உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/3 9 கண்ணி தடுமாறியது

விக்கிமூலம் இலிருந்து
(3 9 கண்ணி தடுமாறியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 9 கண்ணி தடுமாறியது

தோழர் கண்ணி கட்டி வைத்தல்

[தொகு]

மன்னவன் கூற மற்றது நன்றென
இன்னுயிர்த் தோழ ரியைந்தனர் போகித்
தண்ணரும் பினமலர் தகைபெரி துடைய
ஒண்ணிறத் தளிரோ டீழ்பட விரீஇக்
கண்விழவு தரூஉங் கண்ணி கட்டி 5
அன்ன மென்னடை யரிவை காணப்
புன்னையு ஞாழலு மகிழும் பொருந்திய
துன்னரும் பொதும்பிற் றொத்திடைத் துளங்கத்
தளிர்தரு கண்ணி தம்மு ளறிய
ஒளிபெற வைத்தவ ணொளித்த பின்னர் 10

உதயணன் தான் சித்தரித்த வாழைக் குருத்தையும் கட்டிய கண்ணியையும் வைத்தல்

[தொகு]

வளங்கெழு வாழை யிளஞ்சுருள் வாங்கித்
தாமரைப் பொய்கையுந் தண்பூங் கேணியும்
காமன் கோட்டமுங் கடிநகர் விழவும்
மாமலர்க் கோதை மடமொழி யூரும்
வையக் கஞ்சிகை வளிமுகந் தெடுக்கவத் 15
தெய்வப் பாவையைத் தேனிமிர் புன்னைத்
தாண்முதல் பொருந்தித் தானவட் கண்டதும்
காமர் நெடுங்கண் கலந்த காமமும்
இன்னவை பிறவுந் தன்முத லாக
உள்ளம் பிணிப்ப வுகிரிற் பொறித்து 20
வள்ளிதழ்க் கண்ணி வளம்பெறச் சூட
அரும்பினும் போதினும் பெருந்தண் மலரினும்
முறியினு மிலையினுஞ் செறியக் கட்டி
ஒருங்குபுறம் புதைஇ யுதயண குமரனும்
திருந்திழைத் தோளி விரும்புபு நோக்கச் 25
சிதர்சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த
ததரிதழ் ஞாழற் றாழ்சினைத் தூக்கிப்
பைந்தாட் பொருந்திச் செஞ்சாந் துதிரத்
திருமலி யகலஞ் சேர முயங்கிப்
பொருமுர ணண்ணலும் போந்த பொழுதின் 30

பதுமாபதியின் செயல்

[தொகு]

ஆடுகொம் பன்ன வம்மென் மருங்குற்
பாடகச் சீறடிப் பல்வளை மகளிரைப்
பக்க நீக்கிப் பைந்தொடிக் கோமாள்
நற்பூம் பொய்கை புக்குவிளை யாடும்
உள்ள மூர்தர வொழிநிலத் தோங்கிக் 35
கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்தூழ் வளைஇய
முத்த மாலையும் வித்தக மாகிய
உளிப்பெருங் கம்மமு முகத்துமுத லுறீஇத்
திண்டூட் சதுரங் கொண்ட வெல்லையுட்
சீயமு மேறுந் திருவும் பொய்கையும் 40
சேயிதழ் மலருங் காம வல்லியும்
மேயினர் விழைய மேதகப் புணர்ந்த
கோலக் கோயுட் கொண்டுநிறை யமைத்த
சூடமை சாந்து மீடறிந்து புனைந்த
மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத் தாமமும் 45
சாலக் கொள்கெனத் தன்வயிற் றிரியாக்
கோலக் கூன்மகட் கறியக் கூறிச்
செவிலித் தாயுந் தவ்வையு மாயமும்
அகலப் போகிய வமைய நோக்கி
அன்னம் போல மென்மெல வொதுங்கி 50
நன்முலைத் தீம்பா றம்மனை கொடுப்ப
ஒருங்குண் டாடிய கருங்கண் மதிமுகத்
தந்த ணாட்டி யாப்பியா யினியெனும்
மந்திரத் தோழியொடு மணங்கமழ் காவின்
அணித்தழை மகளி ரருங்கடிக் கமைந்த 55
மணிச்சுதைப் படுகான் மருங்கணி பெற்ற
அளப்பருங் குட்டத் தாழ்ந்த பொய்கைத்
தாட்கொ ளெல்லையுள் வாட்கண் சிவப்பக்
குளித்துங் குடைந்துந் திளைத்துவிளை யாடிக்
கூட்டமை நறும்புகை யூட்டமைத் தியற்றிக் 60
கண்ணெழிற் கலிங்கந் திண்ணென வசைத்துப்
பார மாகி நீரசைந் தொசிந்த
காரிருங் கூந்த னீரறப் புலர்த்தி
ஏற்ப முடித்துப் பூப்பிறி தணியாள்
முத்தப் பேரணி முழுக்கல மொழித்துச் 65
சிப்பப் பூணுஞ் செம்பொற் கடிப்பும்
ஏக வல்லியு மேற்பனவணிந்து
தாமரை யெதிர்போது வாங்கி மற்றுத்தன்
காமர் செவ்வியிற் காய்நலம் பெற்ற
நாம மோதிரந் தாண்முதற் செறித்துப் 70
புனைநறுஞ் சாந்தமுந் துணைமலர்ப் பிணையலும்
மனநிறை கலக்கிய கனல்புரை நோக்கத்துப்
பொன்வரை மார்ப னென்னோ யகலக்
கொள்ளி னன்றென வள்ளிதழ்க் கோதை
மன்னவன் வைத்த சின்மென் போதுடன் 75
நறுமலர் கமழ்சினை சுறியச் சேர்த்தி
நெடுந்தோட் செல்ல றீரச் சிறந்தவன்
குறுந்தா ரகவயிற் கூடுபு முயங்கிக்
குவிமுலைச் சாந்த நவிர்முதற் பொறித்தே
இழுமென் காவின தியல்புஞ் செல்வமும் 80
கொழுமலர்த் தடங்கணிற் குலாஅய் நோக்க
நண்ணியோர் முன்னர்க் கண்ணியது மறைத்து
வண்ண முகிழு மலருந் தளிரும்
நண்ணி யீன்ற நமக்கெனக் கரையா
அரும்பெறற் றோழியு மகன்ற செவ்வியுள் 85
விரும்புவன ளாகி விண்ணவர் மருள
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த
இலைவினைக் கம்மத்துப் பலவினை கண்டே
தன்முத லாகலிற் சின்னகை முறுவலொடு
பொற்பூண் முலைமிசை யப்புபு தடாஅக் 90
கண்ணி கொண்டுதன் சென்னி சேர்த்தி
ஒருங்குகலந் தனள்போற் றிருந்தொளி திகழ்ந்து
பசப்புமீ தடர்ந்து மிகப்பொலிந் திலங்கத்

யாப்பியாயினி ஐயுற்று வினாதல்

[தொகு]

தன்னமர் தோழியும் பின்னமர்ந் தெய்தி
நீயார் நங்கை நின்னே போலுமெம் 95
சேயோன் றங்கை செல்வப் பாவை
மாயோ டன்னை மலர்த்தகைக் காவினுள்
இன்னினிக் கெடுத்தே னன்னவள் கூறிய
துன்னருந் தோட்டத்திற் றுளங்குவன ளாகி
வேறுபட் டனளென விம்முவன ளிறைஞ்சிக் 100
கூறாது நாணிய குறிப்புநனி நோக்கி
நின்கட் கிடந்த நீரணி யேஎர்
என்கண் கவற்றிற் றென்றலோ டியலித்

உருமண்ணுவா மற்றைத் தோழர்க்குக் கூறல்

[தொகு]

தன்னகர் புக்க பின்னர்த் தோழரொடு
மன்ன குமரனும் வந்தவட் குறுகத் 105
தண்பூங் கண்ணி கொண்டதன் றாண்முதல்
ஒண்பூஞ் சாந்தி னுண்பொறி யொற்றிப்
போயினள் புரவலன் பூந்தார் மார்பிற்
காகிய பால ளிவளென் றறிந்தே
கூறிய கிளவிக் கொத்த தின்றென 110
உறுபுகழ் நண்பி னுருமண் ணுவாவவர்க்
கறியக் கூற வங்கை மலர்த்தா
வியந்த மனத்த ராகி நிகழ்ந்ததற்
கியாப்புறு கரும மாராய்ந் திருந்துழி

பதுமாபதி வைத்த பிணையல் முதலியவற்றை வயந்தகன் எடுத்து வந்து கொடுத்தல்

[தொகு]

நீப்பருங் காத னிறைந்துட னாடல் 115
பண்புடைத் தென்றத் தண்டழை யணிந்த
காவி னத்த மேவின னாகித்
தேர்வனன் றிரிவுழி வார்தளிர் பொதுளிய
அருகுசிறை மருங்கி னொருமகள் வைத்த
புதுமலர்ப் பிணையலும் புனைநறுஞ் சாந்தமும் 120
கதிர்மணி யாழியுங் கண்டன னாகி
வலிகெழு மொய்ம்பின் வயந்தக குமரன்
ஒலிகெழு தானை யுதயணற் குய்ப்ப

உதயணன் அவற்றை அணிந்து கொள்ளுதல்

[தொகு]

அரும்பெறற் சூழ்ச்சி யவனையும் பின்னிணைப்
பெருந்திற லவரையும் பெற்றோன் போல 125
அன்புபுரி பாவை யாடிய பொய்கையுள்
நம்புபுரி மன்னனு நயந்தன னாடி
உடையு மடிசிலு முருமண் ணுவாவிற்குக்
கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி
அகன்மடி யவன்றா னமர்ந்து கொடுப்ப 130
வாங்கின னுடுத்துப் பூந்தண் சாந்தம்
எழுவுறழ் தோளு மகலமு மெழுதிப்
புனையிருங் குஞ்சித் தோட்டுக் கிடையே
துணைமலர்ப் பிணைய றோன்றச் சூடிச்
சுடர்மணி யாழி படைபயின்று பலித்த 135
செறிவிர லங்கையின் மறைவுகொள வைத்துக்
கழுநீர் நறும்போ துளர்த்துபு பிடித்து
மறங்கெழு வேந்தனு மம்மர் தீரப்
போந்த பொழுதி னேந்துநிலை மாடத்துப்

பதுமாபதி உதயணனைக் கண்டு தன்னிடம் செல்லல்

[தொகு]

பக்க நின்ற பொற்பூங் கோதையும் 140
கண்ணுற நோக்கிச் சின்னகை முகத்தினள்
கண்ணிற் கூட்டமு மன்றி நம்முட்
கண்ணிய மாயினங் கவல லென்றுதன்
நெஞ்சி னகத்தே யஞ்சில மிழற்றிக்
குன்றாக் கோயில் சென்றவள் சேர்ந்தபின் 145

உதயணன் செயல்

[தொகு]

தனக்கவ ளுரிமை பூண்டமை தமர்களைச்
சினப்போர் மதலை செவ்வன் றேற்றிப்
பள்ளி கொண்ட நள்ளிருள் யாமத்துப்
போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென

உதயணன் கனாக் காண்டல்

[தொகு]

நீருடை வரைப்பி னெடுமொழி நிறீஇய 150
பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள்
அரியார் தடங்க ணதிநா கரிகி
மணியிருங் கூந்தன் மாசுகண் புதைப்பப்
பிணியொடு பின்னி யணிபெறத் தாழ்ந்து
புல்லெனக் கிடந்த புறத்தள் பொள்ளென 155
நனவிற் போலக் காதலன் முகத்தே
கனவிற் றோன்றக் காளையும் விரும்பி
மாசில் கற்பின் வாசவ தத்தாய்
வன்க சாளனேன் புன்கண் டீர
வந்தனை யோவென வாய்திறந் தரற்றப் 160
பைந்தளிர்க் கோதை பையென மிழற்றி
ஏதில னன்னாட் டெற்றுறந் திறந்தனை
காதலர் போலுங் கட்டுரை யொழிகெனக்
குறுகா ளகறொறு மறுகுபு மயங்கி
நிற்பெயர்ப் பாள னிப்பதி யுளனெனக் 165
கற்பயில் பழுவங் கடந்தியான் வந்தனென்
வெகுள னீயெனத் தவளையங் கிண்கிணிச்
சேவடி சேர்ந்து செறியப் பற்றி
வென்றடு குருசில் வீழ்ந்தன னிரப்ப
மதுநாறு தெரியன் மகதவன் றங்கை 170
பதுமா பதிவயிற் பசைந்தவள் வைத்த
கோதையுஞ் சாந்துங் கொண்டணிந் தனையென
மாதர்த் தேவி மறுத்து நீங்கத்
தண்மலர்ப் படலைத் தருசகன் றங்கை
பன்மலர்க் கோதைப் பதுமா பதியெனும் 175
பேருடை மாத ருளண்மற் றென்பது
நேரிழை யரிவை நின்வாய்க் கேட்டனென்
இன்னவும் பிறவுங் கூறி மற்றென்
நன்னர் நெஞ்ச நாடுவை நீயெனப்
பின்னரு மிக்குப் பெருமக னிரப்ப 180
மடங்கெழு மாதர் மறைந்தன ணீங்கக்
கடுங்கதிர்க் கனலி கால்சீத் தெழுதர
விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென்.

3 9 கண்ணி தடுமாறியது முற்றிற்று.