பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

37


வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தன் பாடும் இயல்பைக் கேளுங்கள்!

“நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின்றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணும் நறவே!”

(புறம்-125)

இந்த வரிகள் சமுதாயச் சீரமைப்புக்குரிய மருந்தாகும்!

சங்க காலத் தமிழர் வாழ்வியல் காதற் சிறப்புடையது. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் பெண்ணைப் பெருமைப் படுத்தும் இயல்பு நிறைந்திருந்தது. ஒரு தலைவனின் வாழ்க்கையில் பங்குபெறும் பெண்ணுக்குத் “தலைவி” என்றே பெயர் அமைந்திருந்தது.

காதல் மனையற வாழ்க்கை சங்க காலச் சிறப்புகளுள் ஒன்று. பெண்ணைத் துறத்தல், வெறுத்தல், இழிவு படுத்துதல் ஆகிய இழி இயல்புகள் சங்க காலத்தில் இருந்ததில்லை.

அவர்கள் மனையற வாழ்க்கையிலேயே துறவும் துய்த்தலும் ஒன்றாகக் கலந்திருந்தன. ஒன்றுக்கொன்று துணையா யமைந்தன. மனையற வாழ்க்கையில் முகிழ்த்து மலர்வதே “சிறந்தது பயிற்றல்” எனப் பாராட்டப்பெறும் துறவு.

ஆதலால், சங்க கால வாழ்க்கையில் நெறிமுறை பிறழாத காதல் வாழ்க்கை இருந்தது. அன்றையக் காதல், எளிதில் தோன்றியதுமன்று; எளிதில் மாறியதுமன்று. சங்க காலத்தில் தலைவன், தலைவி தம்முள் காதலித்தே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அந்தக் காதலை வீடும், நாடும் ஏற்றுக் கற்பியலாக்கிப் பெருமை கொண்டன.

ஆனால், இளம் வயதினரான தலைவனும் தலைவியும் கூட, காதலில் உணர்ச்சி வசப்படவில்லை என்பதுதான் சங்க காலத் தமிழர் காதலுக்குச் சிறப்பு. சிறந்த தெளிவில் தோன்றிய காதல் வளர்ந்து ஆழம்பட்டு எழுபிறப்பும்