பக்கம்:அன்பு மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றுரை

7

களையெல்லாம் தெளிவித்து, மனம் அடங்கும் திறத்திலே அமைகின்ற பேச்சு ஒன்று.

ஓர் உதாரணம் சொல்லலாம். கட்டப்படாத பொல்லாத மாடு ஒன்று தன் கால் போன போக்கிலே போகும்பொழுது அதை யாரும் நிறுத்த முடியாது. யாராவது ஒரு கயிற்றில் முளை அடித்துக் கட்டினால் அந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும். அதனுடைய போக்கெல்லாம் தட்டுத் தடுமாறி ஒரு முறை இல்லாமல் இருக்கும். அதனுடைய நடையிலே பல பயிர்கள் அழியும். பல பேர் அஞ்சுவார்கள். ஆனால் அதே மாட்டைக் கொண்டு வந்து இருநூறு அடி நீளமுள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனுடைய தலைப்பை ஒரு முளையிலே கட்டி விட்டால், அந்த மாட்டுக்குத் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது தெரியாது. நீளம் மிக அதிகமாக இருப்பதால் அது தெரியாது. வழக்கம் போல், அது திரியத் தொடங்கும். ஆனால் அப்படித் திரியும்பொழுது வட்ட மாகத் திரியுமே ஒழியச் சிதறுண்ட நெறியில் செல்லாது. இருநூறு அடி நீளத்தில் சுற்றி வட்டமிடும். ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் ஓர் அங்குலம் கயிற்றில் குறையும். அப்படியே அது வேகமாகச் சுற்றச் சுற்றக் கயிற்றினுடைய நீளம் குறைந்து போகும். பிறகு மிகச் சமீபத்தில் வந்து முளை வேறு, கயிறு வேறு, மாடு வேறு என்றில்லாமல் அப்படியே நின்று விடும்.

அதுபோல, நாம் பேசுகிற பேச்சை அடக்காமல், இறைவன் என்ற முளையை வைத்து அவனோடு சம்பந்தப்பட்ட நீளமான பேச்சையே பேசிக் கொண்டிருந்தால், நாளடைவில் அது மிக மிகக் குறுகி, பிறகு பேச்சில்லாத நிலையை அடையலாம். முளையில்லாத மாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/13&oldid=1303370" இலிருந்து மீள்விக்கப்பட்டது