உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/3 20 சங்கமன்னர் உடைந்தது

விக்கிமூலம் இலிருந்து
(3 20 சங்கமன்னர் உடைந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 20 சங்கமன்னர் உடைந்தது

காலாட் படைகள்

[தொகு]

பரந்த பெரும்படை யெதிர்ந்த காலை
அருங்கணை நிறைந்த வாவ நாழிகை
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்
பிறர்ப்பிறக் கிடீஇச் சிறப்பிகந் தெள்ளி
நகுவன போலத் தொகைகொண் டார்ப்புறும் 5
பைங்கழ லணிந்து பரிபசை வில்லா
இசைகொ ணோன்றா ளசைவி லாண்மையர்
வணங்குசிலைச் சாபம் வார்கணை கொளீஇ
நிணம்பட நெஞ்சமு நெற்றியு மழுத்திக்
கைபுடை பரந்து கலங்கத் தாக்குநர் 10
புடைநிரைத் தாரைக் கடிநீர்க் கைவாள்
படையு நெருங்கிப்….
பாலிகை விளிக்கும் பண்ணமை பற்றினர்
மாலையும் வயிரமு மூழூழ் பொங்கக்
கால்வ லிளையர் கலங்கத் தாக்கவும் 15

குதிரை வீரர்

[தொகு]

படைமிசை நிரைத்த வடிவமை வார்நூற்
சித்திரக் குரத்தின வித்தகக் கைவினைப்
புடைப்பொற் புளகமொடு பொங்குமயி ரணிந்த
அரத்தப் போர்வைய யாப்பமை கச்சின்
முற்றுமறை பருமமொடு பொற்பூஞ் சிக்கத் 20
தாண வட்டத் தியாப்புப் பிணியுறீஇக்
கோண வட்டக் கோல முகத்த
வெண்கடற் றிரையென மிசைமிசை நிவத்தரும்
பொங்குமயி ரிட்ட பொலிவின வாகி
அரிபெய் புட்டி லார்ப்பக் கருவியொடு 25
மேலோ ருள்ளம் போல நூலோர்
புகழப் பட்ட போர்வல் புரவி
இகழ்த லின்றி யேறிய வீரர்
வெம்முரண் வீரமொடு தம்முட் டாக்கவும்

யானைவீரர்

[தொகு]

போர்ப்பறை முழக்கினு மார்ப்பினு மழன்று 30
கார்ப்பெய லருவியிற் கடாஞ்சொரி கவுள
கொலைநவில் பல்படை கொண்ட மாட்சிய
மலைநிமிர்ந் தன்ன மழகளிற் றெருத்திற்
சிலையுங் கணையுஞ் சீர்ப்பமை வட்டும்
மழுவுங் குந்தமு முழுமயிற் பீலியும் 35
சங்கமுங் கணையமுஞ் சத்தியும் வாளும்
பிண்டி பாலமும் பிறவு மெல்லாம்
தண்டாக் கருவி தாந்துறை போகிய
வண்டார் தெரியன் மறவர் மயங்கி
அருநில மதிரத் திரிதர லோவா 40
வீதி வட்டமொ டாதிய கதிவயிற்
பாழி பயிற்றி நூழி லாட்டவும்

போர் நிகழ்ச்சி

[தொகு]

போர்க்கள வட்டங் கார்க்கட லொலியெனக்
கடற்படைக் கம்பலை கலந்த காலை
மடற்பனை யிடைத்துணி கடுப்பப் பல்லூழ் 45
அடக்கரும் வேழத் தடக்கை வீழவும்
வார்ப்பண் புதைஇய போர்ப்பமை வனப்பிற்
றுடித்தலை போல வடித்தலை யறவும்
சுற்றார் கருவிற் றுணியெனத் தோன்றி
அற்ற மில்வா லற்றன கிடப்பவும் 50
சித்திரத் தாமரைப் பத்திரப் பரூஉத்தொடி
நுதிமுக வெண்கோடு முதலற வெறிதலிற்
செக்கர்க் குளிக்கும் வெண்பிறை போல
உட்குவரு குருதியு ளுடன்பல வீழவும்
கார்முகக் கடுமுகி லூர்தி யாக 55
விசும்பிடைத் திரிதரும் விஞ்சை மாந்தரைக்
கடுந்தொழில் விச்சை கற்ற மாற்றவர்
மறத்தா னெருங்கி மற்றவ ருடனே
நிறத்தே றுண்டு நிலத்துவீழ் வதுபோல்
மார்பின் வெம்படை யார மாந்தி 60
வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
பூணேற் றகன்ற புடைகிள ரகலத்துத்
தாமேற் றழுத்திய சத்தி வாங்கிப்
புரைசை யுய்த்த பொருகழற் காலினர்
வரைமிசை மறிநரின் மறப்படை திருத்தி 65
வெம்முரண் வேழம் வீழ்த்து மாற்றார்
தம்முயிர் நீங்கத் தாழ்ந்தனர் வீழவும்
அடுத்தெழு பெருந்திரை யகன்கட னடுவண்
உடைத்த நாவாய்க் கடைத்தொடை தழீஇ
இடைத்திரைக் கணவரூஉ மெழுச்சி யேய்ப்ப 70
வாக்கமை பிடிவார் வலித்த கையினர்
ஊற்றமில் புரவித் தாட்கழி வாகிய
குருதிப் புனலிடைக் கருதியது முடியார்
மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
அலைகடல் வெள்ள மலைய வூழி 75
உலக மாந்தரிற் களைகண் காணார்
ஒண்செங் குருதியிற் செங்கணிப் போரால்
நீலக் கொண்மூ நீர்த்திரைப் பெய்வதோர்
கால மேய்ப்பக் கருந்தலை வீழவும்
கால்வல் புரவியுங் கடுங்கண் யானையும் 80
வேல்வ லிளையரும் விழுந்துகுழம் பாகிய
அள்ளற் செஞ்சே றுள்ளோ ருழக்கலிற்
றுப்புநிலத் தெழுந்த துகளென மிக்கெழுந்
தந்தர விசும்பி னந்தியிற் பரப்பவும்
தெரிவருங் குணத்துத் திசைதொறும் பொருந்தப் 85
போர்வலம் வாய்த்த பொங்கம ரழுவத்து

உதயணன் முதலியோர் செயல்

[தொகு]

வார்தளிர்ப் படலை வத்தவர் பெருமகன்
எலிச்செவி யரசன் றம்பி யேறிய
கொலைப்பெருங் களிற்றி னெருத்தத்துப் பாய்ந்தவன்
தம்முன் காணத் தலைதுமித் திடாது 90
நின்னின் முடியுமெங் கரும மீண்டெனக்
கடுத்த கட்டுரை யெடுத்தனன் கச்சிற்
றிண்டோள் கட்டிய வென்றி நோக்கி
ஒண்டார் மார்பன் கொண்டமை கண்டே
ஒருக்கி நிரல்பொரூஉ முருமண் ணுவாநம் 95
கருத்துவினை முடிக்குங் கால மிதுவென
வேக வெள்வேற் கேகயத் தரசனை
அடைதர்க வல்விரைந் தமரார் பெரும்படை
உடைவிடம் போல வுண்டென வுரையா
இருவருங் கூடி யெலிச்செவி யரசன் 100
பெருமுரட் படையொடு மயங்கிய பொழுதவன்
அரணக் கருவி யழிய வாங்கிக்
கரண வகையாற் கண்ணிமைப் பளவில்
மாசில் விழுச்சீர்க் கேகயத் தரசன்
ஆசில் பைந்தலை யரிந்து நிலஞ் சேர 105
வீசிய வாளினன் விறலோர்ச் சவட்டி
வென்றோ னேறிய வேழஞ் சார்ந்தவன்
ஆற்றற் றன்மைய னாதலிற் றம்பி
சிறைகொளப் பட்ட செல்ல னோக்கி
உறைகழி வாளின னுருமண் ணுவாவின் 110
மத்த யானை மருங்கிற் குப்புற்
றெள்வா ளோக்கி யெள்ளுந ரோட்டிய
எம்பி யுற்ற வின்னாச் சிறைவிடின்
உய்ந்தனை யாகுதி யஞ்ச னீயென
ஆர்ப்பக் கண்டே யடுதிற லுதயணன் 115
தாக்கருந் தானைத் தருசகன் றன்னொடு
வேற்றுமை யிலனிவன் போற்றினை யாயிற்
பெறற்கரு நும்பியைப் பெறுதி நீயெனத்
திறப்படக் கூறி மறப்படை நூறக்
கடும்புன னெருங்க வுடைந்துநிலை யாற்றா 120
உப்புச் சிறைபோ லுண்ணெகிழ்ந் துருகி
வெப்ப மன்னர் வீக்கஞ் சாய
உடைந்துகை யகலவவ ருரிமை தழீஇக்
கடந்தலை கழித்துக் கதுவா யெஃகமொ
டிகலாட் படுகளத் தகலம ராயத் 125
துதயண குமர னுற்றோர் சூழ
விசய முரசொடு வியனக ரறிய
மகத மன்னற் குகவை போக்கலிற்
கேட்டுப்பொரு ணல்கி வேட்டுவிரைந் தெழுந்து
வெற்றத் தானை முற்றத்துத் தோன்றிப் 130
பகைக்கடன் றீர்த்த தகைப்பொலி மார்பனைப்
பல்லூழ் புல்லி வெல்போர் வேந்த
படைத்தொழின் மாற்றம் பட்டாங் குரைக்கென

உதயணன் கூறுதல்

[தொகு]

எடுத்த பெரும்படை யெழுச்சியு மிறுதியும்
பரப்புஞ் சுருக்கும் பாழியு மறியான் 135
விலக்கவு நில்லான் றலைக்கொண் டோடித்
தமரையுந் தீர்ந்து நமரையு நண்ணான்
கேளன் மன்னன் வாள்வாய்த் துஞ்சி
மாக விசும்பி னின்றுயி லேற்றனன்
கேகயத் தரச னெனவது கேட்டே 140

தருசகன் கூறுதல்

[தொகு]

என்கடன் றீரே னாயி னேனவன்
தன்கடன் றீர்த்துத் தக்க தாற்றினன்
என்பது கூறி யன்புநெகிழ்ந் துருகிப்
பேரா விடும்பையு ளாராய்ந் தவனைக்
கூரெரிப் படுத்துக் குறைவினை நீக்கி 145
தருசகனும் உதயணனும் நகர்புகுதல்==
மகதவ ரிறைவனும் வத்தவ மன்னனும்
அகனகர் புகுந்த காலை முகனக

நகரமாந்தர் செயல்

[தொகு]

மணிச்சுதைக் குன்றமு மண்டபத் துச்சியும்
அணித்தகு மாடமு மரும்பெறற் புரிசையும்
நிலைக்கா லேணியுந் தலைச்சிறந் தேறி 150
இரும்பே ருலக மொருங்கியைந் த்துபோற்
றெருவு மன்றமுந் திருமணன் முற்றமும்
மலரணி முகத்து வந்திறை கொண்டு
கீழு மேலுங் கேட்புழி யெல்லாம்

உதயணனைப் புகழ்வோர்

[தொகு]

வாழ்க மற்றிவ் வத்தவர் பெருமகன் 155
என்னா டிதுவன் றென்னான் சென்றுழி
அந்நாட் டிடுக்கணு மச்சமு மகற்றும்
தத்துவ நெஞ்சத் துத்தம னென்மரும்
வனப்பிற் கேற்ற வலியும் விச்சையும்
சினப்போ ரிவற்கே சேர்ந்தவென் போரும் 160
வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கி னல்லதை
அஞ்சா திவனை யமர்வென் றழிக்கும்
வெஞ்சின வேந்தரிங் கில்லென் போரும்

வாசவதத்தையை இகழ்வோர்

[தொகு]

ஆசில் செங்கோ லவந்தியன் மடமகள்
வாசவ தத்தையிவன் வலியொடு புணர்ந்த 165
செருவடு தோண்மிசைச் சேர்ந்தனள் வைகும்
திருவில ளாதலிற் றீப்பட் டாளெனப்
படுசொன் மாற்றந் தெளிந்த பரிவினர்
தொடிகெழு தோளிதிருவிழிப் போரும்

வாசவதத்தையைப் புகழ்வோர்

[தொகு]

அலைகடன் ஞாலத் தாக்கையொ டாருயிர் 170
நிலைநின் றமையாது நிரைவளைத் தோளி
துஞ்சியுந் துஞ்சா டோணல நுகர்ந்த
வெஞ்சின வேந்தனவள் விளிவு முந்துறீஇப்
புன்கண் கூரப் புலம்புகொண் டாற்றான்
தன்னகர் துறந்து தலைமை நீக்கிப் 175
பின்னிவ ணிரங்கப் பெற்றன ளாதலின்
அவளே புண்ணிய முடையளென் போரும்

பிறவாறு கூறுவார்

[தொகு]

வலிகெழு நோன்றாள் வத்தவ மன்னற்குத்
தருசகன் றங்கை தகையேர் சாயற்
பத்திப் பைம்பூட் பதுமா நங்கை 180
தக்கனள் கொடுப்பின் மிக்கதென் போரும்
வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன்
ஈண்டினி யிவற்கே யியைந்த பால்வகை
ஆதலு முண்டஃ தறிவோர் யாரென
வாயின் மிகுத்து வலித்துரைப் போரும் 185
பொன்னணி மார்பன் முன்ன ராற்றிய
நன்னர்க் குதவும் பின்னுப காரம்
அலைதிரைப் பௌவ மாடை யாகிய
நிலமுழுது கொடுப்பினு நேரோ வென்மரும்
நகர மாக்க ளிவைபல பகர 190
மாசில் செங்கோன் மகத மன்னனொடு
கோயில்புக் கனனாற் கோமகன் பொலிந்தென்.

3 20 சங்கமன்னர் உடைந்தது முற்றிற்று.