பெருங்கதை/3 10 புணர்வு வலித்தது

விக்கிமூலம் இல் இருந்து
< பெருங்கதை(3 10 புணர்வு வலித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 10 புணர்வு வலித்தது

உதயணன் செயல்[தொகு]

விடிந்திரு ணீங்கலும் வடிந்த மான்றேர்
உதையண குமரன் புதையிருட் கண்ட
கனவின் விழுப்ப மனமொன் றாகிய
தோழர்க் குரைப்ப வாழ்கென வாழ்த்தி

தோழர் கூறுதல்[தொகு]

முற்றிழை யரிவை செற்றங் கொண்டனள் 5
மற்றிவள் வைத்த மாலையுஞ் சாந்தமும்
அணிந்ததை பொல்லா தருளினை யினியிவட்
கனிந்த காமங் கைவிடல் பொருளென
உயிர்த்துணைத் தோழ ருரைப்பவும் விடாஅன்

உதயணன் செயல்[தொகு]

செயிர்த்தொழி லியானைச் செம்ம றெளியான் 10
ஏற்ற பொழுதே யின்பத் தேவியொடு
வேற்றோன் போல விழைலினை யகற்றித்
தற்கா முற்ற தன்னமர் காதற்
பொற்பூண் மாதரைப் பொருந்த வலிப்ப

மந்திரிகள் உடன்படல்[தொகு]

வாமான் றானை வத்தவ னிவனெனக் 15
கோமாற் குணர்த்திக் கூட்டிய வந்தேம்
ஒருவயி னோக்கி யிருவரு மியைதலின்
ஏயர் பெருங்குடிக் காகுபெய ருண்டென
ஊழ்வினை வலிப்போ டுவந்தன ராகிச்

உதயணன் குறை இரத்தல்[தொகு]

சூழ்வினை யாளர்க்குத் தோன்றல் சொல்லும் 20
ஆருயி ரன்னவென் னற்புவார் கொளீஇக்
காரிகை மத்தினென் கடுவலி கடையும்
வார்வளைத் தோளி வந்தனள் புகுதரு
மாடம் புக்கிருந் தோடுகய லன்ன
பெருங்கண் கோட்டி விரும்புவன ணோக்கி 25
நாணொடு நிற்கு நனிநா கரிகம்
காணலெ னாயிற் கலங்குமென் னுயிரென
உரப்போர் வென்றி யுதயண குமரன்
இரப்போன் போல வினியோர்க் குறைகொளக்

தோழர் கருதுதலும் சொல்லுதலும்[தொகு]

குன்றுபல வோங்கிய குளிர்நீர் வரைப்பில் 30
நன்றுணர் மாந்தர் நாளைக் காலை
இரவல ருருவொடு புரவலற் போக்கி
மாற்றோ ருட்கும் வேற்றுநாட் டகவயிற்
றாமு முன்ன ராகி மற்றவற்
கேம நன்னெறி யீத லாற்றார் 35
காமங் கன்றிய காவல் வேந்தனைத்
தம்மிற் றீர்த்து வெம்முரண் வென்றி
மகதவன் றங்கை மணிப்பூண் வனமுலை
நுகர விட்டனர் நுண்ணறி விலரெனின்
ஏத மதனா னிகழ்பவை யிவையென 40
நீதியிற் காட்ட நெடுந்தகை யண்ணல்
வேண்டா மற்றிது மாண்டகைத் தன்றென
மற்றவள் புகுதரு மாடம் புகினே
குற்றம் படுவ கூறக் கேண்மதி
காவ லாளர் கடுகுபு வந்தகத் 45
தாராய்ந் தெதிர்ப்ப ரருநவை யுறாது
போரார் குருசில் போதர வுண்டெனின்
உருவ மாதர் பெருநலம் பெறுதி
நன்றா வெய்தும் வாயி லவருனை
என்றே யாயினு மிரவல னென்னார் 50
வேண்டா வதுவென விதியிற் காட்டி
மாண்ட தோழர் மன்னவன் றன்னை
மறுத்த வாயிலொடு வலிப்பனர் கூற
நிறுக்க லாற்றா நெஞ்சின னாகி
வத்தவர் பெருமக னுத்தர நாடி 55

உதயணனது விடை[தொகு]

அடுமுர ணீங்கி யறுபது கழிந்தோர்
கடுவெயில் வந்த காவ லாளர்கண்
மருள்படு வல்லறை மருங்கணி பெற்ற
இருள்படு மாதலி னெற்காண் குறுதல்
அரிய தவர்க்கெனத் தெரியக் காட்டி 60
வெற்ற வேலான் மற்றுங் கூறினன்

பதுமாபதியின் சிறப்பு[தொகு]

தனக்குநிக ரின்றித் தான்மேம் பட்ட
வனப்பின் மேலும் வனப்புடைத் தாகிக்
கலத்தொடு கவினிக் கண்கவர் வுறூஉம்
நலத்தகு தேற னாணா டோறும் 65
தலைப்பெரும் புயலாத் தனக்குநசை யுடையதைக்
குலனுஞ் செல்வமு நலனு நாணும்
பயிர்ப்பு முட்கு மியற்கை யேரும்
மடனு மன்பு மாசில் சூழ்ச்சியும்
இடனுடை யறிவு மென்றிவை பிறவும் 70
ஒல்காப் பெரும்புகழ்ச் செல்வ முடைய

இதன் தொடர்ச்சி சிதைந்துபோயிற்று.

3 10 புணர்வு வலித்தது முற்றிற்று.