பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

191



ஒரு பத்தினிப் பெண்மீது, அவளது கணவனுக்கு ஐயமுண்டாகும் வண்ணம் சாட்சியமளித்தல் எவ்வளவு தீமை? அதுவும் அறியாத ஒன்றினை அறிந்தது போல் சாட்சியம் கூறல் பொல்லாத தீமை. இத்தகு தீமையைச் செய்தோரை உயிருடன் நிலத்தில் அறைந்து உண்ணும் பூதம் ஒன்று பூம்புகாரில் இருந்ததாம்.

இங்ஙனம் பொய்க்கரி சொன்னான் ஒருவனைப் பூதம் நிலத்திலறைந்து உண்ணப் பாசக் கயிற்றைப் போட்டிருந்தது. அத்தூர்த்தனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவனை ஈன்ற தாய் கலங்குகிறாள்.

இச் சூழ்நிலையில் கோவலன் பூதத்தினை அணுகி, தூர்த்தனை விட்டுவிடுமாறும் அத்தூர்த்தன் உயிர்க்குப் பதில் தன்னுயிர் கொள்ளுமாறும் வேண்டுகிறான். பூதமோ, அதற்கு உடன்படவில்லை.

பாவியின் உயிரை விட்டுவிட்டு நல்லுயிர் கொள்ளும் தீவினையைத்தாம் செய்யத் தயாராக இல்லை என்று பூதம் மறுக்கிறது. கோவலன் வேறு வழியின்றித் தூர்த்தனின் சுற்றத்தார்க்குப் பெரும் பொருள் வழங்கி துன்பத்தை மறந்து வாழச் செய்கின்றான்.

இதனை இளங்கோவடிகள் “பசிப்பிணியறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” என்று மாடலன் மூலம் வாழ்த்துகின்றார்.

ஆதலால், மாதவியால் கோவலன் வாழ்க்கை அழியவில்லை; வளர்ந்தது. ஆனால், கண்ணகியால் கோவலன் செல்லாமைக்குக் காரணம் மாதவியின் செப்பம் சான்ற மனையற வாழ்க்கையின் பண்பேயாகும்.

எந்த வழியிலும் கோவலனைப் பிரிந்தால் தன்னைப் பரத்தமையாக்கத் தன் சுற்றத்தார் முயல்வர் என்று எண்ணிய மாதவி, கோவலன் எந்தவொரு குறையாலும் தன்னைப்