பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

181



சமுதாயத்தில் இழி மனப்பான்மையுடையவர்கள் நல்லதன் தன்மை அறிய மாட்டார்கள். அதனால் நன்மையைப் பாராட்டும் மனப்பாங்கு அவர்களுக்கு இருக்காது. ஏன்? அவர்களுடைய அறியாமையின் காரணமாகத் தீமையை நன்மையென்று போற்றினாலும் போற்றுவர். போற்றும் பண்பு என்பது உயர் பண்பு. நன்மையை - நன்மையின் திறத்தை அறிந்து போற்றுவதென்பது அறிஞர்க்கு அழகு.

ஒரு பெண் பத்தினிப் பெண்ணாக வாழ்க்கையில் உயர்தல் எளிதன்று. அஃதொரு கடுமையான சோதனை. நல்ல கணவன் வாய்ப்பின் அம்முயற்சி வெற்றி பெறலாம். நற்றிறமில்லாதவனாக வாய்த்து விடின் ஒரு பெண்ணின் கற்புக் கடமைகள் கூடுகின்றன. கடமைகளும் பொறுப்புக்களும் கூடும்பொழுது சோதனைகளும் மிகத்தான் செய்யும்.

கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமன்று. அது கடமைச் சார்புடையதுமாகும். ஆனால் இந்த நூற்றாண்டு அறிவியலறிஞர்கள் “ஒருவர் தம் பொறுப்புக்களை, கடமைகளை முறையாகச் செய்தல் ஒழுக்கத்தின் அடையாளம்” என்று வரையறுத்துக் கூறுகின்றனர்.

ஆனால் இன்னமும் நம்முடைய நாட்டில் ஒழுக்கம் என்ற சொல்லைக் கடமையோடு பொருத்திப் பார்க்கிற மனப் பாங்கு வளரவில்லை.

வள்ளுவம் வகுத்துக் காட்டிய பெண்மையின் பெருஞ் சிறப்பு.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்பதாகும்.

இப்பண்புகள் அப்படியே கண்ணகியிடம் பொருந்தி அமைந்திருந்தன. ஆயினும் தற்கொண்டாற் பேணுதல் என்ற