பெருங்கதை/3 21 மகட்கொடை வலித்தது

விக்கிமூலம் இலிருந்து
(3 21 மகட்கொடை வலித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 21மகட்கொடை வலித்தது

உதயணன் சூழ்தல்[தொகு]

கோயில் புக்கபி னாய்புக ழுதயணன்
கரந்த வுருவொடு கலந்தகத் தொடுங்கிப்
பிரிந்த பொழுதி னொருங்கவட்கு மொழிந்த
அருந்தொழிற் றெளிவு மன்பு மென்றிவை
பெரும்புணை யாகவிருந்தகத் துறையும் 5
பொற்றொடிப் பணைத்தோண் முற்றிழை மாதரை
இற்பெருங் கிழமையொடு கற்புக்கடம் பூட்ட
வரையும் வாயி றெரியுஞ் சூழ்ச்சியுள்

தருசகன் கருதுதல்[தொகு]

ஈரைம் பதின்கரை யிகல்கெட நூறி
வீர மிக்க விறற்றறு கண்மைக் 10
குருகுலத் தைவரு ளொருவன் போலத்
தனிப்படச் செய்கை தன்கட் டாங்கிய
மணிப்பூண் மார்பன் வத்தவ மன்னனொடு
சுற்றத் தாரெனுஞ் சொல்லுடை வேந்தர்
முற்றவ முடையரென் றுற்ற வுள்ளமொடு 15
பகைகொண் மன்னரைப் பணித்தற் கொண்டு
தகைகொள் வேந்தன் றமரொடு சூழ்ந்து
செங்கடை வேற்கண் வெள்வளைப் பணைத்தோள்
தங்கையைப் புணர்க்குஞ் சிந்தைய னாகி

தருசகன் அமைச்சனை உதயணன்பால் விடுத்தல்[தொகு]

உள்பவருள் வலிக்கு முறுதிச் சூழ்ச்சியன் 20
மல்லற் றானை மறப்பெருஞ் சீற்றத்துச்
செல்பொறி செறித்த பல்புக ழமைச்சனை
வள்ளிதழ் நறுந்தார் வத்தவர் கோமாற்
கங்கண் விட்டு மடுக்கற் பாலதூழ்
இங்க ணிவனை யெளிதுதரப் பெற்றும் 25
கோல மங்கையைக் கொடாஅ மாகுதல்
கால நோக்கிற் கரும மன்றென
வலித்ததை யுணர்த்தி வருதி நீயெனத்
தலைப்பெரு வேந்தன் றானவற் போக்க

ஒரு முதுமகள் பதுமாபதிக்கு அறிவித்தல்[தொகு]

மந்திர மறிந்த தந்திர முதுமகள் 30
செந்தளிர்க் கோதைக்குச் சேட நீட்டிப்
பொலிக நங்கை பொருபடை யழித்த
வலிகெழு நோன்றாள் வத்தவ ரிறைவன்
யானை வணக்கும் வீணை வித்தகன்
துதைமலர்ப் பைந்தா ருதையண குமரற்கு 35
நேர்ந்தன னின்னை நெடுந்தகை யின்றெனத்
தீர்ந்த கோட்டியுட் டெரிந்தன ளுணர்த்தத்

பதுமாபதி எண்ணுதல்[தொகு]

துப்புறழ் செவ்வாய் துளங்குபு நிரைத்த
முத்துறழ் முறுவன் முகிழ்த்த முகத்தள்
மந்திர நாவி னந்தணன் கேண்மை 40
இருநிலம் பேரினுந் திரித லின்றெனப்
பெருநல மாத ரொருமை யுள்ளமொடு
வாழ்வது வலியாள் சூழ்வன ளிருப்ப

அமைச்சன் உதயணனை அடைந்து தருசகன் கருத்தைத் தெரிவித்தல்[தொகு]

அரும்பொரு ணாவி னமைச்சன் சேதியர்
பெரும்பெய ரண்ணலைப் பொருந்துபு வணங்கிக் 45
காவலன் கருதிய கட்டுரை யுணர்தி
பூவலர் தாரோய் புனைகழ னோன்றாள்
எம்மிறை மாற்ற மிசைப்பேன் யானெனத்
தன்னமர் தோழரொடு மன்னவன் கேட்பப்
பயங்கெழு வையத் துயர்ந்த தொல்சீர் 50
விழுத்திணைப் பிறந்துதம் மொழுக்கங் குன்றாப்
போரடு மன்னர் புலம்பு முந்துறீஇ
ஆரஞ ருழக்க லறிவெனப் படாது
நீர்முதன் மண்ணகஞ் சுமந்த நிறைவலி
தான்முழுது கலங்கித் தளரு மாயின் 55
மலைமுத லெல்லா நிலைதளர்ந் தொடுங்கும்
அலகைப் பல்லுயிர்க் கச்ச நீக்குநர்
கவலை கொண்டுதங் காவலிற் றளரின்
உலக மெல்லா நிலைதளர்ந் தழுயும்
அற்றே யன்றிக் கொற்றக் கோமான் 60
தானுந் தனிமையொ டென்றலை வந்தனன்
ஆனா வுவகையி னமைந்தபுக ழுடையன்
மேனாட் கொண்ட மிகுதுயர் நீக்கி
மறுத்தல் செல்லாச் சிறப்பு முந்துறீஇ
அற்றமி னண்பின் யாப்பே யன்றியோர் 65
சுற்றப் பந்தமும் வேண்டினே னென்றனன்
கொற்றவன் வலித்த திற்றென வுரைப்பச்

உதயணன் எண்ணுதல்[தொகு]

செருவடு குருசி லொருபக றானும்
மறுமொழி கொடாஅன் மனத்தே நினைஇ
நறுமலர்க் கோதையை நாட்பூங் காவினுட் 70
கண்ணுறக் கண்டதுங் கரந்தகம் புக்கதும்
திண்ணிதி ன்றிந்தோர் தெரிந்துதனக் குரைப்ப
ஆராய்ந் ததனை யறிந்ததை யொன்றுகொல்
கருதி வந்த காவல குமரனும்
பொருகளத் தவிந்தனன் பொருளிவற் கீதல் 75
பின்னன் றாகு மென்பதை நாடி
நன்னர் நோக்கி நயந்ததை யொன்றுகொல்
கோல்வளைப் பணைத்தோட் கொடுங்குழைக் காதின்
நீலத் தன்ன நெறியிருங் கூந்தலைப்
பால்வகை புணர்க்கும் படிமை கொல்லென 80
இளையவை பிறவு மனவயி னினைஇ
யான்குறை கொள்ளும் பொருளினை மற்றிவன்
தான்குறை கோட றவத்தது விளைவென
உவந்த வுள்ளமொடு கரந்தன னுரைக்கும்

உதயணன் தன் விருப்பத்தை வெளிப்படுத்தாமல் கபடமாக மறுத்துரைத்தல்[தொகு]

மண்ணகத் திறைவன் மறமாச் சேனன் 85
ஒண்ணுதற் பாவை யொருபெருங் கிழத்தி
மண்ணக வரைப்பின் மகளிர் மற்றுத்தன்
வனப்பெடுத் துரைக்கென வயங்கழற் குளிப்ப
மனத்தெழு கவற்சியொடு மண்முத னீக்கி
நயத்தகு மாதரொ டமைச்சனை யிழந்தினி 90
வாழே னென்றுவலித்த நெஞ்சமொடு
போகிய தெல்லாம் பொய்யே போலும்
இன்ப மெய்தலெ னன்பவட் கொழிந்தனென்
வாழ்ந்த காலை யல்ல தியாவர்க்கும்
ஆழ்ந்த காலை யன்பு மில்லெனப் 95
புறத்தோ ருரைக்கும் புன்சொற் கட்டுரை
நிறத்தே றெஃகி னனைய வாதலின்
ஒத்த நிலைமையே னல்லே னொழிகென
வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப

அமைச்சன் கூறுதல்[தொகு]

மிக்க பெருங்குடிப் பிறந்த மாந்தர்க் 100
கொப்பின் றம்மநின் னுரையென வணங்கி
மத்த யானை வணக்கு நல்லியாழ்
வித்தக வீரவது பெற்றனென் யானென
மறுத்து மந்திரி குறைக்கொண் டிரப்பத்

உதயணன் உடன்படல்[தொகு]

தெரிபொருட் கேள்வித் தெரிசக குமரன் 105
தானு நீயு மாகல் வேண்டலின்
மாற்று மாற்ற மில்லென மற்றவற்
கருளொடு புணர்ந்த வன்புமிகு கட்டுரை
பொருளொடு புணர்ந்தவை பொருந்தக் கூறலின்

அமைச்சன் தருசகன்பால் மீளல்[தொகு]

அமைப்பருங் கரும மமைத்தனன் யானென 110
அமைச்சன் மீண்டன னகநனி புகன்றென்.

3 21 மகட்கொடை வலித்தது முற்றிற்று.