கலைக்களஞ்சியம்/இங்கிலாந்து
இங்கிலாந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து மூன்றும் அடங்கிய கிரேட்பிரிட்டன் என்னும் தீவில் தென் பகுதியிலுள்ளது. கி.பி. 400-ல் இந்நாட்டை ஜெர்மனியிலிருந்து படையெடுத்த ‘ஆங்கில்’ சாதியினரின் பெயரைக்கொண்டு இங்கிலாந்து என்று வழங்குகிறது. இந்நாட்டு மக்கள் கைத்தொழிலிலும்,முக்கியமாகக் கப்பல் கட்டுவதிலும், வாணிபத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். பார்லிமென்ட் அரசாட்சிமுறை, தொழிற்புரட்சி, ஜனநாயக ஸ்தாபனங்கள் முதலிய பல தற்காலத் தோற்றங்கள் எல்லாம் இச்சிறு நாட்டிலேயே தோன்றியவை. இந்நாட்டவர்கள் உலகில் இதுவரை வரலாறு கண்டிராத பெரிய சாம்ராச்சியத்தை ஆண்டவர்கள். உலக வாணிபத்திற் பெரும்பகுதி இவர்களது தலைநகரான லண்டன் நகரத்தின் மூலமே இன்றைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நாட்டு மொழியான ஆங்கிலமே முக்கிய உலக மொழியாக உள்ளது. ஆல்பிரடு, ஷேக்ஸ்பியர், நியூட்டன் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த நாடு இது. இங்கு இரும்பும்கரியும் ஏராளமாகக் கிடைப்பது இந்நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். முதலில் ரோமானியர்களும், பிறகு டேனர்களும், பிறகு நார்மானியர்களும் இந்நாட்டை வென்று ஆண்டனர். இவர்களைச் சேர்ந்த மக்களே அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற் சென்று, தங்கள் மொழி, அரசியல் மரபு முதலியவற்றைப் பரப்பியுள்ளனர். இந்நாட்டவர்கள் இருநூறு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வந்தனர். பரப்பு: 50,874 ச. மைல்; மக்: 4,11,47,938 (1951). பூகோளம், வரலாறு, அரசியல் வரலாறு முதலான கட்டுரைகளுக்கு, ‘பிரிட்டன், கிரேட்’ பார்க்க. ★
இங்கிலாந்துப் பொருளாதார வரலாறு: இங்கிலாந்தில் கெல்ட் வகையினர் கி.மு.600-ல் குடியேறி, ஆடுமாடு மேய்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டு, நாட்டின் கீழ்ப்பகுதிகளில் விவசாயத்தையும் நடத்தி வந்தார்கள். ரோமானியர்கள் ஜூலியஸ் சீசரின் தலைமையில் இங்கிலாந்தை வென்று, கி.மு.55 லிருந்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்தில் ரோமானியர்கள் இங்கிலாந்தைப் பொருளாதாரத்துறையில் உயர்த்துவதற்கான முறைகளைக் கையாளாவிடினும், போக்குவரவு சாதனங்களைப் பெருக்குவதற்காகப் பெருவழிகளை ஏற்படுத்தினார்கள். இவை ரோமானியர்கள் நாட்டை விட்டு அகன்றதும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன.
ரோமானியர்கள் நாட்டை விட்டுச் சென்ற பிறகு ஆங்கிலோ-சாக்சன் சாதியினர் வந்து தென்பகுதியில் குடியேறின காலத்தில் (450-600) இங்கிலாந்தில் விவசாயம் வளர்ச்சி யடைந்தது.
அதே காலத்தில் டேனர்கள் (Danes) என்ற வகையினர் ஸ்காண்டினேவியா பிரதேசத்திலிருந்து வந்து வடபகுதியில் குடியேறினார்கள். ஆங்கிலேய அரசரான ஆல்பிரடு பல சமயங்களில் டேனர்களை எதிர்த்து நின்று ஆங்கிலோ-சாக்சன் பிரதேசங்களைக் காப்பாற்றினார். பிரான்ஸ் தேசத்திலுள்ள நார்மண்டி தேசப்பிரபு வில்லியம் என்பவர் ஆங்கிலோ-சாக்சன் தலைவர்களை ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் என்னும் இடத்தில் முறியடித்து, I -ம் வில்லியம் என்ற பெயருடன் இங்கிலாந்துக்கு அரசரானார்.
இவர் அரசரான (ஆ. கா. 1066-1087) நாட்டின் பல பகுதிகளின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக டூம்ஸ்டே புக் (Doomsday Book) என்ற புள்ளி விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜுகளைத் தயார் செய்தார். அந்தப் புத்தகத்திலிருந்தே இங்கிலாந்தின் வாழ்க்கை விவரங்களைப் பற்றியும், பொருளாதார நிலையைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இங்கிலாந்தின் வாழ்க்கை நிலையில் 17ஆம் நூற்றாண்டு வரையில் யாதொரு புரட்சிகரமான மாறுதல்களும் தென்படவில்லையாதலால், டூம்ஸ்டே புக்கின் ஆதாரத்தைக் கொண்டு நாம் ஒருவாறு இடைக்காலத்திய (11-17ஆம் நூற்றாண்டு வரை) பொருளாதார நிலையையும் வளர்ச்சியையும் நிருணயிக்க முடிகின்றது.
I - ம் வில்லியம் தன்னோடு வந்த பிரபுக்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் வெகுமதிகள் கொடுக்க வேண்டி, நிலங்களைப் பழைய குடிகளிடமிருந்து பறிக்கத் தலைப்பட்டான். அவனை எதிர்த்து நின்ற ஆங்கிலோ-சாக்சன் பிரபுக்களின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. மேலும் நாட்டின் ஒவ்வோர் அங்குல நிலமும் அரசனுக்குச் சொந்தமென்று பறையறிவிக்கப்பட்டது. இவ்வாறு கவரப்பட்ட நிலங்களைப் பலருக்குச் சில நிபந்தனைகளின் பேரில் அரசன் வழங்கினான். நிலங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தினர்க்கும் போரில் சேவை புரிந்தவர்க்கும் கொடுக்கப்பட்டன. அரசனிடமிருந்து நிலத்தைப் பெறும் பாரன் (Baron) அல்லது லார்டு (Lord) என்ற பிரபுக்களுக்கு விதித்த நிபந்தனைகளை ஒன்று சேர்த்துப் படைமானிய முறை (Feudal-ism) என்று சொல்வர். படைமானிய முறையின் முக்கிய அமிசங்களாவன: 1. ஒவ்வொரு பாரனும் பெற்ற நிலத்திற்கு ஈடாக யுத்த காலத்தில் சில போர் வீரர்களைக் கொடுத்து உதவ வேண்டும். 2. சில சமயங்களில் அரசனுக்குப் பணமும் கொடுக்க வேண்டும்.
அரசனால் பாரனுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் சில உபயோகமற்ற நிலங்களாகவும், சில காடடர்ந்த பிரதேசங்களாகவும், சில புல் நிறைந்த மேய்ச்சல் வெளிகளாகவும், சில சாகுபடிக்குத் தகுந்த வளமான நிலங்களாகவும் இருந்தன. சாகுபடிக்கான நிலத்தைப் பாரனின் சொந்த உபயோகத்திற்காக உள்ள பிரதேசம் (Demesne lands) என்றும், சேவைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட நிலமென்றும் பிரிக்கலாம் (Land under villeinage).
பாரனுக்கு ஏகபோக உரிமையுள்ள பிரதேசங்களைச் சாகுபடி செய்வதற்கு விலன் (Villeins), காட்டர் (Cottar), பார்டர் (Bordar) என்ற பண்ணையாட்களுக்கு நிலப்பகுதிகள் கொடுக்கப்பட்டன. விலன் 30 ஏக்கர் நிலமும், 2 உழவு மிருகங்களும் வைத்திருந்தான். காட்டரும் பார்டரும், விலனுக்கு அடுத்தபடி நிலப்பகுதிகளையுடையவர்கள். அவர்கள் அப்பகுதிகளுக்கு ஈடாகப் பாரனுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. அவ்விதக் கடமைகளில் சில பின்வருமாறு :
உழைப்பு : 1. விலன் ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் பாரனது தனிப்பட்ட நிலத்தில் வேலை செய்ய வேண்டும். 2. விதைக்கும் காலத்திலும் அறுவடைக் காலத்திலும் ஒரு நாள் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.
பணம் செலுத்தல்: 1. தலைவனுடைய முதல் மகன் வயதுக்கு வரும்போதும், தலைவனுடைய முதல் மகளுக்கு மணம் ஆகும்போதும் விலன் இறந்தபிறரு அவன் மகன் வாரிசாக வரும்போதும் தலைவனுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். 2. நிலத்துக்கு வாரிசுடைய விலன் இளம் பிராயமாக இருந்தால் தலைவனே அந்நிலத்தைப் பரிபாலித்து அதிலுள்ள வருமானத்தை அடையலாம். 3. விலன் வாரிசு இல்லாமல் இறந்தால், அவன் நிலத்தைத் தலைவன் தனதாக்கிக் கொள்ளலாம். அல்லது வேறு ஒருவனுக்குப் பணத்திற்காகவோ, மற்ற இலாபத்திற்காகவோ கொடுக்கலாம். 4. தலைவனுடைய ஆலையில் தானியங்களை மாவாக்கிக் கொள்ளுவதற்கும், காடுகளில் மரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கும், குளங்களில் மீன் பிடித்துக் கொள்வதற்கும், தலைவனுக்குச் சில கட்டணங்கள் செலுத்தவேண்டும்.
பண்டம் செலுத்தல்: கிறிஸ்துமஸ் நாளில் கோழியும், ஈஸ்டர் காலத்தில் முட்டையும், மார்ட்டின்மாஸ் காலத்தில் தானியங்களும் பாரனுக்கு விலன் கொடுக்கவேண்டும். இத்தகைய விவசாயமுறை மானர் (Manor) விவசாய முறை என்று அழைக்கப்பட்டது.
நிலங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் கோதுமையும், மற்றொரு பகுதியில் ஓட்ஸ் தானியமும் விளைவித்தார்கள். எஞ்சியுள்ள பகுதி தரிசாக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் தரிசாக இருக்கும் நிலம் மாற்றப்பட்டு வந்ததால், நிலம் தனதுவளத்தை இயற்கை வழியாகவே திரும்பப் பெற்றுக்கொண்டது. இவ்வித விவசாயத் திட்டத்தை மூவயல் திட்டம் என்பர்.
இந்த மானர் விவசாய முறையில் 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையில் பல மாறுதல்கள் தென்பட்டன. இந்த மாறுதல்களுக்கெல்லாம் முக்கிய காரணம் 1348-49-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட கருங் கொள்ளை நோயாகும் (Black death). இவ்விதக் கொள்ளை நோயினால் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தனர். விவசாயத்திற்கு வேண்டிய ஆட்கள் கிடைப்பது அரிதாயிற்று. எங்கும் கூலி ஏற்றமடைந்தது. கூலியைக் கட்டுப்படுத்துவதற்காக 1349-ல் ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1351-ல் அது ஒரு நிரந்தரச் சட்டமானவுடன் கூலியாட்கள் கருங்கொள்ளை நோய் ஆரம்பிப்பதற்கு முன், என்ன கூலி வாங்கி வந்தார்களோ அந்தக் கூலியையே பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டுப்படுத்தியது.
ஆனால் மானர் விவசாயப் பகுதிகளில் உள்ள குடியானவர்கள் எல்லோரும் பழங்கால மேனர் கட்டுப்பாடுகளை அகற்றிவிட்டு எதேச்சையான குடியானவர்களாக விரும்பினார்கள். பிரபுவிற்குச் செய்ய வேண்டிய சேவைக்காகப்பணத்தை ஈடாகக்கொடுத்துச்சுயேச்சை அடைய விரும்பினார்கள். ஒரு மானரை விட்டு, வேறு மானருக்குச் சென்று, அவ்விடத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வாழ விரும்பினார்கள். பட்டணங்களுக்குச் சென்று குடியேறி அவ்விடத்தில் கைத்தொழில்கள் நடத்த விரும்பினார்கள். இவ்விதமான கிளர்ச்சிகள் விவசாய மக்களிடம் எழுந்ததால் மானர் விவசாய முறையில் உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டன. விலன் என்று சொல்லப்பட்ட அடிமை விவசாயி மறைந்தான்.
விரைவிலேயே மானர் விவசாய முறை சீர்திருத்தம் அடைவதற்கு முக்கிய காரணம் 1381ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடியானவர்கள் கலகம் (The Peasants' Revolt) ஆகும். குடியானவர்கள் விலன் முறை அகற்றப்பட வேண்டுமென்றும், நிலங்களெல்லாம் குறைந்த குத்தகைக்குக் குடியானவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வேண்டினார்கள். இக்கலகங்களில் சேர்ந்து கொண்டவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது. நிலைமையைச் சமாளிப்பதற்காக II-ம் ரிச்சர்டு எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, குடியானவர்களைத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார். வாட் டைலர் என்னும் குடியானவர் தலைவன் இக்கலகத்தில் கொல்லப்பட்டான். நிலைமை ஒருவாறு சமாளிக்கப்பட்ட பிறகு பார்லிமென்டு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கலகத்திற்குக் காரணமாயிருந்தவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கிற்று. குடியானவர்கள் கலகத்தினால் நேரடியாக உண்டான நன்மைகள் ஒன்றுமில்லை. ஆனால் அது விலன்களைத் தங்கள் விடுதலையை விரும்பும்படி தூண்டியது. அவர்கள் தங்கள் விடுதலைக்காக ஒரு மானரை விட்டுக் கண்ணுக்கு மறைவாக மற்றொரு மானரில் போய் வேலைசெய்து சுயேச்சையாக வாழத் தலைப்பட்டார்கள்.
வசதிக் குத்தகை முறை: 15ஆம் நூற்றாண்டு ஆரம்பமுதல் பிரபுக்கள் தமது நிலத்தைப் பயிரிடுவதற்கு ஆள் கிடைக்காமலிருப்பதைக் கண்டு அல்லலுற்றார்கள். அதனால் நிலத்தைச் சிறு துண்டுகளாக்கி அதனைக் குத்தகையாளர்களுக்குக் கொடுத்தார்கள். குத்தகையாளரிடம் போதுமான மூலதனம் இல்லாமையால் பிரபுக்கள் அக் குத்தகையாளருக்கு வேண்டிய உழவு மிருகங்களையும் விதைகளையும் கொடுத்து உதவினார்கள். குடியானவர்கள் நிலத்திற்கு மாத்திரமல்லாமல் கால்நடைகளுக்கும் விதைகளுக்கும் சேர்த்துக்குத்தகை கொடுத்தார்கள். இதை வசதிக் குத்தகை முறை (LandandStock Lease System) என்று கூறலாம்.
வாணிபக் குழு, சிறுதொழிற் குழு (Merchants' Guild and Crafts Guild): விவசாயப் பிரதேசங்களிலிருந்து மக்கள் மேலும் மேலும் நகரங்களில் வந்து குடியேறியதால் நகரங்கள் பெரியவைகளாயின ; புதிய நகரங்களும் உண்டாகத் தொடங்கின. இந்த நகரங்களில் வியாபாரம் செழித்தது. சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் தங்கள் பொருள்களை நகரத்திற்கு விற்பனைக்காகக் கொண்டுவந்தார்கள். நகரங்களில் வாணிபக் குழுக்கள் ஏற்பட்டதும், அவற்றில் வியாபாரம் செய்வதற்காகச் சில தனிப்பட்ட குழுவினர் ஏற்பட்டனர். அவ் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் போட்டியும் எதிர்ப்பும் ஏற்படாவண்ணம் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும் சில நகரங்கள் பிரபுக்களின் நிலப்பகுதிகளில் இருந்ததால் பிரபுக்கள் வியாபாரிகள்மீது அதிக வரி விதித்துக் கஷ்டத்திற்கு உள்ளாக்கினார்கள். பிரபுக்களின் தீர்வைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து சங்கம் நிறுவிக்கொண்டு, பணம் திரட்டிப் பிரபுக்களின் தீர்வைக்காக ஓர் அளவு பணம் கொடுத்துத் தீர்வை விதிக்காவண்ணம் வாக்குறுதி பெற்றுக்கொண்டார்கள். இவ்விதச் சங்கங்கள் நிறுவப்பட்டவுடன் ஒரு நகரத்தில் உள்ள வியாபாரிகள் வேறு வியாபாரிகள் வந்து குடியேறுவதைத் தடைசெய்தார்கள். விற்பனை முறைகளையும் விலைகளையும் நிருணயம் செய்து, போட்டி இன்றி வியாபாரம் செய்யத் தலைப்பட்டார்கள். குழுவின் அங்கத்தினராக இருப்பவர்களுக்குக் குழு பல உதவிகளைச்செய்துவந்தது. துன்ப காலங்களில் பண உதவியையும் உணவு உதவியையும் செய்துவந்தது. மேலும் வியாபாரத்தில் சச்சரவுகள் ஏற்பட்டால் சங்கம் சமரசமாக அதைத் தீர்த்து வைப்பதில் முனைந்தது. பொருள்கள் வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள வசதிகளையும் ஒரு வியாபாரி மாத்திரம் அடையாமல், சங்கத்தில் உள்ள எல்லா வியாபாரிகளும் அடையும்படி அந்தச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். வாணிபக்குழு, வியாபாரிகள் அனைவரையும் பாரபட்சமற்ற முறையில் சமமாகக் கருதி வந்தது. வாணிபக்குழு 12ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 15ஆம் நூற்றாண்டு வரையில் சிறப்புடன் வளர்ந்து வந்தது.
தொழிலாளர் சங்கம்: தொழிலாளரும் சங்கத்தை நிறுவிக்கொண்டு12ஆம் நூற்றாண்டு ஆரம்பமுதல்நகரங்களின் நிருவாகத்தில் அதிகமாகக் கலந்துகொண்டனர். குழுக்களின் அங்கத்தினர்களாக இருத்தலே நகர ஆட்சிக்குரிய பல உரிமைகளையும் அவர்களுக்குத் தந்தது.
குழுக்களின் ஆரம்பம் : ஒரு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகள் தொழிலைப்பற்றிய கட்டுப்பாடுகளை உண்டாக்கிக் கடைப்பிடிப்பதற்காகச் சங்கங்கள் நிறுவிக்கொண்டார்கள். இச் சங்கங்கள் வெளியார்கள் நகரத்தில் குடியேறித் தொழில் நடத்துவதைத் தடைசெய்தன. மேலும் தொழில் முறைகளைப்பற்றியும், செய்யப்படும் பொருள்களின் தரத்தைப்பற்றியும் பல கட்டுப்பாடுகள் இயற்றின. நாள் தொழிலாளிகள் (Journeymen) என்றும், பயிற்சி மாணவர் (Apprentices) என்றும் இரு சாரார்களை வேலையில் நியமித்துப் பயிற்சி கொடுத்து வந்தன. சிறுவர்களுக்கு 16 வயது வரை உணவும், உடையும், சிறிது கைச்செலவுக்குப் பணமும் கொடுத்துக் கற்பித்தன. தேர்ச்சியடைந்தவுடன் அவர்கள் எதேச்சையாக யாரிடமும் சேவைசெய்து கூலி சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாள் தொழிலாளி மூலதனம் சேமித்துக்கொண்டு, தொழிலாளிக் குழுவில் கட்டணம் கட்டி அங்கத்தினன் ஆனான். மேலும் தொழில் நடத்துவதற்கு மூலதனம் வேண்டும். அங்கத்தினர் ஆவதற்குப் போதுமான தேர்ச்சி இருந்தால் அவனுக்குத் தேர்ந்த தொழிலாளி (Master craftsman) என்ற பட்டமும் உண்டாகும்.
தேர்ந்த தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து செய்யப்படும் பொருள்களின் தரம், அவற்றின் விலை, கச்சாப்பொருள்கள் வாங்கவேண்டிய விலை போன்ற தொழிலைப்பற்றிய பல கட்டுப்பாடுகளைத் தீர்மானிப்பார்கள். வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும். இறப்பவர்களின் குடும்பத்தாருக்கும் உதவிநிதி ஒதுக்கிவைப்பார்கள்.
குழு தற்காலத்திய தொழிலாளர் சங்கம் போன்றதல்ல. அது உற்பத்தியாளர்கள் தொழில் மேன்மையடைவதற்காக நிறுவப்பட்ட சங்கமாகும். அது ஒரு சாராரின் தனிப்பட்ட உணர்ச்சியை மாத்திரம் பெருக்கவில்லை. அது மூன்றுவகைப்பட்ட தொழிலாளர்களையும் இணைத்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து மேன்மைக்குக் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்தது.
குழுக்களின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் : வியாபாரிகளைக் காப்பதற்காகவும், தொழிலாளிகளுக்கு உதவிபுரிவதற்காகவும் எழுந்த குழு முறை சிறிது சிறிதாகத் தனது உயரிய நோக்கத்தை விட்டு, ஒரு சாராருக்கு மாத்திரம் நன்மை பயக்கும் முறையில் நடந்துகொண்டது. புதிதாகக் குழுவிற்கு அங்கத்தினர்களைச் சேர்க்கும்போது நாள் தொழிலாளிகளைச் சேர்த்துக்கொள்வதற்குத் தடைகள் விதித்தது. குழுக்களுக்குள்ளேயே எல்லாத் தேர்ந்த தொழிலாளிகளும் சமமாகக் கருதப்படாமல், பலவேறு பாகுபாடுகள் உண்டாயின. குழுக்களின் ஆதிக்கம் அதிகமானதால் அரசாங்கமும் அவற்றின் வேலையில் தலையிட்டது. குழுக்களின் சொத்துக்கள் பறிமுதலாயின. அவற்றின் சேமிப்பும் வருவாயும் குறைந்தவுடன் அவற்றின் சேவையும் குறைவடைந்தது. குழுக்களின் அமைப்பும், அவற்றின் சட்டதிட்ட திங்களும் அரசாங்கத்தாலும், அவர்களால் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நியதி ஏற்பட்டது. இவ்விதச் சட்டத்தினால் குழுக்களின் சுயேச்சை மறைந்தது. குழு முறையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாள் தொழிலாளிகள் பட்டணங்களை விட்டுக் கிராமங்களில் குடியேறிக் குழுக்களின் ஆட்சி வரம்புக்கு வெளியே தொழிலை நடத்திவரத் தலைப்பட்டார்கள். இவர்களுக்கு அனுகூலமாகப் புதிதாக உண்டான முதலாளிகள் இவர்களுக்கு முதல் கொடுத்து, அவர்களை உற்பத்தியில் ஈடுபடும்படி செய்தார்கள். நாள் தொழிலாளிகள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வரும் தொழிலால் உண்டாக்கப்பட்ட பொருள்களைத் தங்களுக்கு முதல் கொடுத்து உதவிய முதலாளி மூலமே விற்பனை செய்தார்கள். இவ்வித மாறுதல்களால் குழு முறை 16ஆம் நூற்றாண்டு முதல் வலுக்குறைந்து, குறையத் தலைப்பட்டது.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் : 12,13,14ஆம் நூற்றாண்டுகளில் பல பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டில் ஒரேவிதமான நிறையும் அளவும் வழங்குவதற்காக அளவைச் சட்டம் (Assize of Measures) 1197ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. தொழிலாளிகளின் கூலியை நிருணயிப்பதற்காக 1351-ல் தொழிலாளர் சட்டம் (Statute of Labourers) இயற்றப்பட்டது. 1563ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழில் பயிலுவோர் சட்டம் தொழில் பயிலும்போது கொடுக்க வேண்டிய கூலி, நடத்தப்பட வேண்டிய முறை, தொழில் பயிலும் கால அளவு முதலியவைகளை வரையறை செய்தது. மேலும் ஏழைகள் பராமரிப்புக்காக 1601ஆம் ஆண்டு முதல் சட்டங்கள் இயற்றப்பட்டு, ஒவ்வொரு சிறிய கிராமமும் அங்கு உள்ள ஏழைகளைப் பராமரிக்க வேண்டுமென்ற விதி உண்டாக்கப்பட்டது.
III-ம் எட்வர்டு அரசரின் பொருளாதார ஏற்பாடுகள்: 14ஆம் நூற்றாண்டில் III-ம் எட்வர்டு அரசர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறும் சிறந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுத்து, அவர்களை உற்பத்தியில் ஈடுபடும்படி செய்தார். இம்முறையினால் 1331-ல் பிளாண்டர்ஸி (Flanders) லிருந்து கம்பளி நெசவாளர்கள் வந்து குடியேறினார்கள். கம்பளத்தொழில் மேலும் விருத்தியாவதற்காக இங்கிலாந்திலிருந்து கச்சா உரோமம் வெளிநாட்டிற்குப் போகாமல் தடை செய்யப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டுத் தொழிலாளிகள் இங்கிலாந்தின் தொழிலை விருத்தி செய்தார்கள். இவர்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிப் பிற்காலத்தில் இங்கிலாந்து பெருந்தொழில்களில் மேன்மையடைவதற்குக் காரணராயிருந்தார்கள்.
வாணிப முறை (Mercantilism) : பொருளாதாரத் துறையில் செழிப்படைய வாணிப முறை கடைப்பிடிக்கப்பட்டது. வாணிப முறையினால் நாட்டின் வாணிபம் பெருகி, மிகுதியாகப் பொருள் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாணிப முறையின் முக்கிய அமிசங்களைப் பின் வருமாறு விளக்கலாம்:
1. விவசாயம் பெருகுவதற்காகவும், இலாபகரமாவதற்காகவும் வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதியைக் கட்டுப்படுத்தியும், தானிய ஏற்றுமதிக்காக மானியங்கள் அளித்தும், 1663 முதல் பல சட்டங்கள் வகுக்கப்பட்டன.
2. கம்பள நெசவுத்தொழிலை மேலும் நிலைப்படுத்துவதற்காகப் பலர் கம்பளம் அணியவேண்டும் என்றும், தொழில் வளர்ச்சி அடைவதற்காகத் தொழிலாளிகள் வெளிநாட்டிற்குக் குடிபோகக் கூடாதென்றும், வெளி நாட்டினருக்குச் சுதேசத் தொழில்களின் நுணுக்கங்களை யறிவித்தலும், அவைகளுக்கான எந்திரங்களைக் கொடுத்தலும் கூடாதென்றும் பல தடைச் சட்டங்கள் 1718, 1774-ல் பிறப்பிக்கப்பட்டன.
3. கப்பல் கட்டும் தொழிலை வளர்க்கவும், கடல் கடந்து செய்யும் வியாபாரத்திற்குக் கப்பல்களைச் சேர்க்கவும் கருதிக் கடல் வாணிபச் சட்டங்கள் 1651, 1660ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்டன. இங்கிலாந்தின் ஏற்றுமதி இறக்குமதிகளும் ஆங்கிலக் கப்பல்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டுமென்ற திட்டம் வகுக்கப்பட்டது. இச்சட்டங்களினால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு பெருகாவிட்டாலும், கப்பல்களைச் செலுத்த வல்லவர்களாக வேண்டுமென்ற ஆர்வம் மக்களுக்கு அதிகரித்தது. அப்பயிற்சி, பிற்காலப் பிரிட்டனின் வல்லமைக்கு அடிப்படைக் காரணமாயிற்று.4. வாணிப முறையின் அடிப்படைக் கொள்கை வெளிநாட்டு வியாபாரத்தில் இங்கிலாந்து சாதகமான வியாபார நிலையை அடைய வேண்டுமென்பதாம். ஏற்றுமதியை எவ்வளவு அதிகமாக்கலாமோ, அவ்வளவு அதிகமாக்கி, இறக்குமதியைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் சாதகமான வியாபார நிலையால் வெளிநாட்டார் அதிகமாக வாங்கின பொருளுக்கீடாக, நாட்டுக்குள் பவுன் வந்து குவியும். வணிக முறையில் எவ்வளவு அதிகப் பவுன் ஒரு நாட்டில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த நாடு வளமாக இருக்குமென்பதாம். இக்கொள்கை பிற்காலத்தில் தவறு என்று விளக்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டு வரையில் வாணிபமுறை சிறந்து விளங்கினாலும், பிற்காலத்தில் தோன்றிய ஆடம் ஸ்மித் முதலிய ஆங்கிலப் பொருளாதார அறிஞர்கள் இக் கொள்கையின் குறைபாடுகளை வெளிப்படுத்தினமையால் 18ஆம் நூற்றாண்டின் நடுவில் இக் கொள்கை நிராகரிக்கப்பட்டு மறைய ஆரம்பித்தது.
தொழிற் புரட்சி : 1760 முதல் 1840 வரையில் இங்கிலாந்தின் உற்பத்தி முறையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. இம் மாறுதல்கள் இங்கிலாந்தைப் பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த நாடாகவும், அதிக வருமானம் மிகுந்த நாடாகவும் மாற்றின. இம்மாறுதல்களை எல்லாம் ஒன்று சேர்த்துத் தொழிற் புரட்சி என்று பொருளாதார வரலாற்றினர் கூறுவர். இம் மாறுதல்கள் சிறிது சிறிதாக ஏற்பட்டனவாதலால் தொழிற்புரட்சி என்பதைவிடத் தொழில் வளர்ச்சி என்பது பொருத்தமாகும். ஆனால் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த பொருளாதார நிலையையும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த பொருளாதார நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின் மாறுதல்கள் எல்லாம் மிகப் பெரிய மாறுதல்களாகவே தோன்றும். இக் காரணம் கொண்டே இதைத் தொழிற்புரட்சி என்றனர்.
இங்கிலாந்தின் விவசாய வளர்ச்சி : 16ஆம் நூற்றாண்டில் பிரபுக்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட நிலங்களை ஒன்று சேர்த்து, வேலி கட்டி, ஆடு மேய்ப்பதால் உரோம விற்பனையாலும், மாமிச விற்பனையாலும் அதிக இலாபத்தை அடைந்தார்கள். வேலி இடும் போது பயிர் நிலத்துடன் கிராமப் பொது நிலங்களையும் சேர்த்து வேலி இட்டனர். இதனால் விவசாயம் செய்தும், ஆடுமாடுகள் மேய்த்தும் வாழ்க்கை நடத்திய ஏழைக் குடியானவர்களுக்குப் பிழைப்புக் குன்றியது.
18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட உற்பத்தி முறை மாறுதல்கள் விவசாயத்திலும் பெரும்புரட்சியை உண்டாக்கின. புதிய ஆலைகளில் அதிக இலாபம் அடையும் முதலாளிகள் அவ்விதமே விவசாயத்திலும் அதிக இலாபம் அடைய எண்ணி, விவசாய உற்பத்தி முறைகளில் அதிக மாறுதல்களைப் புகுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வேலியிடும் முறையைப் போலவே இக் காலத்திலும் வேலியிடும் முறையை மேற்கொண்டார்கள். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வேலியிடுதல் ஆடு மாடு மேய்ப்பதற்காகும். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வேலியிடுதல் பெரிய அளவில் விவசாயம் செய்வதற்கேயாம். 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே கிராமத்தில் பெரிய அளவில் நிலம் உள்ளவர்கள் வேலியிடுவதற்கு அனுமதி வேண்டிப் பார்லிமென்டுக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். பார்லிமென்டும் இவ் விண்ணப்பங்களை யேற்று, அப் பகுதிகளில் உள்ள நிலங்களை ஒன்று சேர்ப்பதற்காக அதிகாரிகளை நியமித்தது. இவ்வாறு சிறுநிலக் கிழார்களின் நிலம் ஒதுக்கப்பட்டுப் பெரு நிலக் கிழார்களின் நிலங்களெல்லாம் ஒருங்கே சேர்த்து அமைப்பதற்கு வழி கிடைத்தது. சிறிய நிலப் பகுதிக்கு உரிமையாளனாகின்ற விவசாயிக்குப் பல இடையூறுகள் இருந்தன. வேலியிடும் செலவில் ஒரு பகுதியை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆடு மாடுகளை மேய்ப்பதற்குரிய நிலங்களையும் சேர்த்துப் பெருநிலக் கிழார்கள் வேலியிடுதலால், மேய்ச்சல் நிலம் குறைந்தது; அதனால் சிறிய நிலமுடையோர்க்கு, மேய்ச்சல் தொழிலால் கிடைக்கக் கூடிய வருமானம் குன்றியது. வேறு வழியில்லாமல் சிறுநிலக் கிழார்களில் பெரும்பாலோர் தம் நிலத்தைப் பெருநிலக் கிழார்களுக்கு விற்றுவிட்டுக் கிடைத்த முதலோடு தொழிற்சாலை நிரம்பியுள்ள பட்டணங்களை நோக்கிப் புறப்பட்டார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் குற்றேவல் செய்பவர்களாகவும் வாரத்துக்குப் பயிரிடுபவர்களாகவும் மாறினர். விவசாய வளர்ச்சிக்காக இங்கிலாந்து வேலியிடும் முறையைக் கடைப்பிடித்ததால் நாட்டைப் பலப்படுத்தும் சிறுபான்மை விவசாயிகளை (Yeomen) விரட்டும்படி நேர்ந்தது. இதனால் சிறுபான்மை விவசாயிகளால் நாட்டிற்குக் கிடைக்கும் நன்மையை இங்கிலாந்து இழந்தது.
விவசாய முறையிலும் பல புரட்சிகரமான மாறுதல்கள் புகுந்தன. அடைப்பிலா வயல் முறையால் (Open field system) நடந்துவந்த மூவயல் முறை (Three field system) கைவிடப்பட்டு, நிலங்களைப் பல்வேறு விதத்தில் பயிரிடும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. நிலங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தரிசாக விடாமல், தானியங்கள் விளைவித்த பிறகு, மாற்றுப் பயிர்களாகப் பலவிதப் புல்களையும் கிழங்குகளையும் விளைவித்து, நிலத்தின் வளம் கெடாமல் பாதுகாத்தார்கள். இவ்வித மாற்றுப் பயிர்கள் தம் வேர்களில் பயிர்களுக்கு வேண்டிய வளத்தைச் சேமித்துவைத்தன. பயிர்களும் செழித்து வளர்ந்தன. இவ்வித முறையினால் விளைவு அதிகரித்ததோடு, கால்நடைகளுக்கு வேண்டிய உணவு வகைகளும் அதிகமாகக் கிடைத்தன.
1835-ல் நிலங்களின் வடிகாலுக்காகச் சிறந்த முறைகளை ஸ்மித் என்பவர் (Smith of Deanston) கண்டுபிடித்தார். எந்திரக் கலப்பைகளும், அறுவடை எந்திரங்களும், விவசாயத்தில் உழைப்பைக் குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்தின. 1840-ல் லீபிக் (Liebig) என்னும் ஜெர்மானியர் பயிர்களுக்கு வேண்டிய சத்துக்களை எவ்வாறு ரசாயனப் பொருள்களின் மூலம் கொடுக்கலாம் என்பதைப்பற்றி ஆராய்ந்து சிறந்த நூல்களை வெளியிட்டார். லாஸ் (Lawes) என்னும் விவசாயி ராத்தம்ஸ்டட் (Rothamsted) என்னும் இடத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சிப் பண்ணையை நிறுவியதோடு, ரசாயன எரு உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தினார். இதைப்போன்ற பல தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன எரு பயிர்களுக்கு மிகுதியாகக் கிடைத்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில விவசாயம் மற்ற ஐரோப்பிய நாட்டின் விவசாயத்தைவிட எல்லா விதத்திலும் உயர்வடைந்திருந்தது. கால்நடைகளுக்கு வேண்டிய உணவு வகைகள் அதிகமாகக் கிடைத்தபடியால் கால்நடைகளும் அபிவிருத்தியடைந்தன. ராபர்ட் பேக்வெல் (1723-95) விஞ்ஞான முறைப்படி சிறந்த கால்நடைகளை உற்பத்தி செய்தார்.
1846லிருந்து இங்கிலாந்தில் தானிய வரி அகற்றப்பட்டதாலும், அமெரிக்காவிலிருந்து வரும் தானியத்திற்குக் கப்பல் கட்டணங்கள் குறைவாக இருந்ததாலும், இங்கிலாந்தில் வெளிநாட்டுத் தானிய இறக்குமதி அதிகரித்தது. விவசாயி அதிக நஷ்டத்திற்கு ஆளானான். இக்காலத்தில் விவசாயி மிகுந்த தைரியத்தோடு தானிய உற்பத்தியிலிருந்து, ஆடு மாடு மேய்ப்பதிலும், அவைகளிலிருந்து மாமிசம், பால் முதலிய மிருகச் சத்துக்களை உற்பத்திசெய்து விற்பதிலும் கவனம் செலுத்தலானான். 1895-1914 வரையில் அதிக இலாபத்தைக் கொடுத்த பொருளை விவசாயி பயிரிட்டான். முதல் உலக யுத்த காலத்தில் (1914-18) உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தடைப்பட்டதால் உள்நாட்டிலேயே அதிக தானியம் உற்பத்தி செய்வதில் முனைந்தான். ஆனால் யுத்தத்திற்குப் பிறகு இறக்குமதி அதிகரித்து, விவசாயியின் தானிய உற்பத்தி சிறிது குறைந்தது. 1932லிருந்து அரசாங்கம் கோதுமை உற்பத்திக்குக் கொடுத்த மானியம், உணவு உற்பத்தி குறையாமல் காத்தது.
சிறுபான்மை விவசாயத்திற்கு உதவியளித்தல் : 1892லும், 1908லும் இரண்டு சிறு பண்ணைச் சட்டங்கள் (The Small Holdings Act) இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு கௌன்டி சபையும் (County Council) நிலங்களை வாங்கிச் சிறுபான்மை விவசாயிகளுக்கு விற்கவோ, குத்தகைக்கு விடவோ அனுமதிக்கப்பட்டது. முதல் சட்டம் அவ்வளவு அதிகமாகப் பயனளிக்காது போயினும், 1908ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் 18.000 புதிய சிறிய நிலக்கிழார்களை உண்டாக்கியது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு திரும்பி வரும் போர்வீரர்களுக்கு நிலங்கள் கொடுப்பதற்காக 1926ஆம் ஆண்டு புதியதொரு சிறு பண்ணைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் சிறிய பண்ணைகள் அதிகரிக்கவில்லை. 1919-1930-ல் சிறிய பண்ணைகள் குறைந்தன. இதிலிருந்து இங்கிலாந்தின் சிறு பண்ணை இயக்கம் அதிக ஆதரவு பெற்றிருக்கவில்லை என்றும், பெரும் பண்ணைகளே அதிக ஆதரவு பெற்றுள்ளன என்றும் திண்ணமாகக் கூறலாம்.
காடுகளைப் பெருக்கவும், விவசாய ஆராய்ச்சி செய்யவும், நாட்டுக் கைத்தொழில்களை வளர்க்கவும், போக்குவரவுச் சாதனங்களைப் பெருக்கவும் மானியம் கொடுப்பதற்காக 1909-ல் ஒரு நிதி ண்டாக்கப்பட்டது. 1914-ல் இங்கிலாந்து விவசாயத்துறையில் அனுபவம் உள்ள ஆலோசனையாளரின்கீழ் 12 கௌன்டிகளாகப் பிரிக்கப்பட்டது. விவசாயக் கல்வியை நாட்டில் பரப்புவதற்காக அரசாங்கம் அதிகமாக முயன்றது.
1947-ல் இயற்றப்பட்ட விவசாயச் சட்டத்தின் முக்கியமான கொள்கை நாட்டின் நன்மையைப் பாதிக்காமல் தேசத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எல்லாம் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதாகும். கால்நடைகளிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமென்று கூறப்பட்டது. 1948-ல் நடத்தப்பட்ட பொருளாதாரக் கணிப்பின்படி (Economic Survey), 1951-ல் இங்கிலாந்தின் விவசாயப் பொருள் உற்பத்தி 20% 1946-47-ல் உற்பத்தியைவிட அதிகரிக்க வேண்டுமென்பதாம். இது 1936-39 உற்பத்தியைவிட 50% அதிகமாக இருக்கும்.
வர்த்தகக் கொள்கைகள் : 16, 17ஆம் நூற்றாண்டுகளில் தலைசிறந்து விளங்கிய வாணிப முறை எவ்வாறு பல அடிப்படையான தவறுகளை உடையதாக இருந்தது என்பது விளங்கிற்று. டேவிட் ஹியூம், ஆடம் ஸ்மித் என்பவர்கள் இக்கொள்கை உபயோகமற்றது என்று எடுத்துரைத்தார்கள்.
1736-ல் இளைய பிட் (Younger Pitt) பிரான்ஸோடு செய்த வர்த்தக உடன்படிக்கையினால் இங்கிலாந்திலிருந்து கம்பளம், இரும்புச் சாமான்கள் முதலியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரான்ஸிலிருந்து பழ ரசமும், விவசாயப் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. 1823-27-ல், பிரிட்டிஷ் வர்த்தக இலாகாவின் தலைவர் ஹஸ்கிசன் கடல் வாணிபச் சட்டத்தைத் திருத்திப் பல வியாபாரக் கட்டுப்பாடுகளை அகற்றினார். பல பொருள்களின் இறக்குமதி வரியைக் குறைத்தார். 1841-ல் டோரிக் கட்சியைச் சார்ந்த பீல் மந்திரிசபையை அமைத்ததும், 750 பொருள்களின் இறக்குமதி வரியை அகற்றினார்.
1815-ல் ஏற்பட்ட தானியச் சட்டத்தினால் உள்நாட்டுக் கோதுமையின் விலை குறைவாக இருக்கும்போது அதிக வரியும், அதிகமாக இருக்கும்போது குறைந்த வரியுமாகப் பல விகிதத்தில் வரி விதிக்கப்பட்டு, விலை உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அதிக விலையினால் தொழிலாளிகளும், குத்தகைக்குப் பயிரிடும் குடியானவர்களும் பல துன்பத்திற்காளானார்கள்.
1839-ல் தானிய வரி எதிர்ப்புச் சங்கம் நிறுவப்பட்டது. காப்டன் (Cobden) பிரைட் (Bright) என்ற இருவர் தானிய வரி அகற்றப்பட்டு, நாட்டின் வர்த்தகம் விரிவடைய வேண்டுமென்று பெரும் பிரசாரங்கள் செய்துவந்தனர். 1845-ல் ஏற்பட்ட கோதுமைப் பஞ்சத்தாலும், அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்குப் பஞ்சத்தாலும், மக்கள் பெருந்துன்பதிற்கு ஆளானார்கள். 1846-ல் பீல் (Peel) பார்லிமென்டில் நிறைவேற்றிய சட்டத்தினால் 1849 முதல் தானிய வரி அகற்றப்பட்டது. வியாபாரக் கட்டுப்பாடுகளை அகற்ற, 1815லிருந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1846-ல் இயற்றப்பட்ட தானியவரி நீக்கம் அந்தக் கொள்கைக்குச் சிகரம் வைத்ததுபோல் அமைந்தது.
தடையிலா வாணிபம் (Free trade) : தானியச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு மற்ற இறக்குமதிச் சட்டங்களும் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன. 1853லிருந்து சுமார் 70 ஆண்டுகள் இங்கிலாந்து தீவிர நம்பிக்கையுடன் தடையிலா வாணிப முறையைக் கையாண்டு வந்தது.
காப்புவரிக் கொள்கையின் மலர்ச்சி: 1903-ல், ஜோசப் சேம்பர்லேன் பிரிட்டிஷ் தொழில்களுக்குக் காப்புவரிகளின் அவசியத்தை எடுத்துரைக்க ஒரு பிரசாரம் நடத்தினார். ஆனால் பொதுமக்களின் மனம் காப்பு வரிகளில் ஈடுபடவில்லை. முதல் உலக யுத்த காலத்தில் இறக்குமதியாகும் கடிகாரம், மோட்டார்கள், மற்ற ஆடம்பர சாமான்களுக்கு 33% மெக் கன்னா வரிகள் (Mc Kenna Duties) விதிக்கப்பட்டன. இவை கப்பலில் உள்ள இடத்தைச் சிக்கனம் செய்ய ஏற்பட்டவையாகும். ஆனால் யுத்தம் முடிந்த பிறகும் இந்த வரிகள் நீக்கப்படவில்லை. 1921-ல் இயற்றப்பட்ட தொழில் பாதுகாப்புச் சட்டம் (Safeguarding Industries Act) பல ஆதாரக் கைத்தொழில்களுக்குக் காப்புவரி விதித்தது. 1925-ல் மேலும் பல காப்புவரிகள் விதிக்கப்பட்டன.
வியாபாரத்தில் பாதகமான நிலை ஏற்பட்டு இருந்ததால், 1932-ல் பாதுகாப்புச் சட்டம் ஒன்று இயற்றி, 10% இறக்குமதி வரி எல்லாப் பொருள்களின் மீதும் விதிக்கப்பட்டது. பிறகு அதை 20% ஆக உயர்த்தினார்கள். இறக்குமதி வரி விதிப்பதற்கு ஆலோசனை சொல்ல ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு, அதுவும் நீண்டதொரு பட்டியலைத் தயாரித்தது. சிறப்பாக இறக்குமதியாகும் உணவுப் பொருள்களின் மீதும் கச்சாப் பொருள்களின் மீதும் வரி விதிக்கப்பட்டது. இவ்விதமாகப் பிரிட்டன் 1846-ல் ஆரம்பித்த எதேச்சை வாணிபத்தை உதறித் தள்ளிக் காப்பு வரி உள்ள வியாபார முறையை ஏற்றுக்கொண்டது.
பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் வியாபாரக் கொள்கைகளை மேற்கொண்டும் அமல் செய்தும் வந்தது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு சாம்ராச்சிய ஆதரவு என்ற கொள்கை பரவத் தலைப்பட்டது. 1932-ல் ஆட்டவாஎன்ற இடத்தில் நடந்த சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் எவ்வாறு சாம்ராச்சியப் பொருள்களுக்குச் சலுகை காட்டப்பட வேண்டும் என்ற விவரங்கள் தீர்மானிக்கப்பட்டன.
தொழிற்சாலைச் சட்டம் : தொழிற்புரட்சி ஏற்பட்ட காலமுதல் தொழிலாளிகள் திருப்தியற்றும் கலக்கமடைந்தும் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி கொதித்தெழுந்து எந்திரங்களை நாசம் செய்தும், முதலாளிகளைப் பயமுறுத்தியும் வந்தனர். இவ்வித வெறுப்புக்கெல்லாம் முக்கிய காரணம் தொழிற் புரட்சியினால் கைத்தொழில் ஒடுக்கப்பட்டுத் தொழிலாளிகளுக்கு வருவாய் குன்றியதும், அவர்கள் சுயேச்சை மறைந்ததுமாகும். முதலாளிகள் அதிக நேரம் வேலை வாங்கியும், குறைந்த கூலி கொடுத்தும், இளம் வயதுள்ளவர்களையும் குழந்தைகளையும் வேலைக்கு நியமித்தும், தொழிற்சாலைகளில் தக்க சௌகரியங்களைச் செய்து கொடாமலும் இருந்ததால் மேலும் மேலும் வெறுப்பு வளர்ந்து வந்தது.
இம் மாதிரியான தொழிலாளிகளின் மனக் கசப்பைப் போக்குவதற்குப் பல சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இயற்றப்பட்டன. 1802-ல் ராபர்ட் பீல் கொண்டு வந்த உடல் நல ஒழுக்கச் சட்டம் நெசவாலைகளில் வேலை செய்யும் ஏழைக்குழந்தைகளுக்கு உழைக்கும் நேரம் 12 மணிதான் என்று வரையறுத்தது. 1819-ல் இயற்றப்பட்ட இரண்டாவது தொழிற்சாலைச் சட்டம் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு நியமிக்கக் கூடாதென்றும், ஏழைக்குழந்தைகளுக்கும், தாய் தகப்பன் உள்ள குழந்தைகளுக்கும் வேலை நேரம் 12 மணி என்றும் வரையறுத்தது. 1833-ல் இயற்றப்பட்ட தொழிற்சட்டம், 9 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், 13 வயதுக்குட்பட்டவர் களுக்கு வேலை நேரம் 9 மணி என்றும், 13-18 வயதுள்ளவர்களுக்கு வேலை நேரம் 12 மணி என்றும் குறிப்பிட்டது. இச் சட்டம் சரியாக அமலில் இருந்து வருகிறதா என்பதைக் கண்காணிக்க 4 தொழிற்சாலைக் கண் காணிப்பு அதிகாரிகள் நியமனம் பெற்றார்கள். 1844-ல் இயற்றப்பட்ட தொழிற்சாலைச் சட்டம் பெண்களுக்கு 12 மணி வேலை நேரம் என்று வரையறுத்தது. 1847-ல் இயற்றப்பட்ட சட்டம் தொழிற்சாலையில் 10 மணி வேலை நேரம் என்று தீர்மானித்தது. ஆனால் இச் சட்டத்தின் நன்மை தொழிலாளிகளுக்கு கிடைக்காதவாறு முதலாளிகள் மாற்று முறைகள் (Shift system) ஏற்படுத்தி அதிக நேரம் வேலை வாங்கினர். இதைப் போக்குவதற்காக, 1850, 1853-ல் இயற்றப்பட்ட சட்டத்தினால் பெண்களும் குழந்தைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலோ, அல்லது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலோ வேலை செய்யலாம் என்றும், இடையே 1 மணி நேரம் சாப்பாட்டிற்கு இடைவேளை கொடுக்கவேண்டும் என்றும் விதிகள் உண்டாக்கப்பட்டன. இதனால் மறைமுகமாக 10 மணிக்குமேல் வேலை வாங்கும் பழக்கம் அடியோடு ஒழிந்தது.
1867-ல் சுகாதாரமற்ற தொழில்களைப்பற்றியும், தொழிற்சாலைச் சட்டம் அமலுக்குக் கொண்டுவர வேண்டிய தொழிற்சாலைகளைப்பற்றியும் பல விதிகள் உண்டாக்கப்பட்டன. 1878-ல் தொழிற்சட்டம், அமலில் இருந்த சட்டங்களை ஒழுங்குபடுத்தியும், அவைகள் அமல் நடப்பதற்கு வேண்டிய வழிகளைச் செம்மைப்படுத்தியும் வைத்தது. தொழிற்கூடங்களை ஐந்து வகையாகப் பிரித்து, நெசவாலைகள், நெசவாலைகள் அல்லாதவை, சிறுவர் வேலை செய்யும் தொழிற்கூடங்கள், சிறுவர் வேலை செய்யாத் தொழிற்கூடங்கள், குடும்பத் தொழில்கள் எனப் பிரித்து, அவைகளுக்கான விதிகளை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி வெளியிட்டது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குக் குறைந்த வயது 10 என்று குறிப்பிட்டது.
1891-ல் ஆலை, தொழிற்சாலைச் சட்டத்தால், தொழிற்சாலையில் வேலை செய்யும் குழந்தைகளின் குறைந்த வயது 11க்கு உயர்த்தப்பட்டது. 1901-ல் சட்டங்கள், தீர்மானங்கள், அமைச்சர்களின் ஆணைகள் முதலியவைகளை ஒன்று திரட்டி, ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. 1937-ல் ஏற்பட்ட சட்டம் தொழிலாளர் வேலைநேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணியாகக் குறைத்தது.
தொழிற்சங்க வளர்ச்சி: 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாளிகள் பல தொழிற்சபைகளை (Trade Clubs) நிறுவிக்கொண்டார்கள். இவை நட்பு மனப்பான்மையோடு நடந்து வந்தன. எதிர்த்து நின்று வாதாடும் எண்ணத்தோடு அவை ஆரம்பிக்கப்படவில்லை. தொழிலாளிகளின் நலனுக்காகப் பார்லிமென்டினால் இயற்றப்பட்ட சட்டங்களை அமலில் வைத்திருப்பதற்காகப் பாடுபடுவதே. இச்சங்கங்களின் முக்கிய நோக்கம். இச்சங்கங்களின் ஆரம்ப வெற்றியைக் கண்ட அரசாங்கம் வெகுண்டு, 1799-1800-ல் இணைப்புச் சட்டங்கள் (Combination Laws) என்ற சட்டங்களை இயற்றித் தொழிலாளிகள் ஒன்று கூடாதபடி தடை உத்தரவு பிறப்பித்தது. மீறியவர்கள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
1824-ல் தொழிற் சங்கங்களின் இணைப்புக்கு எதிரிடையாக இருந்த சட்டங்கள் அகற்றப்பட்டன. தொழிலாளர் சங்கங்கள் விரைவிலேயே அதிகரித்தன. 1824-25லிருந்து தொழிற்சங்கத்தினர். பல உயர்ந்த நோக்கங்களோடு சங்கங்களைத் திருத்தியமைத்துப் பணியாற்றத் தொடங்கினர். இக்காலத்தில் தொழிற்
சங்கங்களை ஒன்று சேர்த்து இணைத்துப் பெரிய தேசியத் தொழிற்சங்கம் நிறுவப்படவேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. 1834-ல் ஒரு பெரிய தேசியத் தொழிற்சங்க இணைப்பு ஏற்பட்டது (Grand National Consolidated Trade Union). ராபர்ட் ஓவன் இவ்விணைப்பை உண்டாக்குவதற்கு மூலகாரணமாக இருந்தார். இந்த இணைப்புப் பலவேறு காரணங்களால் வேலை நிறுத்தம் செய்ததால் இதன் நிதியெல்லாம் வீணாயின. முதலாளிகளும், தொழிலாளர்களின் பயமுறுத்தலால் ஒருவிதத்திலும் தளரவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட பல தோல்விகளினால் தேசியத் தொழிற்சங்கங்கள் சிறிது காலம் பின்வாங்கின. 1843-ல் தொழிற்சங்கங்கள் புதிய நோக்கத்துடன் அலுவல்களை ஆரம்பித்தன. இச்சங்கங்களுக்குப் பல வெற்றிகளும் கிடைத்தன.1871-ல் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. இச் சட்டத்தினால் தொழிலாளர் சங்கங்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்னும் உரிமையளிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்வதற்கு இடையூறாக இருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. சிறிது சிறிதாகத் தொழிலாளர் சங்கங்கள் திறனற்ற வேலையாட்களுக்காகவும் உண்டாக்கப்பட்டன. அவைகளுடைய எண்ணிக்கையும் அதிகரித்தது.
1901-ல் டாப்வேல் ரெயில்வே கம்பெனியில் (Taff Vale Railway Company) வேலை செய்யும் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர். ரெயில்வே கம்பனியார் வேலை நிறுத்த காலத்தில் ஏற்பட்ட பல பொருள் நஷ்டத்திற்காக, நஷ்ட ஈடு கோரி ஒரு வழக்குத் தொடர்ந்தனர். தொழிலாளர் சங்கம் நஷ்ட ஈடு கொடுத்தது. இதனால் தொழிலாளர் சங்கம் நீதிமன்றத்தில் இழுக்கப்பட்டு. அதன் நிதி பறிமுதல் செய்யப்படலாம் என்று ஏற்பட்டது. இதனால் வியப்படைந்த தொழிலாளிகள் சங்கத்தின் நிதியைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார்கள். 1905-ல் தொழில் விவகாரச் சட்டம் (Trade Disputes Act) இயற்றப்பட்டது. குற்றங்கள் இழைத்த தனி மெம்பர்களின்மீதுதான் வழக்குத் தொடரவேண்டுமென்றும், தொழிற் சங்கங்களின் மீது தொடரக்கூடாதென்றும் தெளிவாக்கப்பட்டது. இதுவே தொழிற் சங்கங்களுங்குக் கிடைத்த முதல் வெற்றியுமாகும்.
நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் சட்டப்படி அரசியல் விஷயங்களுக்காகப் பணம் செலவிடுதல் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தொழிலாளிகள் தேர்தலில் நின்று, பார்லிமென்டு அங்கத்தினர்களாகித் தொழிலாளிகளுக்குச் சேவை செய்யச் சக்தி யற்றவர்களானார்கள். தொழிலாளிகளின் வருங்கால அரசியல் நிலை மிகவும் கீழ்த்தரமாக ஆயிற்று. இடையூறாக இருக்கும் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்று கிளர்ச்சிகள் நடந்தன. 1913-ல் இயற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தினால் தொழிற்சங்கங்கள் அரசியல் வேலைகளுக்காகப் பணம் வசூலிக்கலாம் என்று ஏற்பட்டது. இதன் பிறகு தொழிலாளிகள் தேர்தலில் நின்று, ஆட்சி மன்றத்தில் இடம் பெற்று, நாட்டின் ஆட்சியில் கலந்துகொண்டார்கள்.
1926-ல் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகமற்றத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமென்று தொழிற்சங்கம் உத்தரவு விடுத்தது. பொது வேலைநிறுத்தம் முடிவில் தொழிலாளிகளுக்குத் தோல்வியாக முடிந்தது. 1927-ல் ஒரு தொழிற் சங்கச் சட்டம் இயற்றப்பட்டுப் பொது வேலை நிறுத்தங்களும், ஆதரவு அளிக்கும் வேலை நிறுத்தங்களும் அங்கீகரிக்கப்படா என்று வெளியிடப்பட்டது. அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள், அரசியல் நோக்கங்கள் கொண்ட தொழிற் சங்கங்களில் சேரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொழிலாளர்களும் அரசியலும்: 1890-ல் கெர் ஹார்டி 'சுயேச்சையான தொழிலாளர் கட்சி' (Independent Labour Party) என்று ஒரு புதிய கட்சியை ஏற்படுத்தினார். இது பார்லிமென்டில் ஸ்தானங்களைக் கைப்பற்றித் தொழிலாளர் நன்மைக்குப் பாடுபட முயன்றது. 1899-ல் தொழிலாளர் பிரதிநிதி கமிட்டி என்று ஒரு கமிட்டி ஏற்படுத்திப் பார்லிமென்டில் அங்கத்தினர்களாவதற்கு வேண்டிய திட்டங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். 1906-லிருந்து தொழிற் கட்சி அங்கத்தினர்கள் பார்லிமென்டில் அதிகரிக்கத் தொடங்கி னார்கள். 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் சில குறுகிய கால அரசாங்கங்களைத் தொழிற் கட்சி அமைத்தது.
1945-ல் தொழிற் கட்சி பெரிய வெற்றி கண்டது. பார்லிமென்டில் பெரும்பாலான அங்கத்தினர்கள் தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் மற்றக் கட்சிகளின் உதவி இல்லாமல் மந்திரி சபைஏற்படுத்தி, அரசாங்கத்தை நடத்த வலுவுள்ளவர்களாக ஆனார்கள். தாழ்த்தப்பட்ட தொழிலாளிகள் ஆட்சிப் பீடத்தை எட்டிப்பிடித்துத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக அரசியல் நடத்துதல் தொழிற் கட்சியின் அரிய சாதனைக்குச் சான்றாக அமைகின்றது.
போக்குவரவுச் சாதனங்கள், பெருவழிகள் : இங்கிலாந்தில் ரோமானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெருவழிகள் அமைத்தார்கள். அவர்கள் நாட்டைவிட்டு அகன்றதும் அச்சாலைகள் சீர்கேடடைந்தன. சாலை வசதிகள் வண்டிப் போக்கு வரத்துக்குத் தகுந்தபடி. பெருகாமல் குதிரைச் சவாரிக்காக மாத்திரம் உபயோகப்படும் வகையில் உண்டாக்கப்பட்டன. இப்பாட்டைகள் சமநிலையில் இல்லாமலும் பள்ளங்கள் மிக அதிகமாயும் இருந்தன. சாமான்களை ஓர் இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும் செலவும் அதிகமாக இருந்தது. டெல்போர்டு (Telford. 1757-1834), மாக் ஆடம் (Mac Adam, 1756-1836) என்பவர்கள் வேகமாகச் செல்லும் கனமான வாகனங்களுக்கு ஏற்ற சாலைகளை அமைத்தார்கள். உடனே பல பாட்டைகள் உண்டாகிப் போக்குவரவு நேரம் குறைக்கப்பட்டது. சாலைகள் அமைப்பதற்கு நிதி தேடுவதற்காகப் போக்குவரவுச் சாதனங்களின்மேல் சுங்க வரி விதிக்கப்பட்டது. பிறகு சாலைகளைக் கவுன்டி கவுன்சிலும் அரசாங்கப் பெருவழிப் போர்டும் (Highway Board) கண்காணித்து அபிவிருத்தி செய்தன.
ரெயில்வேக்கள் அதிகரித்தவுடன் சாலைகள் அதிகமாக அபிவிருத்திசெய்யப்படாமல் ரெயில்வேக்களுக்குச் சாமான்களைச் சேகரித்துக் கொடுக்கும் சாதனமாகக் கருதப்பட்டன. ஆனால் 1895-ல் மோட்டார் ஏற்பட்டதும், சாலைகள் அதிகம் தேவையாயின. 1918-க்குப் பிறகு மோட்டார் போக்குவரத்து அதிகரித்ததினால் பல சாலைகள் புதியனவாக உண்டாக்கப்பட்டன. 1910-ல் மத்திய சாலை நிதி (Central Road Fund) உண்டாக்கப்பட்டு, மோட்டார் வரி விதிப்பிலிருந்து ஒரு பகுதியை அதற்கு அரசாங்கம் கொடுத்துதவியது. இந்த நிதியிலிருந்து புதிய சாலைகள் அமைப்பதற்கும், இருக்கும் பாட்டைகளைத் தக்க நிலையில் வைத்திருப்பதற்கும் பணம் செலவிடப்பட்டது.
கால்வாய்: இங்கிலாந்தில் படகுகள் போக்குவரத்துக்குத் தகுந்த பல ஆறுகள் இருந்ததால் கால்வாய்கள் பெருக்கப்பட்டன. பிரிண்ட்லே கால்வாய்கள் வெட்டுவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இதைக் கண்டதும் பலர் வேறு பல கால்வாய்கள் வெட்டுவதற்கு முற்பட்டார்கள். பல கிளைகள் உள்ள கால்வாய்கள் நிரம்பிய இங்கிலாந்து சிறந்த போக்குவரவுச் சாதனங்கள் உடையதாக 19ஆம் நூற்றாண்டில் விளங்கியது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உண்டான ரெயில்வேக்களினால் கால்வாய்களின் உபயோகம் குறைந்தது. ஆயினும் பல கால்வாய்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அவற்றின் பயன் அதிகரித்தது. உதாரணமாக 240 மைல் நீளமுள்ள லண்டன்-பர்மிங்காம் கால்வாய்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, கிராண்டு யூனியன் கால்வாய் (Grand Union Canal) என்று வழங்கப்பட்டது.
ரெயில்வேக்கள்: 1825-ல் ஜார்ஜ் ஸ்டீவென்சன் தண்டவாளத்தில் ஓடும் நீராவி எந்திரம் ஒன்று நிருமாணித்து, அதனை ஸ்டாக்டன்-டார்லிங்டன் (Stockton-Darlington) என்னும் ஊர்களைப் பிணைக்கும் தண்டவாளத்தின் மேல் ஓட்டிக் காண்பித்தார். இந்த எந்திரம் மணிக்கு 12 மைல் வேகத்தில் ஓடிற்று. 1830-ல் லிவர்ப்பூல்- மான்செஸ்டர் இருப்புப்பாதை நிருமாணிக்கப்பட்டு, ஸ்டீவென்சனின் புது நீராவி எந்திரமான ராக்கெட் உபயோகப்படுத்தப்பட்டது. இது 35 மைல் வேகத்தில் சென்றது.
ரெயில்வேக்களின் ஆரம்ப வெற்றி பலவேறு இருப்புப்பாதைகள் உண்டாவதற்கு அடிகோலிற்று. 1850-ல் 6,621 மைல் நீளமும், 1870-ல் 15,537 மைல் நீளமும், 1910-ல் 23,387 மைல் நீளமும் உள்ள இருப்புப் பாதை இருந்தது. 1850-1875-ல் பல சிறிய கம்பெனிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ரெயில்வேக்களின் வேலைகளைக் கண்காணிக்கும்படி 1873-ல் ரெயில்வே கமிஷன் ஏற்பட்டது. இது ரெயில்வேக்களின் கட்டண நிருணயத்தில் தலையிட்டு, அதிகப்படியான கட்டணம் இவ்வளவுதான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தது. கட்டணத்தில் செய்யப்படும் எல்லா மாறுதல்களும் இந்தக் கமிஷனின் அங்கீகாரம் பெற்றபின்தான் செய்ய வேண்டும். முதல் உலக யுத்த காலத்தில் அரசாங்கம் ரெயில்வேக்களைத் தாங்களே எடுத்து நடத்தலானார்கள். அக்காலத்தில் ரெயில்வேக்களின் மேற்பார்வை, வியாபாரச் சங்கத் தலைவர்களும், ரெயில்வே நிர்வாகஸ்தர்களும் அடங்கிய ஒரு கமிட்டியிடம் ஒப்புவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள ரெயில்வேக்களை 20 பகுதியாகப் பிரித்து, அவற்றை ஒழுங்குபடுத்தி, வெற்றிகரமான முறையில் ரெயில்வேக்கள் நடத்தப்பட்டன.
1921-ல் அரசாங்கம் ரெயில்வேக்களின் நிருவாகத்தை அவற்றின் உடைமையாளருக்குத் திருப்பிக் கொடுத்தவுடன் ரெயில்களை ஒன்றாக இணைத்துச் சிக்கனம் செய்யத் தீர்மானித்தார்கள். இங்கிலாந்தில் உள்ள ரெயில்வேக்கள் தனிப்பட்டிராமல் நான்கு பெரிய ரெயில்வேக்களாகத் திகழ்ந்தன.
ரெயில்வேக் கம்பெனிகளை அரசாங்கமே ஏற்று நடத்தவேண்டுமென்ற கிளர்ச்சி மக்களிடம் நிலவி வந்தது. அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்காமல் தனிப்பட்டவர்களின் நிருவாகத்திலுள்ள ரெயில்வேக்களைச் சில சபைகளின் மூலம் கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கியது. 1923-க்குப் பிறகு சாலைப் போக்குவரவு ஸ்தாபனங்களாலும், கரையோரக் கப்பல்களுடைய போட்டியினாலும் இருப்புப் பாதைகள் அவதிக்குள்ளாயின. இத் துன்பத்தை எல்லாம் கருத்தில் கொண்டு 1926-ல் கட்டண நிருணய சபை ஏற்படுத்தி (The Railway Rates Tribunal) ரெயில்வேக் கட்டணங்களை ஓரளவுக்கு நிருணயித்து, அதனால் ரெயில்வேக் கம்பெனிகள் 1913ஆம் ஆண்டின் இலாபத்தை அடையும்படி அரசாங்கம் செய்தது.
1939-45ல் நடந்த யுத்தத்திற்குப் பிறகும் ரெயில்வேக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சி வலுத்துவந்தது. 1947-ல் இயற்றப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தினால் பிரிட்டிஷ் போக்குவரவு கமிஷன் உண்டாக்கப்பட்டு, 1948 ஜனவரி முதல் நாட்டிலுள்ள பெரிய ரெயில்வேக்கள், கால்வாய்கள், 40 மைலுக்கு மேற்பட்டசாலைகள், போக்குவரவு ஸ்தாபனங்கள் ஆகியவற்றை நஷ்ட ஈடு கொடுத்து வாங்கும்படி உத்தரவிடப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட ரெயில்வேக்களை நியாயமான வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும்படி நடத்தவேண்டுமென்று கமிஷன் உத்தரவிட்டது.
நாவாய்ப் பெருக்கம்: நாட்டின் கப்பல் எண்ணிக்கையைப் பெருக்கிக் கடற்படையை விருத்தி செய்வதற்காகவே முதன்முதலாகக் கடல் வாணிபச் சட்டம் இயற்றப்பட்டது. 1788-ல் கிளைடு கால்வாயில் நீராவியினால் இயக்கப்பட்ட ஒரு சிறு கப்பலை வில்லியம் சீமிங்டன் சோதித்துப் பார்த்தார். இக் கப்பல் மேலும் மேலும் உயர்ந்த முறையில் செய்யப்பட்டு, 1819-ல் அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமேரிக்காவுக்குச் செல்வதற்கும் உபயோகப்பட்டது. கப்பல் கட்டும் தொழில் பெருந்தொழிலாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்துப் பிரதேசங்களில் திகழ்ந்தது; கப்பல் கட்டும் கலையும் அபிவிருத்தியடைந்தது ; மரப் பலகையை உபயோகிக்காமல் எஃகுத் தகடுகளை உபயோகித்தார்கள்.
கடல் கடந்து பொருள்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல பெரிய கம்பெனிகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டன. உலகக் கப்பல் போக்குவரத்தில் ஆங்கிலக் கம்பெனிகளே தலைசிறந்து விளங்குகின்றன. ஏ.ரா.
இங்கிலாந்து பாங்கு: 111 -ம் வில்லியமும் மேரியும் இங்கிலாந்தை ஆட்சி புரிந்து வந்த காலத்தில், 1694-ல் இப் பாங்கு வில்லியம் பேட்டர்சன் என்பவரால் திட்டமிடப்பட்டு, 13 இலட்சம் பவுன் முதல் போட்டுச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்டது. இது அரசாங்கத்திற்கும், உள்நாட்டு வியாபாரத்திற்கும் அதிக உதவி யளித்தது. தொடக்கத்தில் இந்தப் பாங்கிற்குத் தங்கம், தங்க நாணயம், உண்டியல் முதலியவற்றைப் பயன்படுத்தவும், நோட்டு நாணயங்களை அச்சிடவும். சரக்குகளைப் பெற்றுக் கடன் கொடுக்கவும் அதிகாரம் இருந்தது. 1833-க்குப் பிறகு 5 பவுன் மதிப்பிற்கு மேற்பட்ட நோட்டு நாணயங்களை இங்கிலாந்து பாங்கு மட்டும் வெளியிடலாம் என்பது சட்டமாயிற்று. 1844 லிருந்து நோட்டு நாணயம் வெளியிடும் உரிமை மற்றப் பாங்குகளுக்கு இல்லை யென்பதாயிற்று. இந்த நூற்றாண்டில் அரசாங்க நிதி இலாகாவிற்கும் இந்தப் பாங்கிற்கும் தொடர்பு அதிகப்பட்டுப் பாங்கின் நிருவாகம் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு உட்பட்டு நடைபெறுகிறது. பாங்கன் டைரெக்டர்கள் தற்போது அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பெறுகின்றனர். இந்தப் பாங்கிற்கு இரு கவர்னர்களும், ஒரு உதவி கவர்னரும், 24 டைரெக்டர்களும் உளர். இப்போது நோட்டு நாணயத்தை அச்சிடவும், அரசாங்கத்தாரின் பாங்கு விவகாரங்களை ஏற்று நடத்தவும், மற்றப் பாங்குகளுக்கும் ஒரு பாங்காக விளங்கவும் இருப்பதால் இந்தப் பாங்கு நாட்டின் பாங்குத் தொழிலுக்குத் தலைமை வகிக்கிறது. இதைக் காட்டிலும் பெரிய பாங்குகள் இங்கிலாந்தில் உளவாயினும், இது அரசாங்கத்தின் நிதி ஏஜெண்டாக இருப்பதால், இதன் சிறப்பான நிலைமை எளிதில் புலனாகும். பார்க்க : பணம், பாங்கு, கடன்.