1. எழுத்துப் படலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பேரகத்தியம் - மூலமும் உரையும்[தொகு]

ஆசிரியர்: அகத்தியனார்[தொகு]

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்[தொகு]

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்[தொகு]

அஃதாவது - எழுத்திலக்கணத்தை உணர்த்துங் காண்டம்.

1. எழுத்துப்படலம்[தொகு]

அஃதாவது- எழுத்துக்களிவையென உணர்த்தும் படலம்.

(படலம்- நூலின் சிறுபிரிவு.)


1. எழுதப் படுதலா லெழுத்தெனப் பெயர்பெறும். (௧) எழுதப் படுதலால் எழுத்து எனப் பெயர் பெறும்.

பவாநந்தர் உரை
இஃது எழுத்தென்பது காரணப்பெயராமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
எழுதப்படுதலால் = எழுதப்படுதலினால், (அ- முதலியன),
எழுத்து என பெயர் பெறும் = எழுத்தெனப் பெயர் பெறுவவாயின.
பொழிப்புரை
எழுதப்படுதலினால் (அகர முதலியன) எழுத்தெனப் பெயர் பெறுவனவாயின.


2. எழுத்தொலி வடிவும் வரிவடி வும்பெறும். (௨)எழுத்து ஒலி வடிவும் வரி வடிவும் பெறும்.

பவாநந்தர் உரை
இஃது எழுத்து இன்ன வடிவு பெறுமென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
எழுத்து = மேற்கூறப்பட்ட எழுத்துக்களெல்லாம்,
ஒலி வடிவும் = ஒலி வடிவினையும்,
வரி வடிவும் = வரி வடிவினையும்,
பெறும் = பெற்று வழங்கும்.
பொழிப்புரை
மேற் கூறப்பட்ட எழுத்துக்களெல்லாம் ஒலி வடிவினையும், வரி வடிவினையும் பெற்று வழங்கும்.
ஒலி வடிவு- செவிப்புலனறிய உச்சரிக்கப்படுவதோர் குறியீடு, வரி வடிவு- கட்புலனறிய எழுதப்படுவதோர் குறியீடு.


3. அநாதி யொலியெழுத் தாதிவடி வெழுத்தே. (௩) அநாதி ஒலி எழுத்து ஆதி வடிவு எழுத்தே.

பவாநந்தர் உரை
இஃது அநாதி யெழுத்து இன்னதென்பதும், ஆதி எழுத்து இன்னதென்பதும் உணர்த்துகின்றது.
பதவுரை
ஒலி எழுத்து = ஒலியெழுத்தானது,
அநாதி = அநாதி எழுத்தாகும்;
வடிவெழுத்து = வடிவெழுத்தானது,
ஆதி = ஆதியெழுத்தாகும்.
பொழிப்புரை
ஒலியெழுத்தானது அநாதி எழுத்தாகும்; வடிவெழுத்தானது ஆதியெழுத்தாகும்.

அநாதி - முந்தினது; வரிவடிவாதற்கு முன் நினைத்தல், உச்சரித்தன் மட்டில் நின்றதோர் குறியீட்டுக் காலம். ஆதி - அதற்குப் பிந்தினது, வரிவடிவான குறியீட்டுக்காலம்.

மெய்கண்டான் குறிப்புரை
ஒரு மொழியில் ஒலி எழுத்தே முந்தையது, வரிவடிவம் பிந்தையது என்பது இன்றைய அறிவியல் முடிபு. இதனையே ‘அநாதி ஒலி எழுத்து, ஆதி வடிவெழுத்து’ என்கின்றார். இன்றும் ஏராளமான மொழிகள் வரிவடிவம் இன்றி ஒலிவடிவம் மட்டுமே கொண்டு இயங்குவதைப் பலரும் அறிவர். மேலும், அநாதி என்றால் தொடக்கம் இல்லாதது என்று பொருள், அதாவது எப்பொழுது தொடங்கியது என்பது அறியாத நிலை. ஆனால், வரிவடிவம் தோன்றியகாலத்தை நாம் ஓரளவு அறியமுடியும், எனவே அதனை ஆதி என்றார். எழுத்து ஆவணங்கள் கிடைக்கும் காலத்தை ‘வரலாற்றுக்காலம்’ என்றும், எழுத்தாவணங்கள் கிடைக்காத காலத்தை ‘வரலாற்றுக்கு முந்தைய காலம்’ என்பர் தொல்லியல் அறிஞர்.


4. இரேகை வரிபொறி யிலேகையக் கரப்பெயர். (௪) இரேகை வரி பொறி இலேகை அக்கரப் பெயர்.


பவாநந்தர் உரை
இஃது எழுத்தின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
இரேகை = இரேகை யென்பதும்,
வரி = வரி யென்பதும்,
பொறி = பொறி யென்பதும்,
இலேகை = இலேகை யென்பதும்,
அக்கரப் பெயர் = எழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
இரேகை யென்பதும் வரியென்பதும் பொறியென்பதும் இலேகையென்பதும் எழுத்தின் பெயர்களாம்.


5. எழுத்து முதல்சார் பிருவகை யென்க. (௫) எழுத்து முதல் சார்பு இரு வகை என்க.


பவாநந்தர் உரை
இஃது எழுத்து இத்தனை வகைத்து என்று உணர்த்துகின்றது.
பதவுரை
எழுத்து = எழுத்துக்கள்,
முதல் = முதலும்,
சார்பு = சார்பும் (ஆகிய),
இருவகை என்க = இரண்டு வகையினையுடைய வென்க.
பொழிப்புரை
எழுத்துக்கள் முதலும் சார்பும் ஆகிய இருவகையவென்று சொல்லுக.

முதல் சார்பு என்பவற்றினீற்றில் எண்ணும்மைகள் தொக்கன. ஆகிய வென்பது வருவிக்கப்பட்டது. ‘என்க’ என்றார், எல்லார்க்குமொப்ப முடிந்ததாகலின்.


முதலெழுத்து[தொகு]

6. முதலெழுத் திருவகை யாகியெண் வகையாம். (௬)முதல் எழுத்து இரு வகை ஆகி எண் வகை ஆம்.


பவாநந்தர் உரை
இஃது முதலெழுத்தின் வகையும் விரியும் உணர்த்துகின்றது
பதவுரை
முதல் எழுத்து = முதலெழுத்துக்கள்,
இருவகை ஆகி = உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று இருவகையவாகி, (அவையே),
எண் வகை ஆம் = (உயிர் நான்கு வகையும், மெய் நான்கு வகையுமாக) எண்வகையாய் விரியும்.

(அ - முதலியன) உயிர்மெய் முதலிய ஏனைய வெழுத்துக்களுக்குக் காரணமாதலால் முதலெழுத்து எனப்பட்டன.

மெய்கண்டான் குறிப்புரை
உயிர் நான்கு வகை - குறில், நெடில், சுட்டு, வினா எனும் நான்கு. மெய் நான்கு வகை - வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் எனும் நான்கு.


7. முதலுயிர் மெய்யாய்த முப்பா னொன்றே. (௭) முதல் உயிர் மெய் ஆய்தம் முப்பான் ஒன்று ஏ.


பவாநந்தர் உரை
இஃது முதலெழுத்துக்கள் இத்தனை யென்பதும், இன்னவை யென்பதும் உணர்த்துகின்றது.
பதவுரை
முதல் = முதலெழுத்துக்கள்,
உயிர் = உயிர் பன்னிரண்டும்,
மெய் = மெய் பதினெட்டும்,
ஆய்தம் = ஆய்தமொன்றும் ஆக,
முப்பான் ஒன்று = முப்பத்தொன்று ஆகும்.
பொழிப்புரை
முதலெழுத்துக்கள் உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆய்த மொன்றுமாக முப்பத்தொன்றாம்.

உயிரும் மெய்யும் ஆகிய இவற்றிடையே கிடந்து, ‘இருசிறை யெழுப்ப வெழுமுட லதுபோல்’ இவற்றின் உதவியானே இயங்குவதாதல் பற்றி, மேற் சார்பெழுத்துக்களின்பாற் சேர்க்கப்படும் ஆய்தத்தை இங்கு முதலெழுத்துக்களின் பாலுஞ் சேர்த்து முதலெழுத்து முப்பத்தொன்று எனத் தொகை செய்தது, ஆய்தம் சிறுபான்மை உயிர்க்குறில் போல ஒரு மாத்திரை யுடையதாய் அலகு பெற்றும், பெரும்பான்மை மெய்போல அரைமாத்திரையுடையதாய் அலகு பெறாமலும் உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை ஒருபுடையொத்தல் பற்றி யென்க; உயிர்மெய் முதலிய மற்றைச் சார்பெழுத்துக்கள் போல உயிரெழுத்து மெய்யெழுத்துக்களின் கலப்பினாலும் திரிபு விகாரத்தாலும் பிறத்தலின்றி ஆய்தம் ஓசை வேறு பாடுடையதாய்த் தனியே பிறக்கு மெழுத்தாதல் பற்றியுமாம்.வேறொரு முதலெழுத்தினின்று பிறந்ததன்றாதலால், ஆய்தம் முதலெழுத்தெனப்பட்ட தென்க. “அகர முதலாக வாய்த மிடையா, னகரமீ றாகு முதல்” என்றார் பிறரும்.

மெய்கண்டான் குறிப்புரை
ஏகாரம் (ஒன்றே) அசை. தொல்காப்பியர், ஆய்தம் என்பதனைச் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்றாகக் குறிப்பிடுவர். தொல்காப்பியர் முதலெழுத்து முப்பது (உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு) என்பர்.


8. அடிதலை தாளாதி யாமுத லின்பெயர். (௮) அடி தலை தாள் ஆதி அம் முதலின் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது முதலெழுத்துக்களின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
அடி = அடியெழுத்தென்பதும்,
தலை = தலையெழுத்தென்பதும்,
தாள் = தாளெழுத்தென்பதும்,
ஆதி = ஆதியெழுத்தென்பதும்,
முதலின் பெயர் ஆம் = முதலெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
அடியெழுத்தென்பதும், தலையெழுத்தென்பதும், தாளெழுத்தென்பதும், ஆதியெழுத்தென்பதும் முதலெழுத்தின் பெயர்களாம்.

பரியாயப் பெயர் - ஒரு பொருள் குறித்த பல பெயர்கள்.

உயிர் வருக்கம்[தொகு]

9. அகரமுத லௌகார வந்தமா முயிரே. (௯)அகரம் முதல் ஔகார அந்தம் ஆம் உயிர் ஏ.

பவாநந்தர் உரை
இஃது உயிரெழுத்துக்கள் இவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அகரம் முதல் = அகர முதலாக,
ஔகார அந்தம் = ஔகார மிறுதியாக (உள்ள பன்னிரண்டெழுத்துக்களும்),
உயிர் ஆம் = உயிரெழுத்துக்களாம்.
பொழிப்புரை
அகர முதலாக ஔகார மிறுதியாக வுள்ள பன்னிரண்டெழுத்துக்களும் உயிரெழுத்துக்களாம்.

உதாரணம்: அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஐ, ஒ-ஓ, ஔ என்பனவாம். அந்தம் - வடசொல்.


10. அச்சாவி சுரம்பூத மாமுயி ரின்பெயர். (௰) அச்சு ஆவி சுரம் பூதம் ஆம் உயிரின் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது உயிரெழுத்துக்களின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
அச்சு = அச்சும்,
ஆவி = ஆவியும்,
சுரம் = சுரமும்,
பூதம் = பூதமும் (ஆகிய நான்கும்),
உயிரின் பெயர் ஆம் = உயிரெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
அச்சும் ஆவியும் ஸ்வரமும் பூதமும் ஆகிய நான்கும் உயிரெழுத்தின் பெயர்களாம்.

ஆவி என்ப தொழிந்த மூன்றும் வடசொற்கள்.


11. உயிரே, (௧௧) உயிரே,

குறினெடில் சுட்டு வினாவென நான்காம். குறில் நெடில் சுட்டு வினா என நான்கு ஆம்.
பவாநந்தர் உரை
இஃது மேல் ‘முதலெழுத் திருவகை யாகியெண் வகையாம்’ என்றதற்கிணங்க உயிரெழுத்தின் நால்வகையினையும் உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர் = உயிரெழுத்துக்கள்,
குறில் என = குறிலென்றும்,
நெடில் என = நெடிலென்றும்,
சுட்டு என = சுட்டென்றும்,
வினா என = வினாவென்றும்,
நான்கு ஆம் = நான்கு வகையாகும்.
பொழிப்புரை
உயிரெழுத்துக்கள் குறிலென்றும் நெடிலென்றும் சுட்டென்றும் வினாவென்றும் நான்கு வகையாகும்.

குறில் - குறுகிய ஒலியுள்ளது. நெடில் - நெடுகிய ஒலியுள்ளது.


12. அ இ உ எ ஒக்குறி லாகும். (௧௨)அ இ உ எ ஒ குறில் ஆகும்.

பவாநந்தர் உரை
இஃது குற்றெழுத்துக்க ளிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அ இ உ எ ஒ = அகர இகர உகர எகர ஒகரங்களாகிய ஐந்தும்,
குறில் ஆகும் = குற்றெழுத்துக்களாகும்.
பொழிப்புரை
அகர இகர உகர எகர ஒகரங்களாகிய ஐந்தும் குற்றெழுத்துக்களாகும்.


13. குறிலுங் குறுமையு மிரச்சுவமுங் குறிற்பெயர். (௧௩) குறிலும் குறுமையும் இரச்சுவமும் குறில் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது குற்றெழுத்துக்களின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
குறிலும் = குறிலென்பதும்,
குறுமையும் = குறுமை யென்பதும்,
இரச்சுவமும் = இரச்சுவமென்பதும்,
குறில் பெயர் = குற்றெழுத்துக்களின் பெயர்களாம்.
பொழிப்புரை
குறிலென்பதும், குறுமையென்பதும், இரச்சுவமென்பதும் குற்றெழுத்துக்களின் பெயர்களாம்.

ஹ்ரஸ்வம் என்னும் வடசொல் தமிழில் இரச்சுவம் எனத் திரிந்தது.


14. ஆஈஊ ஏஐஓ ஔநெடி லாகும். (௧௪) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில் ஆகும்.

பவாநந்தர் உரை
இஃது நெட்டெழுத்துக்களிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ = ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழும்,
நெடில் ஆகும் = நெட்டெழுத்துக்களாம்.
பொழிப்புரை
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழும் நெட்டெழுத்துக்களாம்.


15. நெடிலு நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர். (௧௫) நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடில் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது நெட்டெழுத்துக்களின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
நெடிலும் = நெடிலென்பதும்,
நெடுமையும் = நெடுமையென்பதும்,
தீர்க்கமும் = தீர்க்கமென்பதும்,
நெடில் பெயர் = நெட்டெழுத்துக்களின் பெயர்களாம்.
பொழிப்புரை
நெடிலென்பதும், நெடுமை யென்பதும், தீர்க்கமென்பதும் நெட்டெழுத்துக்களின் பெயர்களாம்.

தீர்க்கம் என்பது வடசொல்.


16. அஇஉம் மூன்றுஞ் சுட்டிற் சுட்டே. (௧௬) அ இ உ மூன்றும் சுட்டின் சுட்டு ஏ.

பவாநந்தர் உரை
இஃது சுட்டெழுத்துக்களிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அ இ உ மூன்றும் = அகர இகர உகரங்களாகிய இம்மூன்றும்,
சுட்டின் = ஒரு பொருளைச் சுட்டுமாயின்,
சுட்டு = சுட்டெழுத்துக்களாம்.
பொழிப்புரை
அகர இகர உகரங்களாகிய இம்மூன்றும் ஒரு பொருளைச் சுட்டுமாயின் சுட்டென்பது பெறப்படும்.
மெய்கண்டான் குறிப்புரை
ஏகாரம் (சுட்டே) அசை.


17. சுட்டல் குறித்தல் காட்டல்சுட் டின்பெயர். (௧௭) சுட்டல் குறித்தல் காட்டல் சுட்டின் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது சுட்டெழுத்துக்களின் பரியாயப்பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
சுட்டல் = சுட்டலும்,
குறித்தல் = குறித்தலும்,
காட்டல் = காட்டலும்,
சுட்டின் பெயர் = சுட்டின் பெயர்களாம்.
பொழிப்புரை
சுட்டலும் குறித்தலும் காட்டலும் சுட்டின் பெயர்களாம்.


18. அவையே, (௧௮) அவையே,

அகம்புற மண்மை சேய்மைபொது மைக்கணாம். அகம் புறம் அண்மை சேய்மை பொதுமைக் கண் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது மேல் ‘சுட்டிற் சுட்டே’ என்றவை மொழிகளில் இன்னவாறு வருமென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அவை = அச்சுட்டெழுத்துக்கள்,
அகம் = மொழியின் அகத்திடத்தும்,
புறம் = மொழியின் புறத்திடத்தும் நின்று,
அண்மை சேய்மை பொதுமைக்கண் = அண்மையிடத்தும் சேய்மையிடத்தும் பொதுமையிடத்தும்,
ஆம் = சுட்டி வரும்.
பொழிப்புரை
அச்சுட்டெழுத்துக்கள் மொழியினகத்திலும் மொழியின் புறத்திலும் நின்று அண்மையிடத்தும் சேய்மையிடத்தும் அண்மைக்கும் சேய்மைக்கும் பொதுமையிடத்தும் சுட்டி வரும்.

உதாரணம்:

--------- அகச்சுட்டு புறச்சுட்டு
சேய்மை அவன் அப்பலகை
அண்மை இவன் இம்மனிதன்
பொதுமை உவன் உவ்வீடு

அகரம் தூரத்திலுள்ள பொருளையும், இகரம் சமீபத்திலுள்ள பொருளையும், உகரம் நடுவிலுள்ள பொருளையும் பின் நிற்கும் பொருளையும் மேல்நிற்கும் பொருளையும் சுட்டுதற்கு வரும். ‘அவன் இவன் உவன்’, ‘உப்பக்கம்’, ‘உம்பன்’ என்பன காண்க.

அவன் இவன் உவன் என்பவற்றிலுள்ள அகர இகர உகரங்கள் - அடை இடை உடை என்பவற்றின் முதலெழுத்துப் போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளை யுணர்த்தாமல், பொன்னன் முதலிய சொற்களின் பகுதிபோல வேறு நின்று சுட்டுப்பொருளுணர்த்தல் காண்க. இதனை வினாவிற்குங் கொள்க.

மெய்கண்டான் குறிப்புரை
சொல்லின் புறத்தே நின்றதனால் (அ+ பலகை) இது புறச்சுட்டு. சொல்லின் அகத்தே நின்றதனால் (அ-அன்= அவன், வகரம் உடம்படுமெய்) இது அகச்சுட்டு எனப்பெயர் பெற்றது.


19. ஐம்பாற் சுட்டும் வினாவுத் தரமுமாம். (௧௯) ஐ பால் சுட்டும் வினா உத்தரமும் ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஐம்பாலிலும் வரும் சுட்டெழுத்துக்கள் வினாவுத்தரமும் ஆமென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஐம்பால் சுட்டும் = ஐம்பாலில் வரும் சுட்டெழுத்துக்களும்,
வினா = வினாவுக்கு,
உத்தரமும் ஆம் = விடையுமாகும்.
பொழிப்புரை
ஐம்பாலில் வருஞ் சுட்டெழுத்துக்களும் வினாவுக்கு விடையுமாகும்.

உதாரணம்: எவன்? எவள்? எவர்? எது? எவை? என வினவின் முறையே இவன், இவள், இவர், இது, இவை எனச் சுட்டல் வினாவுத்தரமாம் என்க.


20. ஆஏஓ வீற்றும் எஏமுத லும்வினா. (௨௰) ஆ ஏ ஓ ஈற்றும் எ ஏ முதலும் வினா.

பவாநந்தர் உரை
இஃது மொழிகளின் ஈற்றிலும் முதலிலும் வரும் வினாவெழுத்துக்கள் இவை யென்ப துணர்த்துகின்றது.
பதவுரை
ஆ ஏ ஓ = ஆ ஏ ஓ என்னும் இம்மூன்றும்,
ஈற்றும் = மொழியீற்றினும்,
எ ஏ = எ ஏ என்னும் இவ்விரண்டும்,
முதலும் = மொழி முதலினும்,
வினா = வினாப்பொருளை யுணர்த்திவரின் வினாவெழுத்துக்களாம்.
பொழிப்புரை
ஆ ஏ ஓ என்னும் இம்மூன்றும் மொழியீற்றினும், எ ஏ என்னும் இவ்விரண்டும் மொழிமுதலினும் வினாப் பொருளை யுணர்த்திவரின் வினா எழுத்துக்களாம்.

ஆ முதலியன வினா எனப் பொதுப்படக் கூறினாரேனும், அவையுஞ் சுட்டே போல மொழியினகத்தும் புறத்தும் வருமெனலுங் கொள்க. வினாப் பொருளை யுணர்த்திவரின் என்பது வருவித்துரைக்கப்பட்டது.

உதாரணம்:

மொழியீற்றுப் புறவினா மொழிமுதல் அகவினா மொழிமுதற் புறவினா
தங்கமா எது எப்பொருள்
தங்கமே ஏது ---
தங்கமோ ---- ---


21. யாவென் வினாவே யஃறிணைப் பன்மை () யா என் வினாவே அஃறிணைப் பன்மை

விகுதிபெறுங் காலைப் பாலினும் வினாவாம் (௨௧) விகுதி பெறும் கால் ஐ பாலினும் வினா ஆம்.
பவாநந்தர் உரை
இஃது யாவென் வினாவை உணர்த்துகின்றது.
பதவுரை
யா என் வினா = யாவென்னும் வினா,
அஃறிணைப் பன்மை = அஃறிணைப் பன்மையில் வரும், (அது)
விகுதிபெறுங்கால் = விகுதி பெறுமிடத்து,
ஐம்பாலினும் = ஐம்பாலிடத்தும்,
வினா ஆம் = வினாவாகும்.
பொழிப்புரை
யாவென்னும் வினா அஃறிணைப் பன்மையில் வரும். அது விகுதி பெறுமிடத்து ஐம்பாலிடத்தும் வினாவாகும்.
உதாரணம்
யா குறிய, யா சிறிய இவை அஃறிணைப் பன்மை வினா
யாவன், யாவள், யாவர், யாது, யாவை இவை இருதிணை ஐம்பாலினும் வந்த வினா

யாவென்னும் உயிர்மெய்யும் வினாவெழுத்தாகையால் இனம்பற்றி இங்குச் சேர்க்கப்பட்டது.


22. வினவல் கடாவல் கேள்வியுசா வல்வினா. (௨௨) வினவல் கடாவல் கேள்வி உசாவல் வினா.

பவாநந்தர் உரை
இஃது வினாவின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
வினவல் = வினாவலும்,
கடாவல் = கடாவலும்,
கேள்வி = கேள்வியும்,
உசாவல் = உசாவலும்,
வினா = வினாவின் பெயர்களாம்.
பொழிப்புரை
வினாவலும் கடாவலும் கேள்வியும் உசாவலும் (ஆகிய இந்நான்கும்) வினாவின் பெயர்களாம்.

மெய்வருக்கம்[தொகு]

23. தனித்துமெய்த் தன்மையாய்த் தயங்கு மாய்தம். (௨௩)தனித்து மெய் தன்மை ஆய் தயங்கும் ஆய்தம்

பவாநந்தர் உரை
இஃது ஆய்தம் தனித்தும் மெய்த்தன்மையதாகவும் விளங்குமென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆய்தம் = ஆய்தவெழுத்தானது,
தனித்து = தனிமையாயும்,
மெய் தன்மை ஆய் = மெய்யெழுத்தின் தன்மையுடையதாயும்,
தயங்கும் = (உயிர்க்கும் மெய்க்கும் இடையே) விளங்கும்.
பொழிப்புரை
ஆய்தவெழுத்தானது தனித்தும் மெய்யெழுத்தின் தன்மையுடையதாயும் உயிர்க்கும் மெய்க்கும் இடையே விளங்கும்.

ஆய்தம் மூன்று புள்ளி வடிவினது - ஃ

உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல் போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனியே நிற்றலால் "தனித்து’ என்றும், அரைமாத்திரை கொள்ளுதல் அலகுபெறாமை உச்சரிப்பு ஊன்றிச் சொல்ல அளபெடுத்தல் புள்ளியெனப் பெயர் பெறுதல் என்னுமிவற்றால் மெய்யெழுத்துப் போலுதலால் ‘மெய்த்தன்மையாய்’ என்றுங் கூறினர்.


24. அஃகேனந் தனிநிலை முப்புள்ளி யாய்தம். (௨௪) அஃகேனம் தனிநிலை முப்புள்ளி ஆய்தம்.

பவாநந்தர் உரை
இஃது ஆய்தவெழுத்தின் பரியாயப் பெயர்களுணர்த்துகின்றது.
பதவுரை
அஃகேனம் = அஃகேனமும்,
தனிநிலை = தனிநிலையும்,
முப்புள்ளி = முப்புள்ளியும் (ஆகிய இம்மூன்றும்),
ஆய்தம் = ஆய்தவெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
அஃகேனமும், தனிநிலையும், முப்புள்ளியும் (ஆகிய இம்மூன்றும்) ஆய்தவெழுத்தின் பெயர்களாம்.

அஃகேனம் என்பது கேனச் சாரியை பெற்று வந்தது. உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல்போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனித்து நிற்றலால் ‘தனிநிலை’ எனவும், மூன்று புள்ளி வடிவாயிருத்தலால் ‘முப்புள்ளி’ எனவும் பெயர் பெறுவதாயிற்று.


25. ஆய்த மெய்போ லுயிர்பெற் றிலதாம். (௨௫) ஆய்தம் மெய் போல் உயிர் பெற்று இலது ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஆய்தவெழுத்து மெய்யெழுத்துப்போல உயிரேறப் பெறாதென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆய்தம் = ஆய்தவெழுத்தானது,
மெய் போல் = மெய்யெழுத்துப் போல,
உயிர் பெற்றிலது ஆம் = உயிரேறப் பெறாதாம்.
பொழிப்புரை
ஆய்தவெழுத்தானது மெய்யெழுத்துப் போல உயிரேறப் பெறாதாம்.


26. ககரமுதன் மூவாறுங் காட்டுமாய் தமுமெய். (௨௬) ககர முதல் மூ ஆறும் காட்டும் ஆய்தமும் மெய்.

பவாநந்தர் உரை
இஃது மெய்யெழுத்துக்களிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ககர முதல் = ககர முதலாகிய,
மூவாறும் = பதினெட்டும்,
காட்டும் ஆய்தமும் = அவைபோலக் காட்டும் ஆய்தமொன்றும்,
மெய் = மெய்யெழுத்துக்களாம்.
பொழிப்புரை
ககர முதலாகிய பதினெட்டும் அவை போலக் காட்டும் ஆய்தமொன்றும் மெய்யெழுத்துக்களாம்.
அவை, க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ய்-ர்-ல்-வ்-ழ்-ள், ற்-ன்; ஃ என்பனவாம்.
ஆய்தம் ஒரோவிடத்து உயிர்போல வருதலின்றிப் பெரும்பாலும் மெய்போல வருதல் பற்றி அதனை மெய்யோடு கூட்டினார்.


27. உடலுடம் பொற்றல் லூமைவியஞ் சனமெய். (௨௭)உடல் உடம்பு ஒற்று அல் ஊமை வியஞ்சனம் மெய்.

பவாநந்தர் உரை
இஃது மெய்யெழுத்தின் பரியாயப் பெயர்களை யுணர்த்துகின்றது.
பதவுரை
உடல் = உடலும்,
உடம்பு = உடம்பும்,
ஒற்று = உற்றும்,
அல் = அல்லும்,
ஊமை = ஊமையும்,
வியஞ்சனம் = வியஞ்சனமும்,
மெய் = மெய்யெழுத்துக்களின் பெயர்களாம்.
பொழிப்புரை
உடலும் உடம்பும் ஒற்றும் அல்லும் ஊமையும் வியஞ்சனமும் மெய்யெழுத்தின் பெயர்களாம்.
ஹல் என்பதும் வ்யஞ்சகம் என்பதும் வடசொற்கள்.


28. தனிநிலையு மெய்யுந் தனித்தொலி யாவே. (௨௮)தனி நிலையும் மெய்யும் தனித்து ஒலியா ஏ.

பவாநந்தர் உரை
இஃது தனித்தொலியா வெழுத்துக்களிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
தனிநிலையும் = ஆய்தமும்,
மெய்யும் = மெய்யெழுத்துக்களும்,
தனித்து ஒலியா = தனித்து நின்று சத்தியா.
பொழிப்புரை
ஆய்தமும் மெய்யெழுத்துக்களும் தனித்து நின்று சத்தியா.
தனித்துச் சத்தியாவெனவே உயிரெழுத்துக்களின் உதவிபெற்றே ஒலிக்கும் என்பதாயிற்று.


29. மெய்வலி மெலியிடை விரியுமூ வினாமாய். (௨௯) மெய் வலி இடை விரியும் மூ இனம் ஆய்.

பவாநந்தர் உரை
இஃது மெய்யெழுத்துக்களின் விரியை உணர்த்துகின்றது.
பதவுரை
மெய் = மெய்யெழுத்துக்கள்,
வலி மெலி இடை = வல்லினம் மெல்லினம் இடையினம் என,
மூவினம் ஆய் விரியும் = மூவினமாக விரியும்.
பொழிப்புரை
மெய்யெழுத்துக்கள் வல்லினம் மெல்லினம் இடையினம் என மூவினமாக விரியும்.

‘விரியும் மூவினமாய்’ என்றாரேனும் ஆய்தம் சேர்ந்து நால்வகையாம் என்பது கொள்க.


30. வல்லெழுத் தாவன கசட தபற. (௩௦)வல் எழுத்து ஆவன க ச ட த ப ற.

பவாநந்தர் உரை
இஃது வல்லெழுத்துக்கள் இவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
வல் எழுத்து ஆவன = வல்லெழுத்துக்களாவன,
கசடதபற = க், ச், ட், த், ப், ற் என்னும் இவ்வாறுமாம்.
பொழிப்புரை
வல்லெழுத்துக்களாவன, க் ச் ட் த் ப் ற் என்னு மிவ்வாறுமாம்.


31. வலிவன்மை வன்கணம் பரிசம்வல் லினப்பெயர். (௩௧) வலி வன்மை வன்கணம் பரிசம் வல் இனம் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது வல்லெழுத்துக்களின் பரியாயப்பெயர்க ளுணர்த்துகின்றது.
பதவுரை
வலி = வலியென்பதும்,
வன்மை = வன்மையென்பதும்,
வன்கணம் = வன்கணமென்பதும்,
பரிசம் = பரிசம் என்பதும்,
வல்லினப்பெயர் = வல்லெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
வலியென்பதும் வன்மையென்பதும் வன்கணமென்பதும் பரிசமென்பதும் வல்லெழுத்தின் பெயர்களாம்.


32. மெல்லெழுத் தாவன ஙஞண நமன. (௩௨) மெல் எழுத்து ஆவன ங ஞ ண ந ம ன.

பவாநந்தர் உரை
இஃது மெல்லெழுத்துக்களிவை யென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
மெல் எழுத்து ஆவன = மெல்லெழுத்துக்களாவன,
ங ஞ ண ந ம ன = ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் இவ்வாறுமாம்.
பொழிப்புரை
மெல்லெழுத்துக்களாவன, ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் இவ்வாறுமாம்.

மெல்லெழுத்து - மென்மையாய் ஒலிக்கும் எழுத்து.


33. மெலிமென்மை மென்கண மெல்லினப் பெயரே. (௩௩) மெலி மென்மை மென் கணம் மெல் இனம் பெயர் ஏ.

பவாநந்தர் உரை
இஃது மெல்லெழுத்தின் பரியாயப் பெயர்கள் உணர்த்துகின்றது.
பதவுரை
மெலி = மெலியென்பதும்,
மென்மை = மென்மையென்பதும்,
மென்கணம் = மென்கணமென்பதும்,
மெல்லினப் பெயர் = மெல்லெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
மெலி மென்மை மென்கணம் என்பன மெல்லெழுத்தின் பெயர்களாம்.


34. இடையெழுத் தாவன யரல வழள. (௩௪) இடை எழுத்து ஆவன ய ர ல வ ழ ள.

பவாநந்தர் உரை
இஃது இடையெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
இடை எழுத்து ஆவன = இடையெழுத்துக்களாவன,
ய ர ல வ ழ ள = ய் ர் ல் வ் ழ் ள் என்னும் இவ்வாறுமாம்.
பொழிப்புரை
இடையெழுத்துக்களாவன, ய் ர் ல் வ் ழ் ள் என்னும் இவ்வாறுமாம்.

இடையெழுத்து - வன்மைக்கும் மென்மைக்கும் இடையாய் ஒலிக்கும் எழுத்து.


35. இடையிடைமை யிடைக்கண மிடையினப் பெயரே. (௩௫) இடை இடைமை இடைக் கணம் இடை இனம் பெயர் ஏ.

பவாநந்தர் உரை
இஃது இடையெழுத்தின் பரியாயப் பெயர்கள் உணர்த்துகின்றது.
பதவுரை
இடை = இடையென்பதும்,
இடைமை = இடைமையென்பதும்,
இடைக்கணம் = இடைக்கணம் என்பதும்,
இடையினப் பெயரே = இடையெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
இடை இடைமை இடைக்கணம் என்பன இடையெழுத்தின் பெயர்களாம்.

இனவெழுத்து

36. உயிர்முதன் முப்பது மொன்றற் கொன்றினம். (௩௬) உயிர் முதல் முப்பதும் ஒன்றற்கு ஒன்று இனம்.

பவாநந்தர் உரை
இஃது இனவெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர் முதல் முப்பதும் = உயிர் முதலாகிய முப்பதெழுத்துக்களும்,
ஒன்றற்கு ஒன்று இனம் = ஒன்றற்கு ஒன்று இனவெழுத்துக்களாம்.
பொழிப்புரை
உயிர் முதலாகிய முப்பதெழுத்துக்களும் ஒன்றற்கு ஒன்று இனவெழுத்துக்களாம்.

உதாரணம்:

அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஐ, ஒ-ஓ, ஔ-உ,
க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம்,
ய்ர்ல்வ்ழ்ள், ற்-ன்.
இவை ஒன்றற்கொன்று இனம்.

‘முப்பதும் ஒன்றற்கொன்று இனம்’ என்றாரேனும், உயிரெழுத்துக்களுள் குறிலுக்கு நெடிலும், மெய்யெழுத்துக்களுள் வல்லினத்திற்கு மெல்லினமும் இனமெனக் கொள்க. இடையினம் ஆறும் ஓரினம்.


37. இஉ இரண்டும் ஐஔக் கினமே. (௩௭) இ உ இரண்டும் ஐ ஔக்கு இனமே.

பவாநந்தர் உரை
இஃது ஐகார ஔகாரங்களுக்கு இனவெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
இ உ இரண்டுமே = ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய இகர உகரங்களாகிய இரண்டுமே,
ஐ ஔக்கு = ஐகார ஔகாரங்களுக்கும்,
இனம் = முறையே இனவெழுத்துக்களாம்.
பொழிப்புரை
ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய இகர உகரங்களாகிய இரண்டுமே இகார ஔகாரங்களுக்கும் முறையே இனவெழுத்துக்களாம்.

ஐகார ஔகாரங்களுக்கு வேறு இனமின்மையால் இகர உகரங்கள் அவற்றிற்கும் இனமாகக் கொள்ளப்பட்டன. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

சார்பெழுத்து


38. உயிர்மெய், () உயிர்மெய், அளபெடை யிரண்டாய்த மறுகுறுக்கஞ் சார்பாம். (௩௮) அளபெடை இரண்டு ஆய்தம் அறு குறுக்கம் சார்பு ஆம்.

பவாநந்தர் உரை
இஃது சார்பெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர்மெய் = உயிர்மெய்யும்,
அளபெடை இரண்டு = அளபெடைகள் இரண்டும்,
ஆய்தம் = ஆய்தமும்,
அறு குறுக்கம் = அறுவகைக் குறுக்கங்களும் (ஆகிய இப்பத்தும்),
சார்பு ஆம் = சார்பெழுத்துக்களாம்.
பொழிப்புரை
உயிர்மெய்யும் அளபெடைகள் இரண்டும் ஆய்தமும் அறுவகைக் குறுக்கங்களும் ஆகிய இப்பத்தும் சார்பெழுத்துக்களாம்.
உயிர்மெய் - உயிரும் மெய்யும் கூடி உண்டாதலாலும், ஆய்தம் - உயிர்மெய்களினிடையே அவற்றைச் சார்ந்து வருதலாலும், மற்றை உயிரளபெடை முதலிய எட்டும் தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலாலும், இவையெல்லாம் சார்பெழுத்தெனப் பட்டன. ஒரு மொழியைச் சார்ந்து வரும் இயல்பன்றித் தனித்தியங்கும் இயல்பு தனக்கு இல்லாமை பற்றி ஆய்தத்தைச் சார்பெழுத்தின்பாலுஞ் சேர்த்தனர் என்னலாம்.


39. புல்லல் சார்தல் புணர்தல்சார் பின்பெயர். (௩௯) புல்லல் சார்தல் புணர்தல் சார்பின் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது சார்பெழுத்தின் பரியாயப் பெயர்களை உணர்த்துகின்றது.
பதவுரை
புல்லல் = புல்லல் என்பதும்,
சார்தல் = சார்தல் என்பதும்,
புணர்தல் = புணர்தல் என்பதும்,
சார்பின் பெயர் = சார்பெழுத்தின் பெயர்களாம்.
பொழிப்புரை
புல்லல், சார்தல், புணர்தல் என்பன சார்பெழுத்தின் பெயர்களாம்.


40. உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும். (௪௰) உயிரே மெய் ஊர்ந்து உயிர்மெய் ஆகும்.

பவாநந்தர் உரை
இஃது உயிர்மெய் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர் = உயிரெழுத்துக்கள்,
மெய் ஊர்ந்து = மெயெழுத்துக்களின் மேல் ஏறுதலால்,
உயிர்மெய் ஆகும் = உயிர்மெய் எழுத்துக்கள் உண்டாகும்.
பொழிப்புரை
உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்களின் மேல் ஏறுதலால் உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகும்.

உதாரணம்:

உதாரணம்:
க் + அ = க த் + அ = த ல் + அ = ல
ங் + அ = ங ந் + அ = ந வ் + அ = வ
ச் + அ = ச ப் + அ = ப ழ் + அ = ழ
ஞ் + அ = ஞ ம் + அ = ம ள் + அ = ள
ட் + அ = ட ய் + அ = ய ற் + அ = ற
ண் + அ = ண ர் + அ = ர ன் + அ = ன

இவ்வாறு பதினெட்டு மெய்களின் மீதும் பன்னிரண்டு உயிர்களும் ஏறுவதனால் இருநூற்றுப் பதினாறு உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகும். இவற்றுள் தொண்ணூறு உயிர்மெய்க்குறில், நூற்றிருபத்தாறு உயிர்மெய்நெடில்.

அளபெடை[தொகு]

41. உயிர்நெடி லினக்குறி லுற்றள பெடுக்கும். (௪௧) உயிர் நெடில் இனக் குறில் உற்று அளபு எடுக்கும்.

பவாநந்தர் உரை
இஃது உயிரளபெடையாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர் நெடில் = உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும்,
இனக்குறில் உற்று + தமக்கினமாகிய குற்றெழுத்துக்களைப் பெற்று,
அளபு எடுக்கும் = அளபெடுக்கும்.
பொழிப்புரை
உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்கினமாகிய குற்றெழுத்துக்களைப் பெற்று அளபெடுக்கும்.

‘உயிர் நெடில்’ என்றாரேனும் மெய்ம்மேலேறிய நெடிலும் அளபெடுக்குமெனக் கொள்க.

உதாரணம்:

முதனிலை யளபெடை இடைநிலை யளபெடை கடைநிலை அளபெடை
ஆஅரிடம் படாஅகை கடாஅ
ஈஇரிலை பரீஇயம் குரீஇ
ஊஉரிடம் கழூஉமணி கழூஉ
ஏஎரிகள் பரேஎரம் மிலேஎ
ஐஇயவி வளைஇயம் கடைஇ
ஓஒரிகள் புரோஓசை அரோஒ
ஔஉவியம் அநௌஉகம் அநௌஉ


42. ஙஞண நமன வயலள வாய்தங் () ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்

குறிலிணை குறிற்கீ ழிடைகடை யளபெழும்.> (௪௨) குறில் இணை குறில் கீழ் இடை கடை அளபு எழும்.
பவாநந்தர் உரை
இஃது ஒற்றளபெடையாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
ஙஞண நமன வயலள = ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் என்னும் இப்பத்து மெய்யெழுத்துக்களும்,
ஆய்தம் = ஆய்தவெழுத்தும்,
குறிலைணை இடை கடை = குறிலிணை (கீழ்) இடையிலும் கடையிலும்,
குறில் கீழ் இடை கடை = குறிற்கீழ் இடையிலும் கடையிலும்,
அளபெழும் = அளபெடுக்கும்.
பொழிப்புரை
ங் ஞ் ண் ந் ம் ன், வ் ய் ல் ள் என்னும் இப்பத்து மெய்யெழுத்துக்களும், குறிலைணை (கீழ்) இடையிலும் கடையிலும், குறிற்கீழ் இடையிலும் கடையிலும் அளபெடுக்கும்; ஆய்தம், (உயிரொடு புணர்ந்த வல்லாறன்மேல்) குறிலிணை (கீழ்) இடையிலும் குறிற்கீழிடையிலும் அளபெடுக்கும்.

உதாரணம்:

குறிலிணைக்கீழ் இடை குறிற்கீழ் இடை குறிலிணைக்கீழ்க் கடை குறிற்கீழ்க் கடை
அரங்ங்கம் மங்ங்கலம் மடங்ங் நங்ங் ங்
முரஞ்ஞ்சு மஞ்ஞ்சு உரிஞ்ஞ் நஞ்ஞ் ஞ்
முரண்ண்டு மண்ண்ணு அரண்ண் கண்ண் ண்
பருந்ந்து பந்ந்து பொருந்ந் நந்ந் ந்
அரும்ம்பு அம்ம்பு கனம்ம் அம்ம் ம்
முரன்ன்று மின்ன்னு பரன்ன் பொன்ன் ன்
குரவ்வ்வை தெவ்வ்வர் --- தெவ்வ் வ்
அரைய்ய்யர் வெய்ய்யர் --- செய்ய் ய்
குரல்ல்கள் செல்ல்க பகல்ல் கல்ல் ல்
திரள்ள்கள் கொள்ள்க திரள்ள் வள்ள் ள்
வரஃஃகு எஃஃகு --- ---

ஆய்தம் மொழியின் முதலிலும் கடையிலும் வருதலின்மையின் அது குறிலிணைக்கீழ்க் கடையிலும், குறிற்கீழ்க் கடையிலும் அளபெடுத்து வருவதில்லை. குறிலிணைக்கீழ்க் கடையில் வகரவொற்று வருவதேயில்லை. யகரவொற்று குறிலிணைக்கீழ்க் கடையில் அளபெடுத்து வரற்கு உதாரணம் வந்தவிடத்திற் காண்க.


43. அளபும் புலுதமும் அளபெ டைப்பெயர் (௪௩) அளபும் புலுதமும் அளபெடைப் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது அளபெடையின் பரியாயப் பெயர்களுணர்த்துகின்றது.
பதவுரை
அளபும் = அளபென்பதும்,
புலுதமும் = புலுதமென்பதும்,
அளபெடைப் பெயர் = அளபெடையின் பெயர்களாம்.
பொழிப்புரை
அளபு, புலுதம் என்பன அளபெடைப் பெயர்களாம்.

புலுதம் - ப்லுதம் என்னும் வடசொற் றிரிபு.


44. அவையே, () அவையே,

இயற்கை செயற்கை யின்னிசை சொல்லிசை () இயற்கை செயற்கை இன் இசை சொல் இசை
நெடில்குறி லொற்றுயி ரெழுத்துப்பே றளபெண். (௪௪) நெடில் குறில் ஒற்று உயிர் எழுத்துப் பேறு அளபு எண்.
பவாநந்தர் உரை
இஃது அளபடை யித்தனை வகையதென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அவையே = அவ்வளபெடைகள்தான்,
இயற்கை = இயற்கையளபெடை,
செயற்கை = செயற்கை யளபெடை,
இன்னிசை = இன்னிசை யளபெடை,
சொல்லிசை = சொல்லிசை யளபெடை,
நெடில் = நெடிலளபெடை.
குறில் = குறிலளபெடை,
உயிரெழுத்துப் பேறளபெடை = உயிரெழுத்துப்பேறு அளபெடை என,
எண் = எண்வகையாம்.
பொழிப்புரை
அவ்வளபெடைகள் இயற்கையளபெடை செயற்கையளபெடை இன்னிசையளபெடை, சொலிசையளபெடை நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை உயிரெழுத்துப்பேறளபெடை என எண்வகையாம். அளபை மற்றவற்றோடுங் கூட்டுக.

அழைத்தல் விலைகூறல், புலம்பல் முதலியவற்றுள் வரும் அளபெடை எழுத்துச் செயற்கையின்றிப் பிறந்த இயற்கை யளபெடை.

செய்யுளிற் சீர்தளை வேண்டுமிடத்துப் புலவன் கொள்ளுமளபெடை செயற்கையளபெடை.

உதாரணம்:
விடுப்பதூஉம் குற்றுகரம் அடுத்த இன்னிசையளபெடை
தளைஇ ஐகாரக்குறுக்க மளபெடுத்த சொல்லிசை யளபெடை
ஆஅ நெடிலளபெடை
மணீஇ குறிலளபெடை
சிந்ந்து ஒற்றளபெடை
எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
சந்திரனை யராஅப் பற்றிற்று விகாரத்தெழுந்த உயிரெழுத்துப் பேறு அளபெடை.


45. ஆய்தங் குறில்வலிக் காகு மிடையே. (௪௫) ஆய்தம் குறில் வலிக்கு ஆகும் இடையே.

பவாநந்தர் உரை
இஃது ஆய்தம் வருமிடம் உணர்த்துகின்றது.
பதவுரை
ஆய்தம் = ஆய்தவெழுத்து,
குறில் = குறிலுக்கும்,
வலி = வல்லெழுத்திற்கும்,
இடையே ஆகும் = இடையே வரும்.
பொழிப்புரை
ஆய்தம் குற்றெழுத்திற்கு முன்னும் உயிர்மெய் வல்லெழுத்திற்குப் பின்னும் வரும்.

குறில் என வாளா கூறினாரேனும் தனிக்குறில் இணைக்குறில் இரண்டும் எனவும், வலியென வாளா கூறினாரேனும் உயிர்மெய் வல்லெழுத்து எனக் கொள்க.

உதாரணம்:

எஃகு, கஃசு இவை தனிக்குற்றெழுத்தின் பின் வந்தன.
விலஃகி, இலஃகி இவை இணைக்குற்றெழுத்தின் பின் வந்தன.

இடையே என்றமையால் மொழி முதலினும் ஈற்றினும் ஆய்தம் வாராதென்பது வெளிப்படை.


46. உத்திரி யிகரமவ்வூ ரிகரங் குறிய. (௪௬) உ திரி இகரம் ம ஊர் இகரம் குறிய.

பவாநந்தர் உரை
இஃது குற்றியலிகரமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
உத்திரி இகரம் = யவ்வரில் குற்றியலுகரந் திரிந்த இகரமும்,
ம ஊர் இகரம் = அசைச்சொல் மகரமெய்யின்மேல் ஏறிய இகரமும்,
குறிய = குற்றியலிகரங்களாம்.
பொழிப்புரை
யவ்வரில் குற்றிய லுகரந் திரிந்த இகரமும், அசைச்சொன் மகரமெய்யின்மேலேறிய இகரமும் குற்றியலிகரங்களாம்.

உத்திரியிகரம், மவ்வூரிகரம் என்றாரேனும், ஈண்டைக்கேற்ப யவ்வரில் குற்றியலுகரந் திரிந்த இகரம் எனவும், மியா வென்னும் அசைச்சொல் மகரமெய்யின்மேலேறிய இகரம் எனவும் கொள்க.

உதாரணம்:

வீடியாது, சென்மியா, கேண்மியா என வரும்.


47. குறிலல்லன தொடர்வலிக் கூடுகரங் குறிய. (௪௭) குறில் அல்லன தொடர் வலி கூடு உகரம் குறிய.

பவாநந்தர் உரை
இஃது குற்றியலுகரமாமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
குறில் அல்லன தொடர் = தனிக்குறில் அல்லாதனவாகிய உயிர் தனிநெடில் ஆய்தம் வலி மெலி இடை இவைகளைத் தொடர்ந்து,
வலி = ஈற்றிலே வல்லெழுத்துக்கள் நிற்க,
கூடு உகரம் = அவற்றின் மேலேறிய உகரங்கள்,
குறிய = குற்றியலுகரங்களாம்.
பொழிப்புரை
தனிக் குறில் அல்லாதனவாகிய உயிர், தனிநெடில், ஆய்தம், வலி, மெலி, இடை இவைக ளைத் தொடர்ந்து ஈற்றிலே வல்லெழுத்துக்கள் நிற்க அவற்றின்மேல் ஏறிய உகரங்கள் குற்றியலுகரங்களாம்.
உதாரணம்:
விறகு, பலாசு உயிர்த்தொடர்
நீறு, யாறு நெடிற்றொடர்
அஃது, இஃது ஆய்தத்தொடர்
தேக்கு, வாக்கு வன்றொடர்
நெஞ்சு, மஞ்சு மென்றொடர்
மார்பு, சார்பு இடைத்தொடர்


48. மூன்றிடத் தையஃகு முதலி்டத் தௌவஃகும் (௪௮) மூன்று இடத்து ஐ அஃகும் முதல் இடத்து ஔ அஃகும்

பவாநந்தர் உரை
இஃது ஐகார ஔகாரக் குறுக்கங்கள் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
ஐ = ஐகாரம்,
மூன்று இடத்து = மொழி முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தினும்,
அஃகும் = குறுகும்.
ஔ = ஔகாரம்,
முதல் இடத்து = மொழி முதலிடத்தில்,
அஃகும் = குறுகும்.
பொழிப்புரை
ஐகாரம் முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தினும் குறுகும். ஔகாரம் மொழிமுதல் இடத்தில் மாத்திரம் குறுகும்.

உதாரணம்:

ஐயர், இறைவர், அளை எனவரும்.
தௌவை என ஔகாரம் மொழிமுதல் இடத்துமட்டும் குறுகுமாறு காண்க.


49. மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும். (௪௯) மகரம் ண ன கீழ் வ மேல் குறுகும்.

பவாநந்தர் உரை
இஃது மகரக்குறுக்கம் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
மகரம் = மகர மெய்யானது,
ண ன கீழ் = ளகர லகரங்கள் திரிந்த ணகர னகரங்களின் முன்னும்,
வ மேல் = வகரத்தின் பின்னும்,
குறுகும் = குறுகும்.
பொழிப்புரை
மகரமெய்யானது, ளகர லகரங்கள் திரிந்த ணகர னகரங்களின் முன்னும், வகரத்தின் பின்னும் குறுகும்.

உதாரணம்:

மருண்ம், போன்ம், தரும்வளவன் என வரும்.


50. லளவிறு புணர்ச்சியா மாய்தங் குறையும். (௫௰) ல ள இறு புணர்ச்சி ஆம் ஆய்தம் குறையும்.

பவாநந்தர் உரை
இஃது ஆய்தக் குறுக்கம் ஆமாறு உணர்த்துகின்றது.
பதவுரை
லள இறு புணர்ச்சி ஆம் = லள ஈற்றுப் புணர்ச்சியில் உண்டாகும்,
ஆய்தம் = ஆய்தமானது,
குறையும் = குறையும்.
பொழிப்புரை
லள வீற்றுப் புணர்ச்சியி லுண்டாகும் ஆய்தமானது குறையும்.
உதாரணம்
கஃறீது, முஃடீது என வரும்.

ஒழிபு[தொகு]

51. குறிலாண் பாலு நெடில்பெண் பாலுமாம். (௫௧) குறில் ஆண் பாலும் நெடில் பெண் பாலும் ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஆண் பெண் எழுத்துக்கள் இவையென்பது உணர்த்துகின்றது
பதவுரை
குறில் = குற்றெழுத்துக்களெல்லாம்;
ஆண்பாலும் = ஆண்பாலும்,
நெடில் = நெட்டெழுத்துக்கள் எல்லாம்,
பெண்பாலும் = பெண்பாலும்,
ஆம் = ஆகும்.
பொழிப்புரை
குற்றெழுத்துக்களெல்லாம் ஆண்பாலும், நெட்டெழுத்துக்களெல்லாம் பெண்பாலுமாகும்.
குறில் முன்னிற்றற் சிறப்பு நோக்கி ஆண்பால் எனவும், நெடில் அவற்றின் பின்னிற்றப் சிறப்பின்மை நோக்கிப் பெண்பால் எனவுங் கூறினர்.


52. ஆய்தமு மெய்யு மலியெனப் படுமே. (௫௨) ஆய்தமும் மெய்யும் அலி எனப்படுமே.

பவாநந்தர் உரை
இஃது அலியெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆய்தமும் = ஆய்தவெழுத்தும்,
மெய்யும் = மெய்யெழுத்துக்களும்,
அலி எனப்படும் = அலியெழுத்துக்கள் என்று சொல்லப்படும்.
பொழிப்புரை
ஆய்தவெழுத்தும், மெய்யெழுத்துக்களும் அலியெழுத்துக்கள் என்று சொல்லப்படும்.
அலி - ஆணும் பெண்ணும் அல்லாதது.


53. எகர வொகரமெய் யெய்தும் புள்ளியே. (௫௩) எகரம் ஒகரம் மெய் எய்தும் புள்ளியே.

பவாநந்தர் உரை
இஃது புள்ளிபெறு எழுத்துக்கள் இவையென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
எகர ஒகரம் = எகர ஒகரங்களாகிய உயிரெழுத்துக்களும்,
மெய் = மெய்யெழுத்துக்களும்,
புள்ளி எய்தும் = புள்ளி பெறும்.
பொழிப்புரை
எகர ஒகரங்களும் மெய்யெழுத்துக்களும் புள்ளி பெறும்.
எ ஒ - எகர ஒகரங்கள் புள்ளி பெறுவது முற்கால வழக்கு.


54. எஒவ்வும் ழறனவுந் தமிழெழுத் தென்க. (௫௪) எ ஒவ்வும் ழ ற னவும் தமிழ் எழுத்து என்க.

பவாநந்தர் உரை
இஃது தமிழ்க்கே உரிய சிறப்பெழுத்துகள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
எ ஒவ்வும் = எகர ஒகரங்களும்,
ழ ற ன வும் = ழகர றகர னகரங்களும் (ஆகிய இவ்வைந்தும்),
தமிழ் எழுத்து என்க = தமிழ் எழுத்து என்று சொல்லுக.
பொழிப்புரை
எகர உகர உயிர்களும், ழகர றகர னகர மெய்களும் ஆகிய இவ்வைந்தும் தமிழ் எழுத்துக்கள் என்று சொல்லுக. எ ஒ இரண்டும் வடமொழித் தீர்க்கத்தின் குறுக்கம் என்னும் ஒரு சாரார் மதம் உணர்த்துதற்கு அவ்விரண்டையும் ஒருபாற்படுத்தி உம்மை கொடுத்துப் பிரித்தோதினார்.
தமிழெழுத்து - தமிழ்க்கே உரிய சிறப்பெழுத்து.


55. ஐந்தொழி யெழுத்தெலாம் வடவெழுத் தாகும். (௫௫) ஐந்து ஒழி எழுத்து எலாம் வட எழுத்து ஆகும்.

பவாநந்தர் உரை
இஃது முதலெழுத்துக்களுள் வடவெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஐந்து ஒழி = (மேற் சொல்லப்பட்ட) ஐந்தெழுத்து ஒழிந்த,
எழுத்து எலாம் = எழுத்துக்கள் எல்லாம்,
வடவெழுத்து ஆகும் = வடவெழுத்துக்களாம்.
பொழிப்புரை
மேற் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து ஒழிந்த எழுத்துக்கள் எல்லாம் வடவெழுத்துக்களாம்.
ஐந்தொழியெழுத்து என்றது, உயிரிரண்டும் மெய்ம் மூன்றும் ஒழிய நின்ற உயிர் பத்தும் மெய் பதினைந்தும் ஆகிய இருபத்தைந்தெழுத்துக்களை.
வடவெழுத்து - வடமொழியிலும் உள்ள எழுத்து.


56. எழுத்தே, () எழுத்தே,

இடுகுறி காரணம் பொதுச்சிறப் பெய்தும். (௫௬) இடு குறி காரணம் பொது சிறப்பு எய்தும்.
பவாநந்தர் உரை
இஃது எழுத்துக்களின் பெயர்வகை உணர்த்துகின்றது.
பதவுரை
எழுத்து = எழுத்துக்கள்,
இடுகுறி = இடுகுறிப் பெயரையும்,
காரணம் = காரணப் பெயரையும்,
பொது = பொதுப் பெயரையும்,
சிறப்பு = சிறப்புப் பெயரையும்,
எய்தும் = பெறும்.
பொழிப்புரை
எழுத்துக்கள் இடுகுறிப் பெயரையும், காரணப் பெயரையும், பொதுப்பெயரையும் சிறப்புப் பெயரையும் பெறும்.
உதாரணம்
1. உயிர், மெய் - இவை இடுகுறிப் பொதுப்பெயர்.
2. அ, ஆ, க், ங் - இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்.
3. குறில், நெடில், வலி, மெலி, இடை, உயிர்மெய் இவை காரணப் பொதுப்பெயர்.
4. குற்றுகரம், குற்றிகரம் இவை காரணச் சிறப்புப்பெயர்.


57. ஒவ்வல், () ஒ அல்

குறில்கச தநபமவ வமிர்த வெழுத்தே. (௫௭)குறில் க ச த ந ப ம வ அமிர்த எழுத்தே.
பவாநந்தர் உரை
இவை அமிர்த எழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஒ அல் = ஒகரம் அல்லாத,
குறில் = குற்றெழுத்துக்கள் நான்கும்,
க ச த ந ப ம வ = க ச த ந ப ம வ ஆகிய இவ்வேழு உயிர்மெய் எழுத்துக்களும்,
அமிர்த எழுத்து = அமிர்தவெழுத்துக்களாம்.
பொழிப்புரை
ஒகரம் அல்லாத குற்றெழுத்துக்கள் நான்கும், க ச த ந ப ம வ என்னும் இவ் வுயிர்மெய் எழுத்துக்கள் ஏழும் அமிரத எழுத்துக்களாம்.
அமிர்தவெழுத்துக்கள் சுபத்திற்கு ஆவன.


58. அளபெடை மக்குற ளாய்தநஞ் செழுத்தே (௫௮) அளபெடை மக்குறள் ஆய்தம் நஞ்சு எழுத்தே

பவாநந்தர் உரை
இஃது நச்செழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
அளபெடை = உயிரளபெடையும் ஒற்றளபெடையும்,
ம குறள் = மகரக் குறுக்கமும்,
ஆய்தம் = ஆய்தக் குறுக்கமும் (ஆகிய இவை),
நஞ்சு எழுத்து = நச்செழுத்துக்களாம்.
பொழிப்புரை
உயிரளபெடையும், ஒற்றளபெடையும், மகரக் குறுக்கமும், ஆய்தக் குறுக்கமும் ஆகிய இவை நச்செழுத்துக்களாம்.
நஞ்செழுத்துக்கள் அசுபத்திற்கு ஆவன.


59. பொதுவெழுத் துத்தமிழ்ப் பொருந்துதல் சிறப்பே. (௫௯) பொது எழுத்து தமிழ் பொருந்துதல் சிறப்பே.

பவாநந்தர் உரை
இஃது சிறப்புடைய எழுத்து இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
பொது எழுத்து தமிழ் பொருந்துதல் = வடமொழி தமிழிற் பொருந்துமாயின் பொது எழுத்தான் வரும் பதமே,
சிறப்பு = சிறப்புடைத்து (அல்லன வருதல் அச்சிறப்புடையதன்று).
பொழிப்புரை
வடமொழி தமிழிற் பொருந்துமாயின் பொதுவெழுத்தான் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்புடைத்தன்று.
தமிழிற் பொருந்துதல் என்றதனால் பொதுவெழுத்தென்றது வடமொழியெனப்படும். பொதுவெழுத்துத் தமிழ்ப் பொருந்துதல் சிறப்பு என்றதனால், அல்லன வருதல் அத்துணைச் சிறப்புடையதன்று என்பதாயிற்று. பொதுவெழுத்து - வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத்து.


60. உயிர்மெய் யுயிரள பலாச்சார்பு தமிழ்க்குரிய. (௬௰) உயிர்மெய் உயிர் அளபு அலாச் சார்பு தமிழ்க்கு உரிய.

பவாநந்தர் உரை
இஃது தமிழ்க்கே உரிய சார்பெழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர்மெய் = உயிர்மெய்யும்,
உயிரளபு = உயிரளபெடையும்,
அல்லா = அல்லாத,
சார்பு = சார்பெழுத்து எல்லாம்,
தமிழ்க்கு உரிய = தமிழ்க்கே உரியன.
பொழிப்புரை
உயிர்மெய்யும், உயிரளபெடையும் அல்லா சார்பெழுத்தெல்லாம் தமிழ்க்கே உரியன.
தமிழ்க்கு என்பதன் ஈற்றில் ஏகாரந் தொகுத்தல்.


பேரகத்தியம் எழுத்திலக்கணக் காண்டம் முதலாவது எழுத்துப்படலமும், பவாநந்தம் அவர்கள் எழுதிய உரையும் முற்றிற்று

பார்க்க[தொகு]

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்


2. எழுத்துற்பத்திப் படலம்

3. எழுத்து வரன்முறைப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

5. வடமொழிப் படலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=1._எழுத்துப்_படலம்&oldid=1023909" இருந்து மீள்விக்கப்பட்டது