உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/3 25 அரசமைச்சு

விக்கிமூலம் இலிருந்து
(3 25 அரசமைச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 25 அரசமைச்சு

பகைப்புலன் அறிந்துவந்த ஒற்றர் கைற்று

[தொகு]

வளைத்தனர் கொள்வது வலித்தன ரிருந்துழி
ஒளித்தகத் தொடுங்கிய வொற்ற ரோடிச்
சிலைப்பொறித் தடக்கையிற் சேதியர் பெருமகற்
கிசைத்தனர் புக்குநின் றேத்தினர் கூறுவர்
தாழ்ச்சி யின்றித் தருசகன் றமரோ 5
டேழ்ச்சியு மெறிபடை யளவுமெம் பெருமான்
சூழ்ச்சியுஞ் சூழ்பொருட் டுணிவு மெல்லாம்
படிவ வொற்றிற் பட்டாங் குணர்ந்து
கொடியணி வீதிக் கோநகர் வரைப்பிற்
படியணி வாயிலும் பரப்பு நாயிலும் 10
அற்றம் பட்டுழித் தெற்றெனத் திருத்திக்
குறும்புழை யெல்லாங் கூடெழுக் கொளீஇச்
செறிந்த பல்படை யறிந்தவ ண்டக்கி
வாயின் மாடமொடு நாயி லுள்வழி
இரவும் பகலு மிகழாக் காப்பொடு 15
முரவுந் தூம்பு முழங்குபு துவைப்ப
ஆண்டகை யமைத்துப் பாம்புரி திருத்தி
அருஞ்சுழி நீத்தத் தாறுபுக வமைத்த
கருங்கை வாயிற் பெருங்கத வொடுக்கிக்
கொடுந்தாழ் நூக்கி நெடும்புணை களைந்து 20
நீணீர்க் கிடங்கிலுட் டோணி போக்கிக்
கல்லிடு கூடை பல்லிடத் தியற்றி
வில்லுடைப் பெரும்பொறி பல்வழிப் பரப்பிப்
பற்றறத் துறந்த படிவத் தோரையும்
அற்ற மின்றி யாராய்ந் தல்ல 25
தகம்புக விடாஅ திகந்துசே ணகற்றி
நாட்டுத் தலைவரை நகரத்து நிறீஇ
நகர மாந்தரை நாட்டிடை நிறீஇ
ஊரூர் தோறு முளப்பட டோவா
ஆர்வ மாக்களை யருஞ்சிறைக் கொளீஇ 30
ஆணை கேட்ட வகலிடத் தெல்லாம்
ஓலை போக்கி யொல்லைவந் தியைகெனப்
பேணார்க் கடந்த பிரச்சோ தனற்கு
மாணாச் செய்தொழின் மனமுணக் காட்டி
அவமதித் தொழுகி யாணை யெள்ளி 35
மிகைசெய் துருந்ததன்மேலு மீட்டினி
மகத மன்னனு மதுகை யாகப்
பகைசெய வலித்தன னென்பது பயிற்றி
மந்திர வோலை போக்கிய வண்ணமும்
வெந்திறல் கலந்த விறல்வே சாலியொடு 40
சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி
விரைந்தனர் வருகென நினைந்துவிட் டதுவும்
மன்னடு நெடுவேன் மகத மன்னற்
கின்னது தருவே னென்னொடும் புணர்கெனத்
தன்னொடு பழகிய தமர்களை விட்டதும் 45
இன்னவை பிறவும் பன்னின பயிற்றிய
அறிந்தவொற் றாளர் செறிந்தன ருரைப்ப

உதயணன் வருடகாரனுக்குக் கூறுதல்

[தொகு]

ஒற்று மாக்களை யொற்றரி னாயா
முற்றனக் குரைத்த மூவர் வாயவும்
ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி 50
இரவே றொளித்துச் செருமேந் தோன்ற
வளைத்திருந் தழிக்குவ மெனினே மற்றவன்
வலித்தது நாடி நலத்தகு நண்பின்
மிலைச்ச மன்னருங் கூடித் தலைத்தலை
வந்தவ னிதிப்பயங் கருதி முந்துற 55
முற்றுபு விடுப்பி ன்றற மீனும்
வேண்டா வஃதிவண் மீண்டிது கேட்கென
வாங்குசிலைத் தடக்கை வருட காரற்
கோங்குபுகழ் வென்றி வுதயண னிசைக்கும்
நின்னொ டென்னிடை நீப்பிவ ணுண்டெனத் 60
துன்னிய நமர்கட்குத் தோன்றக் கூறி
அவற்குப்பாங் காகிய வார்வல ருளரெனின்
மிகச்செறி வுடையையாய் விடுமதி விடீஉம்
மாற்றந் தன்னையு மோர்த்தனை கொண்மோ
ஆசில் செங்கோ லவந்தியன் மடமகள் 65
வாசவ தத்தையை வலிதிற் கொண்ட
மேனாட் காலை யானே யவனைப்
பற்றுபு நம்பதி தருகுவே னென்றசொல்
முற்றுல கெல்லா மொய்த்தொருங்கு தருதலின்
வத்தவ மன்னனு மெய்த்தகக் கேட்டுக் 70
கனலிரும் புண்ட நீரின் விடாது
மனவயி னடக்கி மறைந்தன னொழுகித்
தன்குறை முடிதுணைத் தானரு டோற்றி
நன்கினி துரைக்குமவ னுரைக்கு மாயினும்
வெஞ்சொன் மாற்றம் வேந்தரை யுரைத்தோர் 75
அஞ்சுக வென்னுந் தொன்மொழி யுண்மையின்
நெஞ்சுநீ நெகிழ்ந்தவற் றெளியலை செல்லென
மணித்தகைப் பைம்பூண் மகதவர் கோமான்
பணித்தது மறாமையிற் படையென வந்தனென்
மற்றது மன்னவ னுற்றிவண் செய்த்தோர் 80
முன்னுப கார முடைமையி னாகும்
அன்னவன் மதித்துத் தன்மிகத் தருக்கும்
பெருமீக் கூற்றமும் பேணான் பிறரொடு
செருமீக் கூற்றமுஞ் செய்கையும் வேண்டான்
ஒருதலை யாக வாற்றலன் மற்றிவண் 85
பழிதலை நம்மேல் வருதலு மின்றி
நாமு மெண்ணி விட்டன மாகத்
தானே சென்று தன்வலி யறியான்
அழியினு நமக்குக் கழிவதொன் றில்லை
ஆனிலைப் படாஅ தீனிலைக் கண்ணே 90
பற்றா மன்னர் படையொடு புணரின்
அற்றப் படீஇய ரதனினு முவந்துமென்
றின்னவை யெல்லாந் திண்ணிதி னுரைத்தனன்
தன்னொடு தொடர்ந்த மன்னரைத் தொகுத்துத்
தானிவண் வாரா னாயினும் யானிவட் 95
செய்வதை யெல்லா மெய்யெனக் கருதுமென்
றைய மின்றி யவனுழை விட்டபின்
மெய்யெனத் தெளிந்து மீட்டவன் விட்ட
கரும மாக்களை யொருவயி னோம்பிச்
செறியச் செய்தெமக் கறிய விடுக்கபின் 100
பற்றிக் கொண்டு பற்றா மன்னன்
ஒற்ற ரிவரென வுரைத்தறி வுறீஇக்
குற்றங் காட்டிக் கொலைக்கடம் பூட்டுதும்
தெற்றென நின்வயிற் றெளிந்தன ராகி
உறுபெரும் பகைமை யுற்றோ ருணர்ந்து 105
செறிவுகொள் வதற்குச் சென்றன ரிசைப்ப
இதுகா ரணத்தி னிகத்தல் பொருந்தும்
அதுகா ரணத்தின் யாமுந் தெளிவேம்
பாரப் பண்டியும் பாடிக் கொட்டிதும்
ஆரெரி கொளீஇ யஞ்சினே மாகி 110
மலையர ணல்லது நிலையர ணில்லெனத்
தவதி சயந்தம் புகுதும் புக்கபின்
மிகுதி யச்ச மீட்டவற் குணர்த்தி
வருக வேந்தன் பெருவிறல் பீடறக்
கலக்கப் பொழுதே கடிது நாமென 115
விலக்க நில்லா வேட்கைய னாகித்
தான்புறப் படுதலிற் றன்னே போலும்
மாண்புறு வேந்தரை மதிலகத் தொழித்துப்
புறமதிற் கண்ணும் பொருபடை நிறீஇ
எறிபடை சிறிதினொ டணுகிய பின்றைச் 120
சவரர் புளிஞர் கவர்வுறு கடுந்தொழில்
எழுச்சி கூறி யிகலடு பெரும்படை
மாட்டல் வேண்டுமென் றோட்டியெத் திசையும்
கூட்ட துள்ளே கூறுபடப் போக்கிச்
சிறுபடை யாகிய பொழுதிற் கதுமென 125
உறுபடை யழித்துமென் றுடன்றுமேல் வந்தென்
முன்னும் பின்னும் பக்கமு நெருக்கியவன்
கொண்முர ணிரிப்பிற் கோளெளி தாமென
உண்முர ணுதயண னுரைத்தனன் வணங்கி

வருடகாரன் செயல்

[தொகு]

நன்றெனப் போகித் தன்றமர்த் தழீஇ 130
முன்னா னுரைத்த வின்னா வெவ்வுரைக்
கொன்னா ரோட்டிய வுதயண னுள்ளத்
துவர்த்த லன்றியுஞ் சிவக்கு மென்னைப்
பழியாக் கொண்டன னழியின னடையெனப்
பகலு மிரவு மகலி ராகிக் 135
காப்புநன் கிகழன்மின் கரும முடிதுணை
ஓப்புற வொருவனை யுறப்பெறி னவனொடு
தீக்குழி வலித்தியாந் தீரினுந் தீர்தும்
யாதுசெய் வாங்கொலென் றஞ்சினம் பெரிதெனக்
காவ லாளர்க்குக் கவன்றன னுரைப்பப் 140

சேனாபதி மகள் கூறுதல்

[தொகு]

பலர்புகழ் விழுச்சீர்ப் பாஞ்சால ராயனொடு
செலவயர் வுடைய சேனா பதிமகன்
என்னுழை விடுத்தன னிருநூ றியானையும்
னொன்னணி புனைதார்ப் புரவி பூண்ட
ஐம்பது தேரு மாயிரங் குதிரையும் 145
தன்பெயர் கொளீஇத் தானினி தாள்கென
மன்பெருஞ் சிறப்பிற் கொன்னா ரறுபதும்
பாவடி மடப்பிடி பதினைந் திரட்டியும்
மாவடி மடக்கண் மாதர் மென்முலை
நாடக மகளிர் நாலிரு பதின்மரும் 150
அடுத்து விழுநிதி பலவும் பிறவும்
ஆண முடைத்தாக் கொடுப்பன் மற்றவ்
வாண்மிகு தானை வத்தவற் கைவிட்
டென்னொடு கூடி யொருவ னாகப்
பின்னைச் செய்வ பிறவும் பலவென 155
அன்னவும் பிறவு மறிந்தவு மல்லவும்
ஆருணி யுரைத்தவு முரையா தனவும்
ஆராய் வாள னகமுணக் குளந்தவன்
காரியக் கிளவியிற் காரணங் காட்டலின்

வருடகாரன் கூற்று

[தொகு]

ஆய்பெருங் குருசி லதுநனி விரும்பி 160
நீயே சென்றவன் வாயது கேட்டு
வலிப்பதை யெல்லா மெளித்தனை யுணர்ந்து
வல்லே வருதி யாயி னெமக்கோர்
செல்சார் வாகிச் சிறந்தோய் நீயென

சேனாபதிமகன் ஆருணியிடம் சென்று அறிவித்தல்

[தொகு]

எல்லிருள் விடுப்ப வெழுந்தனன் போகி 165
வஞ்சச் சூழ்ச்சி வருட காரன்
தன்சொல் லெல்லாஞ் சென்றவ னுரைப்பக்

ஆருணியின் செயல்

[தொகு]

கெடலூ ழாதலிற் கேட்ட பொழுதே
அடலருஞ் சீற்றத் தாருணி தெளிந்து
முகன்றிந் துரைத்து முன்னியது முடிக்கும் 170
சகுனி கௌசிகன் வருகெனத் தரீஇ
ஒட்டா மன்ன னுதயண குமரனை
நட்டா னாகி நாட்ட வந்த
தண்டத் தலைவன் றளர்வி லூக்கத்து
வண்டளிர்ப் படலை வருட காரன் 175
நம்பாற் பட்டன னவன்வலித் ததையெலாம்
திண்பாற் றாகத் தெளிந்தன னிவனெனச்
சென்றவற் காட்டி…
ஒன்றிய கருமத் துள்பொரு ளெல்லாம்
சென்றறிந் தின்னும் வம்மி னீரென 180
நன்றறி வாளர் நால்வரைப் பணிப்ப
அருளிய தெல்லா மாகென வடிபணிந்
திருளிடைப் போந்தவற் குறுகினர் மறைந்தென்.

3 25 அரசமைச்சு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/3_25_அரசமைச்சு&oldid=482618" இலிருந்து மீள்விக்கப்பட்டது