பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிரித்தல் என்பது உதட்டில் வழியக்கூடிய ஒன்று. நல்லோர் சிரிப்பில் ஒலி இருக்கும். ஆனால் அந்தச் சிரிப்பொலி தோன்றி உடன் மறையும். ஓரகத்திருந்து ஒழுகி வாழ்வர்.

பிறப்பால் இத்தகைய தலைமகனாகக் கோவலன் வளர்தற்குரிய வாய்ப்பிருந்தும் நல்லூழின்மையால் அவன் நகரம் திரிதரு நம்பியர் குழாத்துள் சிக்கிக் கொண்டான். ஆனால் அவனோ, முன்னோர்களோ புரிந்த நல்வினைப் பயன்களின் காரணம் போலும் மாதவியைச் சென்றடை கின்றான்.

மாதவியைச் சென்று சேர்ந்த கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து முற்றாக விடுதலைபெற மாதவியின் காதலொழுக்கம் துணை செய்திருக்கிறது.

கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு விட்டான் என்று இளங்கோவடிகள் சொன்னாரில்லை. காரணம், அஃது அவனுடைய தற்சார்பான முயற்சியன்று. ஆனால், கோவலனைப் பிரிந்து அவருக்கு ஆளாகாத மாதவி என்று இளங்கோவடிகள் மாதவியைச் சிறப்பித்துக் கூறுவார்.

“காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதக் கொடுங்குழை மாதவி..........

(இந்திரவிழவூரெடுத்த காதை 189-190)

என்று கூறுவதன் மூலம் மாதவியின் கற்பின் திறமும்; கோவலனை மாதவி நன்னெறியில் நிறுத்திய திறமும் பெறப்படுகிறது.

அது மட்டுமன்று, கோவலன் பெருவணிகக் குடும்பத்தில் தோன்றியவன். அவன் தன்னைப் பிரிந்து மீண்டும் பரத்தமை வழியில் போய்விடக்கூடாது என்று கோவலனைக் காப்பாற்றும் உணர்வில் மாதவி சிறந்து விளங்கினாள். மாதவிக்குத் தன்னை மிக அழகுற ஒப்பனை செய்து