பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்ச்சியும் தேவை. அதாவது தமிழர் என்ற உணர்வில் விருப்பம். தமிழர், தமிழரைப் பகைக்காது வாழ்தல். தமிழருக்கு இடையூறு வரும்பொழுது ஒன்று திரண்டு பாதுகாத்தல், இந்த இனமானம் தமிழருக்கு என்றும் இருந்ததில்லை. நம் தலைமுறையில் தலைவர் பெரியார் தமிழரிடையில் இனமானத்தை வளர்க்க உழைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் இனமானத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாவார்.

செங்குட்டுவன், தமிழ் அரசர்களைப் பழித்ததைத் தன்னைப் பழித்ததாகவே கருதினான். இந்த நிலையில் செங்குட்டுவன் தன்னை மூவருள் ஒருவனாக எண்ணிக் கொள்கின்றான். வடவரை நோக்கிப் படையெடுக்கிறான். படையெடுத்தல் ஆரிய அரசர்களை வெல்லுவதற்காக மட்டுமல்ல. பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை எழுப்ப இமயத்தில் கல் எடுத்து வரவே படையெடுக்க எண்ணுகிறான்.

சூளுரைத்துப் படையெடுப்பும் தொடங்கிற்று. வடபுலத்து ஆரிய அரசர்களை வென்று வாகை சூடினான். ஆரிய அரசர்கள் போரில் புறமுதுகிட்டோடினர். அவர்களை - கனக விசயர்களைப் பிடித்து அவர்கள் தலைமீது இமயக் கல்லையும் கங்கையையும் ஏற்றிக் கொண்டு வருகிறான்.

ஆயினும் செங்குட்டுவன் வடபுலத்துப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிடித்த கைதிகளைச் சோழப் பேரரசுக்கும், பாண்டிய பேரரசுக்கும் கொண்டு போய் காட்ட ஏற்பாடு செய்கிறான். சோழ, பாண்டிய அரசர்கள், தம்முடைய வெற்றியைத் தமிழன் வெற்றி, தங்களுடைய வெற்றி என்று எண்ணுவர் என நம்பிக் கைதிகளைக் கொண்டுபோய்க் காட்டச் சொன்னான். அதன் எதிர் விளைவுகளைச் செங்குட்டுவன் உணர்ந்தானில்லை.

கைதிகளைப் பார்த்த சோழ, பாண்டிய அரசர்கள் போரில் உயிர் பிழைத்து ஓடுபவர்களைச் சிறைப்பிடித்தல்