பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தீதைக் கண்டபொழுது நோதல் தீமையின் விளைவன்று. தீமையைச் சந்திக்கும் மனப் போக்கே அடிப்படை தீமையையும் நோதலின்றி, நடுக்கமின்றி, ஏற்று அனுபவித்து மாற்றும் மனிதனே நேரிய முயற்சியுடையவன்; பண்பாளன். ஆக நோதலும் தணிதலும் கூட நன்மை தீமைகளின் விளைவல்ல. அவை சாரும் மனிதனின் இயல்பே. சிலர் நன்மை தீமைகளின் வழி உணர்ச்சிவசப்படுவர். ஆடி அலமருவர். பின் உணர்ச்சிப் பெருக்கிற்கு நியாயம் காட்டுவர். இவையெல்லாம் சாமார்த்தியமாக இருக்கலாம். ஆனால் வாழும் இயல்பன்று. நோதலும் தணிதலும் மனிதன் பெற்ற அடிப்படைப் பண்புகளின் வழிப்பட்டதேயாகும். இந்தப் பண்பாட்டில் ஊறி வாழ்பவர்கள் மத்தியில் ‘யாவரும் கேளிர்’ என்ற பண்பு விளங்கித் தோன்றும்.

இன்று மனிதனை வருத்தும் மிகப் பெரிய பயம் சாதலேயாகும். அணு அணுவாக வறுமையால், பிணியால் நாள்தோறும் அழிந்து கொண்டிருந்தாலும் அவன் உயிர் வாழ்க்கையின் மீது வைத்துள்ள காதல்! அம்மம்மா. அது அளப்பில்! ‘சாதல்’ வாழ்க்கையின் முடிவன்று; சாதலும் பிறத்தலும் சுழற்சியில் வருவது. இன்றுள்ள ஒவ்வொரு மனிதனும் இதற்குமுன் எத்தனை தடவை செத்தானோ? இனி எத்தனை தடவை சாவானோ, இப்படிப் பழகிப் போன சாதலைப் புதியது போலக் கருதி அஞ்சுவது ஏன் என்பது புரியாத புதிர். சாதல் புதுமையன்று என்ற நம்பிக்கைத் தோன்றினால் உயிர் வாழ்க்கையின் மேலுள்ள காதலால் கொலைகள் நிகழாது, அச்சமும் அடிமைத் தனமும் தோன்றாது. சாவையே சந்திக்கத் தயாராக இருப்பவர்கள் கோழைகளாகச் செத்துக் கொண்டிருப்பவர்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவர்கள். அது போலவே வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்க முறுதலும் இல்லை. வாழ்க்கையில் வெறுப்புத்தோன்றிய இடத்து ‘இது தீயது’ என்று எண்ணி வெறுத்தலும் கூடாது. ஏன்? “நன்றும் தீதும்