உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆக்சைடுகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்சைடுகள் : ஒரு தனிமம் ஆக்சிஜனுடன் இணையும்போது ஏற்படும் புதுப் பொருள் ஆக்சைடு எனப்படும். இது ஒரு ஆக்ஸிஜனின் சேர்மமாகும். பெரும்பான்மையான தனிமங்களுடன் ஆக்சிஜன் சேர ஆக்சைடுகள் உருவாகின்றன. நிலவுலகெங்கும் பரவியுள்ள காற்று மண்டலத்தில் நிறைய ஆக்சைடுகள் உள்ளன.

புரோமினையும் மந்த வாயுக்களையும் தவிர பிற தனிமங்கள் அனைத்துக்கும் ஆக்சைடுகள் உண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது. தனிமங்களில் பல ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்சைடுகளைத் தருவதுண்டு. பல ஆக்சைடுகள் நீருடன் சேர்ந்து ஹைட்ராக்சைடைதரும்.

பெரும்பான்மையான தனிமங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து நேரடியாக ஆக்சைடை அளிக்கும். ஒருசில தனிமங்களின் ஆக்சைடை மறைமுகமாகத் தயாரிக்க வேண்டும்.

சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்ப அழுத்தச் சூழ்நிலையில் ஆக்சிஜன் பல தனிமங்களுடன் வினைபுரியும். இதற்கேற்ற ஆற்றல் அதற்கு உண்டு. இதன்மூலம் பல ஆக்சைடுகள் தனிமங்களைக் கொண்டே பெறப்படுகின்றன. இத்தகு ஆக்சைடுகள் தனிமங்களோடு ஆக்சிஜன் சேரும் அளவைப் பொருத்து அமைகிறது. அதற்கேற்ப அவற்றில் பெயர்களும் அமைகின்றன. சான்றாக, கந்தகம் ஆக்சிஜன் எரியும்போது சல்ஃபர் டை யாக்சைடும் சல்ஃபர் ட்ரையாக்சைடும் உருவாகின்றன.

வேறு வழிகளிலும் ஆக்சைடுகள் உருவாக்கப்படுகின்றன. சான்றாக, ஹைட்ராக்சைடுகள்,நைட்ரேட்டுகள் ஆக்சலேட்டுகள், கார்பனேட்டுகள் ஆகியவற்றை வெப்பமூட்டினால் ஆக்சைடுகள் கிடைக்கும்.

ஆக்சைடுகள் அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்படும். ஒரு ஆக்சைடு நீருடன் சேர்ந்து வினைபுரியும்போது உருவாகும் கரைசல் அதன் தன்மைக்கேற்ப 'அமில ஆக்சைடு' என அழைக்கப்படும். காரத்தன்மை பெற்றிருப்பின் அது 'கார ஆக்சைடு’ வகையினதாகக் கருதப்படும்.

அதிக அளவு ஆக்சிஜன் உள்ள ஆக்சைடுகள் 'பெராக்சைடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இவ்வாக்சைடுகள் அமிலத்துடன் வினை புரிந்து ஹைட்ரஜன் பெராக்சைடுகளை தருகின்றன. ராக்கெட் எரிபொருளில் ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகப் பயன்படுகிறது. மற்றும் இதன் நீர்க்கரைசல் வெளுக்கும் தன்மை உடையது.