பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்யவில்லை என்று திடமான நம்பிக்கை நெஞ்சளவில் மட்டும் கொள்ளாமல், தன் கணவனின் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்க, அரசை எதிர்த்துப் போராடும் அளவுக்குக் கண்ணகி துணிந்து விட்டாள்.

பாண்டிய அரசிடம் வழக்குரைக்கச் சென்றதே கணவனை மீட்க அல்ல; கணவனின் புகழை மீட்கத்தான்! கோவலன் கள்வன் அல்லன் என்று உலகறியச் செய்து அவன் புகழைக் காப்பாற்றிய கண்ணகியின் கற்பு தெய்வக் கற்பு, மறக் கற்பு, அரசியலையே மாற்றியமைத்த ஆளுமையுடைய கற்பு.


கணவன் புகழ் காத்த கண்ணகி

கண்ணகி வள்ளுவம் காட்டிய வாழ்க்கைத் துணை நலத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவள். பொறுமையின் மறுபதிப்பாகப் பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகிக்கு மதுரையில் இவ்வளவு ஆற்றாமை ஏன்? வெகுளி ஏன்? இங்குதான் கண்ணகியின் சால்பு ஒளி பெற்று விளங்குகிறது.

ஒட்டு மொத்தமாக வெகுளல்தான் தீது. வெகுள வேண்டிய இடங்களில் வெகுளாமல் இருப்பவர்கள் அநியாயக்காரர்கள்; கொத்தடிமைகள்; கோழைகள்; வாழ்க்கையின் பொருள் புரியாத புல்லறிவாளர்கள்.

வாழ்க்கையில், சொற்காத்தல் என்பது ஒரு சிறந்த பண்பாடு. சொல்லப்படுவன எல்லாம் சொல்லல்ல. பொதுப் படையாக இருந்தாலும் சிறப்பாக சொல் என்பது புகழையே குறிக்கும்.

பிறரால் மகிழ்ந்து சொல்லப்படுவது புகழ். அதனால்தான், திருவள்ளுவர் “சான்றோர் எனக் கேட்ட தாய்” என்றார். இதையே பெண்ணின் பெருஞ் சிறப்பிற்குத் “தகை சான்ற சொற் காத்தல்” என்பதும் ஒரு கடமை என்றும் கூறுகிறார்.