பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதலில் மக்கள் மன்றத்தில் சொல்கிறேன். ஆய்வு செய்து பாருங்கள். நல்ல அறிஞர்கள், நல்ல புலவர்கள், நூல் எழுதுகிறவர்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரையில் இந்த முன்னுரை ஒரு கலக முன்னுரைதான். அவ்வளவுதான்! ஆனால் ஓர் அறிவியல் கலகம் இது! “History repeats itself” என்பதற்குப் பதிலாக “History returns itself” என்று சொல்லலாமா? நாம் ஒரு செயல் செய்தால் எவ்வளவு திரும்பவரும் என்று கேட்பதைப்போல், வரலாற்றுக்கு நீ என்ன கொடுத்தாயோ, வரலாற்றின் வளர்ச்சிக்கு நீ எவ்வளவு கொடுத்தாயோ? வரலாற்றின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் நீ எவ்வளவு பணிகளைச் செய்தாயோ அந்த அளவுக்கு உனக்கு வரலாறு திரும்பத்தரும். நீ வரலாற்றை வறிதே செல்வதற்கு அனுமதித்து விட்டாயானால் நீ பிறந்து வளர்கின்ற காலந் தொட்டு இந்த நாட்டுக்கு எந்தப் புதுமையும் எந்தப் பொலிவும் சேர்க்காமல் வறிதே பாலைவனத்தில் செல்வதைப் போல் நாட்டு வரலாறு செல்லுமானால் உனக்கு அந்த வரலாறு திருப்பிக் கொடுப்பதும் மிகவும் குறைவாக இருக்கும். சென்ற காலம் நிகழ்காலத்தின் முன்னாலே வீழ்ந்து வணங்கி புன்சிரிப்போடு விடைபெற்றுக் கொள்கிறது. இப்பொழுது நம் நாட்டுத் தினத்தாள்களில் எல்லாம் ஜனவரி முதல் தேதி பிறக்கிறபொழுது அப்படி ஒரு படம் போடுவார்கள்; ஒரு கிழவன் மூட்டை முடிச்சோடு வெளியே போவதுபோலவும் ஒரு புதிய குழந்தை உள்ளே வருவது போலவும் படம் போடுவார்கள். ஆக சென்ற காலத்தலைமுறை நம்மிடத்திலிருந்து விடைபெற்றுக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது. புன்சிரிப்போடு புதிய தலைமுறை வருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமையும் புதிய தலைமுறைக்கு புதிய வரலாற்றுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஒரு மேடையிலே சொன்னதையே திரும்பச் சொன்னால் நீங்கள் கேட்டு மகிழ்வதில்லை. கம்பனையே