பெருங்கதை/3 23 படை எழுச்சி
- பாடல் மூலம்
3 23 படை யெழுச்சி
உதயணன் செயல்
[தொகு]கட்டி லேறிய காவல் வேந்தன்
ஒட்டிய நண்பி னுருமண் ணுவாவினை
விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்தெனத்
தடுத்த பெரும்புகழ்த் தருசகற் குணர்த்தித்
தெய்வமும் விழையு மைதவழ் கோயிலுள் 5
ஆடல் கண்டும் பாடல் கேட்டும்
மிசையுல கெய்திய வசைவி லூக்கத்
தண்ண னெடுமுடி யமரிறை போலப்
பண்ணொலி யரவத் துண்மகிழ் வெய்திக்
கழுமிய காதலொடு கவவுக் கைவிடா 10
தொழுகுங் காலை நிகழ்பொருள் கூறுவேன்
தருசகன் எண்ணுதல்
[தொகு]தம்முறு கருமந் தாஞ்சேர்ந் ததுவெனப்
பின்னிது முடித்தல் பெருமை யன்றால்
முன்னுப காரத்து நன்ன ராற்றிய
நட்பு மன்றி நம்மொடு கலந்த 15
சுற்ற மாதலிற் சுடர்ப்பூ ணுதயணன்
அற்ற மெல்லா மறிந்தன மாகிக்
கொற்றநன் னாடு கொண்டனங் கொடுத்தல்
கடனமக் கதுவென விடனுறு சூழ்ச்சியன்
தருசகன் உதயணனுடன் அமைச்சர் முதலியோரை விடுத்தல்
[தொகு]தாமே சென்று தம்வினை முடிக்கும் 20
மாமாத் தியருண் மதிமீக் கூறிய
பகைப்புலந் தேய்க்கும் படைத்திறற் றடக்கை
வகைப்பொலி மான்றேர் வருட காரனும்
வீர வென்றி விறல்வெந் துப்பிற்
றாரணி மார்பிற் றார காரியும் 25
செருமிகு சேனைச் செய்தொழி னவின்ற
பொருமா ணூக்கத்துத் தரும தத்தனும்
பத்திப் பைம்பூட் சத்திய காயனொடு
வேல்வருந் தானை நால்வரு முதலா
இருநூ றானையு மிராயிரங் குதிரையும் 30
அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
அறுபதி னாயிர ரெறிபடை மள்ளரும்
திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
செங்காற் பாண்டிய நன்று பூண்ட
பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும் 35
படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்
கமைக்கப் பட்ட வகன்பரி யாளமும்
அன்னவை யெல்லா மந்நிலை நல்கி 40
மன்ன குமரனொடு செல்கெனச் செப்பாச்
செயற்படு கரும மெல்லா மற்றவற்
கியற்பட வீவலென் றமைச்சரொடு கிளந்து
வேறுவே றாகத் தேறக் காட்டி
நினக்கே யவனை நிறுத்துதல் கடனென 45
தருசகன் கூற்று
[தொகு]அவர்க்கே யவர்க்கே யருளுரை யளைஇ
வடுத்தொழி லகன்ற வருட கார
உடற்றுநர்க் கடந்த வுதயண குமரன்
அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்
தோம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி 50
நிலைமை யறிய நீட்ட மின்றி
மறைபுறப் படாமை மனத்தே யடக்கி
ஒற்றொற் றியவரை யொற்றி னாய்ந்து
முன்னங் கொள்ளு முபாய முயற்சியொடு
நாவாய் தொகுத்து நளிபுனற் பேரியாற் 55
றூர்மடி கங்கு னீர்நெறி போகி
மலையர ணடுங்க நிலையர ணடுங்க
ஒற்றி னானு முபாயத் தானும்
ஆற்றல் சான்ற வாருணி தொலைச்சிக்
கோற்றொழிற் கொற்றங் கொடுத்து நீர் பெயர்மினென் 60
றேற்றுரி முரசி னிறைமகன் பணித்த
படை எழுதல்
[தொகு]மாற்ற மெல்லா மனத்தகம் புகற்றக்
கூற்றிய றகையர் கொற்ற மாகென
ஓங்கிய தோற்றத் துதயணற் றழீஇச்
செழுங்கோ சம்பிச் செம்முக முன்னி 65
எழுந்தது மாதோ பெரும்படை யிருளென்.
3 23 படை யெழுச்சி முற்றிற்று.