உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/5 5 பத்திராபதி உருவு காட்டியது

விக்கிமூலம் இலிருந்து
(5 5 பத்திராபதி உருவு காட்டியது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

5 5 பத்திராபதி உருவுகாட்டியது

உதயணன் தச்சவுருவங் கொண்ட பத்திராபதியை அழைத்துக் கூறல்

[தொகு]

பொன்னகர் புக்கபின் புகழ்மீக் கூறி
மின்னலங் கவிரொளி வெய்யோன் மேவும்
வைய மியற்றிய கைவினை யாளன்
வருக வென்றுதா னருளொடு பணிப்ப
நயந்துவந் திறைஞ்சிய வையத் தலைவனை 5
வியந்த விருப்பொடு நயந்துமுக நோக்கித்
தொல்லைச் செய்த நன்னரு மறியேம்
எல்லையில் பெருந்துய ரெய்தின மகற்றினை
அரசி னாகா தாணையி னாகாது
விரைசெல லிவுளியொடு வெங்கண் வேழம் 10
பசும்பொ னோடைப் பண்ணொடு கொடுப்பினும்
விசும்பிடைத் திரிதரும் வேட்கை வெந்நோய்
பொன்னிறை யுலகம் பொருளொடு கொடுப்பினும்
துன்னுபு மற்றது துடைக்குந ரின்மையின்
உறுகண் டீர்த்தோய்க் குதவியொன் றாற்றிப் 15
பெறுகுவம் யாமெனப் பெயர்ப்பதை யறியேம்
நல்வினை யுடைமையிற் றொல்வினை தொடர்ந்த
எந்திரந் தந்து கடவுளை யொத்தியென்

தச்சனுக்குச் சிறப்புச் செய்தல்

[தொகு]

றன்புலந் தொழுகு மறிவிற் பின்னி
அருளுரை யளைஇப் பொருளுரை போற்றித் 20
தானணி பெருங்கலந் தலைவயிற் களைந்து
தேனணி தாரோன் பெருஞ்சிறப் பருள

பத்திராபதி தன்வரலாறு கூறூதல்

[தொகு]

அருளெதிர் வணங்கி யதுவுங் கொள்ளான்
பொருளெனக் கென்செயும் புரவல போற்றென
என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கிச் 25
சுருங்கா வாகத் தரம்பை தன்மையும்
கருங்கோட்டுக் குறவர் கணமலை யடுக்கத்
திரும்பிடி யாயங் கிற்ற வண்ணமும்

உதயணன் எண்ணுதல்

[தொகு]

ஒன்று மொழியாது நன்றியின் விரும்பி
மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன்னாள் 30
இயக்கன் கூறிய திவளுங் கூறினள்
உள்ள முருக்கு மொள்ளமர்க் கிளவி
ஆரா வுள்ள முடையோர் கேண்மை
தீரா தம்ம தெளியுங் காலென

பத்திராபதி தன் உருவத்தைக் காட்டி மீளல்

[தொகு]

மேனீ செய்த வுதவிக் கியானோர் 35
ஐயவி யனைத்து மாற்றிய தில்லென
முன்றனக் குரைத்தன முறைமுறை கிளந்து
நீயும் யானும் வாழு மூழிதொறும்
வேறல மென்று விளங்கக் கூறி
அன்றுதான் கொண்ட வுருவு நீக்கித் 40
தன்னம ருருவ மன்னவன் காணக்
காட்டின ளாகி வேட்கையின் விரும்பி
விஞ்சை மகளவ் விழைபிடி யாகி
எழிலி மீதாங் கினிதி னடப்ப
வளம்படு வாயிலு மவள்பெயர் கொளீஇ 45
வாயி லாளரொடு வத்தவன் வழிபடப்
போயினண் மாதோ புனையிழை நகர்க்கென்

5 5 பத்திராபதி உருவு காட்டியது முற்றிற்று.