பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடைப்பதற்குரிய தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நமக்குக் ‘கள்வருமிலாத காவல் செய்வாருமிலாத ஒரு நாடு வேண்டும்! இன்று அதுதான் புரட்சி! ஆனால் கம்பன் எந்தக் கள்வனைச் சொன்னான்; எந்தக் காவலைச் சொன்னான்? ‘கள்வனை' என்று சொன்னால் மட்டும் போதாது. எந்தக் கள்வனைச் சொன்னான்? எப்படி முதன்முதலில் புதுமையாக ‘புரட்சி’ என்ற சொல்லைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தானோ அதுபோல கள்வர் என்ற சொல்லுக்கு புதுப்புனைவு புதுப்பொருளை முதலில் தந்தவன் பாரதி.

இப்போது களவு என்றால் என்னுடைய பையில் இருக்கிற பேனாவைத் திருடிப்போதல் களவு. இந்த மேசையில் உள்ள புத்தகத்தை எடுத்துக்கொண்டு போதல் - திருடு. இதுவும் இடம் நோக்கி பொருள் கொள்ளப்படும். என்னுடைய பேனாவை யாராவது எடுத்துக்கொண்டு போனார்களானால் அதற்கு ஏராளமான அடாவடித் தனங்கள் நடக்கும். நான் இன்னொருவர் பேனாவை - புலவர் அருணகிரி பையிலிருக்கும் பேனாவை எடுத்துக் கொண்டுவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் திருடிவிட்டேன் என்று அருணகிரி சொன்னால் காவல்துறை அலுவலகம் “அடிகளாராவது அருணகிரி பேனாவை எடுக்கிறதாவது” என்று என்னை வைத்துத்தான் வழக்கைப் பார்க்குமே தவிர அருணகிரியை வைத்து வழக்கைப் பார்க்காது.

பாரதி முதன்முதலில் களவுக்கு ஒரு பொருள் சொல்லுகிறான். “பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்றான். “திருடு” என்ற சொல்லுக்கு முதல் தடவையாகப் புதிய பொருள் சொல்லுகிறான். ஓர் உழைப்பாளி உழைக்கிறான். உழைப்புக்கு என்ன அளவுகோல்? ஒரு பொருளை பயன்படு பொருளாக மாற்றுவது உழைப்பு. சான்றாக ஐம்பது வெண் பொற்காசுகள் மதிப்புடைய ஒரு