3. எழுத்து வரன்முறைப் படலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பேரகத்தியம்[தொகு]

ஆசிரியர்: அகத்தியனார்[தொகு]

உரையாசிரியர்: ச.பவாநந்தம் பிள்ளை அவர்கள்[தொகு]

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்[தொகு]

3. எழுத்து வரன்முறைப் படலம்[தொகு]

அஃதாவது - எழுத்துக்கள் வருமுறைமையை உணர்த்தும் படலம்.

முதனிலை

81. பன்னீ ருயிரு மொழிமுத லாகும். (01) () பன் ஈர் உயிரும் மொழி முதல் ஆகும். (௧)

பவாநந்தர் உரை
இஃது மொழிமுதலாய் வரும் எழுத்துக்கள் இன்னவென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
பன்னீர் உயிரும் = உயிரெழுத்துப் பன்னிரண்டும்,
மொழி முதல் ஆகும் = மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
உயிரெழுத்துப் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்: அலை, ஆடு, இலை, ஈடு, உடை, ஊர்தி, எடை, ஏரி, ஐயம், ஒளி, ஓடு, ஔவை.


82. உயிர்மெய் யல்லவை மொழிமுத லாகா. (02) () உயிர்மெய் அல்லவை மொழி முதல் ஆகா.

பவாநந்தர் உரை
இஃது மொழி முதல் ஆகாத எழுத்துக்கள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர்மெய் அல்லவை = உயிர்மெய் எழுத்துக்கள் அல்லாதவை,
மொழி முதல் ஆகா = மொழிமுதலாய் வாராவாம்.
பொழிப்புரை
உயிர்மெய் எழுத்துக்கள் அல்லாதவை மொழிமுதலாய் வாராவாம்.
உயிர்மெய் அல்லவை மொழிமுதல் ஆகா என்றமையால், உயிர்மெய்கள் மொழிக்கு முதலில் வரும், தனிமெய்கள் மொழிக்கு முதலில் வாரா என்றதாயிற்று.

83. கசதந பமவுயிர் மெய்யெலா முதலாம். (03) () க ச த ந ப ம உயிர்மெய் எலாம் முதல் ஆம்.

பவாநந்தர் உரை
இஃது வருக்கமெல்லாம் மொழிக்கு முதலில் வருதற்குரிய உயிர்மெய்கள் இவையென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
க ச த ந ப ம = கசதநபம என்கின்ற,
உயிர்மெய் எல்லாம் = உயிர்மெய் வருக்கம் எல்லாம்,
முதல் ஆம் = மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
கசதபநபம என்கிற உயிர்மெய் வருக்கமெல்லாம் மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்: கனி, காழ், கிளி, கீரி, குறி, கூன், கெண்டை, கேள், கைதை, கொடை, கோதை, கௌவை. மற்ற வருக்கமும் இவ்வாறே வரும்.


84. ஞகரம் அ ஆ எ ஒவ் வோடாம். (04) () ஞகரம் அ ஆ எ ஒவ்வோடு ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஞகரம் இன்ன உயிர்களோடு கூடி மொழிக்கு முதலாம் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ஞகரம் = ஞகரமானது,
அ ஆ எ ஒவ்வோடு = அகர ஆகார எகர ஒகரங்களோடு கூடி,
ஆம் = மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
ஞகரமானது அகர ஆகார எகர ஒகரங்களோடு கூடி மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்: ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று என வரும்.

ஞகரம் இகரத்தோடு கூடியும் வரும். ஞிமிறு.


85. யகரம், ()யகரம்,

அ ஆ உ ஊ ஓ ஔ வுடனாம். (05) () அ ஆ உ ஊ ஓ ஔ உடன் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது யகரம் இன்ன உயிர்களோடு கூடி மொழிக்கு முதலில் வரும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
யகரம்= யகரமானது,
அ ஆ உ ஊ ஓ ஔ உடன் = அகர ஆகார உகர ஊகார ஓகார ஔகார உயிர்களோடு கூடி,
ஆம்= மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
யகரமானது அகர ஆகார உகர ஊகார ஓகார ஔகார உயிர்களோடு கூடி மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்: யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம் என வரும்.


86. வகரம், () வகரம்,

உ ஊ ஒ ஓ வொழிந்தன வுடனாம். (06) () உ ஊ ஒ ஓ ஒழிந்தன உடன் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது வகரம் இன்ன உயிர்களோடு கூடி மொழிக்கு முதலில் வரும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
வகரம் = வகரமானது,
உ ஊ ஒ ஓ ஒழிந்தன உடன் = உகர ஊகார ஒகர ஓகாரங்கள் ஒழிந்த மற்ற உயிர்களோடு கூடி,
ஆம் = மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
வகரமானது உகர ஊகார ஒகர ஓகாரங்கள் ஒழிந்த மற்ற உயிர்களோடு கூடி மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்:வலை, வாள், விழி, வீடு, வெண்ணெய், வேட்கை, வையம், வௌவால்


87. ஙகரமவ் வேற்றுச் சுட்டு வினாவொடாம். () ஙகரம் அ ஏற்று சுட்டு வினாவொடு ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஙகரம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துகின்றது.


பதவுரை
ஙகரம் = ஙகரமானது,
அ ஏற்று = அகர உயிரோடு கூடி,
சுட்டு வினாவொடு = சுட்டுடனும் வினாவுடனும்,
ஆம் = மொழிக்கு முதலில் வரும்.
பொழிப்புரை
ஙகரமானது அகர உயிரோடு கூடிச் சுட்டுடனும் வினாவுடனும் மொழிக்கு முதலில் வரும்.

உதாரணம்: அங் ஙனம், இங் ஙனம், உங் ஙனம் - சுட்டோடு வந்தது.

எங் ஙனம், யாங் ஙனம் - வினாவோடு வந்தது.
இடைநிலை மயக்கம்

88. கசதப வல்லன பிறமெய்ம் மயக்கமாம். (08) () க ச த ப அல்லன பிற மெய்ம்மயக்கம் ஆம்.

பவாநந்தர் உரை
இஃது பிற மெய்ம்மயக்கம் உணர்த்துகின்றது.


பதவுரை
க ச த ப அல்லன = க ச த பக்கள் அல்லாத பதினான்கு மெய்களும் வேறு மெய்களோடு கூடுங்கூட்டம்,
பிற மெய்ம்மயக்கம் ஆம் = பிற மெய்ம்மயக்கம் ஆகும்.
பொழிப்புரை
கசதபக்கள் அல்லாத பதினான்கு மெய்களும் வேறு மெய்களோடு கூடும் கூட்டம் பிறமெய்ம்மயக்கம் ஆகும்.
பிற மெய்ம்மயக்கம் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனவும் படும்.


89. மயக்கம் புணர்ச்சி சங்கமஞ் சையோகங் () மயக்கம் புணர்ச்சி சங்கமம் சையோகம்

கூடல் கலத்தல் புல்லலொரு பொருட்சொலே. (09) () கூடல் கலத்தல் புல்லல் ஒரு பொருள் சொலே.
பவாநந்தர் உரை
இஃது மயக்கம் என்பதன் பரியாயப் பெயர்களை உணர்த்துகின்றது.
பதவுரை
மயக்கம் = மயக்கமும்,
புணர்ச்சி = புணர்ச்சியும்,
சங்கமம் = சங்கமும்,
சையோகம் = சையோகமும்,
கூடல் = கூடலும்,
கலத்தல் = கலத்தலும்,
புல்லல் = புல்லலும்,
ஒரு பொருள் சொல் = ஒரு பொருளைத் தருகிற பல சொற்களாம்.
பொழிப்புரை
மயக்கமும் புணர்ச்சியும் சங்கமமும் சையோகமும் கூடலும் கலத்தலும் புல்லலும் ஒரு பொருளைத் தரும் பல சொற்களாம்.
ஸங்கமம், ஸம்யோகம் இவ்விரண்டும் வடசொற்கள்.


90. ஙகர முன்னர்க் ககரவுயிர் மெய்வரும். (10) () ஙகரம் முன்னர் ககர உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது ஙகரமுன் இன்ன உயிர்மெய் வரும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஙகர முன்னர் = ஙகரத்தின்முன்,
ககர உயிர்மெய் = ககர உயிர்மெய்யானது,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
ஙகரத்தின்முன் ககர உயிர்மெய்யானது வந்து கூடும்.

உதாரணம்: பங்கு.


91. ஞகர முன்னர்ச் சயவுயிர் மெய்வரும். (11) () ஞகரம் முன்னர் ச ய உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது ஞகரமுன் இன்ன உயிர்மெய் வரும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஞகர முன்னர் = ஞகரத்தின் முன்,
ச ய உயிர்மெய் = சகர யகர உயிர்மெய்கள்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
ஞகரத்தின் முன் சகர யகர உயிர்மெய்கள் வந்து கூடும்.

உதாரணம்: பஞ்சு, உரிஞ்யாது என வரும்.


92. டகர முன்னர்க் க ச ப வுயிர் மெய்வரும். (12) () டகரம் முன்னர் க ச ப உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது டகரமுன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
டகரம் முன்னர் = டகரத்தின் முன்,
க ச ப உயிர்மெய் = ககர சகர பகர உயிர்மெய்கள்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
டகரத்தின்முன் ககர சகர பகர உயிர்மெய்கள் வந்து கூடும்.

உதாரணம்: வெட்கம், மாட்சி, நுட்பம் என வரும்.


93. ணகரமுன் க ட ச ஞ ப ம ய வவ்வாம். (13) () ணகரம் முன் க ட ச ஞ ப ம ய வ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ணகரம் முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ணகரம் முன் = ணகரத்தின் முன்,
க ட ச ஞ ப ம ய வ = ககர முதலிய இவ்வெட்டு உயிர்மெய்களும்,
ஆம் = வந்து கூடும்.
பொழிப்புரை
ணகரத்தின் முன் க ட ச ஞ ப ம ய வ என்னும் இவ்வெட்டு உயிர்மெய்களும் வந்து கூடும்.

உதாரணம்: எண்கு, செண்டு, வெண்சாரை, வெண்ஞமலி, பண்பு, வெண்மை, மண்யாது, கண்வலி என வரும்.


94. நகர முன்னந் த ய வுயிர் மெய்வரும். (14) () நகரம் முன்னம் த ய உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது நகரமுன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
நகரம் முன்னம் = நகரத்தின் முன்னம்,
த ய உயிர்மெய் = தகர யகர உயிர்மெய்கள்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
நகரத்தின் முன் தகர யகர உயிர்மெய்கள் வந்து கூடும்.

உதாரணம்: பந்து பொருந்யாது என வரும்.


95. மம்முன் பயவ வுயிர்மெய் வருமே. (15) ()ம முன் ப ய வ உயிர்மெய் வருமே.

பவாநந்தர் உரை
இஃது மகரமுன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ம முன் = மகரத்தின் முன்,
ப ய வ உயிர்மெய் = பகர யகர வகர உயிர்மெய்கள்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
மகரத்தின்முன் பகர யகர வகர உயிர்மெய்கள் வந்து கூடும்.

உதாரணம்: கம்பன், கலம்யாது, கலம்வலிது என வரும்.


96. ய ர முன் மொழிமுத லுயிர்மெ யெலாம்வரும். (16) () ய ர முன் மொழி முதல் உயிர்மெய் எலாம் வரும்.

பவாநந்தர் உரை
இஃது யகர ரகரங்கட்கு முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ய ர முன் = யகர ரகரங்களுக்கு முன்,
மொழி முதல் = மொழிக்கு முன் வருதற்குரிய,
உயிர்மெய் எலாம் = உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வந்து புணரும்.
பொழிப்புரை
யகர ரகரங்களுக்குமுன் மொழிக்குமுன் வருதற்குரிய உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வந்து புணரும்.

உதாரணம்: பொய்கை, சேர்க. பிறவுமன்ன.


97. லகர முன்னர்க் க ச ப வ ய வரும். (17) () லகரம் முன்னர் க ச ப வ ய வரும்.

பவாநந்தர் உரை
இஃது லகரமுன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
லகரம் முன்னர் = லகரத்தின் முன்,
க ச ப வ ய = ககர சகர பகர வகர யகரமாகிய இவ்வைந்து உயிர்மெய்களும்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
லகரத்தின் முன் க ச ப வ ய என்னும் இவ்வைந்து உயிர்மெய்களும் வந்து புணரும்.

உதாரணம்: நல்கு, வல்சி, சால்பு, கல்வி, கல்யாணம் என வரும்.


98. வகர முன்னர் யகரவுயிர் மெய்வரும். (18) () வகரம் முன்னர் யகர உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது வகரமுன் இன்ன உயிர்மெய் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
வகரம் முன்னர் = வகரத்தின்முன்,
யகர உயிர்மெய் = யகர உயிர்மெய்யானது,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
வகரத்தின்முன் யகர உயிர்மெய்யானது வந்து கூடும்.

உதாரணம்: தெவ்யாது.


99. ழகர முன்னர் மொழிமுத லுயிர்மெயாம். (19) ()ழகரம் முன்னர் மொழி முதல் உயிர்மெய் ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ழகரத்தின்முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ழகரம் முன்னர் = ழகரத்தின் முன்னே,
மொழி முதல் உயிர்மெய் = மொழிக்கு முதலில் வருகின்ற உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம்,
ஆம் = வந்து கூடும்.
பொழிப்புரை
ழகரத்தின் முன்னே மொழிக்குமுதலில் வருகிற உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வந்து கூடும்.

உதாரணம்: மூழ்கி. பிறவுமன்ன.


100. ளகர முன்னர்க் க ச ப வ ய வரும். (20) () ளகரம் முன்னர் க ச ப வ ய வரும்.

பவாநந்தர் உரை
இஃது ளகரத்தின்முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ளகரம் முன்னர் = ளகரத்தின் முன்னே,
க ச ப வ ய உயிர்மெய் = க ச ப வ ய என்னும் இவ்வைந்து உயிர்மெய்களும்,
வரும் = வந்து கூடும்.

உதாரணம்: வெள்கி, தாள்சிறிது, கொள்ப, வேள்வி, கோள்யாது என வரும்.


101. றகர முன்னர்க் க ச ப வுயிர் மெய்வரும். (21) () றகரம் முன்னர் க ச ப உயிர்மெய் வரும்.

பவாநந்தர் உரை
இஃது றகரத்தின் முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
றகரம் முன்னர் = றகரத்தின் முன்னே,
கசப = ககர ரகர பகரம் என்கின்ற,
உயிர்மெய் = உயிர்மெய்கள்,
வரும் = வந்து கூடும்.
பொழிப்புரை
றகரத்தின் முன்னே ககர சகர பகரம் என்கிற உயிர்மெய்கள் வந்து கூடும்.

உதாரணம்: கற்க, பயிற்சி, கற்பு என வரும்.


102. னம்முன் க ற ச ஞ ப ம ய வவ்வாம். (22) () ன முன் க ற ச ஞ ப ம ய வ ஆம்.

பவாநந்தர் உரை
இஃது னகரத்தின்முன் இன்ன உயிர்மெய்கள் வரும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ன முன் = னகரத்தின் முன்னே,
க ற ச ஞ ப ம ய வ = ககர றகர சகர ஞகர பகர மகர யகர வகரம் ஆகிய இவ்வெட்டு உயிர்மெய்யும்,
ஆம் = வந்து கூடும்.
பொழிப்புரை
னகரத்தின் முன்னே க ற ச ஞ ப ம ய வ என்னும் இவ்வெட்டு உயிர்மெய்யும் வந்து கூடும்.

உதாரணம்: புன்கு, குன்று, நன்செய், புன்ஞமலி, அன்பு, நன்மை, மின்யாது, பொன்வலிது என வரும்.


103. ரகார ழகாரங் குற்றொற் றாகா. (23) ()ரகாரம் ழகாரம் குற்று ஒற்று ஆகா.

பவாநந்தர் உரை
இஃது ரகர ழகரங்கள் குற்றெழுத்துக்களை அடுத்து வாரா என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ரகாரம் ழகாரம் = ரகர ழகர மெய்கள்,
குற்றொற்று ஆகா = குற்றெழுத்துக்களை அடுத்து வாராவாம்.
பொழிப்புரை
ரகர ழகர மெய்கள் குற்றெழுத்துக்களை அடுத்து வாராவாம்.
ரகர ழகரங்கள் குற்றெழுத்துக்களை அடுத்துவரும் மொழிகள் தமிழில் இல்லை என்பது இச்சூத்திரத்தாற் பெறப்பட்டது.


104. ர ழவல் லனபுணரிற் றன்மெய்ம் மயக்கம். (24) () ர ழ அல்லன புணரின் தன் மெய் மயக்கம்.

பவாநந்தர் உரை
இஃது ர ழ அல்லாத பதினாறு மெய்களும் தம்மொடு தாம் கூடினால் இன்ன மெய்ம்மயக்கமாம் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
ர ழ அல்லன = ரகர ழகரங்கள் அல்லாதனவாகிய பதினாறு மெய்களும்,
புணரின் = தம்மொடு தாம் கூடினால்,
தன் மெய் மயக்கம் ஆம் = தன் மெய்ம்மயக்கம் என்று சொல்லப்படும்.
பொழிப்புரை
ரகர ழகரங்கள் அல்லாதனவாகிய பதினாறு மெய்களும் தம்மொடு தாம் கூடினால் தன் மெய்ம்மயக்கமென்று சொல்லப்படும்.

உதாரணம்: அக்கு, அங்ஙனம், அச்சம், மஞ்ஞை, திட்டை, வண்ணம், பத்து, முந்நீர், செப்பம், செம்மை, மெய்யன், அல்லல், தெவ்வர், உள்ளம், சுற்றம், அன்னை என வரும்.

தன் மெய்ம்மயக்கம் என்றது, உடனிலை மெய்ம்மயக்கத்தை.


105. ய ர ழ வீ ரொற்றாங் க ச த ப ங ஞ ந ம. (25) () ய ர ழ ஈர் ஒற்று ஆம் க ச த ப ங ஞ ந ம.

பவாநந்தர் உரை
இஃது ய ர ழ என்பவற்றின்முன் இன்னவை ஈரொற்றாம் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
யரழ = யகர ரகர ழகரங்களின்முன்,
கசதப ஙஞநம = க ச த ப ங ஞ ந ம என்பவை,
ஈரொற்று ஆம் = ஈரொற்றாகப் புணரும்.

உதாரணம்:

காய்க்க ஈர்க்கு வாழ்க்கை
பாய்ச்சு உணர்ச்சி சூழ்ச்சி
தேய்த்தல் வார்த்தல் வாழ்த்தல்
வாய்ப்பு கார்ப்பு காழ்ப்பு
வேய்ங்குழல் ஆர்ங்கோடு பாழ்ங்கிணறு
தேய்ஞ்சது கூர்ஞ்சிறை பாழ்ஞ்சுனை
காய்ந்தனம் நேர்ந்தனம் வாழ்ந்தனம்
மொய்ம்பு ஈர்ம்பனை பாழ்ம்பதி
-என வரும்.


106. உயிர்மெய் மயக்கிற் கோர்வரம் பின்றே. (26) (01) உயிர்மெய் மயக்கிற்கு ஓர் வரம்பு இன்றே.

பவாநந்தர் உரை
இஃது உயிர்மெய் மயக்கத்திற்கு வரம்பு இன்று என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
உயிர்மெய் மயக்கிற்கு = உயிர்மெய் மயக்கத்திற்கு,
ஓர் வரம்பு இன்று = ஒரு எல்லை இல்லை.
பொழிப்புரை
உயிர்மெய் மயக்கத்திற்கு ஓர் எல்லையில்லை.


இறுதி நிலை
[தொகு]

107. ஆவி, () ஆவி

ஞ ண ந ம ன யரலவ ழளமெய் யந்தமாம். (27) ()ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் அந்தம் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது மொழியீறாய் வரும் எழுத்துக்கள் இன்னவென்பது உணர்த்துகின்றது.
பதவுரை
ஆவி = உயிரெழுத்துப் பன்னிரண்டும்,
ஞணநமன யரல வழள = ஞணநமன யரலவழள என்னும்,
மெய் = மெய்யெழுத்துக்கள் பதினொன்றும்,
அந்தம் ஆம் = மொழிக்கு ஈறாய் வரும்.
பொழிப்புரை
உயிரெழுத்துப் பன்னிரண்டும் ஞண நமன யரல வழள என்னும் மெய்யெழுத்துக்கள் பதினொன்றும் மொழிக்கு ஈறாய் வரும்.

உதாரணம்: விள, பலா, கிளி, தீ, விடு, பூ, சே, இசை, நொ, போ, வௌ;

உரிஞ், கண், பொருந், நிலம், பொன்;
தாய், வேர், பால், தெவ், காழ், நாள் - என வரும்.


108. குற்றுயி ரளபீறா மெகரமெய்க் கிலையே. (28) () குற்று உயிர் அளபு ஈறாம் எகரம் மெய்க்கு இலையே.

பவாநந்தர் உரை
இஃது குற்றுயிர் அளபெடையில் ஈறாம் என்பதும், எகரம் மெய்யோடு ஈறாகாது என்பதும் உணர்த்துகின்றது.
பதவுரை
குற்றுயிர் = குற்றுயிர்கள் ஐந்தும்,
அளபு ஈறாம் = அளபெடையில் ஈறாகும்,
எகரம் மெய்க்கு இலை = எகரம் மெய்யெழுத்தோடு கூடி ஈறாகாது.
பொழிப்புரை
குற்றுயிர்கள் ஐந்தும் அளபெடையில் ஈறாகும். எகரம் மெய்யெழுத்தோடு கூடி ஈறாகாது.

உதாரணம்: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ என வரும்.


109. ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே. (29) () ஒற்று முன் உயிர் பின் உறும் உயிர்மெய் ஏ.

பவாநந்தர் உரை
இஃது உயிர்மெய் எழுத்துக்களை இன்னவாறு கொள்ளவேண்டும் என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
உயிர்மெய் = உயிர்மெய்யெழுத்துக்கள்,
ஒற்று முன் = மெய்ம் முதலானவாகவும்,
உயிர் பின் = உயிர் ஈற்றனவாகவும்,
உறும் = அமையும்.
பொழிப்புரை
உயிர்மெய்யெழுத்துக்கள் மெய்ம்முதலானவாகவும், உயிர் ஈற்றனவாகவும் அமையும்.
கா என்ற ஓரொழுத்து ஒருமொழி, ககர முதலாகவும் ஆகார வீற்றதாகவும் கொள்ளப்படும் என்க (கா = க்+ஆ). பிறவும் அன்ன.


110. அவைதாம், () அவைதாம்,

ஒற்றொலி முன்னு முயிரொலி பின்னுமாம். (30) ()ஒற்று ஒலி முன்னும் உயிர் ஒலி பின்னும் ஆம்.
பவாநந்தர் உரை
இஃது மேற்சூத்திரத்திற் கூறியதற்குக் காரணம் உணர்த்துகின்றது.


பதவுரை
அவைதாம் = அவ்வுயிர்மெய்கள்தாம்,
ஒற்றொலி முன்னும் = மெய்யோசை முன்னும்,
உயிரொலி பின்னும் = உயிரோசை பின்னுமாக,
ஆம் = ஒலிக்கும்.
பொழிப்புரை
அவ்வுயிர்மெய்கள் தாம், மெய்யோசை முன்னும் உயிரோசை பின்னுமாக ஒலிக்கும்.
க, கா என்பவற்றுள் ககர ஒற்றுக்கள் முன்னொலித்தலும், அகர ஆகார உயிர்கள் பின்னொலித்தலும் காண்க. ஏனையவும் இன்னவாறே.


111. மெய்யொடு மேவினு முயிர்வேறு படாஅ. (31) () மெய்யொடு மேவினும் உயிர் வேறு படா.

பவாநந்தர் உரை
இஃது மெய்யோடு கூடினும் உயிர் வேறுபடாது என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
உயிர் = உயிரெழுத்துக்கள்,
மெய்யொடு மேவினும் = மெய்யெழுத்துக்களோடு கூடினும்,
வேறுபடாஅ = வேறுபடாவாம்.
பொழிப்புரை
உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துகளோடு கூடினும் வேறுபடாவாம். தனித்தியங்கும் ஆற்றுடைய உயிர் அவ்வாற்றல் இல்லாத மெய்யோடு மேவினும் தன் ஆற்றல் குன்றாது என்பது உணர்த்துதல் உணர்க.


112. மெய்யி னியக்க முயிர்கொண்டு மேவும். (32) () மெய்யின் இயக்கம் உயிர் கொண்டு மேவும்.

பவாநந்தர் உரை
இஃது மெய்யெழுத்துகள் இவ்வாறு நடக்கும் எனபது உணர்த்துகின்றது.
பதவுரை
மெய்யின் இயக்கம் = மெய்யெழுத்துக்களின் இயக்கமானது,
உயிர் கொண்டு மேவும் = உயிரெழுத்தின் உதவியைக் கொண்டு நடக்கும்.
பொழிப்புரை
மெய்யெழுத்துக்களின் இயக்கமானது உயிரெழுத்தின் உதவியைக் கொண்டு நடக்கும்.
இயக்கம் = சஞ்சாரம். புடைபெயர்ச்சி.


113. இகரம் யகரமெய் யிறுதி விரவும். (33) () இகரம் யகர மெய் இறுதி விரவும்.

பவாநந்தர் உரை
இஃது இறுதியில் கலந்துவரும் எழுத்துக்கள் இவையென்பது உணர்த்துகின்றது.


பதவுரை
இகரம் = இகரமும்,
யகரமெய் = யகரமெய்யும்,
இறுதி விரவும் = மொழியிறுதியில் ஓசை கலந்து வரும்.
பொழிப்புரை
இகரமும் யகர மெய்யும் மொழியிறுதியில் ஓசை கலந்து வரும்.

உதாரணம்: நா இ, நாய் என வரும்.


114. எழுத்துப் பெயர்சொலின் முதன்மயக்க மேகும். (34) () எழுத்து பெயர் சொலின் முதல் மயக்கம் ஏகும்.

பவாநந்தர் உரை
இஃது எழுத்தின் பெயர் சொல்லின் மொழிமுதல் விதியும், மயக்க விதியும் இல்லை என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
எழுத்துப் பெயர் சொலின் = எழுத்தின் பெயரைச் சொல்லின்,
முதல் = மொழி முதல்விதியும்,
மயக்கம் = மயக்க விதியும்,
ஏகும் = போய்விடும்.
முதல், மயக்கம் என்பவற்று ஈற்றில் எண்ணும்மைகள் தொக்கன. ஏகும் என்றது, இல்லை என்னும் பொருட்டு.

மாத்திரை
[தொகு]

115. கண்ணிமை கைந்நொடி யளவே மாத்திரை. (35) ()கண் இமை கை நொடி அளவே மாத்திரை.

பவாநந்தர் உரை
இஃது மாத்திரையின் அளவு உணர்த்துகின்றது.


பதவுரை
கண் இமை = கண்ணிமைப் பொழுதும்,
கைந்நொடி = கைந்நொடிப் பொழுதும்,
மாத்திரை அளவு = மாத்திரைக்கு அளவாகும்.
பொழிப்புரை
கண்ணிமைப் பொழுதும், கைந்நொடிப் பொழுதும் மாத்திரைக்கு அளவாகும்.
இமை, நொடி என்பன முதனிலைத் தொழிலாகுபெயர்கள். அளவு - கால அளவு. கண்ணிமைத்தல், கைந்நொடித்தலிலும் இயல்பாய் விரைந்து நிகழ்தலின் முற்கூறினார். மேலே, ‘உன்னல்காலே’ எனச் சூத்திரித்தலின், பின்னது செய்கையின்பாற்பட்டு, அத்துணைச் சிறப்பன்று என்பது தோன்றப் பின்வைத்தார் என்க.


116. வரைமித மளவு மட்டுமாத் திரைப்பெயர். (36) () வரை மிதம் அளவு மட்டு மாத்திரைப் பெயர்.

பவாநந்தர் உரை
இஃது மாத்திரையின் பரியாயப் பெயர்களை உணர்த்துகின்றது.


பதவுரை
வரை = வரையென்பதும்,
மிதம் = மிதம் என்பதும்,
அளவு = அளவு என்பதும்,
மட்டு = மட்டு என்பதும்,
மாத்திரைப் பெயர் = மாத்திரையின் பரியாயப் பெயர்களாம்.
பொழிப்புரை
வரை மிதம் அளவு மட்டு ஆகிய நான்கும் மாத்திரையின் பரியாயப் பெயர்களாம்.


117. உன்னல் காலே யூன்ற லரையே () உன்னல் காலே ஊன்றல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றே. (37) () முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே.
பவாநந்தர் உரை
இஃது மாத்திரையின் சிற்றளவு உணர்த்துகின்றது.


பதவுரை
உன்னல் கால் = நொடிக்கக் கருதுதல் கால் மாத்திரையாம்,
ஊன்றல் அரை = விரல்களை ஊன்றுதல் அரை மாத்திரையாம்,
முறுக்கல் முக்கால் = முறுக்குதல் முக்கால் மாத்திரையாம்,
விடுத்தல் ஒன்று = விடுத்தல் ஒரு மாத்திரையாம்.
பொழிப்புரை
கையை நொடிக்கக் கருதுதல் கால் மாத்திரையாம்; விரல்களை ஊன்றுதல் அரை மாத்திரையாம்; முறுக்குதல் முக்கால் மாத்திரையாம்; விடுத்தல் ஒரு மாத்திரையாம்.
விடுத்தல் - நொடித்தல்.
‘உறுத்தலரையே’ என்பதும் பாடம்.


118. குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை. (38) ()குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை.

பவாநந்தர் உரை
இஃது குறிலுக்கும் நெடிலுக்கும் மாத்திரையளவு உணர்த்துகின்றது.


பதவுரை
குறில் ஒரு மாத்திரை = குறிலுக்கு ஒரு மாத்திரைப் பொழுது அளவாகும்,
நெடில் இரு மாத்திரை = நெடிலுக்கு இரண்டு மாத்திரைப் பொழுது அளவாகும்.
மாத்திரை - மாத்திரைப் பொழுது. அளவாகும் என்பது இசையெச்சம்.


119. மெய்ம்மாத் திரையே யரையென விளம்புப. (39) () மெய் மாத்திரையே அரை என விளம்புப.

பவாநந்தர் உரை
இஃது மெய்யெழுத்திற்கு மாத்திரையளவு உணர்த்துகின்றது.


பதவுரை
மெய் மாத்திரை = மெய்யெழுத்துக்களுக்கு மாத்திரை,
அரை என விளம்புப = அரையென்று சொல்லுவர் (புலவர்).
பொழிப்புரை
மெய்யெழுத்துக்களுக்கு மாத்திரையென்று சொல்லுவர் புலவர்.

விளம்புப என்னும் வினைக்கு வினைமுதலாகிய புலவர் என்பது வருவிக்கப்பட்டது.


120. மூவள பொலித்த லோரெழுத் திற்கிலை. (40) () மூ அளபு ஒலித்தல் ஓர் எழுத்திற்கு இலை.

பவாநந்தர் உரை
இஃது ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரை ஒலியாது என்னும் இயல்பை உணர்த்துகின்றது.


பதவுரை
ஓர் எழுத்திற்கு = ஒரு எழுத்துக்கு,
மூவளபு ஒலித்தல் இல்லை = ஒரு எழுத்துக்கு மூன்று மாத்திரையளவு சத்தித்தல் இல்லை.
பொழிப்புரை
ஒரு எழுத்துக்கு மூன்று மாத்திரை அளவு சத்தித்தல் இல்லை.

ஒலித்தல் இல்லை என இயையும்.


121. அளபெடை மூன்றன்மே லாகு மென்ப. (41) () அளபெடை மூன்றன் மேல் ஆகும் என்ப.

பவாநந்தர் உரை
இஃது அளபெடையில் மூன்று மாத்திரையின் மிக்கொலிக்கும் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
அளபெடை = அளபெடையில்,
மூன்றன்மேல் = மூன்று மாத்திரையின் மேலும்,
ஆகும் என்ப = ஒலிக்கும் என்பர் (புலவர்).
பொழிப்புரை
அளபெடையில் மூன்று மாத்திரையின் மேலும் ஒலிக்கும் என்பர் புலவர்.

மூன்றன் மேல் ஆகும் - மூன்று மாத்திரை ஒலித்தலேயன்றி அதனின் மிக்கு ஒலித்தலுங் கூடும். மூன்றன்மேல் என்றது, நான்கு மாத்திரைப் பொழுதை.


122. ஒற்றள பெடைஐஔக் குறுக்க மொன்றாம். (42) ()ஒற்றளபெடை ஐ ஔ குறுக்கம் ஒன்று ஆம்.

பவாநந்தர் உரை
இஃது ஒற்றளபெடை முதலியவற்றிற்கு மாத்திரை உணர்த்துகின்றது.


பதவுரை
ஒற்றளபெடை = ஒற்றளபெடைக்கும்,
ஐ ஔ குறுக்கம் = ஐகார ஔகாரக் குறுக்கங்களுக்கும்,
ஒன்று ஆம் = தனித்தனி ஒருமாத்திரை அளவாம்.
பொழிப்புரை
ஒற்றளபெடைக்கும், ஐகார ஔகாரக் குறுக்கங்களுக்கும் தனித்தனி ஒரு மாத்திரை அளவாம்.


123. இ உக் குறுக்க மாய்த மரையாம். (43) () இ உ குறுக்கம் ஆய்தம் அரை ஆம்.

பவாநந்தர் உரை
இஃது குற்றியலிகர முதலியவற்றிற்கு அளவு உணர்த்துகின்றது.


பதவுரை
இ உ குறுக்கம் = இகர உகரக் குறுக்கங்களுக்கும்,
ஆய்தம் = ஆய்தத்திற்கும்,
அரை ஆம் = தனித்தனி அரை மாத்திரை அளவாம்.
பொழிப்புரை
குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும ஆய்தத்திற்கும் தனித்தனி அரைமாத்திரையாம்.


124. குறுகிய மவ்விற்கு மாய்தக்குங் காலே. (44) () குறுகிய மவ்விற்கும் ஆய்தக்கும் கால் ஏ.

பவாநந்தர் உரை
இஃது மகரக் குறுக்கத்திற்கும் ஆய்தக் குறுக்கத்திற்கும் அளவு உணர்த்துகின்றது.


பதவுரை
குறுகிய மவ்விற்கும் = மகரக் குறுக்கத்திற்கும்,
குறுகிய ஆய்தக்கும் = ஆய்தக் குறுக்கத்திற்கும்,
கால் = தனித்தனிக் கால் மாத்திரை அளவாம்.
பொழிப்புரை
மகரக் குறுக்கத்திற்கும், ஆய்தக் குறுக்கத்திற்கும் தனித்தனி கால்மாத்திரை அளவாம்.

குறுகிய - தன்னளவிற் குறைந்த. ஆய்தத்திற்கும் எனற்பாலது ஆய்தக்கும் என அத்துச்சாரியை இன்சாரியை பெறாது வந்தது.


125. விளியிசை புலம்பல் விற்கையின் மிகுமே. (45) () விளி இசை புலம்பல் விற்கையில் மிகும் ஏ.

பவாநந்தர் உரை
இஃது மாத்திரைக்குப் புறனடை கூறுகின்றது.


பதவுரை
விளி = விளியிலும்,
இசை = இசையிலும்,
புலம்பல் = புலம்பலிலும்,
விற்கையில் = விற்றலிலும்,
மிகும் = எழுத்துக்கள் தத்தம் அளவின் மிக்கொலிக்கும்.
பொழிப்புரை
விளியிலும், இசையிலும், புலம்பலிலும், விற்றலிலும், எழுத்துக்கள் தத்தம் அளவின் மிக்கொலிக்கும்.

விளி- அழைத்தல். இசை - இராகம் பாடுதல். புலம்பல் - அழுதல். விற்கை - பண்டமாற்று.

கூட்டெழுத்து

126. அகரம் இகரம் ஐகார மாகும் () அகரம் இகரம் ஐகாரம் ஆகும்

அகரம் யகரமெய் ஐகார மாகும். (46) ()அகரம் யகரமெய் ஐகாரம் ஆகும்.
பவாநந்தர் உரை
இஃது ஐகாரம் கூட்டெழுத்தாம் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
அகரம் இகரம் = அகரமும் இகரமும் ஆகிய இரண்டும்,
ஐகாரம் ஆகும் = ஐகாரம்போல் உச்சரிக்கப்படும்;
அகரம் யகரமெய் = அகரமும் யகர மெய்யுமாகிய இரண்டும்,
ஐகாரம் ஆகும் = ஐகாரம்போல் உச்சரிக்கப்படும்.
பொழிப்புரை
அகரமும் இகரமும் ஆகிய இரண்டும் ஐகாரம்போல் உச்சரிக்கப்படும். அகரமும் யகரமெய்யுமாகிய இரண்டும் ஐகாரம் போல் உச்சரிக்கப்படும்.

உதாரணம்: அ இ - ஐ, அ ய் - ஐ.

அகரம் இகரம். அகரம் யகரமெய் என்றவற்றில் உம்மைகள் தொக்கன.


127. அகரம் உகரம் ஔகார மாகும், () அகரம் உகரம் ஔகாரம் ஆகும்

அகரம் வகரமெய் ஔகார மாகும். (47) () அகரம் வகர மெய் ஔகாரம் ஆகும்.
பவாநந்தர் உரை
இஃது ஔகாரம் கூட்டெழுத்தாம் என்பது உணர்த்துகின்றது.


பதவுரை
அகரம் உகரம் = அகரமும் உகரமும் ஆகிய இரண்டும்,
ஔகாரம் ஆகும் = ஔகாரம்போல் உச்சரிக்கப்படும்;
அகரம் வகரமெய் = அகரமும் வகரமெய்யுமாகிய இரண்டும்,
ஔகாரம் ஆகும் = ஔகாரம் போல் உச்சரிக்கப்படும்.
பொழிப்புரை
அகரமும் உகரமும் ஆகிய இரண்டும் ஔகாரம் போல் உச்சரிக்கப்படும்; அகரமும் வகரமெய்யும் ஆகிய இரண்டும் ஔகாரம் போல் உச்சரிக்கப்படும்.

உதாரணம்:

அ உ = ஔ. அ வ் = ஔ.
அகரம் உகரம், அகரம் வகரமெய் என்பவற்றில் உம்மைகள் தொக்கன.

எழுத்துச் சாரியை:

128. மெய்க ளகரமே நெட்டுயிர் காரமே () மெய்கள் அகரமே நெட்டுயிர் காரமே

ஐ ஔக் கானே இருமைக் குறில்க ()ஐ ஔ கானே இருமைக் குறில்கள்
ளிரண்டுடன் கரமே யெழுத்துச் சாரியை. (48) () இரண்டுடன் கரமே எழுத்துச் சாரியை.
பவாநந்தர் உரை
இஃது மெய்ம்முதலியன பெறுஞ் சாரியைகள் இவை என்பது உணர்த்துகின்றது.
பதவுரை
மெய்கள் அகரம் = தனி மெய்யெழுத்துக்கள் அகரச் சாரியையும்,
நெட்டுயிர் காரம் = உயிர் நெடில்கள் காரச் சாரியையும்,
ஐ ஔ கான் = ஐகார ஔகாரங்கள் (காரச்சாரியையோடு) கான் சாரியையும்,
இருமைக் குறில்கள் = உயிர்க்குறிலும், உயிர்மெய்க்குறிலுமாகிய இரண்டு குறில்களும்,
இரண்டுடன் = காரம் சாரியை, கான் சாரியை என்னும் இரண்டுடனே,
கரம் = கரச் சாரியையும் (பெற்று வரும்);
எழுத்துச் சாரியை = இவை எழுத்துச் சாரியை எனப்பெறும்.
மெய்யெழுத்துக்கள் அகரச் சாரியையும், நெட்டுயிர் காரச் சாரியையும், ஐகார ஔகாரங்கள் (காரச் சாரியையோடு) கான் சாரியையும், இரண்டு குறில்களும் காரச் சாரியை, கான் சாரியை என்னும் இரண்டுடனே கரச் சாரியையும் பெற்று வரும். இவை எழுத்துச் சாரியை எனப் பெறும்.

உதாரணம்: க- ககரம் ஙகரம்; ஆகரம், ஐகாரம், ஔகாரம்; ஐகான், ஔகான்; அகாரம், மகாரம்; அஃகான், மஃகான்; அகரம், மகரம் என வரும். பிறவும் அன்ன.


பேரகத்தியம் எழுத்திலக்கணக் காண்டம் மூன்றாவது எழுத்துவரன்முறைப் படலம் முற்றிற்று

பார்க்க[தொகு]

பேரகத்தியத்திரட்டு

பேரகத்தியச் சூத்திரம்

1. எழுத்துப் படலம்

2. எழுத்துற்பத்திப் படலம்

4. பன்மொழியாக்கப் படலம்

5. வடமொழிப் படலம் [[]]