உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

விக்கிமூலம் இலிருந்து

2. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருமால் திருவருளால் மலர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருள்மிக்குப் பாடிய இனத்தமிழ்ப் பாசுரங்களே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இதனுள் திகழும் பாசுரங்கள் ஒவ்வொன்றும் செவிக்கினிய செஞ்சொல்லால் ஆயது. சொற்கவை பொருட்சுவைகளிற் சிறந்தது; பிறவித் துயரறுத்து அந்தமில் பேரின்பத்தை அளிக்க வல்லது. இவ்வாற்றான் ஒவ்வொரு பாசுரமும் நூல் எனத் தக்க மாட்சிமையுற்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று வழங்கலாயிற்று. இது மக்களின் கீழ்மையை அகற்றி மேன்மையை அளிக்கும் மறையாய் விளங்குதலின் இதனைத் 'தென்மொழி மறை'யென்பர் சான்றோர். வடமொழி மறையினும் சிறப்புடைய தென்றும் சாற்றுவர்.

கால வெள்ளத்தாலும் போற்றுவாரின்மையாலும் எப்படியோ மறைந்து போன இப்பாசுரங்களைத் திரட்டி வேத வியாசர் வேதங்களை நான்காக வகுத்துத் தொகுத்ததுபோல் நாதமுனிகளும் இப்பாசுரங்களை நான்கு தொகுதிகளாக்கி ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாசுரங்கள் அடங்கியிருக்குமாறு அடைவுபடுத்தினார். பாசுரங்களை அவர் 'இசைப்பா' 'இயற்பா' எனப் பிரித்து இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும் இயற்பாக்களை ஒரு தொகுதியாகவும்

அடைவுபடுத்தி வெளியிட்டார். அங்ஙனம் அடைவுபடுத்திய தொகுதிகள் வருமாறு.

(1) இசைப்பாத் தொகுதிகள் :

(அ) முதலாயிரம் : இதில் அடங்கிய பிரபந்தங்களும் அவற்றிலடங்கிய பாசுரத் தொகையும்

பிரபந்தம் பாசுரத் தொகை
1. பெரியாழ்வார் திருமொழி 473
2. திருப்பாவை 30
3. நாச்சியார் திருமொழி 143
4. பெருமாள் திருமொழி 105
5. திருச்சந்த விருத்தம் 120
6. திருமாலை 45
7. திருப்பள்ளி எழுச்சி 10
8. அமலனாதி பிரான் 10
9. கண்ணிநுண் சிறுத்தாம்பு 11
ஆக பிரபந்தம் 9க்குப் பாசுரங்கள் 947

இவற்றுள்1என்றுள்ளது பெரியாழ்வாராலும்; 2,3 எண்கள் உள்ளவை அவர் வளர்ப்பு மகள் ஆண்டாளாலும்; 4 எண் உள்ளது குலசேகராழ்வாராலும், 5 எண்ணுள்ளது திருமழிசைப் பிரானாலும்; 67 எண்ணுள்ளவை தொண்டரடிப்பொடிகளாலும் 8 எண்ணுள்ளது திருப்பாணாழ்வாராலும், 9 எண்ணுள்ளது மதுரகவிகளாலும் அருளிச் செய்யப் பெற்றவை.

(ஆ) பெரிய திருமொழி: இதிலடங்கிய பிரபந்தங்களும் பாசுரத் தொகையும் :


பிரபந்தம் பாசுரத் தொகை
10. பெரிய திருமொழி 1054
11. திருக்குறுந்தாண்டகம் 20
12. திருநெடுந்தாண்டகம் 30
ஆக, பிரபந்தம் மூன்றுக்குப் பாசுரங்கள் 1134

இம் மூன்று பிரபந்தங்களும் திருமங்கையாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றவை.

(இ)திருவாய்மொழி: இதிலடங்கிய பிரபந்தமும் பாசுரத் தொகையும்

பிரபந்தம் பாசுரத் தொகை
13. திருவாய்மொழி 1102
ஆக, பிரபந்தம் ஒன்றுக்குப் பாசுரங்கள் 1102

இப் பிரபந்தம் நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பெற்றது.

(2) இயற்பாத் தொகுதி :

(ஈ) இயற்பா : இதிலடங்கிய பிரபந்தங்களும் பாசுரங்களின் தொகையும் :

பிரபந்தம் பாசுரத் தொகை
14. முதல் திருவந்தாதி 100
15. இரண்டாம் திருவந்தாதி 100
16. மூன்றாம் திருவந்தாதி 400
17. நான்முகன் திருவந்தாதி 96
18. திருவிருத்தம் 100
19. திருவாசிரியம் 7
20. பெரிய திருவந்தாதி 87
21. திருவெழுக்கூற்றிருக்கை 1
22. சிறிய திருமடல் 1
23. பெரிய திருமடல் 1
ஆக, பிரபந்தங்கள் 10க்குப் பாசுரங்கள் 593

இவற்றுள் 14,15,16 எண்களுள்ளவை முறையே முதலாழ்வார்களான பொய்கையார், பூத்த்தார், பேயார் ஆகியோராலும்; 17 எண்ணுள்ளது திருமழிசைப்பிரானாலும்; 18,19,20 எண்களுள்ளவை நம்மாழ்வாராலும், 21,22,23 எண்களுள்ளவை திருமங்கையாழ்வாராலும் அருளிச்செய்யப் பெற்றவை.

தொகுதிபற்றிய குறிப்புகள்: நாதமுனிகள் தாம் ஏற்படுத்தின திருமொழி-திருவாய்மொழித் (பகல் பத்து இராப்பத்து) திருநாளில் முதலாயிரத்தையும. திருவாய் மொழியையும் தேவகானத்தில் ஏறிட்டுச் சேவித்தார் என்றும், இயற்பாவை இயலாகச் சேவித்தார் என்றும் “கோயிலொழுகு"

என்ற நூலினால் அறிகின்றோம். இச் செய்தி ‘இசைப்பா' 'இயற்பா’ என்னும் பாகுபாட்டைத் தெளிவாக உணர்த்துகின்றது. இசைப்பா தொகுதிகட்குப் பண் தாளங்கள் அமைந்திருத்தலும் கவனிக்கத்தக்கது. திருவாய்மொழிப்பாசுரங்கள் முழுமைக்கும் பண், தாளங்கள் உள்ளன. "பண்ணார் பாடல் இன்கவிகள்"[1] என்று,சடகோபரே அருளிச் செய்திருப்பதும், இவர்தம் சீடரான மதுரகவிகளும்,

தேவுமற் றறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே[2]

என்று கூறியிருப்பதையும் நோக்கலாம். பெரிய திருமொழிக்குப் பண், தாளங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏட்டில் காணப்படுகின்றன.

“இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை”[3]
"பண்ணார் பாடல்"[4]
“பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்"[5]
"பண்கள் அகம் பயின்ற சீர்ப்பாடல்”[6]

முதலியனவாக வரும் பெரிய திருமொழிப்பகுதிகளும் இத் தொகுதியும் இசைப்பா எனத் தெரிவிக்கின்றன. இங்ஙனமே முதலாயிரத்திற்கும் பண், தாள அமைப்புகள் முன்பு வழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். பெரியாழ்வார் பாசுரங்கள் பண்ணில் இயன்றவை என்பதை,

'பட்டநாதன் பண்ணியநா நூற்றேழு பத்து மூன்றும்' [7]

என்ற வேதாந்த தேசிகன் வாக்கினால் அறியலாம். திருமழிசைப்பிரான் அருளிய இரண்டு பிரபந்தங்களில் திருச்சந்தவிருத்தம் முதலாயிரத்திலும் 'நான்முகன் திருவந்தாதி' இயற்பாவிலும் சேர்க்கப் பெற்று முறைப்படுத்தப் பெற்றுள்ளமையை நோக்கினாலும் முதலாயிரத்திலுள்ள பிரபந்தங்கள் அனைத்தும் இசைப்பாக்களே எனத் துணிய இயலும். எனவே, இயற்பா ஒழிந்த ஏனைய மூன்று தொகுதிகளும் இசைப்பாத் தொகுதிகள் என்பது தெளிவாகும்.

மேலே கூறப்பெற்ற முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி இயற்பா என்ற பாகுபாடும் பிரபந்தங்களின் அமைப்பு முறையும் நாதமுனிகளின் காலத்தில் ஏற்பட்டவை. பிரபந்தங்களின் எண்ணிக்கை இத்தனை என்பது நாதமுனிகள் காலத்தில் வழங்கி வந்ததாகத் தெரியவில்லை. திருவரங்கத் தமுதனார் இராமாநுசர்மீது அருளியுள்ள 'இராமாநுச நூற்றந்தாதி' இராமாநுசர்காலத்தில் இயற்பாத் தொகுதியுடன் 24வது பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டது என்பதைக் 'கோயிலொழுகு’ என்ற நூலின் வாயிலாக அறிகின்றோம். அக்காலத்திலிருந்து முதலாயிரத்தில் கண்ணிநுண் சிறுத் தாம்பைப் போல் (அடியார்மீது-நம்மாழ்வார் மீது - பாடியது) இயற்பா இறுதியில் உள்ள 'இராமாநுச நூற்றந்தாதி' எங்கணும் பெரு வழக்காக ஒதப்படுவதாயிற்று. இன்றும் அவ்வழக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. திருக்கோயில்களில் இயற்பாவின் இறுதியில் இப்பிரபந்தத்தை அநுசந்தித்து வருகின்றனர். இதனால் இந்நூற்றாந்தாதி (அடியார்மீது - இராமாநுசம் மீது - பாடியது) இயற்பா பிரபந்தங்களுள் ஒன்றாக அமைந்துவிட்டமை புலனாகும்.

‘இராமாதுச நூற்றந்தாதி' சேர்ந்த திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கினில் இயற்பாப் பிரபந்தங்கள் பதினொன்று. இவற்றுள் கட்டளைக் கலித்துறைப் பாசுரங்களால் அமைந்தனவும் இசைக்குச் சேர்ந்தனவும் ஆகவுள்ள திருவிருத்தம் (நம்மாழ்வார்), இராமாதுசநூற்றந்தாதி (அமுதனார்)ஆகியவை இயற்பா என்றே பெயர் பெறுகின்றன. மற்றும், இயற்பா தொகுதியில் அதே பாசுரமாக்வுள்ள திருவெழுக்கூற்றிருக்கை ‘சிறிய திருமடல்’, ‘பெரிய திருமடல் ஆகிய மூன்றைத் தவிர ஏனைய எட்டுப் பிரபந்தங்களும் அந்தாதிப் பிரபந்தங்களாகும். ‘இராமாநுச நூற்றந்தாதி, மட்டிலும் கட்டளைக் கலித்துறைப் பாசுரங்களால் அமைந்தது. ‘திருவிருத்தமும்' கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமைந்த அந்தாதிப் பிரபந்தமாக இருப்பினும் அதனை அந்தாதி எனப் பெயரிட்டு வழங்குதல் இல்லை. அந்தாதிப் பிரபந்தங்களைத் தொடர்நிலைச் செய்யுள் வகையில் 'சொற்றொடர் நிலைச் செய்யுள்' என வழங்குவர். இவை தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடங்கும்.[8] மேற்கூறப்பெற்ற எட்டு அந்தாதிப் பிரபந்தங்களில் முதலாழ்வார்கள் அருளிய மூன்று அந்தாதிகள், நான்முகன் திருவந்தாதி, பெரிய திருவந்தாதி ஆகிய ஐந்தும் வெண்பா அந்தாதிகள். இராமாதுச நூற்றாந்தாதி மட்டிலும் கலித்துறை அந்தாதி திருவாசிரியம் திருவெழுக் கூற்றிருக்கை ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவால் அமைந்த பிரபந்தங்களாகும். திருவாசிரியம் அந்தாதிப் பிரபந்தமாகும். இஃது அந்தாதிப் பிரபந்தமாக அமைந்திருப்பினும் இயற்பாவிலுள்ள ஏனைய அந்தாதிப் பிரபந்தங்களைப்போல இறுதியும் முதலும்

மண்டலித்து அமையவில்லை. ‘திருவிருத்தம்’, ‘சிறிய திருமடல்’, 'பெரிய திருமடல்' ஆகிய மூன்றும் அகத்துறைப் பிரபந்தங்களாகும். இம்மூன்றனுள் மடல்கள் இரண்டும் கலிவெண்பாவாலான பிரபந்தங்களாகும்.

(3) பிரபந்தங்களின் தொகை :

நாலாயிரத்திலுள்ள பிரபந்தங்களின் தொகையும் பாசுரங்களின் தொகையும் வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுத்துக் கூறப்பெற்றவை. தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை. அது பெரியாழ்வார் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தை அப்படியே கொண்டவர்.

ஏரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு வாயே[9]

என்று திருப்பல்லாண்டு சேர்ந்த ஒரே தொகையாகக் கூறியிருப்பதனால் இதனைஅறியலாம். அவர் தமது பிரபந்த சாரத்தில் மேற்கொண்டுள்ள முறையைக் கவனித்தால் இது தெளிவாகும். இந்த முறை பிரபந்தசாரத்தின் முதற்பாட்டில்,

வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின்
வகையான தொகைஇலக்கம் மற்றும் எல்லாம்[10]

என்று பேசப்பெறுகின்றது. இதில் 'பாட்டின் வகையான தொகை' என்பது 'பாட்டின் வகுப்பின்படி எண்கள்' என்பதையும் 'இலக்கம்’ என்பது அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின் கூட்டிய எண் என்பதையும் குறிக்கின்றன என்பது

தெளிவு. இந்த முறையை மேற்கொண்டு தமது பிரபந்தசாரம் இரண்டாவது முதல் பதினான்காவது வரையிலுமுள்ள பதின்மூன்று பாடல்களில் ஒவ்வொரு ஆழ்வாருடைய திருமொழிகளையும் அல்லது திருமொழியையும் தனித்தனியே அதனதன் தொகை இலக்கத்தையும் கூறுகின்றார். அவற்றில் திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், என்ற ஐவர்களைப் பற்றிய பாசுரங்களில் அவரவர் அருளிச்செய்த பிரபந்தங்களைத் தனித்தனியே எடுத்து அவற்றின் தனித்தனி தொகை இலக்கத்தைக் கூறியுள்ளார். முதலாழ்வார்கள் மூவர், மதுரகவிகள், குலசேகரப்பெருமாள், திருப்பாணாழ்வார், திருவரங்கத்து அமுதனார் (இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்தவர்) என்று இந்த எழுவர்பற்றிய பாசுரங்களில் அவர்கள் ஒவ்வொரு பிரபந்தத்தையே செய்தவர்களாதலின் வகை ஏதுவுமின்றி அதனதன் தொகை இலக்கமே கூறப்பெற்றுள்ளது. ஆயின் பெரியாழ்வார்பற்றின பாடலில் வகை எதுவுமின்றித் தொகை மட்டிலும் நானூற்று எழுபத்து ஒன்று இரண்டு (470+1+2=473) என்று கூறியுள்ளதை நோக்கும்போது தேசிகரின் திருவுள்ளத்தில் திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தம் அன்று என்றிருந்தமை தெளிவாக அறியக்கிடக்கின்றது. இவர் இராமாதுச நூற்றந்தாதியைச் சேர்த்துத் திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கு பிரபந்தங்களைக் கொண்டது என்ற கொள்கையினர்;

(4) அப்பிள்ளை ஆசிரியர் :

தேசிகருக்குக் காலத்தால் சற்றுப் பிற்பட்டவரான இவர் திருப்பல்லாண்டைத் தனிப்பிரபந்தமாகக் கொண்டவர். இதனை,

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றுப் பத்தொன்றும் நமக்குரைத்தோன் வாழியே[11]

என்று பெரியாழ்வாரைப்பற்றிய தமது வாழித்திருநாமத்தில் கூறியிருப்பதனால் அறியலாகும்.

மேற்குறிப்பிட்ட இருவர் கருத்துக்களையும் ஒரு சிறிது ஆராய்வோம். திவ்வியப் பிரபந்தத்தை நான்காகப் பிரித்து ஒவ்வொரு தொகுதியிலும் இந்த இந்தப் பிரபந்தம் இந்த இந்த வரிசையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்தவர் நாதமுனிகள். அவர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கருதியிருந்தால் வண்ணமாடங்கள் (11) முதல் மெச்சூது (21) வரையில் பத்துத் திருமொழிகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கி பெரியாழ்வார் திருமொழி-முதல் பத்து என்று வகுத்திருக்க வேண்டுமேயன்றி ஒன்பது திருமொழிகளை வைத்துப் பத்து எனப் பெயரிடக் காரணம் எதுவுமில்லை. அவர் அங்ஙனம் செய்யாமல் வட்டு நடுவே (1,9)என்ற திருமொழியுடன் ஒரு பத்தாக்கியுள்ளார். திவ்வியப்பிரபந்தத்தில் ‘பத்து’ என்ற பரிவு 'இருக்கு' வேதத்தில் மண்டலங்களின் உட்பிரிவுகள் வகுக்கப்பெற்றுள்ள மரபை ஒட்டியது. அங்கு அந்த உட்பிரிவுகள் 'சூக்தம்' எனப்படுகின்றன. 'சூக்தம்' என்பதே தமிழில் 'திருமொழி' எனப்படுகின்றது. பல திருமொழிகளுள்ள பிரபந்தங்களே 'பெரியாழ்வார்திருமொழி', 'நாச்சியார் திருமொழி', 'பெருமாள் திருமொழி', 'பெரிய திருமொழி' என்றிப்படித் திருமொழி என்ற பெயர்களைப் பெற்றன என்பதும் நம்மாழ்வார் ஆயிரமும் 'நம்மாழ்வார் திருமொழி' என்றே கூறப் பெறலாமாயினும் அதன் சிறப்புத் தோன்ற திருவாய்மொழி என்று வழங்கப்பெற்றது என்பதும் ஈண்டு அறிதற்பாலவை. எனவே திருமொழி, திருவாய்மொழி என்ற பெயர்கட்குக் காரணமான பெயரையுடைய திருமொழிகளின் தொகையைக் கொண்டு 'முதல் பத்து', 'இரண்டாம் பத்து' - என்றிப்படி வரையறை ஏற்பட்டது என்பது தெளிவு. இம்முறையில் பெரியாழ்வார் திருமொழி முதல் பத்துக்கு இரண்டாம் பத்து முதலானவற்றைப் போலும் ‘பெரிய திருமொழி’, திருவாய்மொழி இவற்றின் பத்துகளைப் போலும் வழக்கமாகப் பத்துத் திருமொழிகள் இருந்தே தீரவேண்டும். ஆயின் பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்தில் நான்கு திருமொழிகளே உள்ளன. அதனைப் போலவே பத்துக்குக் குறைந்த ஒன்பது திருமொழிகளே உள்ள முதல் பத்தினை ஏன் 'பத்து' என்று வழங்குதல் கூடாது? என்று வினவலாம். பத்துப் பத்துத் திருமொழிகளாகப் பிரித்து கொண்டுபோய் எஞ்சியுள்ள நான்கு திருமொழிகளை பத்தாகக் கொள்வதற்கும் எடுத்த எடுப்பிலே ஒன்பது திருமொழிகளை ஒரு பத்து என்று கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. தான் வரையறுத்த கொள்கையை எடுத்த எடுப்பிலேயே எவரும் கைவிடார். தவிர, முழுப் பத்து ஒன்றுக்கு மேல் இருக்கும் இடங்களில் தான் ஒதுதல் முதலான வசதிகளைக்கருதித் திருமொழிகளைப் பத்துப் பத்தாக பிரிக்க முடியாததற்குக் காரணம் முழுப் பத்து ஒன்றுக்குக் குறைந்திருப்பதேயாகும் என்பதும், ஈண்டு அறிதற்பாலவை. எனவே, திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று என்று கொள்ளத்தக்க ஏதுவொன்றும் இல்லை.

பெரியவாச்சான் பிள்ளை போன்ற வியாக்கியாதாக்கள் முதலானவர்களும் திருப்பல்லாண்டுடன் சேர்ந்து பெரியாழ்வார் திருமொழி ஒரே பிரபந்தம் என்ற திருவுள்ளம் கொண்ட்வர்கள். பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுரமான 'வேயர் தங்கள் குலத்து (5,41)' என்றதில் கோயில் கொண்ட கோவலன் என்ற சொற்றொடருக்கு வியாக்கியானம் செய்யுமிடத்தில், 'திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் இவர் மனத்திலிருக்கின்ற கிருஷ்ணன் தான் பிறந்தபடியையும் வளர்ந்தபடியையும் இவனைக் கொண்டு கேட்டான்' என்று பெரியவாச்சான் பிள்ளை கூறியிருப்பதனாலும் இதற்கு முன்னர் “திருப்பல்லாண்டின் அர்த்தத்தை நிகமிக்கிறார்” என்று பன்முறை கூறியிருப்பதனாலும் ஒரு பிரபந்தமானால் தான் “தொடக்கம்” என்பதும், “நிகமனம்” என்பதும் சேருமாதலாலும் இவர்கருத்து திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று என்பது உறுதிப்படுகின்றது.

மேலும் மணவாள மாமுனிகளின் “உபதேசரத்தின மாலையில்" 'பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்' (16) 'ஆதி திருப்பல்லாண்டானதுவும்' 19, 'உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை' (20) என்ற சொற்றொடர்களில் வரும் ‘திருப்பல்லாண்டு’ என்பது அது தனிப் பிரபந்தம் என்பதை உறுதிப்படுத்துகின்றது என்றும், திருக்கோயில்களில் ஏதாவது ஒரு பிரபந்தம் சேவிக்க நேரிடும்போதெல்லாம் திருப்பல்லாண்டு, முதலில் சேவிக்கப்பெற்றும் அதன் பின்னரே அக்குறிப்பிட்ட பிரபந்தம் சேவிக்கப்பெறுகின்றது என்ற வழக்கம் இருப்பதால் 'திருப்பல்லாண்டு' ஒரு தனிப்பிரபந்தம்

என்பது மேலும் வலியுறுகின்றது என்றும் கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட உபதேசரத்ன மாலைப் (161920) பாசுரங்களில் இரண்டாவது தொடரிலுள்ள 'திருப்பல்லாண்டு' வேதத்திற்கு ‘ஓம்’ என்ற பிரணவம்போல் திவ்வியப் பிரபந்தத்தின் பொருளுக்கெல்லாம் சுருக்கமாகவும் மங்கள ரூபமாயும் இருப்பதாகக் கூறுகின்றதேயன்றி தெளிவாக அஃது ஒரு பிரபந்தம் எனக் கூறாமையாலும், அங்ஙனமே திருக்கோயில்களில் இருந்துவரும் வழக்கும் அது தனிப் பிரபந்தம் என்பதற்கு ஆதாரம் அல்லாமையாலும் இரண்டையும் தக்க சான்றுகளாகக் கொள்வதற்கில்லை. மேலும், 'உபதேசரத்னமாலை' ஆழ்வார்கள் அவதரித்த நாள்கள், மாதங்கள், தலங்கள் முதலிய செய்திகளைத் தருகின்றதேயன்றி அவர்கள் அருளியுள்ள பிரபந்தங்களைப் பற்றி யாங்கணும் கூறவில்லை. ஆயினும், 'திருப்பல்லாண்டு' என்ற திருமொழி அகண்ட திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கத்திலிருப்பதாலும் அது வேதத்தின் பிரணவம்போல் திகழ்வதாலும் அதற்குத் தனிப் பெருமை உள்ளது. திருக்கோயில்களில் முதலில் ஒதப் பெறுவதற்கு அதனையே காரணமாகவும் கொள்ளலாம். 'திரு' என்ற அடைமொழியால் அது சிறப்பிக்கப் பெறுவதற்கும் அதுவே காரணமாகும்.

(5) பாசுரங்களின் தொகை :

நாலாயிரத்தின் பாசுரத்தொகை பற்றிய இரு வேறு கருத்துகளையும் ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவாறு இருபத்து மூன்று பிரபந்தங்களடங்கிய திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரத்தொகை

முதலாயிரம் 947
பெரிய திருமொழி 1134
திருவாய் மொழி 1102
இயற்பா 593
மொத்தம் 3776

என்றவாறு அமைகின்றது. அஃதாவது இரு மடல்களையும் நீக்கினால் இத்தொகை3774 என்றாகின்றது. இத்தொகை நாலாயிரத்திற்கு (4000-3774) 226 குறைகின்றது. வேதாந்த தேசிகர் தாம் இயற்றிய பிரபந்தசாரத்தில் இருமடல்களையும் 118 பாசுரங்களாகக் கொள்வர்.

சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும்[12]

என்பது அவரது திருவாக்கு பிறிதோரிடத்தில் அவர்

அஹீதனுயர் பரகாலன் சொல் . . . . . . . . . .
வேங்கட மாற்கு ஆயிரத்தோடு
ஆணஇரு நூற்றோரைம் பத்து முன்று[13]

என்று திருமங்கை மன்னன் பாசுரங்களை 1253 என்று பேசுவர். மடல் ஒழிந்த நான்கு பிரபந்தங்களிலும் அடங்கிய பாசுரங்கள்,

பெரிய திருமொழி 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருவெழுக் கூற்றிருக்கை 1
1135

என்று ஆகின்றன. எனவே, இரு மடல்களும் 1253-1135=118 பாசுரங்களாகின்றன என்பது இதனாலும் தெளிவாகின்றது. தேசிகர் 'சிறியதிருமடல் முப்பத்தெட்டு இரண்டும்', பெரிய மடற் 'பாட்டு எழுபத்தெட்டு' என்று குறித்த எண்ணிக்கையைப் பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். பாசுரத்தின் பொருட் போக்கைக் கொண்டு அங்கங்கே பாசுரங்களாக நிறுத்தியுள்ளனர்.[14] இப்பதிப்புகளில் பெரிய திருமடலை 78 பாசுரமாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். சிறிய திருமடல் 40 பாசுரமாகக் கொள்வதால் நூலை 38 பாசுரங்களாகவும், பிற்சேர்க்கைப் பாடலை உதிரிப் பாசுரங்களாகவும் இவர்கள் கொள்கின்றனர். பிற்சேர்க்கைப் பாடலைச் சேர்த்துக் கொள்வது சிறிதும் பொருத்தமன்று. சில ஏட்டுப் படிகளில் சிறிய திருமடலை 38 பாசுரங்களாகவும் பெரிய திருமடலை 80 பாசுரங்களாகவும் பிரித்துள்ளனர். இம்முறையால் இரு மடல் பிரபந்தங்களும் 118 பாசுரங்கள் என்ற தொகை நிரம்பிவிடுகின்றது. தேசிகப் பிரபந்தத்தில் “சிறிய திருமடல் முப்பதெட்டு இரண்டும் பெரிய திருமடல் எழுபத்தெட்டும்” என்றிருப்பதைச் சிறிய திருமடல் முப்பத்தெட்டு இரண்டும் எழுபத்தெட்டு எனக் கூட்டிப் பெரிய திருமடலை எண்பது

பாசுரங்களாகக் கொண்டனரோ? என நினைக்க இடம் உண்டு. எப்படியிருப்பினும் இதுவே சரியான முறை. இங்ஙனம் பெற்ற 118 பாசுரங்களும் இராமாநுச நூற்றந்தாதிப் பாசுரங்கள் 108-வும் சேர்ந்து 226 என்ற தொகையாக்கி திவ்வியப் பிரபந்தம் 4000 பாசுரங்கள் என்ற கணக்கு நிறைவு பெறுகின்றது.

அப்பிள்ளையாசிரியர்மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும், பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு இருமடல்களிலும் 226 பாசுரங்கள் உள்ளனவாகக் கொள்வர். இதனைத் தாம் இயற்றிய திருமங்கையாழ்வார் வாழித் திருநாமத்தில்,

இலங்கு எழு கூற்றிருக்கை
இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்று இருபது
ஏழ்ஈந்தான் வாழியே[15]

என வரும் பகுதியால் அறியலாம். இவர் கொள்கைப்படி 'இராமாதுச நூற்றந்தாதி' இன்றியே 4000 என்ற தொகை நிறைவு பெறுகின்றது.

இருவர் கொள்கை எப்படியிருப்பினும் இரு கொள்கைக்கு உரியவர்களும் இராமாதுச நூற்றந்தாதியை மறக்காமல் ஒதி வருவது பாராட்டத்தக்கது. அங்ஙனம் ஒதாமல் விட்டால் “செய்ந்நன்றி கொன்ற” பாவத்திற்கு ஆளாவர். வைணவம் நிலைத்திருக்கும் காலம் வரையிலும் இராமாநுசருடைய திருநாமமும் நிலைத்திருக்குமாறு காத்தல் வேண்டும்.

ஆய்வுரை :

யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம். ஆகவே, திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்கள் 3776 என்றும் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்கள் சேர்ந்து அத்தொகை 3884 ஆகின்றது என்றும் அறியக் கிடக்கின்றது. இத்தொகை மிகுதிபற்றி நாலாயிரம் என்றே வழங்கப் பெறுகின்றது என்று கொள்ளலே ஏற்புடைத்து. நாலாயிரத்திற்குச் சில பாசுரங்கள் குறையினும் கூடினும் நாலாயிரம் என்று கொள்ளலே ஏற்புடைத்து.

நாலாயிரத்தில் 4000 பாசுரங்கள் இருந்தேயாக வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்டவே இலக்கணவரம்பையும் மீறத் துணிந்தனர் நம் முன்னோர். இது தேவை இல்லாத கொள்கை, நூறு ஐம்பது குறைந்த கால்களையுடைய மண்டபத்தை ஆயிரங்கால் மண்டபம் என்று கூறுகின்றோ மல்லவா? நான்கு அல்லது இரண்டு கைகளுடன் விடுவிக்கப் பெற்ற வானாசுரனது வதத்தைக் குறித்து ஆழ்வார்கள் “வாணன் ஆயிரத் தோள் துணித்த” என்றும் “வாணன் ஈரைந் நூறு தோள்களைத்துணித்த” என்று அருளிச்செய்துள்ளதைக் காண்கின்றோமன்றோ? பத்துக்குக் குறைவாகவும் பத்துக்கு மேலாகவும் உள்ள பாசுரங்களைச் சேர்த்து ஒரு பதிகமாகக் கொள்ளும் மரபு உண்டல்லவா? 947 பாசுரங்களைக் கொண்ட பகுதியை முதலாயிரம் என்று வழங்குகின்றோம் அன்றோ? அங்ஙனமே திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டிருப்பினும் 'நிரனிரை ஆயிரத்து' (1-1;11), 'சீர்த் தொடை ஆயிரத்து' (1,2;11) 'குருகூர்ச் சடகோபன் ஒராயிரம் சொன்ன' (2,1;11)

என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமை ஈண்டுக் கருதத்தக்கது. மேலும் பெரிய திருமொழி 1084 பாசுரங்களால் அமைந்திருந்தும் "பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்" (தனியன்) என்று எம்பார் அருளிச் செய்துள்ளதையும் 108 பாசுரங்களைக் கொண்ட அந்தாதியை (எ.டு. இராமாநுச நூற்றந்தாதி) நூற்றந்தாதி என்று வழங்கப்பெறுவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. எனவே 4000க்குச் சில பாசுரங்கள் குறைந்துள்ள திவ்வியப் பிரபந்தத்தை 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' என்று வழங்குவது எவ்வாற்றானும் பொருந்துவதாகின்றது.

பொதுவாகக் கூறினால் இப் பிரபந்தங்கள் யாவும் சமயச்சார்புடையன. ஆகவே, பாசுரங்கள் பக்தி நிலையையும், சமயக் கொள்கைகளையும் இறைவன் உயிர்கள் அசித்துக்கள் இவர்களின் தன்மைகளையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. ஆயினும் பாசுரங்கள் யாவும் இலக்கிய நயம் செறிந்தவையாக அமைந்துள்ளனவாதலால் சமயச் சார்பற்றவர்களும் பிற சமயத்தினரும் அவற்றை விரும்பிக் கற்றுப் போற்றுகின்றனர்.


 1. திருவாய். 10.7-5
 2. கண்ணிநுண்-2
 3. பெரி. திரு:2.8:10,9,2,10
 4. மேலது.1.9:10
 5. மேலது 4.2;10
 6. மேலது 6.9:10
 7. தே.பி.381 (பிரபந்தம்-15)
 8. தொல். பொருள் செய்யு-நூற்பா 551 (பேராசிரியர் உரை).
 9. பிரபந்தசாரம்-9 (தே.பி.375)
 10. பிரபந்தசாரம்-1 (தே.பி. 367)
 11. வாழித்திருநாமம்-16
 12. தே.பி. 379.
 13. தே.பி 382
 14. ஒரே பாடலாக அமைந்த நீண்ட பாசுரங்களைப் பொருள் முடிவு கருதித் தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுதல் பண்டிருந்து வரும் ஒரு மரபேயாகும். நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் இம்முறையை மேற் கொண்டுள்ளனர். இம் மரபையொட்டியே இருமடல் பிரபந்தங்களையும் பல பாசுரங்களால் (சரியாகச் சொன்னால் பல பகுதிகளாகக்) கணக்கிடும் மரபும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். பாசுரங்களைச் சேவிக்கும் போது இப் பகுதிகளின் இறுதியில் சற்று நிறுத்தப் பெறுகின்றது.
 15. வாழித்திருநாமம்-11