உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/3 24 மேல்வீழ் வலித்தது

விக்கிமூலம் இலிருந்து
(3 24 மேல்வீழ் வலித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 24 மேல்வீழ் வலித்தது

உதயணனுக்கு தருசகன் விடைகொடுத்தல்

[தொகு]

இருளிடை யெழுந்த விகலடு பெரும்படை
அருளுடை வேந்தன் வழிதொடர்ந் தொழியான்
வான்றோய் பெரும்புகழ் வத்தவ ரிறைவற்குத்
தேன்றோய்ந் தன்ன திருமொழி யளைஇ
இடையற வில்லா வின்பமொ டுயர்ந்த 5
நன்குடைக் கேள்விமுத னின்கட் டோன்றிய
கலக்கமி னிலைமையுங் கைம்மா றில்லதோர்
கிளைப்பெருந் தொடர்ச்சியும் பயந்தவின் றெமக்கென
அற்புத்தளைக் கிளவி பற்பல பயிற்றிப்
பீடுகெழு தானைப் பிரச்சோ தனற்குக் 10
கூடிய கிளைமைக் குணம்பல கூறி
ஓடுகா லிளையரை யோலையொடு போக்கின்
நாடுவ தல்ல தவனு நம்மொடு
தீது வேண்டா நிலைமைய னாகும்
மலைத்தலைத் தொடுத்த மல்லற் பேரியாற்றுத் 15
தலைப்பெயன் மாரியிற் றவிர்த லின்றி
நிலைக்களந் தோறுங் கொலைப்படை விடுத்தபின்
யானும் வேண்டின் வருகுவ னேனைச்
சேணில மன்னர் கேண்மை யுடையோர்க்
கறியப் போக்கி னவர்களும் வருவர் 20
செறியச் செய்த குறியினி ராமின்
நிலம்படக் கிடந்தநின் னேமியந் தடக்கை
வலம்படு வினைய வாகெனப் பல்லூழ்
பொய்யா வாய்ப்புண் மெய்பெறக் கிளந்து
திருவள ரகல மிருவருந் தழீஇப் 25
பிரிய லுற்ற தரிசகற் குரைக்கும்

உதயணன் தருசகன்பாற் கூறுதல்

[தொகு]

இருமண மெய்திய வின்ப மெல்லாம்
உருமண் ணுவாவினை யுற்றதற் பின்னை
ஐம்முந் நாளி னவனைச் சிறைவிடுத்
தெம்முன் னாகத் தருதனின் கடனென 30
அமைச்சன் பெருமையு மரசன தார்வமும்
மனத்தி னுவந்து மகதவர் கோமான்
அது வொருப் பட்டாங் ககன்ற பின்னர்

உதயணன் செயல்

[தொகு]

உதயண குமர னுரிமை தழீஇ
அடற்பே ரியானையு மலங்குமயிர்ப் புரவியும் 35
படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
நடைத்தே ரொழுக்கு நற்கோட் டூர்தியும்
இடைப்படப் பிறவு மியைந்தகம் பெய்து
கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇப்
புடைப்புடை புணர்த்துப் புள்ளிற் போகி 40
மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப்
போர்மேற் கொண்ட புகற்சியன் புரவலன்
ஆர்மேற் போங்கொ லஞ்சுதக வுடைத்தெனச்
சேனை மன்னர் சிந்தையுட் டேம்ப 45
வலிப்பது தெரிய வொலித்துடன் குழீஇ
விட்டன னிருந்த காலை யொட்டிய

தம்பியருடைய வரவை வயந்தகன் கூறல்

[தொகு]

எழுச்சி வேண்டி யூகி விட்ட
அருமறை யோலை யாய்ந்தன னடக்கி
வரிமலர்ப் படலை வயந்தக னுரைக்கும் 50
பின்னிணைக் குமரர் பிங்கல கடகர்
இன்னாக் காலை யெள்ளி வந்த
பரும யானைப் பாஞ்சால ராயன்
அருமுர ணழிய நூறலி னவனமர்க்
காற்றா ருடைந்து நோற்றோ ரொடுங்கும் 55
குளிர்நீர் யமுனைக் குண்டுகயம் பாய
வளியியற் புரவி வழிச்செல விட்டவர்
பொன்னியற் பிரிசையோர் பெண்ணுறை பூமி
அவணெதிர்ப் பட்டாஅங் கிவணகம் விரும்பா
தீரறு திங்க ளிருந்த பின்றை 60
ஆரா ணகர மாண்டன னொழுகும்
ஆருணி யரசன் வார்பிணி முரசம்
நிலனுட னதிர நெருப்பிற் காய்ந்து
தலமுதற் கெடுநோய் தரித்த லாற்றார்
போந்தனர் போலும் புரவல மற்றுநம் 65
ஓங்கிய பெருங்குல முயர்தற் குரித்தென்

உதயணன் செயல்

[தொகு]

றாங்கவ னுரைப்ப வமர்படக் கடந்த
தடக்கை கூட்டித் தாங்கா வுவகையொடு
படைப்பெரு வேந்தன் பல்லூழ் புல்லி
இருவயி னுலக முயையப் பெற்ற 70
பொருமுர ணண்ணல் புகன்ற பொழுதிற்
பெருமகன் போல வுவகையுட் கெழுமிப்

படைகள் ஈண்டுதல்

[தொகு]

பாடுபெறு சிறப்பிற் பைந்தார் மன்னன்
சேடுபடு வத்தஞ் சேர்வது பொருளென
அறியக் கூறிய குறிவயிற் றிரியார் 75
முன்னீ ராயினு முகந்துடன் புகுவோர்
பன்னீ ராயிரம் படைத்தொழி லிளையரொ
டற்றக் காலைக் கமைக்கப் பட்ட
கொற்றத் தானையுங் குழூஉக்கொண் டீண்டத்

தம்பியர் உதயணனை இறைஞ்சிப் புலம்பிக் கூறுதல்

[தொகு]

தப்பினா ரென்ற தம்பியர் வந்தவன் 80
பொற்கழற் சேவடிப் பொருந்தப் புல்லி
ஓர்த்தனந் தேறி யுறுதிநோக் காது
சேர்த்தியில் செய்கையொடு சிறைகொளப் பட்டுப்
பெருங்குடி யாக்கம் பீடற வெருளி
அருங்கடம் பூண்ட வலியாக் காதலொடு 85
பயந்தினி தெடுத்த படைப்பருங் கற்பினம்
கொற்ற விறைவிக்குக் குற்றேல் பிழையா
தொருங்கியா முறைத லொழிந்தது மன்றி
இருங்கடல் வரைப்பி னினியோ ரெடுத்த
இறைமீக் கூறிய விராமன் றம்பி 90
மறுவொடு பெயரிய மதலைக் கியைந்த
ஆனாப் பெரும்புகழ் யாமு மெய்தத்
தேனார் தாமரைத் திருந்துமலர்ச் சேவடி
வழிபா டாற்றலும் வன்கணி னீத்தனெம்
கழிபெருஞ் சிறப்பிற் காவல் வேந்தே 95
இம்மை யென்ப தெமக்குநெறி யின்மையின்
முன்னர்ப் பிறப்பின் மூத்தோர்ப் பிழையா
துடன்வழிப் படூஉ முறுதவ மில்லாக்
கடுவினை யாளரேம் யாமெனக் கலங்கிப்
பொள்ளெனச் சென்னி பூமி தோய 100
உள்ளழல் வெம்பனி யுகுத்தரு கண்ணீர்த்

உதயணன் தம்பியரைத் தழுவிக் கூறுதல்

[தொகு]

துனபமொ டிறைஞ்சிய தம்பியர்த் தழீஇ
இருபான் மருங்கினுந் திரிதருங் கண்ணின்
அழறிரண் டன்ன வாலி சோர்ந்தவர்
குழறிரண் டணவருங் கோல வெருத்திற் 105
பல்லூழ் தெறித்தெழப் புல்லி மற்றுநும்
அல்லல் காண்பதற் கமைச்சுவழி யோடாப்
புல்லறி வாளனேன் செய்த்து நினைஇக்
கவற்சி வேண்டா காளைக ளினியென
அகத்துநின் றெழுதரு மன்பிற் பின்னிக் 110
குளிர்நீர் நெடுங்கடற் கொண்ட வமிழ்தென
அளிநீர்க் கட்டுரை யயனின் றோர்க்கும்
உள்ளம் பிணிப்ப வொன்ற வுரைத்தினி
எள்ளு மாந்த ரெரிவாய்ப் பட்ட
பன்னற் பஞ்சி யன்ன ராகென 115
வெகுளித் தீயிற் கிளையறச் சுடுதல்
முடிந்த திந்நிலை முடிந்தன ரவரெனச்
செப்பிய மாற்றம் பொய்ப்ப தன்றாற்
பொரக்குறை யிலமென விரப்ப வின்புற்
றிளையோர் தம்மோ டீன்றவட் கிரங்கிக் 120
களைக ணாகிய காதலந் தோழனை
வளையெரிப் பட்ட தெளிபே ரன்பிற்
றளையவிழ் கோதையொடு தருதலும் பொருளோ
நும்மைத் தந்தென் புன்மை நீக்கிய
உம்மைச் செய்த செம்மைத் தவத்தனெனத் 125
தம்பியர் தாமரைத் தடங்கண் சொரியும்
வெம்பனி துடைத்துப் பண்புளிப் பேணிக்
கண்ணுற வெய்திய கருமம் போல
மண்ணுறு செல்வ நன்னு நமக்கென

உதயணன் அமைச்சர்களுடன் ஆராய்தல்

[தொகு]

அன்னவை கிளந்த பின்னர்த் தன்னோ 130
டொன்னாற் கொள்ளு முபாய நாடி
வருட காரனொ டிடவகற் றழீஇ
அளப்பருங் கடுந்திற லாருணி யாருயிர்
கொளப்படு முறைமை கூறுமி னெமக்கென

வருடகாரன் கூற்று

[தொகு]

வருட காரன் வணங்கினன் கூறும் 135
இருளிடை மருங்கின் விரைவன ரோடி
அற்ற மிதுவென வொற்றர் காட்டிய
நீணிலை நெடுமதி லேணி சாத்தி
உள்ளகம் புக்கு நள்ளிரு ண்டுநாள்
முதுநீர்ப் பௌவங் கதுமெனக் கலங்கக் 140
கால்வீழ் வதுபோன் மேல்வீழ் மாத்திரம்
விள்ளாப் படையொடு வேறுநீ யிருப்பக்
கொள்ளா வேந்தனைக் கோயிலொடு முற்றிச்
சேவக நிலைஇக் காவ றோறும்
ஆறீ ராயிர மறியப் பட்ட 145
வீரரை விடுத்துப் போர்செயப் போக்கித்
துயிலும் பொழுதிற் றுளங்கக் குப்புற்
றயிலுறு வெம்படை யழல வீசிக்
கதுவா எஃகமொடு கடைமுத றோறும்
பதுவாய்க் காப்புறு படைத்தொழி லிளையரைப் 150
பாய லகத்தே சாய நூறி
மாவும் வேழமு மாமணித் தேரும்
தானைக் கொட்டிலொ டாணக் காப்பமைத்
தொன்னார்க் கடந்த வுதயணன் வாழ்கென
இன்னாச் செய்தெம் மெழினகர் வௌவிய 155
குடிப்பகை யாள ரடைத்தகத் திராது
பெண்பாற் பேரணி நீக்கித் திண்பாற்
போரொடு மொன்றிற் போதுமின் விரைந்தெனக்
காரொலி முழக்கிற் கடுத்தன மார்ப்பக்
கதுமென நிகழ்ந்த கலக்கமொடு கல்லென 160
மதிதவழ் புரிசை வளநகர் கலங்கப்
பெருமழை நடுவ ணிருளிடை யெழுந்ததோர்
கடுவன் போலக் காவல னூறி
மகிழ்ச்சி யெய்தி மாற்றோ ரில்லெனும்
இகழ்ச்சி யேதந் தலைத்ததெனக் கின்றெனக் 165
கவலை கூராக் கலங்கின னெழவும்

பட்டத் தேவியின் கலக்கம்

[தொகு]

எழுந்த மன்னன் செழும்பூ ணகலத்
தீர்நறுஞ் சாந்தந் தாரொடு குழையப்
பரத்தையர்த் தோய்ந்தநின் பருவரை யகலம்
திருத்தகைத் தன்றாற் றீண்டுத லெமக்கெனப் 170
புலவியி னடுங்கிப் பூப்புரை நெடுங்கண்
தலையளிச் செவ்வியி னமர்ப்பன விமைப்ப
ஆற்றா வனந்தரொ டசைந்த வின்றுயிற்
கூற்றார்ப் பிசைப்பிதென் னென்றனள் வெரீஇ
விசைப்புள் வெங்குர லிசைப்பக் கேட்ட 175
நாகப் பெதும்பையி னடுங்கி யாகத்
துத்தியுந் தொடரு முத்தொடு புரள
ஒளிக்கா சொருபாற் றோன்றத் துயிற்பதத்
தசைந்த வந்துகில் கையகத் தசைய
நெகிழ்ந்த நீரிற் கண்கை யாக 180
முகிழ்ந்த முலைமுதன் முற்றத் தியைந்த
தருப்பை பொற்கொடி யாக விரக்கமொ
டோருயிர்க் கணவற்கு நீருகுப் பனள்போல்
முகங்கொள் காரிகை மயங்கல் கூராச்
சீரலங் காரச் சித்திர முடிமிசைத் 185
தாரணி கோதை தாழ்ந்துபுறத் தசைய
உற்றதை யறியா டெற்றென விலங்கி
ஆவி வெய்துயிர்ப் பளை இயக முளைவனள்
தேவி திருமகன் றானை பற்றி
ஆகுலப் பூசலி னஞ்சுவன ளெழவும் 190

குற்றேவல் மகளிரின் துயரம்

[தொகு]

ஆருமணி திகழு மாய்பொன் மாடத்துத்
திருமணிக் கட்டிற் பாகத் தசைந்த
உழைக்கல மகளி ருள்ளழ லூர்தரக்
குழைக்கணி கொண்ட கோல வாண்முகத்
தரிபரந் தலமரு மச்சுற் கண்ணினர் 195
வெருவுறு பிணையின் விம்மாந் தெழாஅப்
பட்டதை யறியார் பகைப்புல வேந்தன்
கெட்டகன் றன்னான் மற்றி தென்னெனக்
கோயின் மகளி ராகுலப் பூசலொடு
வாயிலுந் தகைப்பு மறியார் மயங்கவும் 200

நகரத்தார் மகிழ்ச்சி

[தொகு]

நகர மெல்லா முழுவது மறிந்து
திருவார் மார்பினெம் பெருமா னுதயணன்
கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன்
நம்பொருட் டாக நகர முற்றனன்
அமைச்சருந் தானு மமைத்த கருமம் 205
முடித்தன னாகலின் முற்றவ முடையம்
அன்றியீன் வாரா னாதலி னெங்கோன்
வென்றி யெய்துதல் வேண்டுது நாமென
வெருப்பறை கொட்டி யுருத்துவந் தீண்டி
நமக்குப்படை யாகி மிகப்புகுந் தெற்றவும் 210
இன்னோ ரனையன வின்னா வெய்துற
ஒன்னா மன்னனை யுயிருடன் பருகுதும்
இந்திலை யருளென வெண்ணின னுரைப்ப
அந்நிலை நோக்கி மன்னனு முவந்து
பொருத்த முடைத்தென வொருப்பா டெய்திப் 215
புள்ளு மில்லா வொள்ளொளி யிருக்கையுள்
மறைபுறப் படாஅச் செறிவின ராகி
உளைப்பொலி மான்றே ருதயண னோடு
வலித்தனர் மாதோ வளைத்தனர் கொளவென்.

3 24 மேல்வீழ் வலித்தது முற்றிற்று.