உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/5 6 நரவாண தத்தன் பிறந்தது

விக்கிமூலம் இலிருந்து
(5 6 நரவாண தத்தன் பிறந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

5 6 நரவாணதத்தன் பிறந்தது

நரவாணதத்தன் பிறத்தல்

[தொகு]

புனையிழை தன்னகர் புக்கபி னிப்பால்
துனைசேர் நெடுந்தேர் துவன்றிய தானை
வத்தவர் பெருமகன் வானோர் விழையும்
அத்தகு சிறப்பி வைந்நியன் மடமகள்
உசாவி னன்ன நுண்ணிடை யுசாவினைப் 5
பேதைக் குரைப்போன் பிழைப்பிற் றாகிய
பொற்பமை கணங்கிற் பொம்மல் வெம்முலைப்
பட்டத் தேவியைப் பதுமையி னீக்கி
முட்டில் செல்வமொடு முறைமையிற் பிழையா
தொழுகா நின்ற வழிநாட் காலைப் 10
பிறைபுரை திருநுத லஃகப் பிறையின்
குறைவிடத் தீர்ந்த கொள்கை போலத்
திருவயிற்று வளர்ந்த திங்க டலைவர
ஒருமையிற் றீயவை நீங்கப் பெருமையின்
முழுநோக் காக வைம்பெருங் கோளும் 15
வழுவா வாழ்நாண் மதியொடு பெருக்கிப்
பெருஞ்சிறப் பயர்வர நல்கி யொழிந்துநீ
நோக்கி மற்றவை யாக்கம் பெருகப்
பகைமுதல் சாயப் பசிபிணி நீங்க
மாரியும் விளையுளும் வாரியுஞ் சிறப்ப 20
வழுக்கா வாய்மொழி வல்லோர் வாழும்
விழுத்தகு வெள்ளி வியன்மலை விளங்கத்
திருத்தகு தேவி வருத்த மின்றிப்
பொய்கைத் தாமரைப் பூவி னுறையும்
தெய்வத் திருமகள் சேர்ந்துமெய் காப்பப் 25
பொய்யில் பொருளொடு புணர்ந்த நாளாற்
றெய்வ விளக்கந் திசைதொறும் விளங்க
ஐவகைப் பூவும் பல்வகை பரப்ப
மதியுறழ் சங்க நிதியஞ் சொரிய
அந்தர விசும்பி னாழிக் கிழவன் 30
வந்துடன் பிறந்தனன் பிறந்த பின்றைச்

பிறந்தநாட் சிறப்புக்கள்

[தொகு]

சிறந்தோர் நாப்பட் சேதியர் பெருமகற்
கறஞ்சேர் நாவி னவந்திகை திருவயிற்
றரியவை வேண்டிய வசாவொடு தோன்றிப்
பெரியவ ரேத்தப் பிறந்த நம்பிக் 35
குதையண குமரன் றுதைதார்த் தோழரும்
அகனம ரவையு மைம்பெருங் குழுவும்
நகரமு நாடுந் தொகைகொண் டீண்டி
ஆயுட் டானம் யாவையென் னாது
மேயவை யெல்லாங் காவலன் வீசி 40
முத்துமணற் பரந்த நற்பெருங் கோயில்
முற்றந் தோறு முழங்குமுர சியம்பப்
பொலிகெனு மாந்தர்க்குப் புறங்கடை தோறும்
மலிபொன் மாசையு மணியு முத்தும்
ஒலியமை தாரமு மொளிகால் கலங்களும் 45
கோடணை யியற்றிக் கொடையொடு பிரிகென
ஆய்புகழ் வேந்த னேயின னாகிக்
கொலைச்சிறை விடுக தளைச்சிறை போக்குக
கொற்றத் தானையொடு கோப்பிழைத் தொழுகிய
குற்ற மாந்தருங் கொடிநகர் புகுதுக 50
அருங்கடி நகரமு நாடும் பூண்ட
பெருங்கடன் விடுக விருங்கடல் வரைப்பின்
நல்குர வடைந்த நகைசா லாடவர்
செல்ல றீரவந் துள்ளியது கொள்க
பொருந்தா மன்னரும் பொலிகெனுங் கிளவி 55
பெருந்திறை யாக விரைந்தனர் வருக
நிலைஇய சிறப்பி னாட்டுளுங் காட்டுளும்
கொலைவினை கடிக கோநக ரெல்லாம்
விழவொடு புணர்ந்த வீதிய வாகெனப்
பெருங்கை யானைப் பிணரெருத் தேற்றி 60
இருங்க ணதிரப் பொற்கடிப் போச்சிப்
பெருங்கண் வீதிதொறும் பிறபுல மறிய
இன்னிசை முரச மியமர மெருக்க
மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி
வல்லோர் வகுத்த மாடந் தோறும் 65
நல்லோ ரெடுத்த பல்பூம் படாகை
ஈர்முகி லுரிஞ்சி யெறிவளிக் கெழாஅச்
சீர்மைய வாகிச் சிறந்துகீ ழெழுந்த
நேர்துக ளவித்து நிரந்துடன் பொலிய
மையார் யானை மன்னரொடு மயங்கி 70
நெய்யாட் டரவமு நீராட் டரவமும்
மயப்போ ருதயணன் மகிழ்ந்த பின்னர்ப்

சாதகர்மம்

[தொகு]

பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
சிறந்த நற்கோ ளுயர்ந்துழி நின்று
வீக்கஞ் சான்றதும் விழுப்ப மறாத 75
ஆக்கஞ் சான்ற வாருயி ரோகையும்
நோக்கி யவரு நுகருஞ் செல்வத்
தியாண்டுந் திங்களுங் காண்டகு சிறப்பிற்
பக்கமுங் கோளு முட்கோ ளளைஇ
இழிவு மிவையென விசைய நாடி 80
வழியோ ரறிய வழுவுத லின்றிச்
சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்
அரும்பொறி நெறியி னாற்ற வமைத்த
பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற் கொத்த
ஈரெண் கிரிசை யியல்புளி நடாஅய் 85

யாவருக்கும் பரிசளித்தல்

[தொகு]

ஆரிய லமைநெறி யரசன் றன்னுரை
ஏத்திய லாளருங் கூத்தியர் குழுவும்
கோயின் மகளிருங் கோப்பெரு முதியரும்
வாயின் மறவருஞ் சாயாச் செய்தொழிற்
கணக்கருந் திணைகளுங் காவிதிக் கணமும் 90
ஆணித்தகு மூதூ ராவண மாக்களும்
சிறப்பொடு புணரு மறப்பெருங் குழுவும்
ஏனோர் பிறர்க்கு மிவையென வகுத்த
அணியு மாடையு மணியு நல்கித்

உதயணன் தன் தம்பி முதலியோர்க்குச் செய்தி கூறி விடுத்தல்

[தொகு]

தணியா வின்பந் தலைத்தலை பெருகத் 95
தம்பியர் தமக்குந் தருசகன் றனக்கும்
நங்கையைப் பயந்த நலத்தகு சிறப்பின்
உரத்தகு தானைப் பிரச்சோ தனற்கும்
உவகை போக்கி யூகியும் வருகெனத்
தவிர்வில் செல்வந் தலைவந் தீண்ட 100
ஆசான் முதலா வந்த ணாளரும்
மாசில் வேள்வி மகிழ்ந்தனர் தொடங்கி
ஏனை வகையின் மேனிலை திரியாது
பன்னிரு நாளும் பயத்தொடு கழிப்பிப்

பெயரிடல்

[தொகு]

பெயர்நிலை பெறீஇய பெற்றி நாடி 105
உயர்நிலை யுலகி னுலோக பாலன்
நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த
பலர்புகழ் செல்வன் றந்தன னாதலின்
உருவாண மாகிய வோங்குபுகழ்ச் செல்வன்
நரவாண தத்த னென்றுபெயர் போக்கி 110

உருமண்ணுவா முதலியவரின் புதல்வர்களுக்குப் பெயரிடல்

[தொகு]

உறுவிறற் றானை யுருமண் ணுவாவும்
அறிநரை வழிபட் டன்றே பெயர்தலின்
…..
பொருவின் மாக்கள் பூதியென் றுரைநீ
ஒழிந்த மூவ ருருவார் குமரருட்
கழிந்தோ ரீமத்துக் கட்டழல் சேர்ந்த 115
கரியக லேந்திக் காவயிற் பெற்றோன்
அரசிக னாகப் பெயர்முதல் கொளீஇப்
பயந்தலை நிற்கும் பல்கதிர்ச் செல்வன்
நயந்துதரப் பட்டோன் றவந்தக னாமெனத்
தாயர் போலத் தக்கது நாடிய 120
ஆவழிப் படுதலி னாகிய விவனே
கோமுக னென்று குணங்குறி யாக
மற்றவர் மகிழ்ந்து…

நகரமாந்தர் மகிழ்ந்து கூறல்

[தொகு]

.. தொன்னக ராளரும்
பெற்றனம் பண்டே பெருந்தவ மென்மரும் 125
இன்னோ ரன்ன வெடுத்துரை சொல்லித்
தன்னோ ரன்ன தன்மைய னாகி
மதலை மாண்குடி தொலைவழி யூன்றும்
புதல்வற் பெற்றா னெனப்புகழ் வோரும்
உதவி நண்ணரு முதயண குமரன் 130
போகமும் பேரும் புகழ்மேம் பட்டதும்
ஆகிய வறிவி னரும்பெறற் சூழ்ச்சி
யூகியி னன்றோ வெனவுரைப் போரும்
குறிகோட் கூறிய நெறிபுகழ் வோரும்
வெண்முகி லொழுகிய வெள்ளியம் பெருமலை 135
உண்முத லுலகிற் கொருமீக் கூறிய
தெய்வ வாழி கைவலத் துருட்டலும்
பொய்யா தாத லுறுபொரு ளென்மரும்
இவையம் பிறவு மியைவன காறி
நகரத் தாளரொடு நாடுபுகழ்ந் தேத்த 140
நிகரில் செல்வத்து நிதியந் தழீஇ
யாப்புடை மகன்வயிற் காப்புடன் புரிகென
விதியறி மகளிரொடு மதிபல நவின்ற
மருந்துவகுப் பாளரைப் புரந்துறப் பணித்துத்
தளர்வி லூக்கந் தலைத்தலை சிறப்ப 145
வளரு மாதோ வைகறொறும் பொலிந்தென்.

5 6 நரவாணதத்தன் பிறந்தது முற்றிற்று.