கியங்களில் ‘காமம் மிக்க கழிபடர்கிழவிகளாக' இருந்த துறையே பிற்காலத்தில் தூது இலக்கியங்களாக வடிவு கொண்டன என்பது ஆய்வாளர்களின் கருத்து. பக்தி இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில் ஆழ்வார் பெருமக்கள் இந்த அகத்துறைகளை மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் ஆழ்வார்கள் புள்ளினங்களையே தூது போகும்படியாகப் பாசுரங்களை அமைப்பர்; குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, மயில், பூவை, அன்றில்கள், வண்டினங்கள் முதலியன தூதுவிடும் பொருள்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றைத் தவிர வாடை, மேகம், நெஞ்சு போன்றவற்றையும் இவர்தம் பாசுரங்களில் தூதுப்பொருள்களாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

இங்ஙனம் பறவைகளைத் தூது விடுத்தற்கு உட்பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம்,

'சேர்ப்பாரைப் பட்சிகளாக்கிப் ஜ்ஞான கர்மங்களைச்
சிறகு என்று, குரு ஸ்ப்ரஹ்மசாரி புத்ரசிஷ்ய ஸ்தானே
பேசும் சூத்திரம் (150)
(ஸ்ப்ரமசாரி-ஒரு சாலை மாணாக்கர்; ஸ்தானே-இடத்தில்)

என்று குறிப்பிடுகின்றது. “விண்ணோர்பிரானார் மாசு இல் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே" (திருவிரு. 55) என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால் பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப்பெறுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்கனம் விசும்பில் பறந்துசெல்லுதல் இயலுகின்றதோ அங்ஙனமே ஞானம் ஒழுக்கம்(அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. எனவே, ஞானத்தையும், அநுட்டானத்தையும் சிறகுகளாகக் கொள்ள வேண்டும். ஆசாரியர்களும் ஒரு சாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட பறவைகளிலும், அன்னம், வண்டு முதலியவையாகச் சொல்லப்பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்னும் உள்ளுறைப் பொருளும் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. அன்னமாகப் பேசப்பெறுபவர்கள் “செல்வநம்பி, பெரியாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார்" ஆகியோர்.[19]'"நாதமுனிவர், லோக சாரங்க முனிவரால் தாங்கப்பெற்ற திருப்பாணாழ்வார், தம்பிரான்மார்(அரையர்)” போன்றவர்கள் தும்பி என்றும், வண்டு என்றும் பேசப் பெறுவர்.[20] அதே நூல் கிளி, பூவை, குயில், மயில் என்பவற்றிற்கு உள்ளுறைப் பொருளாக அமைபவர்கள் மதுரகவிகள், தொண்டரடிப் பொடியாழ்வார். கூரத்தாழ்வான், திருமாலையாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் முதலியோர்களைக் கூறும்[21] நாரை, கொக்கு, குருகு என்னும் பறவைகட்குக் “குலசேகரப் பெருமாள் ஆசாரிய பதத்தில் நின்றவர்களான முதலிகள் போல்வார்" உள்ளுறைப் பொருள்களாக அமைவர்[22] மேகத்திற்கு உள்ளுறையாக “திருமழிசைப் பிரான், திருமங்கையாழ்வார், இராமாநுசர்" முதலியோர் பேசப் பெறுவர்.[23]

(6) துதுப்பதிகங்கள்:மயர்வறமதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தூது விடும் பதிகங்கள் ‘அஞ்சிறையமடநாராய்’ (1,4), 'வைகல் பூங்கழிவாய்’ (6,1),'பொன்னுலகாளிரோ?' (6,8), 'எம்கானல் அங் கழிவாய்’ (9,7) என்ற நான்காகும். இவை முறையே வியூகத்திலும், விபவத்திலும், பரத்துவ, அந்தர்யாமித்துவத்திலும், அர்ச்சையிலும் தூதுவிடும் பதிகங்களாக அமைகின்றன என்று ஆசாரியர்கள் அறுதியிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக 'அஞ்சிறைய மடநாராய்' (1.4) என்றதில்[24] தூது அமைந்திருக்கும் முறையை ஈண்டு விளக்குவேன். இத்திருவாய் மொழியில் பத்தாம் பாசுரத்தில் :

கடல்ஆழி நீர் தோற்றி
அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக்
கண்டக்கால்..... (10)

என்பதால் வியூகத்தில் தூது என்பது தெளிவாகின்றது. இதில் நான்காம் அடியில் 'மட நெஞ்சே!' என்று வருவதால் இப்பாகரம் நெஞ்சைத் துது விடுவதாக அமைகின்றது.

என்பிழையே நினைந்தருளி
அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின்
தகவினுக்கு என்று ஒருவாய்ச் சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே!
யான்வளர்த்த நீ அலையோ? (7)

இந்தப் பாசுரத்தில் கிளி தூதாக அமைகின்றது. ‘என் பிழையே நினைந்தருளி' என்ற தொடரால் அறியப்படுவது; “எம் பெருமான் தனது சீல குணத்தால் முதலில் ஆழ்வாருடன் கலந்துவிட்டான்; கலந்த பிறகு அவரிடத்திலிருக்கும் குற்றங்களைக் கண்டான்; அதனால் அவரை வெறுத்துப் பிரிய

லுற்றான்; அவனிடம் பொறுக்கும் குணம் (க்ஷைமை குணம்) நிரம்பயிருக்கும்போது ஆழ்வாரின் பிழைகளைப் பொருட்படுத்தக் காரணம் இல்லை. தன்னுடைய பிழைகள் அவனுடைய பொறுக்கும் பண்பையும் மறைபித்தன போலும் என்று கருதிய ஆழ்வார்நாயகி அப் பெருங்குணத்தைச் சிறிது நினைப்பூட்டிவிட்டால் போதும் என்று கருதி பறவைகளைத் தூது விடுகின்றாள். சீதாப் பிராட்டியை ஆயிரக்கணக்கான வானரங்கள் தேடுவதைப்போலவே தன் கண்களில் கண்டவற்றையெல்லாம் தூதுபோகுமாறு ஏவுகின்றாள் ஆழ்வார் நாயகி. பறவைகளைத் துரது விடும் ஐதிகத்தைக் குறிப்பிடும் பராசரபட்டர் "சக்கரவர்த்தித் திருமகனார் திருவவதரித்த பின்பு வானரஜாதி வீறு பெற்றது போல, ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறு பெற்றது” என்று சுவையுடன் அருளிச் செய்வர்.

இவ்விடத்தில் ஒர் இதிகாசம்[25] நஞ்சியர் காலத்தில் சாமானியமாயிருப்பான் ஒருவன், விரக்தர்களும் வைதிகர்களுமான மகான்கள் பலரும் திருவாய் மொழிக் காலட்சேபத்தில் இது தத்துவ பரமாயிருக்குமென்று கருதி இத்திவ்வியப் பிரபந்தத்தைச் சேவித்து வந்து இத்திருவாய் மொழியில் வந்தவாறே 'இது காமுக வாக்கியமாயிருக்கிறது' என்று வெறுப்புக்காட்டிச் சென்றானாம். வேதாந்தங்களில் விதிக்கப் படுகின்ற பகவத் காமமே இப்படிப்பட்ட பாசுரங்களாகப் பரிணமித்ததென்று அவன் அறிந்திலன் கருவிலே திருவில்லாமையாலே - என்று நம்பிள்ளை வருந்திப் பேசுவர்.

பிரிவாற்றாமையுடன் இருக்கும் பராங்குச நாயகி நெய்தல் நிலத்தில் இருக்கின்றாள். பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலமன்றோ? நீர் நிலத்தருகே இராநின்ற ஆழ்வார் நாயகி அண்மையிலிருக்கும் நாரையைப் பார்த்து “நாராய் நீ என் நிலைமையைக் கருடக் கொடியானுக்கு அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்” என்று இரக்கின்றாள்.

அஞ்சிறைய மட நாராய்!
அளியத்தாய்! நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய்
ஆ வா! என்று எனக்கருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு
என்விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில்
வைப்புண்டால் என்செய்யுமே? (1.4:1)

(மடம் - இளமை; புள் கருடன் (141)வைப்புண்டால் - அநுபவித்திருப்பாயானால்)

என்பது பாசுரம். குழந்தை தாயினுடைய எல்லா உறுப்புகளையும்விட்டு முலையிலே வாய் வைப்பதுபோல், இங்கு நாரையின் மற்றைய உறுப்புகளை விட்டு அதன் சிறகிலே கண்வைப்பது விரைந்து செல்வதற்கு அதுவே சாதனம் என்பது பற்றி சொன்ன சொல்மறுக்காமல் உடனே தயாராக இருப்பது போல ஆழ்வார்கண்ணுக்குத் தோற்றியதால் ‘மட’ என்ற அடை மொழியால் சிறப்பித்தார். நாயகன் விடுகின்ற தூதைக் காட்டிலும் நாயகி விடுகின்றதுதுக்கு ஏற்றமுண்டு. இராமனால் தூது விடப்பெற்ற சிறிய திருவடிக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பிராட்டியின் தூதனாக அவன் இராமனிடம் மீண்டுவந்த போது அவனுடைய திருமார்பிலே அணைக்கப் பெற்றான். நாரையின் உள்ளும் புறமும் வெண்மையாக இருப்பதுபோல் ஆசாரியர்களும் தூய்மை வாய்ந்த மனம் மெய்களையுடையவர்கள் என்பது நாரையின் உள்ளுறைப் பொருள்.

நாரையைத் தூது போகுமாறு இரந்த தலைவி அங்குச் சென்றால் சொல்ல வேண்டிய செய்திகளைச் சில குயில்கட்குக் கூறுகின்றாள். ஒருவரை அழைத்துவிட்டு மற்றொருவருக்குச் செய்தி சொல்லுகின்ற போக்கிலிருந்து ஆழ்வார் நாயகியின் மிகுதியான கலக்கம் நன்கு புலனாகும். இத்தகைய கலக்கத்தை உண்டு பண்ணியது விஷயாந்தரங்களை விட பகவத் விஷயத்தில் உண்டான ஏற்றம். இனக் குயில்கட்கு ஆழ்வார் நாயகி கூறும் செய்தி,

முன்செய்த முழுவினையால்
திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன்
அகல்வதுவோ? விதியினமே. (2)

[முன்- எனக்குத் தெரியாதகாலம் முதலாக; வினை - பெரும் பாவம்; குற்றேவல் - அடிமைத் தொழில்]

என்பது. “அநாதி காலமாகத் திரட்டின பாவத்தாலே திருவடி வாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுவதற்கு ஏற்கெனவே முயலப் பெறாத நான் அகன்று போக வேண்டியது தானோ? என்று கேளுங்கள்” என்கின்றாள்.

முழுவினை: இதனை விளக்கும் போக்கில் நம்பிள்ளை காட்டும் ஐதிகம்[26] பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருந்த காலத்து அங்குத் தெற்காழ்வான் என்றும் கோளரி யாழ்வான் என்றும் பெயர்களைக் கொண்ட இருவர் வாழ்கின்றனர். கோளரியாழ்வான் நற்குண நல்லொழுக்கமுடையவன்; தெற்காழ்வான் சாதாரணமாகக் காணப்பெறும் ஒரு சராசரி மனிதன். இருவரும் சிறப்பான ஒரு திதியன்று ஒரு குளக்கரையில் சந்திக்கின்றனர். கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி "அப்பா,இது புண்ணியதினமாயிற்றே. இன்றாகிலும் ஒரு முழுக்கிடமாட்டாயா?” என்கின்றான். அது கேட்ட தெற்காழ்வான் “முழுக்கிடவேணுமென விதிக்கின்ற உன் அபிப்ராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் தொலையக்கூடும் என்பது தானே; அந்தோ! என்னுடைய பாவம் திருக்கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாளுடைய திருக்கையிலுள்ள திருவாழியால் போக்கினால் போகுமேயல்லது ஒன்றிரண்டு முழுக்கால் போகக் கூடியதன்று காண்” என்கின்றான். இச்சொற்கள் பட்டருடைய திருச்செவியில் விழுந்த அளவில் “ஆ! ஆ! எவ்வளவு ஆத்திகனாயிருந்தால் இந்த வார்த்தை சொல்ல முடியும்? இவனை மேலெழுந்தவாரியாகப் பார்த்து நாத்திகன் என்று நினைத்திருந்தோமே இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன்” என்று மிகவும் ஈடுபட்டதாக வரலாறு.

நாயகி நிலையிலிருக்கும் ஆழ்வார் "கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” (நாச் திரு 13:9) என்ற ஆண்டாளைப் போல் "முலையால் அணைக்க” என்று சொல்ல வேண்டியிருந்தும், “திருவடிக்கீழ்க் குற்றேவல்” என்று சொல்லுகின்ற அழகு அற்புதம், இங்கே நம்பிள்ளை ஈடு; “பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமாப் போலே, இவர் பிராட்டியானாலும் முலையால் அணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை” என்பதாக, வேதமோதிய அந்தணனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் வேதாத்யயனமே சொல்லித் திரிதல்போல, ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லை என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

பராங்குச நாயகியின் கண்வட்டத்தில் பேடையோடு களித்திருக்கும் அன்னங்கள் தென்படுகின்றன. அவற்றை நோக்கித் தூது செல்ல வேண்டிய இடத்தையும், தூதுச் செய்தியையும் குறிப்பிடுகின்றாள்.

விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள்மாணாய்
உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே
மாளாதோ என்றொருத்தி
மதியெல்லாம் உள்கலங்கி
மயங்குமால் என்னீரே (3)

[விதி-பாக்கியம் ; குறள் மாணாய்- வாமன பிரம்மச்சாரியாய்; கள்வர் - வஞ்சகர்; மயங்கும்- அறிவிழந்து கிடக்கும்)

என்ற பாசுரத்தில் 'விதி' என்பதற்குச் 'சாத்திரவிதி' என்றும் 'பாக்கியம்-பேறு' என்று இரண்டுவிதமாகப் பொருளுரைப்பர். பின்னதே சிறந்தது. இதனையொட்டி நம்பிள்ளை ஈடு: “பெருமாள் பிராட்டியாரைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே இராஜ்யதாரங்களை இழந்து கிடந்த மகாராஜரைக் கண்டு[27] அவர் குறையைத் தீர்த்த பின்னரே தம் இழவில் நெஞ்சு சென்றது. அங்ஙனமின்றிக்கே, இப்போது இவை குறைவற்றிருக்கின்ற இதுதான் இவள் பாக்கியமாயிருக்குமிறே” என்பது.

மேல் வருவனவற்றைத் தெரிந்துகொண்டு அதற்கிணங்கக் காரியம் செய்யவல்ல சாதுர்யமே 'மதி' எனப்படும்.[28] அப்படிப்பட்ட சாதுர்யத்தினால் மாண்குறள் கோலவடிவு காட்டிய யாசகனாயினான்.[29] ‘அந்தக் குணத்தினால் என்னை ஈடுபடுத்தி என்னை இப்பாடுபடுத்துவதற்காகவே என்ற ஆழ்வார் நாயகியின் கருத்து மதியினால் கள்வர்க்கு என்ற சொற்களில் கண்டு மகிழலாம். 'கள்வம்' என்பது முதலில் சிறிய வடிவினைக் காட்டிய பிறகு பெரிய வடிவான வஞ்சகம் என்று கூறுவர் திருமாலை ஆண்டான். ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்த மாயமே கள்வம் என்பதாக எம்பெருமானார் நிர்வகிப்பர்.

‘ஒருத்தி மதியெல்லாம் உள்கலங்கி மயங்குமால்’ என்ற செய்தியைக் கூறி வருமாறு பணிக்கின்றாள் ஆழ்வார் நாயகி. 'ஒருத்தி' என்றால் தெரியுமோ? இன்னாள் என்று குறிப்பிட வேண்டாவோ? என்னில்: வேண்டா; ஒருத்தி என்றபோதே அவள் பாரங்குசநாயகி என்று அறிந்து கொள்வார். இங்ஙனம் மதியெல்லாம் உள்ளடங்கி மயங்கும்படியாகத் தன்னைச் செய்து வைக்கப் பெற்றவள் இந்நிலத்தில் பராங்குசநாயகியைத் தவிர வேறு யாரும் இல்லையாதலால் சிறப்பித்துச் சொல்ல வேண்டியதில்லை. இங்கே நம்பிள்ளை ஈடு: “ஒருத்தி என்றால் அறியுமோ? என்னில் : எய்தவன் கை உணராதோ? இன்ன காட்டிலே மான் பெடை ஏவுடனே கிடந்து உழையா நின்றதென்று ஊரிலே வார்த்தையாடினால் எய்தவன் கை உணராதோ 'நீயன்றோ எய்தாய்’ என்று சொல்ல வேண்டாவிறே” என்பது.

பாசுரத்தின் இறுதி அடியின் நயத்தையும் காண்போம். 'ஒருத்தி அறிவு கலங்கினாள்' என்று கூறுங்கள் அது கேட்ட எம்பெருமான் 'தன்னதான அறிவு கலங்கப் பெற்றாலும் நாம் கொடுத்த அறிவு இருக்குமே அது கொண்டு ஆறியிருப்பள் என்பன்; அப்போது 'மதியெல்லாம் கலங்கிற்று' என்று கூறுங்கள். அது கேட்ட எம் பெருமான் நாம் கொடுத்த அறிவு அப்படிக் கலங்கி விடாது கலங்கினாலும் மேலெழச் சிறிது கலங்குமேயல்லது உள்ளே கம்பீரமாகவே இருக்கும் என்பன். அப்போது 'மதியெல்லாம் உள் கலங்கிற்று' என்று எடுத்து இயம்புங்கள். அது கேட்ட எம் பெருமான் எல்லாம் கலங்கிப் போனால் என்ன? நாம் இருக்கிறோம். பின்பு நாம் அணுகும்போது அறிவு கொடுத்துக்கொள்ளுகிறோம்' என்பன். அப்போது 'மயங்குமால்' என்று கூறுங்கள். அதாவது'முடியும் தருணமாயிற்று’ என்று விளக்குங்கள். 'மயங்கினாள்' என்று முடிந்ததாகவே சொல்லிவிட்டால், 'அப்படியா? முடிந்து போய்விட்டாளா? இனிப் போய் நாம் என்ன செய்வது?' என்று சொல்லி ஒரு முழுக்கு போட்டுவிட்டு நிற்பன். அப்படியின்றி ‘அரைகுறையத் தலைகுறைய ஆனைக்கு உதவ ஓடி வந்தாற் போலே கடுக ஒடி வரும்படியாகச் சிறிது பசையிருப்பதாகச் சொல்லுங்கள்' என்கின்றாளாயிற்று.

'பூவை' என்ற பறவையிடம் பேசுகின்றாள் பராங்குச நாயகி. "ஏற்கெனவே உன்னை வேண்டிக் கொண்டிருந்தும், எனக்காக நீத தூது செல்லாது அசட்டையாய் இருந்து விட்டாய் "நோயானது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்” என்கின்றாள்.

சாயலொடு மணிமாமை
தளர்ந்தேன்நான் இனியுனது
வாயலவில் இன்னடிசில்
வைப்பாரை நாடாயே (8)

[மணிமாமை-அழகான நிறம்; இன்னடிசில்-மதுரமான இரை உணவு]

என்று தற்கால நிலையைக் கூறுகின்றாள். 'சாயல்' என்பது சமுதாய சோபை; இது வடமொழியில் 'இலாவண்யம்' எனப்படும்; மணிமாமை என்பது அழகு 'இவ்விரண்டும் நீங்கப் பெற்றேன்' என்கின்றாள். இங்ஙனம் இவள் சொல்லக் கேட்ட பூவை 'இதோ விரைந்து சென்று எம்பெருமானுக்கு அறிவிக்கின்றேன்' என்று புறப்படத் தொடங்கும்போது இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே என்கின்றாள். ‘நானோ முடியா நின்றேன்; இனி உனக்கு இரட்சகராவாரைத் தேடிக்கொள்’ என்கின்றாள்.

இவ்விடத்தில் ஒர் ஐதிகம் : பெரிய திருமலை நம்பி என்னும் ஆசிரியர் 'வெண்ணெய்க்காடும் பிள்ளை' என்ற கிருட்டினத் திருமேனியை வழிபாடு செய்து வந்தார். அவர் திருவாராதனம் படைக்க ஆற்றலற்றவராய் அந்திமதசை அடைந்தார்; பெருமாள் சந்நிதி முன்பே தண்டம் சமர்ப்பித்துத் திருத்திரையை நீக்கச் செய்து “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்; இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே” என்று கை கூப்பி விண்ணப்பம் செய்தாராம்."அடியேன் ஆசாரியன் திருவடி அடையா நின்றேன்; இனித்திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக் கொள்வாய்” என்பது குறிப்பு.

விரிவஞ்சி ஏனைய பாசுரங்களின் நயங்கள் விடப்பெற்றன.


 1. ஆசா~ ஹிரு சூத்திரம்-118
 2. கருமாணிக்கமலைமேல் (8-9)
 3. கங்குலும் பகலும் (7:2)
 4. எங்கானல் அங் (9,7)
 5. திருவிருத்தம்-48
 6. ஆசா- ஹிரு 118 (புருடோத்தம நாயுடு பதிப்பு) சேஷத்துவம் பிறருக்கு அடிமையாயிருத்தல்; பாரதந்திரியம்-பரன் அல்லது பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் கைங்கரியம்-அடிமைத் தொழில்.
 7. முமுட்சு-78
 8. முமுட்க-79,80
 9. திருவாய் 2.4.4.2;4.4;5.6;6.6;6.7;7;2
 10. சொரூபம்- தியானத்திற்குரிய ஈசுவரனின் சொரூபம்; ரூபம்பகவானுடைய திருமேனி, குணம்-ஆன்ம குணம். திருமேனியின் குணம். ஆன்ம குணம்-ஞானம் சக்தி முதலியன; திருமேனி குணம் - அழகு மென்மை முதலியன. விபூதி- நியமிக்கப்பெறும் பொருள் (ஐகவரியம்)
 11. சாத்தியோபாயம்- மக்களால் சாதித்துக் கொள்ளுகின்ற உபாயம். எ.டு பக்தி, பிரயத்தி
 12. சித்தோபாயம்-முன்னமே இருக்கும் உபாயம்; அஃதாவது இறைவனாகிய உபாயம்.
 13. திருவாய்: 1,4;2.4;4.8;5.3;5.4;5.5;5.9;6.1;6.2;6.8; 7.3; 8,2;9.5:97,9,8.9.9.10.3 என்பவை.
 14. திருவாய் 1.4;6.1;6.3;9.7என்பவை
 15. பரபக்தி-எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆவல்.
 16. பரஞானம்- எம்பெருமானை நேரில் காணல்.
 17. பரமபக்தி-எம்பெருமானை மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல்.
 18. இறை-கள நூற் 2. இன் உரை
 19. ஆசா-ஹிரு சூத் 151 உரையில் விளக்கம் தரப்பெற்றுள்ளது.
 20. மேலது 152 (விளக்கம்) உரையில் காண்க.
 21. மேலது 153 (விளக்கம்) உரையில் காண்க.
 22. மேலது 154 (விளக்கம்) உரையில் காண்க
 23. மேலது 155 (விளக்கம்) உரையில் காண்க.
 24. இந்தப் பதிகத்தில் நாரை (!),குயில்கள் (2), அன்னங்கள்(3), அன்றில்கள் (4), சிறு குறுகு (5), வண்டு (6), இளங்கிளி (7), சிறு பூவை (8), வாடை (9), நெஞ்சு (10) என்பவற்றைத் து து விடுகின்றாள் ஆழ்வார் நாயகி.
 25. இதிகாசம்-என்பது ஒரு வரலாறு அல்லது ஒரு கதை போல் வருவது.
 26. ஐதிகம்-என்பது சம்பிரதாய அடியாக வந்த ஒரு வார்த்தை, அதாவது முன் நடந்ததைத் தெரிவிப்பது.
 27. மகாராஜர்-சுக்கிரீவன். இப்படி குறிப்பிடுவது வைணவ மரபு.
 28. கீழே கழிந்து போன விஷயத்தைப்பற்றின உணர்வு “ஸ்மிருதி” எனப்படும். மேலே வரப் போகின்ற விஷயத்தைப் பற்றின உணர்வு ‘மதி ஆகும். அப்போதைக்கப்போது நடக்க வேண்டிய உணர்வு ‘புத்தி எனப்படும்; முக்காலங்களையும் பற்றின உணர்வு பிரஜ்ஞை (பிரக்ஞாவஸ்தை) என்று வழங்கப் பெறும்.
 29. மறைந்த மாண்புமிகு தொழிலதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சமயம் என்னிடம் ரசசோக்தி’ யாகச் சொன்னது; திருமால் கயவடிவினனாகத்தான் மாவலியிடம் வந்தான். தான் இரக்கப் போகிறோமே என்ற எண்ணம் மனத்தைக் குறுகச் செய்தது; மனம் குறுகவே உடலும் குறுகி விட்டது - வாமன்னாகிவிட்டான் என்பதாக. (திருப்பதியில்1975 என்பதாக நினைவு).