பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அதனால் சமுதாய அமைப்பில் அன்பும் பண்பும் வளர்ந்திருந்தது. தலைவன்-தலைவியிடையே காதல் தோன்றி வளர்ந்தமைக்கு யாரும் காரணமல்ல, அஃதொரு இயற்கை நிகழ்வு. இக்காதலுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்; செய்ய வேண்டியது மணம் ஒன்றே என்று தலைவியின் தோழி செவிலிக்கு அறத்தை உணர்த்துகின்றாள்.

இளைய மகளிர் ஓடி விளையாடித் தொழிற்பட்டால் தான் அவர்களுடைய உள்ளமும் உடலும் உறுதி பெறும். அதனால் செவிலித்தாயாகிய நீ, தலைவியைத் தினைப்புனக் காவலுக்கும் அனுப்பி வைத்தனை. தலைவியும் நின்குறிப்பின் வழிதான் விளையாடினாள். அவளும் பெண்மை நலன்கள் அனைத்தும் பொருந்தியவள்; பண்பும் உடையவள். அதனால் அவள் மீதும் குற்றமில்லை. தோழியாகிய நான் தலைவியுடன் சென்றிருந்தேன்; என் குற்றம் என்னவென்றும் யானறியேன். யாதானும் இருப்பின் பொறுத்தருள்க.

தலைவியின் மனத்தைக் கவர்ந்த தலைமகனும் வேட்டைத் தொழிற்கு வந்தபொழுதே தலைவியை எதிர்ப்பட்டான். தலைவனும் தீயவனல்லன். ஆதலால், நம் அனைவரின் கருத்தின் வழியும் யாதொரு குற்றமும் செய்யவில்லை. நம் அனைவரின் கருத்தின்றியும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது.

நிகழ்ந்துவிட்ட தலைவன் தலைவியின் உறவினைக் கற்பியலாக்குவதே அறம் என்று சொல்லும் இனிய பாங்கினை அறிக. இங்ஙனம் திருமணம் நிகழ்கிற வாய்ப்பை இன்றைய சமுதாயம் பெற்று விட்டால் “வரதட்சணை” என்கிற கொடுமையே இருக்காது.

நின்குற்றம் இல்லை நிரைதொடியும் பண்புடையள்
என்குற்றம் யானும் உணர்கலேன் - பொன்குன்று
அருவி கொழிக்கும் அணிமலை நாடன்
தெரியுங்கால் தீய திலன்

.

(குறிஞ்சிப்பாட்டு - வெண்பா)